மு.க.ஸ்டாலின் மிசாவில் ஏன் கைது செய்யப்பட்டார்? பெண்கள் குறித்து அதிர வைக்கும் குற்றச்சாட்டு கூறும் “காவல்துறை ஆவணம்”! EXCLUSIVE

மு.க.ஸ்டாலினின் 1976 மிசா கைது தொடர்பானதாகக் கூறப்படும் “Grounds for Detention” ஆவணத்தில் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள், அரசியல் எதிரிகளைத் தாக்குதல், பெண்கள் தொடர்பான பாலியல் முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன. ஆவணம் உண்மையில் என்ன சொல்கிறது? இதுவே இறுதித் தீர்ப்பா? தமிழ் ஊடகம் புலனாய்வு.

Sep 11, 2026 - 20:27
Updated: 6 days ago
0 262
மு.க.ஸ்டாலின் மிசாவில் ஏன் கைது செய்யப்பட்டார்? பெண்கள் குறித்து அதிர வைக்கும் குற்றச்சாட்டு கூறும் “காவல்துறை ஆவணம்”!  EXCLUSIVE

மு.க.ஸ்டாலின்: மிசா சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யப்பட்டார்?

அதிர வைக்கும் “காவல்துறை ஆவணம்”! தமிழ் ஊடகம் பிரத்தியேகப் புலனாய்வு

-தமிழ் ஊடகம் புலனாய்வுச் செய்தியாளர் குழு

மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது ஏன்? அவர் அவசரநிலையை எதிர்த்ததற்காக மட்டுமே கைது செய்யப்பட்டாரா? அல்லது வேறு குற்றச்சாட்டுகளும் அன்றைய காவல்துறை ஆவணங்களில் இடம்பெற்றிருந்தனவா?

இந்தக் கேள்விகளை முன்வைத்து “மிசா கைது: ஆவணங்கள் என்ன சொல்கின்றன?” என்ற புலனாய்வுக் கட்டுரையை தமிழ் ஊடகம் ஏற்கெனவே வெளியிட்டிருந்தது.

அந்தக் கட்டுரைக்காக நாம் தேடிய ஆவணங்களில், மு.க.ஸ்டாலின் மீது பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் இருந்ததாகக் கூறப்படுவதற்கான நேரடி ஆவணம் நமக்குக் கிடைக்கவில்லை.

“அத்தகைய ஆவணம் கிடைத்தால், மு.க.ஸ்டாலினின் மிசா கைது தொடர்பாக இதுவரை கூறப்பட்டுவரும் வரலாற்றின் இன்னொரு பக்கம் வெளிப்படும்” என்று அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்நிலையில் அந்தக் கட்டுரையை வாசித்த வாசகர் ஒருவர் முக்கியமான ஆவணம் ஒன்றின் படத்தை தமிழ் ஊடகத்திற்கு அனுப்பியுள்ளார்.

என்ன ஆவணம் அது?

“C.B. INT. No. 19/76 — GROUNDS FOR DETENTION” என்ற தலைப்பை அந்த ஆவணம் தாங்கியுள்ளது.

அதில்,

“M.K. Stalin (23) s/o M. Karunanidhi”

என்று மு.க.ஸ்டாலினின் பெயரும், அவரது அன்றைய கோபாலபுரம் முகவரியும் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆவணத்தின் இறுதியில் 1-2-76 என்ற தேதியும், “Addl. Insp. Genl. and Commissioner of Police, Madras” என்ற பதவியும் காணப்படுகின்றன.

இந்த ஆவணத்தின் அசல் மூலம் நமக்குக் கிடைக்கவில்லை. அதிகாரப்பூர்வ ஆவணக் காப்பக நகலுடன் இதை தமிழ் ஊடகம் சுயாதீனமாக உறுதிப்படுத்தவும் இதுவரை இயலவில்லை.

எனினும், நமக்குக் கிடைத்துள்ள ஆவணப் படத்தில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள் அதிர்ச்சியூட்டுகின்றன.

அதில் இருப்பதை அதன் பொருள் மாறாமல் தமிழில் தருகிறோம்.

மு.க.ஸ்டாலின் குறித்து ஆவணம் என்ன சொல்கிறது?

மு.க.ஸ்டாலினை திமுகவின் செயற்பாட்டாளர் என்றும், முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் மகன் என்றும் குறிப்பிடும் அந்த ஆவணம்,

“சட்டத்தைத் தனது கைகளில் எடுத்துக்கொண்டு, மாநிலத்தில் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு வந்தார்”

என்று முதலில் குற்றம்சாட்டுகிறது.

அடுத்ததாக திமுக நடத்திய பல பொதுக்கூட்டங்களில் ஸ்டாலின் பங்கேற்று, கட்சியின் “பிரிவினைவாத மற்றும் அவசரநிலை எதிர்ப்புக் கொள்கைகளை” பரப்பியதாகவும், மாநில அரசின் தவறுகளுக்கும் தோல்விகளுக்கும் மத்திய அரசைப் பொறுப்பாக்கி, மத்திய அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டியதாகவும் அந்த ஆவணம் கூறுகிறது.

மேலும், மாநில சட்டப்பேரவையின் ஆயுட்காலம் நீட்டிக்கப்படாவிட்டால் தமிழ்நாட்டில் புரட்சி ஏற்படும் என்று எச்சரிக்கும் அளவிற்குச் சென்றார் என்றும் அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுவரை அரசியல் சார்ந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் ஆவணம், அடுத்த பத்தியில் மேலும் தீவிரமான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்கிறது.

அரசியல் எதிரிகள்; பெண்கள் — அதிர வைக்கும் குற்றச்சாட்டுகள்!

மு.க.ஸ்டாலின்,

“ரவுடித்தனமான நடவடிக்கைகளிலும், அரசியல் எதிரிகளைத் தாக்குவதிலும் அச்சுறுத்துவதிலும் ஈடுபட்டுள்ளார்”

என்று அந்த ஆவணம் குற்றம்சாட்டுகிறது.

அதன்பிறகு,

“காவல்துறை வட்டாரங்களிலிருந்து கிடைத்த நம்பகமான தகவல்கள்” என்று குறிப்பிட்டு, அவர் “sexual misconduct” — பாலியல் முறைகேடான நடத்தையில் ஈடுபட்டதாகவும், இளம் பெண்களைத் தொந்தரவு செய்து துன்புறுத்தியதாகவும் குற்றம்சாட்டுகிறது.

அத்துடன்,

“சட்டபூர்வமான நடவடிக்கையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தினார்”

என்ற குற்றச்சாட்டும் அதில் இடம்பெற்றுள்ளது.

இத்தகைய செயல்கள் பொதுமக்களிடையே, குறிப்பாகப் பெண்களிடையே அச்சத்தையும் பாதுகாப்பின்மை உணர்வையும் ஏற்படுத்தியதாகவும் அந்த ஆவணம் கூறுகிறது.

இறுதியாக, மு.க.ஸ்டாலின் தேசவிரோத, அவசரநிலை எதிர்ப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருப்பதாகவும், அவர் வெளியில் இருப்பது தேசிய ஒருமைப்பாட்டுக்கும் பொது ஒழுங்கைப் பராமரிப்பதற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அந்த ஆவணம் குற்றம்சாட்டுகிறது.

இதன் அடிப்படையில் Maintenance of Internal Security Act, 1971 — MISA சட்டத்தின் கீழ் அவரைத் தடுப்புக் காவலில் வைப்பது அவசியம் என்று ஆவணம் முடிகிறது.

இதுவே இறுதித் தீர்ப்பா?

இல்லை.

நமக்குக் கிடைத்திருப்பது மு.க.ஸ்டாலினைத் தடுப்புக் காவலில் வைப்பதற்காக அன்றைய காவல்துறை தரப்பில் பதிவு செய்யப்பட்டதாகத் தோன்றும் “Grounds for Detention” ஆவணத்தின் ஒருபக்கப் படம்.

இதில் பெண்கள் தொடர்பானவை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டனவா? விசாரணை நடைபெற்றதா? குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதா? நீதிமன்றத்தின் முன் அவை நிரூபிக்கப்பட்டனவா? என்பதற்கான ஆவணங்கள் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை.

மேலும், தற்போது கிடைத்திருக்கும் ஆவணப் படத்தின் அசல் அரசுக் கோப்பு அல்லது அதிகாரப்பூர்வச் சான்றளிக்கப்பட்ட நகலும் நம்மிடம் இல்லை.

எனவே இந்த ஆவணத்தில் இடம்பெற்றிருப்பவற்றை அன்றைய காவல்துறை தரப்பில் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளாக மட்டுமே இப்போது எடுத்துக்கொள்ள முடியும்; நிரூபிக்கப்பட்ட குற்றங்களாகவோ நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பாகவோ எடுத்துக்கொள்ள முடியாது.

ஆனால் மு.க.ஸ்டாலினின் மிசா கைது குறித்து அரை நூற்றாண்டாக நடைபெற்று வரும் விவாதத்தில், இந்த ஆவணத்தின் அசல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டால் அது முக்கியமான வரலாற்று ஆவணமாக அமையும். எனினும் அதற்கான ஒரு முகாந்திரமாக இந்த ஆவணம் அமைகிறது.

அதன் அசல் எங்கே? அதில் குறிப்பிடப்படும் “காவல்துறை வட்டாரங்களின் நம்பகமான தகவல்கள்” எவை? அவற்றின் அடிப்படையில் வழக்குகள் இருந்தனவா?

இதற்கான பதில்கள் இதுவரை கிடைக்காத ஆவணங்களில் இருக்கலாம்.

காவல்துறை ஆவணத்தின் பிரதி

What's Your Reaction?

Like Like 3
Dislike Dislike 1
Love Love 1
Funny Funny 1
Wow Wow 1
Sad Sad 1
Angry Angry 0

Comments (0)

User