வடலூர் சத்திய ஞான சபையில் என்ன நடக்கிறது? பணி மாறுதலுக்குப் பிறகும் தொடரும் செயல் அலுவலர்; திமுகவின் ஆட்டமா?
வடலூர் சத்ய ஞான சபையில் செயல் அலுவலர் ராஜா சரவணக்குமாரின் பணி மாறுதல், மீண்டும் கூடுதல் பொறுப்பு, வள்ளலார் பெருவெளி பாதுகாப்பு குறித்து எழுப்பப்படும் கேள்விகளை அலசும் சிறப்புக் கட்டுரை.
வள்ளலார் உருவாக்கிய பெருவெளியின் நோக்கம்
வடலூரில் கடந்த 1865-67 ம் ஆண்டுகளில் அங்குள்ள பார்வதிபுரம் கிராம மக்கள் தானமாகக் கொடுத்த 80 காணி நிலம் அதாவது 106 ஏக்கர் நிலத்தில் பசித்தவர்களுக்கு உணவு தரும் தருமச்சாலை மற்றும் ஞானசபை ஒன்றை மட்டும் நிறுவிய திருவருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் மீதமுள்ள 106 ஏக்கர் நிலப்பரப்பையும் காலியாகவே, வெட்டவெளியாக வைத்திருக்கும்படி உத்தரவிட்டிருந்தார். அங்கு வேளாண்மை, தங்குமிடம் உள்ளிட்ட எந்தக் கட்டுமானங்களும் கட்டப்படக்கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தார்.
அவரின் கவனத்துக்கு வராமலேயே வெட்டப்பட்ட குளம் ஒன்றைத் தமது கையில் இருந்த பணத்தை எடுத்துக் கொடுத்து அதனை மூடும்படி உத்தரவிட்டார்.
காரணம், எதிர்காலத்தில் "எள்ளு போட்டால் குனிந்து அந்த எள்ளைக்கூட எடுக்க முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் வரும்" என்பதாலேயே.
அதன்படியே இன்று தைப்பூச நன்னாளில் மட்டும் சுமார் 20 லட்சம் பேர் வழிபாட்டுக்காக வருகை தருகிறார்கள்.
வள்ளலார் மறைவுக்குப் பிறகு மாறிய நிர்வாகப் பாதை
மரணமிலாப் பெருவாழ்வு முழு நிலையை வள்ளற்பெருமான் எட்டி மக்களின் கண்களிலிருந்து மறைந்தபிறகு இந்த ஒட்டுமொத்த அமைப்பினுள்ளும் புகுந்த சபாபதி சிவாச்சாரியார் என்பவர், வள்ளலாரின் சமரச சுத்த சத்திய சன்மார்க்கக் கொள்கைகளுக்கு நேர் எதிராக உருவவழிபாடு, லிங்க வழிபடு, அபிசேகம், ஆராதனை செய்யத் தொடங்கிவிட்டார்.
மெட்ராஸ் இந்து சமய அறநிலைய வாரியத்தின் கீழ் வந்த பெருவெளி
வள்ளலாரின் சமரச சுத்த சத்திய சன்மார்க்கக் கொள்கைகளை முறையாகப் பின்பற்றும் சாதுக்கள் இல்லாத காரணத்தாலும், சன்மார்க்கர் அல்லாதவர்களின் கைகளிலும் சிக்கிக்கொண்ட இந்த 106 ஏக்கர் பெருவெளித் தலம் எனும் உத்தர ஞான சிதம்பரம், உத்தர ஞான சித்திபுரத்தைக் காப்பாற்றும் நோக்கத்தோடு 1938 ம் ஆண்டு, இந்த ஒட்டுமொத்த அமைப்பையும் இந்து சமய அறநிலையத்துறை (அப்போது மெட்ராஸ் இந்து சமய அறநிலைய வாரியம்) வசம் சேர்த்தார், அப்போது அந்தத் துறையின் ஆணையராக இருந்த பாலகிருஷ்ண பிள்ளை.
ஆக்கிரமிப்புகளும் அரசின் அலட்சியமும்
அதன்பிறகும் கூட ஆறேகால் ஏக்கர் நிலத்தை சிவாச்சாரியாரின் வாரிசுகள் ஆக்கிரமித்துக் கொள்ள, ஒரு 25 ஏக்கர் நிலத்தை கடந்த 1975 ம் ஆண்டு திமுக ஆட்சியில் தனியாருக்குப் பட்டாப் போட்டுக் கொடுத்துவிட்டனர்.
"வள்ளலார் சர்வதேச மையம்" திட்டம் எப்படி உருவானது?
இதையும் இந்து சமய அறநிலைத்துறை கண்டுகொள்ளவில்லை. மீதமுள்ள 72 ஏக்கர் நிலத்தையும் ஆக்கிரமித்து 100 கோடி ரூபாய் மதிப்பில் "வள்ளலார் சர்வதேச மையம்" கட்டப்படும் என்று கடந்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் திட்டம் போடப்பட்டு நிதி ஒதுக்கி, அரசு அமைப்புகள், மக்கள் அனுமதி, வள்ளலார் சன்மார்க்கம் அறிந்தவர்களின் ஆலோசனைகள் எதுவுமின்றி கட்டுமான வேலையைத் தொடங்கினார்கள்.
மக்கள் போராட்டமும் நீதிமன்றப் போராட்டமும்
கடுமையான எதிர்ப்புப் போராட்டங்கள், நீதிமன்றத்தில் வழக்கு ஆகிவற்றின் மூலமாக அந்தக் கட்டுமானம் தவிர்க்கப்பட்டே வந்த நிலையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு அந்த 100 கோடி வள்ளலார் சர்வதேச மையம் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தது.
வள்ளலார் மீதும், சமரச சுத்த சத்திய சன்மார்க்கம் மீதும் உண்மையிலேயே கடந்த திமுக அரசுக்கு அக்கறை இருந்திருக்குமானால், 1975 ம் ஆண்டு தனியாருக்குப் பட்டாப் போட்டுக் கொடுத்த 25 ஏக்கர் நிலத்தையும், சிவாச்சாரியாரின் வாரிசுகள் ஆக்கிரமித்த ஆறேகால் ஏக்கர் நிலத்தையும் மீட்டெடுத்திருக்க வேண்டும். மாறாக மீதமிருக்கும் 72 ஏக்கர் நிலத்திலும் சர்வதேச மையம் எனும் பெயரில் கட்டுமானப் குப்பைகளைக் கொட்டத் தீவிரம் காட்டியது திமுக அரசு.
திமுகவின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த சேகர்பாபு இந்தக் கட்டுமானத்தில் தனிப்பட்ட கவனம், விருப்பம், வெறி கொண்டு செயல்பட்டார். காரணம், மு.க.ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் விருப்பம் இந்தக் கட்டுமானத்தின் பின்னணியில் இருந்ததால்.
ஆட்சி மாறியது... ஆனால் நிர்வாகம் மாறவில்லையா?
சேகர்பாபு, எள் என்றால் எண்ணையாக வந்து நிற்பவர்தான் வடலூர் சத்திய ஞான சபையின் பொறுப்பில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை "செயல் அலுவலர்" ராஜா சரவணக்குமார்.
சத்ய ஞான சபை நிர்வாகம் உதவி ஆணையர் நிலைக்கு உயர்வு
இவர் வகிக்கும் இந்த "செயல் அலுவலர்" எனும் பொறுப்பைத் தாண்டி உதவி ஆணையர் பொறுப்பு நிலைக்கு சத்ய ஞான சபையின் நிர்வாகம் உயர்த்தப்பட்டது. அதாவது சத்ய ஞான சபையின் நிர்வாகம் செயல் அலுவலர் எனும் குறைவான அதிகார பொறுப்பிலிருந்து உதவி ஆணையர் எனும் அடுத்த உயர் பொறுப்பு நிலைக்கு உயர்த்தப்பட்டது.
அரசாணை எண் 101: என்ன சொல்கிறது?
இதற்கான அரசாணை எண் 101 அ/நி 1-2 | 23/02/2026.
இரண்டு நாட்கள் கழித்து, மற்றுமொரு அரசாணை (எண் மு.ந.க.எண். 2515006/2026-3/எல் 1/நாள்: 25.02.2026) வெளியிடப்பட்டது.
பணி மாறுதல் உத்தரவு: ராஜாசரவணக்குமார் மாற்றப்பட்டாரா?
அதில், சத்திய ஞான சபை நிலை உயர்த்தப்பட்டதால் அந்தப் பொறுப்பில் இருந்த செயல் அலுவலர் ராஜா சரவணக்குமார், கீழ்க்கண்ட பணிமாறுதல் மற்றும் பணிநியமனம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தற்போது பணியாற்றும் அலுவலர்
திரு. ஜெ. ராஜா சரவணகுமார்,
நிலை-1 செயல் அலுவலர்,
சத்தியஞான சபை,
வடலூர், கடலூர் மாவட்டம்,
பணிமாறுதல் செய்யப்பட்ட திருக்கோயில்
அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில்,
புதுப்பாளையம்,
கடலூர் மாவட்டம்
(நிலை-1 செயல் அலுவலர்)
என்று அந்த அரசாணை தெரிவிக்கிறது.
கூடுதல் பொறுப்பில் மீண்டும் அதே அதிகாரி
இதன் பிறகு 10/03/2026 ம் நாள் மற்றுமொரு அரசாணை பிறப்பிக்கப் படுகிறது.
அதில், கூடுதல் பொறுப்பில் நியமனம் செய்யப்படும் அலுவலர்கள் எனும் தலைப்பில்,
பணியிடம்:
உதவி ஆணையர் / செயல் அலுவலர்,
சத்யஞானசபை,
வடலூர்,
கடலூர் மாவட்டம்.
கூடுதல் பொறுப்பில் நியமனம் செய்யப்படும் அலுவலர்:
திரு. ஜெ. ராஜா சரவணக்குமார்,
நிலை-1 செயல் அலுவலர்,
அருள்மிகு இராஜகோபாலசுவாமி திருக்கோயில்,
புதுப்பாளையம்,
கடலூர் நகர், வட்டம் மற்றும் மாவட்டம்.
என்று ஆணை பிறப்பிக்கப் படுகிறது.
அதாவது, 2026 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 ம் நாள் சத்திய ஞான சபையிலிருந்து வேறு ஒரு கோயிலுக்கு பணி இட மாறுதல் செய்யப்பட்ட ராஜா சரவணகுமார் எனும் செயல் அலுவலர், மார்ச் மாதம் 10 ம் தேதி, உதவி ஆணையர் நிலைக்கு உயர்த்தப்பட்ட சத்ய ஞான சபைக்கே மீண்டும் கூதல் பொறுப்பில் அமர வைக்கப்படுகிறார்.
உதவி ஆணையர் ஏன் இன்னும் நியமிக்கப்படவில்லை?
ஆக, உதவி ஆணையர் நிலைக்கு உயர்த்தப்பட்ட வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபைக்கு முறைப்படி உதவி ஆணையர் ஒருவரை நியமித்திருக்க வேண்டும். ஆனால், இன்றுவரை கிட்டத்தட்ட 7 மாதங்களாக செயல் அலுவலர் ராஜா சரவணக்குமாரே அங்கு கூடுதல் பொறுப்பில் நீடிக்கிறார்.
நிர்வாகம் குறித்து எழும் கேள்விகள்
ஆட்சி மாறியபிறகும் கூட இந்த ராஜா சரவணக்குமார் முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவைச் சென்று சந்தித்து உள்ளார் எனும் தகவலும் கசிகிறது.
இன்றுவரை சேகர்பாபுவுக்கும், சேகர்பாபு அமைத்த திமுக "பினாமி" அமைப்பான லெட்டர் பேட் சங்கம் "வடலூர் தலைமைச் சங்கத்திற்கும்" விசுவாசமாக இயங்கும் ராஜா சரவணக்குமார் எப்படி "பெருவெளியைப்" பாதுகாக்கும் பணிக்கு ஒத்துழைப்பாக இருப்பார் ?
பெருவெளி பராமரிப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகள்
இவர்மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் 3000 கோயில்களுக்குக் குடமுழுக்கு செய்து அவற்றைப் பாதுகாப்பாக, தூய்மையாக அறநிலையத்துறை வைத்திருக்கும் நிலையில் வடலூர் ஞான சபை மற்றும் பெருவெளித் தலத்தை வேண்டுமென்றே பராமரிக்காமல் விட்டு குப்பை மேடாக்கியவர் இந்த ராஜா சரவணக்குமார். கற்கள், முட்கள் ஆகியவை பெருவெளியில் சேரவும் இவரே காரணம்.
பெருவெளியில் எந்தவித அரசு நிறுவன அமைப்புகளிடமும் அனுமதி வாங்காமல் அத்திவாரம் தோண்டி பெருவெளியை சிதைத்ததற்கும் இவரே காரணம்.
பெருவெளியில் மின்சார விளக்கு, சுற்றுச்சுவர், பாதுகாவலர்கள் கூட நியமிக்காமல் அங்கு சன்மார்க்க விரோதச் செயல்கள் நடப்பதற்கும் காரணம் இவர் வேண்டுமென்றே பெருவெளியினை பராமரிக்காமல் இருந்ததே.
இப்படி வேண்டுமன்றே பராமரிக்காமல் வைத்ததற்குக் காரணம் "100 கோடி ரூபாய் சர்வதேச மையம் கட்டிவிட்டால் இது தூய்மையாகிவிடும்" என்று பரப்புரை செய்து மக்களை ஏமாற்றுவதற்காகவே.
ஆக, வள்ளலாரின் பெருவெளியை வணிகமயமாக்கும் நண்பன் பவுண்டேஷன் உள்ளிட்ட வெளிநாட்டு சக்திகளுக்கும், திமுகவினருக்கும் கையாள் வேலை பார்த்து வருகிறாரோ இந்த செயல் அலுவலர் ராஜா சரவணக்குமார் என்கிற ஐயம் வடலூர் மக்களிடம் எழுந்துள்ளது.
நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்ட விவகாரங்கள்
மேலும், பெருவெளியிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சைட் பி-யை விவசாய நிலத்திலிருந்து கட்டுமான நிலமாக மாற்றுவதற்கு, சட்டவிரோதமாக மாறுதல் செய்ததும் இதே ராஜா சரவணக்குமார்தான். இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக சுட்டிக்காட்டியிருந்தது.
சத்திய ஞான சபையில் இருந்த பல லட்சம் பணம் என்ன ஆனது என்று தெரியவில்லை என்கிறார்கள் அந்த ஊர் மக்கள்.
எப்போதும் உணவு தரவேண்டிய தருமச்சாலையை மூன்று வேளை அதிலும் குறிப்பிட்ட சில மணி நேரத்திற்கு மட்டுமே திறந்து வைத்து அதிலும் தரமற்ற உணவை அளிப்பதற்கும் காரணம் இந்த செயல் அலுவலர் ராஜா சரவணக்குமார்தான் என்கிறார்கள் தருமச்சாலையில் உணவு உண்பவர்கள்.
100 கோடி ரூபாய் திட்டத்தைக் கைவிட்டதாக தவெக அரசே நீதிமன்றத்தில் தெரிவித்தபிறகும் கூட, 72 ஏக்கரில் ஓரமாக திமுக பினாமி வடலூர் தலைமை சங்கத்திற்கு ஒரு கட்டடம், நூலகம் கட்டவேண்டும் என்று நீதிமன்றத்தில் உருட்டியதும் இந்த ராஜா சரவணக்குமார்தான்.
ஆக, வள்ளலார் போற்றி வளர்த்த உத்தர ஞான சிதம்பரம், உத்தர ஞான சித்திபுரம் எனும் பெருவெளித் தலத்தை முற்றாக அழித்துவிடத் துடிக்கும் கும்பலுக்குத் துணை போவதாக ராஜா சரவணக்குமார் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லாமல் இல்லை.
உதவி ஆணையர் இருக்க வேண்டிய பொறுப்பில் - வெறும் செயல் அலுவலரான ராஜா சரவணக்குமாரை கூடுதல் பொறுப்பில் கடந்த திமுக ஆட்சியில் அமரவைக்கப்பட்டதிலிருந்தே இவர் சேகர்பாபு, எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட திமுகவினரின் கட்டளையை சரிவர நிறைவேற்றியதால்தான் என்பது எளிதில் புரிந்து கொள்ளக்கூடியதே.
இப்படிப்பட்ட நிலையில் இன்னமும் அவர் அதே பொறுப்பில் நீடிப்பது வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கக் கொள்கைகளுக்கும், பெருவெளிப் பாதுகாப்புக்கும் பெருத்த ஆபத்து என்கிறார்கள் பெருவெளியைப் பாதுகாக்கப் போராடும் வள்ளலார் பின்பற்றாளர்கள்.
மருதூரில் பழமை மாறாமல் இருந்த வள்ளலார் பிறந்த வீட்டுக் கட்டுமானத்தை இடித்து அதனைத் தரைமட்டமாக்கிவிட்டு அங்கே புதிய கட்டடம் கட்டப்படுவதற்கும் இதே ராஜா சரவணக்குமார்தான் காரணம் என்கிறார்கள் மருதூர் மக்கள்.
தருமச்சாலை, ஆவணங்கள், பெருவெளி: மேலும் எழும் கேள்விகள்
பெருவெளியில் மரங்களை வெட்டிவிட்டு அதற்கு தண்டம் (Fine) கட்டியவர்தான் இந்த ராஜா சரவணக்குமார் என்பதை நினைவூட்டும் வடலூர் மக்கள், சத்திய ஞான சபைக்கான வரைபடத்தை திருவருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் தம் கைப்பட வரைந்தார். அந்தப் படம் இப்போது எங்கே என்று தெரியவில்லை. மேலும், வள்ளலார் கைப்பட எழுதிய அகவல் நூல் பராமரிப்பின்றி கைவிடப்பட்டுள்ளது. அதனையும் கண்டுகொள்ளாமல் சேகர் பாபுவுக்கும், திமுக பினாமி வடலூர் தலைமை சங்கத்திற்கும் அடியாள் வேலை செய்து வருகிறார் ராஜா சரவணக்குமார் என்று குற்றம் சாட்டுகின்றனர் அவர்கள்.
கடந்த திமுக ஆட்சியில் வடலூரில் பெருவெளியைக் காக்கும் போராட்டங்களை ஒடுக்க தங்களுக்கு வேண்டப்பட்ட காவல் அதிகாரிகளை இதேபோல பணி இட மாறுதல் செய்தபிறகும் சில நாட்களில் அவர்களே, அதே இடத்திற்குப் பணி நியமனம் செய்யப்பட்டார்கள்.
தமிழக அரசுக்கு வள்ளலார் சன்மார்க்கர்களின் கோரிக்கை
எனவே தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களும், இந்து சமய அறநிலையத்துறை மாண்புமிகு அமைச்சர் ரமேஷ் அவர்களும் தலையிட்டு திமுக பினாமிகளுக்குத் துணை போகும் ராஜா சரவணக்குமாரை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, தகுதி வாய்ந்த உதவி ஆணையரை நியமிக்க வேண்டும் என்பதே உண்மையான வள்ளலாரின் சன்மார்க்கர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
What's Your Reaction?
Like
2
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)