"திராவிட" எதிர்ப்பால் தமிழ்த் தேசியம் முடங்கியதா? திருமாவளவனின் கருத்தும் - கள எதார்த்தமும் | அரசியல் பகுப்பாய்வு

திருமாவளவன் முன்வைத்த "திராவிட எதிர்ப்பால் தமிழ்த் தேசியம் முடங்கியது" என்ற கருத்தை வரலாறு, 1956 மொழிவாரி மாநிலப் பிரிப்பு, திராவிட இயக்கம் மற்றும் தமிழ்த் தேசிய அரசியல் ஆகிய கோணங்களில் அலசும் விரிவான அரசியல் பகுப்பாய்வு.

Jul 18, 2026 - 13:22
Updated: 15 days ago
0 23
"திராவிட" எதிர்ப்பால் தமிழ்த் தேசியம் முடங்கியதா? திருமாவளவனின் கருத்தும் - கள எதார்த்தமும் | அரசியல் பகுப்பாய்வு

-வளர்மெய்யறிவான் () விசுவா விசுவநாத்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசும்போது, "திராவிட எதிர்ப்பால் தமிழ்த் தேசியம் முடங்கிவிட்டது" என்றும், "திராவிடத்தை எதிர்ப்பவர்கள் உண்மையில் தமிழ் தேசியத்தை தெலுங்கர்களுக்கு எதிராகவும், திமுக மற்றும் கருணாநிதி எதிர்ப்பிலுமே கொண்டு போய் நிறுத்துகிறார்கள்" என்றும் ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

இக்கருத்து அரசியல் தளத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

திராவிடம்: சொல்லும் - சூழலும்

வரலாற்று ரீதியாக 'திராவிட' என்ற சொல் தென்னிந்திய நிலப்பரப்பைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டது. ராபர்ட் கால்டுவெல் முதல் அறிஞர் அண்ணா வரை இதனை ஒரு புவியியல் அடையாளமாகவே கையாண்டனர். ஆனால், 1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என அண்டை மாநிலங்கள் தங்கள் இன அடையாளத்துடன் தனித்தனியே பிரிந்து சென்றன. அந்த மாநிலங்களின் மக்கள் ஒருபோதும் இந்தத் திராவிட அடையாளத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்தச் சூழலில், தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இன்னும் 'திராவிட' என்ற பொதுப்பெயரைச் சுமக்க வேண்டும் என்ற கேள்வியைத் தமிழ்த் தேசியவாதிகள் தொடர்ந்து எழுப்புகிறார்கள். மேலும், குறிப்பாக, 2009 முள்ளிவாய்க்கால் படுகொ*லைக்குப் பிறகு, திராவிட அரசியலின் மீதான விமர்சனம் மிகத் தீவிரமடைந்தது.

திராவிட அரசியலின் வேர்களும் - தமிழ்த் தேசியத்தின் எழுச்சியும்:

ஒரு வரலாற்றுப் பார்வை

தமிழ் அரசியல் வரலாற்றில் 'திராவிட' என்ற சொல்லும், அது சார்ந்த இயக்கங்களும் கடந்து வந்த பாதையை உற்றுநோக்கினால், அதன் பின்னால் உள்ள அரசியல் நகர்வுகள் புரியும்.

1. நீதிக்கட்சியும் நடேச முதலியாரும் (1916):

திராவிட இயக்கத்தின் ஆணிவேராகக் கருதப்படுபவர் டாக்டர் நடேச முதலியார். 1916-ல் பிராமணர் அல்லாத அரசு ஊழியர்களின் நலனுக்காக 'யுனைட்டெட் மெட்ராஸ் லீக்' (United Madras League) என்ற அமைப்பை அவர் உருவாக்கினார். பின்னர் இதுவே 'தென்னிந்திய மக்கள் கழகம்' (South Indian People's Association) மற்றும் 'தென்னிந்திய விடுதலைக் கூட்டமைப்பு' (South Indian Liberal Federation) என உருவெடுத்தது. இதுவே பிற்காலத்தில் 'நீதிக்கட்சி' என்று அழைக்கப்பட்டது.

2. அயோத்திதாசப் பண்டிதரும் திராவிட அடையாளமும்:

அயோத்திதாசப் பண்டிதர், ரெவரண்ட் ஜான் ரத்தினம் போன்றோர் சாதியத் தீண்டாமையிலிருந்து விடுபட 'திராவிட' என்ற அடையாளத்தைப் பயன்படுத்தினர். இருப்பினும், பிற்காலத்தில் அயோத்திதாசப் பண்டிதர் 'தமிழர்' என்ற அடையாளத்தையே முன்னிலைப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

3. பெரியாரும் திராவிடர் கழகமும் (1944):

1944-ல் சேலம் மாநாட்டில் நீதிக்கட்சியை 'திராவிடர் கழகம்' (திக) எனப் பெயர் மாற்றினார் பெரியார் ஈ.வெ.ராமசாமி. அப்போது திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்த கி..பெ. விசுவநாதம், "இதைத் தமிழர் கழகம் என்று அழைக்க வேண்டும்" என வலியுறுத்தினார். ஆனால், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் அவர் வெளியேறி 'தமிழர் கழகத்தை'த் தனியாகத் தொடங்கினார்.

4. அண்ணாவும் திமுக-வின் தோற்றமும் (1949):

பெரியாரிடமிருந்து பிரிந்து அறிஞர் அண்ணா 'திராவிட முன்னேற்றக் கழகத்தை' (திமுக) தொடங்கியபோதும், 'திராவிட' என்ற சொல்லையே பயன்படுத்தினார். 1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும் வரை, தென்னிந்தியாவின் நான்கு மொழியினரையும் உள்ளடக்கிய ஒரு பொதுப் பெயராக 'திராவிட' என்பது ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

5. 1956-க்குப் பிந்தைய நிலை - 'திராவிட முகமூடி':

1956-ல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என அண்டை மாநிலங்கள் பிரிந்து சென்ற பிறகு, 'திராவிடம்' என்ற சொல்லின் தேவை தமிழர்களுக்கு அற்றுப்போனது. ஆனால், தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரம், ஊடகங்கள் மற்றும் திரைத்துறையைத் தக்கவைத்துக்கொள்ள 'திராவிட' என்ற சொல் ஒரு 'முகமூடியாகப்' பயன்படுத்தப்படுவதாகத் தமிழ் தேசியவாதிகள் கருதுகிறார்கள். அதற்கேற்பவே திராவிட அரசியல்வாதிகளின் செயல்பாடுகளும் இருந்தன.

6. 2009 - திருப்புமுனை:

முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகு, திராவிடக் கட்சிகள் தமிழர்களுக்கு இழைத்த துரோகங்கள் வெளிச்சத்திற்கு வந்தன. இதன் விளைவாகவே, திராவிட அடையாளத்தைத் துறந்து 'நாம் தமிழர்' உள்ளிட்ட தமிழ் தேசிய இயக்கங்கள் வலுப்பெறத் தொடங்கின.

திருமாவளவனின் குற்றச்சாட்டும் - பதிலடியும்

திராவிடத்தை எதிர்ப்பவர்கள் பார்ப்பனியத்திற்கு எதிராகச் செயல்படாமல், தெலுங்கர்களுக்கு எதிராகத் தமிழ்த் தேசியத்தைத் திருப்புகிறார்கள் என்பது திருமாவளவனின் முக்கியக் குற்றச்சாட்டாக உள்ளது.

ஆனால், தமிழ்த் தேசியவாதிகளின் தரப்போ வேறு விதமாக உள்ளது:

1. திராவிட முகமூடி:

திராவிடம் என்பது வெறும் அரசியல் தத்துவமாக இல்லாமல், பிற மொழியாளர்கள் தமிழ்நாட்டின் ஆட்சி, அதிகாரம், பத்திரிகை - ஊடகம் மற்றும் திரைத்துறையைக் கைப்பற்றிக் கொள்வதற்கான ஒரு 'முகமூடியாக' மாறிவிட்டது என்பது இவர்களின் வாதம்.

2. செயல்பாட்டு முரண்:

பார்ப்பனிய எதிர்ப்பைப் பேச்சில் மட்டுமே வைத்திருக்கும் திராவிட இயக்கங்கள், திரைமறைவில் அதே சக்திகளுடன் சமரசம் செய்துகொள்வதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

3. தமிழ்த் தேசியம் முடங்கியதா?

தமிழ்த் தேசியம் முடங்கவில்லை; மாறாக, கடந்த காலத் தேர்தல்களில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் தமிழ்த் தேசிய அரசியலை நோக்கி நகரத் தொடங்கியிருப்பதை முடிவுகள் காட்டுகின்றன.

தார்த்த நிலை என்ன?

1956-க்குப் பிறகு 'திராவிடம்' என்ற சொல் தமிழர்களின் தனித்துவமான அடையாளத்தை மறைக்கப் பயன்படுத்தப்படுவதாகத் தமிழ் தேசிய அமைப்புகள் கருதுகின்றன. "தமிழ் வாழ்க" என்று சொல்லும் திராவிட இயக்கங்கள், "தமிழர்கள் வாழ்க" என்று சொல்லத் தயங்குவது ஏன்? என்பதே தமிழ்த் தேசியர்ளின் அடிப்படை கேள்வி.

திருமாவளவன் போன்ற தலைவர்கள் தமிழ் தேசியத்திற்குப் பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை. தமிழ்த் தேசியம் என்பது ஒரு இனத்தின் தன்னுரிமைப் போராட்டம். அதனை வெறும் கட்சி எதிர்ப்பாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானதாகவோ சுருக்குவது முறையல்ல. காலமாற்றத்திற்கு ஏற்ப தமிழர்கள் தங்கள் இன அடையாளத்தை உணர்ந்து வரும் வேளையில், இத்தகைய விவாதங்கள் ஆரோக்கியமானவை என்றாலும், அவை உண்மையான வரலாற்றை மறைப்பதாக இருக்கக் கூடாது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User