கேரளாவுக்கு கனிம வளத் தளர்வு வேண்டாம்: "தமிழ்நாட்டின் கனிம வளங்கள் தமிழ்நாட்டுக்கே" – வேல்முருகன் கோரிக்கை
தமிழ்நாட்டின் கனிம வளங்களை பிற மாநிலங்களுக்கும் பெருநிறுவனங்களுக்கும் வழங்கக் கூடாது என்றும், "தமிழ்நாட்டின் கனிம வளங்கள் தமிழ்நாட்டுக்கே" என்ற கொள்கை அறிவிப்பை வெளியிட தமிழக அரசு முன்வர வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தமிழ்நாடு, கேரளாவின் கல்குவாரியா?
இயற்கை வளங்கள், கார்ப்பரேட்டுகளின் இலாபத்திற்கானதா?
தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு கனிம வளங்களை எடுத்துச் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ளக் கட்டுப்பாடுகளில் தளர்வு வழங்குமாறு கேரள முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருப்பது, தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை மீண்டும் எல்லைத் தாண்டிச் சுரண்ட அனுமதி கோரும் முயற்சியாகவே இருக்கிறது.
கேரள அரசு, தேசிய நெடுஞ்சாலை மற்றும் விழிஞ்சம் துறைமுகம் உள்ளிட்ட முக்கிய கட்டுமானப் பணிகளுக்குத் தமிழ்நாட்டின் கல், ஜல்லி உள்ளிட்ட கனிம வளங்கள் அவசியம் எனக் கூறித் தளர்வு கோரியுள்ளது.
கேரளா தனது இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் கடுமையான நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கிறது. தன் மாநிலத்தின் மலைகளை வெட்டி எடுக்க ஒப்பந்தங்கள் போடப்பட்ட பிறகும் வெட்ட அனுமதிக்காமல் பாதுகாக்கும் கேரள அரசு, தமிழ்நாட்டின் மலைகளையும் பாறைகளையும் வெட்டி தனது வளர்ச்சிக்காகப் பயன்படுத்த அனுமதி கேட்பது எந்த வகையிலும் நியாயமல்ல.
இதிலும் கவனிக்க வேண்டிய உண்மை என்னவென்றால், கேரளாவின் விழிஞ்சம் துறைமுகமும், தமிழ்நாட்டின் காட்டுப்பள்ளி துறைமுகமும், நாட்டின் பல விமான நிலையங்களும், அதானி குழுமத்தின் ஒப்பந்த நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
இன்று துறைமுகங்கள், விமான நிலையங்கள், விரைவுச் சாலைகள் என்ற பெயரில் பெருநிறுவனங்களின் இலாபத்திற்காக, இயற்கை வளங்கள் வேகமாகச் சுரண்டப்படும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து வெளியே பிற மாநிலங்களுக்குச் செல்லும் பல்லாயிரக்கணக்கானச் சுமையுந்து (லாரி) வாகனங்களில் கொண்டு செல்லப்படும் கற்களும், எம்சாண்டும், மணலும் வெறும் கட்டுமானப் பொருட்கள் அல்ல. தமிழரின் மலைகள், தமிழரின் நீராதாரங்கள், தமிழரின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தமிழரின் எதிர்கால வாழ்வுரிமை ஆகியவற்றையே சுமந்து செல்கின்றன.
உலகமே காலநிலை மாற்றம், எல் நினோ போன்ற இயற்கைப் பேரிடர்களால் அச்சமடைந்து வரும் இந்தக் காலகட்டத்தில், இயற்கை வளங்களை விற்று வளர்ச்சி என்ற மாயையை உருவாக்காமல், அவற்றைப் பாதுகாப்பதே உண்மையான முன்னேற்றமாகும்.
எனவே, தமிழக அரசு தற்போது எடுத்துள்ள கனிம வளப் போக்குவரத்து கட்டுப்பாட்டு முடிவில் எந்தவிதத் தளர்வும் அளிக்கக் கூடாது.
அதுமட்டுமல்லாமல்,தமிழ்நாட்டின் கனிம வளங்கள் தமிழ்நாட்டு மக்களின் தேவைக்கே பயன்படுத்தப்படும். அண்டை மாநிலங்களின் கட்டுமானங்களுக்கோ, பெருநிறுவனங்களின் இலாபத்திற்கோ, வெளிநாடுகளுக்கோ தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் வழங்கப்படமாட்டாது என்ற, உறுதியானக் கொள்கை அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்."
இவ்வாறு தமது அறிக்கையில் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)