உள்ளாட்சி நிர்வாகத்தில் ‘ஈகோ’ மோதலா? தவெக அரசு - திமுக உள்ளாட்சிகள் இடையேயான சிக்கல்கள் என்ன?
தமிழகத்தில் தவெக அரசு மற்றும் திமுக தலைமையிலான உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடையே நிர்வாக ஒத்திசைவு குறைபாடு உள்ளதா? சமூக ஆர்வலர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் மற்றும் அதன் தாக்கம் குறித்து சிறப்புப் பகுப்பாய்வு.
--நாச்சி. செல்வராஜ், பத்திரிகையாளர்
உள்ளாட்சி அமைப்புகளில் 80 சதவீதத்துக்கும் மேல் திமுகவினர் பொறுப்புகளில் இருப்பதால் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில், நிர்வாக ரீதியாக நடைமுறைச் சிக்கல்கள் எழுகிறது எனும் குற்றச்சாட்டு தொடர்பாக ஆராய்கிறது இந்தக் கட்டுரை.
உள்ளாட்சிகளில் திமுக ஆதிக்கம்
தமிழ்நாட்டில் 25 மாநகராட்சிகள், 148 நகராட்சிகள், 498 பேரூராட்சிகள் மற்றும் 4000க்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் பொறுப்புகளில் உள்ளனர்.
இதில் 25 மாநகராட்சிகளிலும் திமுக மேயர்களும், நகராட்சிகளில் பெரும்பான்மையாகத் திமுகவினர் தலைவர்களாகவும், பேரூராட்சிகளில் 80 சதவீதம் தலைவர்கள் திமுகவினராகவும் இருந்து வருகின்றனர்.
புதிய ஆட்சி; பழைய நிர்வாக அமைப்பு
கடந்த மே மாதம் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த தவெக அரசில் நகராட்சிக்கு என்று தனி அமைச்சர் இதுவரை பொறுப்பேற்கவில்லை .
மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகள், வசதிகளைத் தமிழ்நாடு அரசு உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாகவே வழங்க முடியும், மக்களின் பிரச்சனைகளை இந்த அமைப்புகளின் மூலமாகவே தீர்த்து வைக்க முடியும்.
மாதாந்திரக் கூட்டங்களில் அரசியல் மோதல்கள்
இப்படிப்பட்ட நிலையில், உள்ளாட்சி அமைப்புகளின் செயல்திட்டங்கள் குறித்து விவாதிக்கவும், ஒப்பந்தப் புள்ளி வெளியிடுதல், வரிவசூல் உள்ளிட்ட அலுவல்களைத் தீர்மானிக்கவும் மாதத்தின் இறுதி வாரத்தில் ஏதாவது ஒருநாள் உள்ளாட்சி அமைப்புகள் மாதாந்திரக் கூட்டம் நடத்துவது வழக்கம்.
அவ்வாறு நடைபெறும் மாநகராட்சி, நகராட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் அரசுக்கு எதிரான மனநிலையில் இருக்கின்றனர். முதலமைச்சருக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பியும், மு.க.ஸ்டாலின் வாழ்க என்று முழங்கியும், முன்னாள் முதலமைச்சரா இல்லை இந்நாள் முதலமைச்சரா என்கிற போட்டி அரசியல் செய்கின்றனர். இந்தத் தேவைற்ற சச்சரவுகள்தான் செய்தித் தாள்களில் அதிக அளவு செய்திகள் ஆகின்றன.
நிர்வாக ஒத்திசைவில் சிக்கல்?
தவெக அரசின் உத்தரவுகளைக் கடைபிடிக்க வேண்டிய நிலையில் உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் இருக்கின்றனர். ஆனால் உள்ளாட்சிகளின் தேர்நதெடுக்கப்பட்ட திமுக நிர்வாகிகள் தங்களின் செயல் திட்டங்களை முன்வைக்கிறன்றனர். ஆக, இரு தரப்பிற்கும் ஒத்திசைவு இல்லாததால், பணிகள் முடங்கிக் கிடக்கின்றன என்கின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள். இதுபொதுமக்களின் அன்றாடப் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இதுவரை முதலமைச்சர் ஜோசப் விஜயைச் சந்தித்து சென்னை மாநகரம் குறித்த எந்த ஒரு பிரச்சனை பற்றியும் ஆலோசிக்கவில்லை.
இது குறித்து செய்தியாளர்கள் கேட்டால், "முதலமைச்சர் தரப்பில் இருந்து எனக்கு அழைப்பு வரவில்லை என்றும் அதனால் நான் சந்திக்கவில்லை" என்றும் மேயர் பிரியா கூறுகிறார்.
பொதுமக்கள் சேவையில் தாக்கம்
மாநகராட்சி மற்றும் நகராட்சித் திமுக தலைவர்கள் நிறைவேற்றும் தீர்மானங்கள், மற்றும் ஒப்பந்தப் புள்ளிகளை மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆணையர்கள் மற்றும் செயலாளர்கள் கிடப்பில் போடுவதாகவும், இரத்து செய்வதாகவும் மறுபுறம் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த இருதரப்பு "ஈகோ பனிப்போர்" காரணமாக உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் தடுமாறுகிறது என்று சுட்டிக்கட்டும் சமூக ஆர்வலர்கள், இதன்காரணமாகப் பொதுமக்களுக்கான செயல்பாடுகள் ஆமை வேகத்தில் நகர்வதாகக் கூறுகின்றனர்.
அரசு தலையீடு அவசியமா?
முதலமைச்சர் ஜோசப் விஜய் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்கவில்லையெனில் உள்ளாட்சி நிர்வாகத்தின் மீதான கோபம் அரசின் மீதே விழும் என்கிறார்கள் சமூக செயற்பாட்டாளர்கள்.
ஊழல் குற்றச்சாட்டுகளும் நீதிமன்ற நடவடிக்கைகளும்
இதற்கிடையில், மதுரை மாநகராட்சியில் 100 கோடி ரூபாய் ஊழல் புகார், கோயமுத்தூர் மாநகராட்சியில் 54 பேர் முறைகேடாகப் பணி நியமனம் செய்யப்பட்டு, நீதிமன்றம் அந்த ஆணையை இரத்து செய்ததும், அதேபோல சென்னை மாநகரட்சியில் 2000 கோடி ரூபாய் ஒப்பந்தப் புள்ளி இரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
2
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)