தமிழ்நாட்டு இரயில்வே வேலைகளில் வெளிமாநிலத்தவர்களைச் சேர்ப்பதைக் கைவிடுக: பெ. மணியரசன் எச்சரிக்கை
தமிழ்நாட்டின் தெற்கு இரயில்வே பணிமனைகளில் உள்ள 6,171 பழகுநர் பணியிடங்களுக்கு வெளிமாநிலத்தவர்கள் விண்ணப்பிக்க அனுமதிப்பதைக் கைவிட வேண்டும்; இல்லையேல் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தமிழ்நாட்டின் தெற்குத் தொடர்வண்டித்துறை (தெற்கு இரயில்வே) பணிமனைகளில் உள்ள 6,171 பழகுநர் பணியிடங்கள் பணிக்கு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், அந்தமான் நிக்கோபார் தீவுகள், இலட்சத்தீவுகள் போன்ற பல இடங்களில் இருந்து விண்ணப்பிக்கலாம் என்று விளம்பரம் வெளியிட்டுள்ளார்கள்.
கடந்த 2019-இல், தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்திய போராட்டத்தின் பயனாக தமிழ்நாட்டுத் தொடர்வண்டித்துறை பழகுநர் பணிகளுக்குத் தமிழ்நாட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து கொண்டோர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற விதியை உண்டாக்கியது இந்திய அரசு.
இப்போது அந்த விதியைத் தூக்கித் தொலைவில் எறிந்துவிட்டு, இந்தியாவின் பல மாநிலங்கள் – ஒன்றிய மண்டலங்களில் இருந்தெல்லாம் தமிழ்நாட்டு இரயில்வே பழகுநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்புச் செய்துள்ளார்கள்.
தென்னிந்தியத் தொடர்வண்டித்துறை, சென்னை, மதுரை, திருச்சி பொன்மலை -மத்தியப் பணிமனை, சேலம், பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ், கோவை, அரக்கோணம் பொறியியல் பணிமனை, போத்தனூர் சிக்னல் மற்றும் தொலைத் தொடர்பு பணிமனை முதலியவற்றில் 6,171 பழகுநர் பணியிடங்களுக்கு – வெளிமாநிலத்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் இப்போது சற்றொப்ப 1 கோடி இளையோர் தங்களின் கல்வி மற்றும் பயிற்சித் திறனுக்கேற்ற வேலை கிடைக்காமலும், அத்துக் கூலிகளாகவும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களைப் பற்றி இந்திய அரசுக்குக் கவலையில்லை.
கடந்த 2019-ஆம் ஆண்டு கொரோனா அடைப்புக்காலம் தொடர்ந்தபோது, திருச்சி பொன்மலை நடுவண் பணிமனைக்குப் பெரும் எண்ணிக்கையில் இந்தி மாநிலங்களைச் சேர்ந்தோரை, பழகுநர் பணிக்கு அமர்த்தினார்கள். அதை எதிர்த்து, காவல் துறை தடையை மீறி, 3.5.2019 அன்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி தலைமையில் பொன்மலைத் தொடர்வண்டித் தொழிற்சாலை முன், மாபெரும் மறியல் போராட்டம் நடத்தினோம். புதிதாக வந்துள்ள 300 இந்திக்காரர்களை முழுதாக வெளியேற்று என்று முழக்கமிட்டோம். ஏராளமானோர் கைது செய்யப்பட்டார்கள்.
தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசு நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்று கோரினோம்.
தமிழ்நாடு முழுதும் பெரிய வீச்சினை அப்போராட்டம் எழுப்பியது. தி.மு.க. தலைவைர் மு.க. ஸ்டாலின் இரயில்வே துறையைக் கண்டித்ததுடன், தமிழ்நாட்டு இரயில்வேயில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே வழங்கவேண்டும் என்று கோரினார். பல்வேறு தோழமை அமைப்புகள் ஆதரவு அறிக்கைகள் வெளியிட்டன.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன், ம.தி.மு.க. தலைவர் வைகோ, விடுதலைச் சிறுத்தை கட்சி பொதுச்செயலாளர் வன்னிய அரசு ஆகியோர் நம் போராட்டத்துக்கு ஆதரவளித்து அறிக்கை வெளியிட்டனர். செய்தி ஊடகங்கள் இப்போராட்டம் பற்றி சிறப்பாக செய்திகள் வெளியிட்டனர்.
இவ்வாறான தமிழ்நாட்டு எழுச்சிக்குப்பின், தென்னகத் தொடர்வண்டித்துறை, பழகுநர் பணியிடங்கள் வேலைகளுக்கு விண்ணப்பிப்போர், தமிழ்நாட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோராக இருக்க வேண்டும் என்று புதிய விதிமுறை உருவாக்கியது.
இப்போது அந்த விதியைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து தமிழ்நாட்டுப் பழகுநர் பணியிடங்கள் 6,171 க்கு விண்ணப்பிக்கலாம் என்று வடநாட்டவர்க்கும் மற்றவர்களுக்கும் வாசலைத் திறந்து விட்டுள்ளது இந்திய அரசு.
இந்திய அரசின் இந்த தமிழர் வேலைப்பறிப்பு அறிவிப்பைத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். உடனடியாக இந்தப் புதிய அறிவிப்பைக் கைவிட்டு ஏற்கெனவே இருந்த தமிழ்நாட்டு இளையோர்க்கான வேலை வாய்ப்புகள் தொடரச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்திய ஆட்சியாளர்கள் நமது இயற்கையான உரிமைக் கோரிக்கைக்கு - ஏற்கெனவே நடைமுறையில் இருந்த உரிமைக்குச் - செவிசாய்யக்கவில்லை என்றால், மாபெரும் மக்கள் திரள் போராட்டங்கள் நடத்த தமிழ்நாட்டு மக்கள் அணியமாக இருக்க வேண்டும் என்றும், இப்பணியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் பங்கேற்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்தத் அறிக்கையில் பெ. மணியரசன் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)