உ. சகாயம் IAS பாதுகாப்பு விவகாரம் : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் கோரிக்கை

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி உ. சகாயத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் கேள்வியைத் தொடர்ந்து தமிழ்த் தேசியப் பேரியக்கம் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Jul 15, 2026 - 16:28
Updated: 15 days ago
0 16
உ. சகாயம் IAS பாதுகாப்பு விவகாரம் : சென்னை உயர்நீதிமன்றம்  கேள்வி, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் கோரிக்கை

இதுகுறித்து, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்திய ஆட்சிப் பணியில் நேர்மையின் சின்னமாக இருந்து, திறமையாகச் செயல்பட்டு பணி ஓய்வு பெற்ற அதிகாரி, திரு உ. சகாயம் அவர்கள் தமக்கு காவல்துறையின் பாதுகாப்புக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு காத்துக் கொண்டுள்ளார். நேற்று (14.07.2026) இவ்வழக்கை விசாரித்து வரும் சென்னை உயர் நீதிமன்றம், "ஊழலற்ற - நேர்மையான அதிகாரியாகப் பணிபுரிந்ததால் மிக அதிகமான எதிர்ப்புகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி உ. சகாயம் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஏன் காவல்துறை பாதுகாப்பு வழங்கக் கூடாது" என்று தமிழ்நாடு அரசிடம் கேட்டுள்ளது. இந்த நிலையில் புதிதாக அமைந்துள்ள த.வெ.க. ஆட்சி ஐயா உ சகாயம் அவர்களுக்கு உரிய காவல்துறை பாதுகாப்பை வழங்க வேண்டும்.

மதுரை மாவட்ட ஆட்சியராக ஐயா உ. சகாயம் அவர்கள் பணியாற்றியபோது (2012) மதுரை - மேலூர் பகுதியில் தனி நபர்கள் அடித்த பெரும் கருங்கல் (கிரானைட்) கொள்ளையைத் தடுத்து, இயற்கையைப் பாதுகாத்தவர் ஐயா உ. சகாயம் அவர்கள். அவர் அப்படி தடுத்து நிறுத்திய போது, அதுவரை கருங்கல் வெட்டி விற்றவர்கள், 10 கோடி ரூபாய் அளவுக்கு அரசின் வருமானத்தைத் தடுத்து விட்டார்கள் என்பது ஐயா உ. சகாயம் அவர்கள் கண்டறிந்து வெளிப்படுத்திய உண்மை! இதனால் தங்களின் கருங்கல் கொள்ளைக்கு ஆபத்து என்று கருதியவர்கள் அன்றைய அ.தி.மு.க. ஆட்சியைப் பயன்படுத்தி ஐயா உ. சகாயம் அவர்களுக்கு கடுமையான நெருக்கடிகளைக் கொடுத்தார்கள். அதனால் அவர், மதுரை மாவட்ட ஆட்சியர் பதவியிலிருந்து விலகி மாற்று அரசுப் பணிக்குப் போனார். அப்போதும் அவர் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய சதித் திட்டங்களை எதிரிகள் தீட்டியதால், அவர் ஆயுதம் தாங்கிய தனி காவல்துறை பாதுகாப்புக் கேட்டுப் பெற்றார். அப்போது ஆயுதம் தாங்கிய காவல்துறையினரின் பாதுகாப்பு அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்டது.

2020 இல் பணி ஓய்வு பெற்ற பின்னும் ஆயுதம் தாங்கிய காவல்துறையினரின் பாதுகாப்பு அவருக்குத் தொடர்ந்தது. ஆனால் தி.மு.க. ஆட்சி அமைந்தபின் 2023 இல் அந்தக் காவல்துறை பாதுகாப்பை தி.மு.க. ஆட்சி நீக்கிவிட்டது. 

அதன் பிறகும் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் ஆபத்துகள் சூழ்ந்ததை அறிந்த ஐயா உ. சகாயம் அவர்கள் பாதுகாப்புக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார். அந்த வழக்கில்தான் இப்பொழுது சென்னை உயர்நீதிமன்றம் மேற்படி ஐயா உ. சகாயம் அவர்களுக்கு ஏன் காவல்துறை பாதுகாப்பு வழங்கக் கூடாது என்ற கேள்வியை புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க ஆட்சியிடம் கேட்டுள்ளது. 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னை உயர் நீதிமன்றமும் ஆதரிக்கின்ற ஐயா உ. சகாயம் அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் ஆயுதம் தாங்கிய காவல்துறையினரின் பாதுகாப்பை 24 மணி நேரமும் வழங்க ஆணையிடுமாறு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

என்று பெ.மணியரசன் குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User