கர்நாடக அணைகளின் நீர் இருப்பை நேரில் ஆய்வு செய்ய வல்லுநர் குழுவை அனுப்ப வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தல்

கர்நாடக அணைகளில் உள்ள காவிரி நீர் இருப்பை நேரில் ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு வல்லுநர் குழுவை அனுப்ப வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தியுள்ளார்.

Jul 29, 2026 - 08:53
Updated: 4 days ago
0 13
கர்நாடக அணைகளின் நீர் இருப்பை நேரில் ஆய்வு செய்ய வல்லுநர் குழுவை அனுப்ப வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தல்

இதுகுறித்துத் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 22.07.2026 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்குமுறை ஆணையும் (Cauvery Water Management Authority - CWMA) கூட்டத்தில், தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரை உடனடியாகத் திறந்துவிட வேண்டும் என்ற கோரிக்கையை கர்நாடக அரசு வழக்கம் போல மறுத்துள்ளது. 

உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும், காவிரி மேலாண்மை ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆணைகளையும் ஒருபோதும் மதிக்காமல், காவிரி ஒழுங்குமுறைக்குழுக் கூட்டத்திலேயே தண்ணீர் தர முடியாது எனத் திமிராக அறிவித்த கர்நாடக அரசின் செயல்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் சூன் மாதத்திற்கு 9.19 ஆ.மி.க. (டி.எம்.சி) மற்றும் சூலை மாதத்திற்கு 31.24 ஆ.மி.க. என மொத்தம் இந்த இரண்டு மாதங்களில் மட்டும் 40.43 ஆ.மி.க. தண்ணீரை கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், இதையெல்லாம் கர்நாடகம் எப்போதும் மதித்ததில்லை !

குறுவை சாகுபடி பொய்த்துப் போகும் அபாயத்தில் இருக்கும் நிலையில், சட்டப்பூர்வமாகத் தரவேண்டிய தண்ணீரைத் தராமல் பிடிவாதம் பிடிப்பது தமிழ்நாட்டின் மீது தொடுக்கப்படும் வாழ்வாதாரப் போராகும்.

தற்போது கர்நாடகத்தில் உள்ள காவிரி அணைகளான கிருஷ்ணராஜ சாகர் (KRS) அணையில், 17.21 ஆ.மி.க.வும், ஏமாவதி அணையில், 21.15 ஆ.மி.க.வும், கபினி அணையில், 10.35 ஆ.மி.க.வும், ஏரங்கி அணையில் 4.51 ஆ.மி.க.வும் என மொத்தமாக 53 ஆ.மி.க. தண்ணீர் உள்ளது. அதாவது 52% அளவுக்கு அங்கு அணைகளில் தண்ணீர் இருப்பு உள்ளது. 

இந்நிலையில், இதில் பாதியையாவது கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு கோர வேண்டும்.

கர்நாடக அணைகளின் உண்மை நிலவரத்தையும், அங்குள்ள நீர் இருப்பையும் நேரில் சென்று துல்லியமாக ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு உடனடியாக ஒரு வல்லுநர் குழுவை (Expert Committee) கர்நாடகத்திற்கு அனுப்ப வேண்டும். 

அக்குழு நேரில் ஆய்வு செய்து, தரவுகளின் அடிப்படையில் நமக்குச் சேர வேண்டிய நீரின் அளவை ஆதாரப்பூர்வமாகப் புள்ளி விவரங்களுடன் முன்வைத்து, இந்திய அரசுக்கும் காவிரி ஒழுங்குமுறைக் குழுவுக்கும் அழுத்தம் கொடுத்துத் தண்ணீரைப் பெற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு கி.வெங்கட்ராமன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User