வடலூர் வள்ளலார் பெருவெளி வென்றது ! சர்வதேச மையத் திட்டத்தை கைவிட வைத்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு !
வடலூர் வள்ளலார் சர்வதேச மையத் திட்டம், பெருவெளி, Site-A, Site-B, 71.26 ஏக்கர், 269 ஆக்கிரமிப்புகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முழு விவரம்.
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம்
கடந்த 1865 முதல் 1872 வரையிலான காலகட்டங்களில் வடலூர் பார்வதிபுரம் கிராம மக்கள் தானமாகக் கொடுத்த 80 காணி நிலம் அதாவது 106 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரே ஒரு தருமச்சாலை மற்றும் ஞானசபை மட்டுமே கட்டிய திருவருட்பிரகாச இராமலிங்க வள்ளலார், மீதமுள்ள இடங்களைக் காலியாக வெட்டவெளியாகவே விட்டு வைத்திருக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
1865 ம் ஆண்டு வரை வள்ளற் பெருமான் அங்கு வைத்தியசாலை, வேத பாடசாலை உள்ளிட்ட ஒன்றிண்டு சாலைகளைக் கட்டத் திட்டமிட்டிருந்தார். ஆனால், பிறகு அவற்றை முழுவதும் கைவிட்டு, வேத பாடசாலையையும் இழுத்து மூட உத்தரவிட்ட வள்ளற்பெருமானார் சங்கம், தருமச்சாலை மற்றும் ஞான சபை ஆகிய மூன்று அமைப்புகளுக்கும் பெயரை மாற்றி அவை மட்டுமே நீடித்திருக்க உத்தரவிட்டார்.
சான்றுகளின்படி 1872 சூலை மாதம் 18ம் நாள் ஞான சபை வழிபாட்டுக்குரிய விதிகளை வகுத்தருளிய போது சங்கம், சாலை, சபை ஆகிய மூன்றன் பெயரையும் கீழ்கண்டவாறு மாற்றி அமைத்தார் வள்ளற்பெருமானார்.
01.
1865 - சங்கம் தொடக்கம்
முதல் பெயர்: சமரச வேத சன்மார்க்க சங்கம்
மாற்றிய பெயர் (1872-ல்): சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்
02.
1867 - தருமச் சாலை நிறுவுதல்
முதல் பெயர்: சத்திய தருமச்சாலை
மாற்றிய பெயர் (1872-ல்): சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை
03.
1872 - ஞானசபை நிறுவுதல் (ஜூலை 18 வழிபாட்டு விதி / நவம்பர் விளம்பரம்)
முதல் பெயர்: சத்திய ஞான சபை
மாற்றிய பெயர் (1872-ல்): சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை
"வேத" என்கிற சொல்லை அகற்றினர் வள்ளற்பெருமான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
முக்கியக் குறிப்பு :
1872 ல் பெயர்மாற்ற அறிவிப்பு விளம்பரம் வெளியிட்ட வள்ளற்பெருமானார் ஒருவேளை பிற வேறு சாலைகள் கட்டத் திட்டம் கொண்டவராக இருந்திருப்பரானால் அவற்றின் பெயர்களையும் இதுபோல மாற்றி விளம்பரம் செய்திருப்பார். அவ்வாறு அவர் செய்யவில்லை என்பதிலிருந்தது அவருக்கு அத்தகைய திட்டம் இல்லை என்பது உறுதியாகிறது.
இப்படிப்பட்ட நிலையில் கடந்த 2021 ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியின் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அங்கே 100 கோடி ரூபாய் செலவில் சர்வதேச மையம் என்கிற பெயரில் அதிலும் வெட்டவெளியாக இருக்கவேண்டும் என்று வள்ளலார் உத்தரவிட்ட பெருவெளித் தலத்திலேயே கட்ட வேண்டும் என்று துடித்தார்.
ஆனால் வள்ளலார் அப்படி எந்த உத்தரவையும் பிறப்பித்ததற்கான வாய்மொழி உத்தரவோ அதிகார பூர்வச் சான்றுகளோ இல்லை. மாறாக, கடந்த 150 ஆண்டுகளாக அப்படி ஒரு கட்டுமானமும் அங்கு கட்டப்படாமல் மரபு ரீதியாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
பெருவெளியைக் காப்பாற்றும் நோக்கத்தில், இதுகுறித்து இரண்டரை ஆண்டுகளாகத் தொடர் போராட்டங்களும் நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடுக்கப்பட்டன.
அதன் மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை கடந்த ஜூலை மாதம் 30 ம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ்.சவுந்தர் ஆகியோர் அளித்துள்ளனர்.
அந்த தீர்ப்பின் சாரம் நீதிபதிகளின் மொழியில் தமிழ்ப் படுத்தி அப்படியே இதோ :
"இந்த வழக்கு முதன்முதலில் விசாரணைக்கு வந்த நாள் முதலே நீதிமன்றம் தொடர்ந்து பல்வேறு இடைக்கால உத்தரவுகளை வழங்கி வருகிறது.
(தீர்ப்பு பக்கம் 81)
19.09.2024 அன்று, ஆய்வறிக்கைகள் மற்றும் அரசுத் தரப்பு தாக்கல் செய்த அறிக்கைகளை பரிசீலித்த நீதிமன்றம்,
மொத்தம் சுமார் 106 ஏக்கரில்,
71 ஏக்கர் கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ளது,
மீதமுள்ள நிலம் 269 நபர்களின் ஆக்கிரமிப்பில் இருப்பதாகப் பதிவு செய்தது.
அந்த 269 பேரின் ஆக்கிரமிப்பு சட்டபூர்வமானதா என்பதை ஆராயும் நோக்கில், அவர்களை அனைவரையும் இந்த வழக்கில் தாமாகவே (suo motu) எதிர்மனுதாரர்களாக சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
தற்போது, அந்த நபர்களில் சிலர் தங்களுக்கு உரிமை இருப்பதாகக் கூறி மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். அவர்களின் உரிமைக் கோரிக்கைகள் பின்னர் விசாரணைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
பெருவெளியில் கட்டுமானம் தொடர்பாக HR&CE துறையும் அரசுத் தரப்பும் நீதிமன்றத்தில் பின்வரும் நிலைப்பாட்டை தெரிவித்தன.
(பக்கம் 82)
அரசுத் தரப்பு தெரிவித்த முக்கிய அம்சங்கள்:
G.O.Ms.No.231 அடிப்படையில் இருந்த முந்தைய திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
பெருவெளிக்குள் எந்தக் கட்டுமானமும் நடைபெறாது.
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில்,
ஆகியவை பெருவெளியின் விளிம்புப் பகுதியில், ஞானசபையின் காட்சியை மறைக்காத வகையில் அமைக்கப்படும்.
+ விவகார சாலை (நூலகம்)
+ யோக சாலை (தியான மண்டபம்)
இந்த மாற்றுத் திட்டம் அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
+ திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 71.26 ஏக்கர் நிலத்தை புதிய ஆக்கிரமிப்புகளிலிருந்து பாதுகாக்க வேலி
+ அமைக்க HR&CE திட்டமிட்டுள்ளது.
முந்தைய உத்தரவுகளில் நீதிமன்றம்,
திட்டப்பகுதிகளை Site-A மற்றும் Site-B என இரண்டாக வகைப்படுத்தியுள்ளது.
(பக்கம் 83)
HR&CE துறையின் அறிக்கைகளின்படி, வள்ளலாரின் விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கில் அமைக்கப்படவிருந்த சாலைகள்:
+ தர்மசாலை
+ வைத்தியசாலை
+ சாஸ்திரசாலை (கல்வி மையம்)
+ உபகாரசாலை (முதியோர் இல்லம்)
+ விருத்திசாலை (மேம்பாட்டு மையம்)
+ உபாசனசாலை (வழிபாட்டு மையம்)
+ யோகசாலை (தியான மண்டபம்)
+ விவகாரசாலை (உரை / நூலக மையம்)
இதில்,
ஞானசபை மற்றும் தர்மசாலை ஏற்கனவே Site-A பகுதியில் நீண்டகாலமாக உள்ளன.
Site-B பகுதியில்,
+ உபகாரசாலை,
+ வைத்தியசாலை,
+ சாஸ்திரசாலை,
+ விவகாரசாலை,
+ யோகசாலை
ஆகியவற்றை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், பெருவெளியின் நடுப்பகுதியில் இந்தக் கட்டுமானங்களை அமைப்பதற்கு மனுதாரர்களும் பக்தர்களும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததால், அந்தத் திட்டத்தை அரசு கைவிட்டு, பெருவெளியின் விளிம்புப் பகுதியில் அவற்றை அமைக்கும் கொள்கை முடிவை எடுத்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
(பக்கம் 84)
மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின் கீழ்,
மாற்று இடத்தில்,
Site-B பகுதியில்,
கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், ஜோதி தரிசனத்திற்கு எந்தத் தடையும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த மாற்றுத் திட்டத்திற்கு இன்னும் அரசின் இறுதி ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
எனவே,
7வது எதிர்மனுதாரர் அரசிடம் தேவையான அனுமதியை பெறலாம் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மேலும்,
71.26 ஏக்கர் நிலத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
அதேபோல்,
Site-A பகுதியில் உள்ள 3.37 ஏக்கர் கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்றும்,
அந்த ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான வழக்கு (W.A.No.2780/2024) இந்த வழக்குகளுடன் இணைத்து விசாரிக்கப்படும் என்றும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்குகள் நான்கு வாரங்களுக்கு பிறகு மீண்டும் பட்டியலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது."
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.,
இதன்படி,
01. 106 ஏக்கரில் தற்போது மீதமுள்ள 71.26 ஏக்கர் பெருவெளியில் - அதாவது தருமச்சாலை, ஞானசபை உள்ள வெட்டவெளித் தலத்தில் (சைட் A) எந்தக் கட்டுமானங்களும் கட்டக்கூடாது
02. 71.26 ஏக்கர் நிலத்தை மேற்கொண்டு ஆக்கிரமிப்பு இல்லாதவாறு சுற்றுச் சுவர் எழுப்ப வேண்டும்.
03. சைட் B எனும் ஞானசபையில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தள்ளி உள்ள இடத்தில் அறநிலையத்துறை கூறும் பிற சாலைகள் அடங்கிய கட்டுமானத்திற்கு அரசு ஒப்புதல் பெற வேண்டும்.
04. 71.26 ஏக்கர் நிலம் தவிர மீதமுள்ள இடங்களை ஆக்கிரமித்துள்ள 269 நபர்கள் மீது நீதிமன்றமே தாமாக முன்வந்து தொடுத்த வழக்குகள் தொடர்ந்து விசாரிக்கப்படும்.
05. வழக்கு விசாரணை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)