வள்ளலார் பெருவெளியைத் திட்டமிட்டு சிதைத்த திமுக அரசு ! வடலூர்ப் பெருவெளியில் கைவைத்த திமுகவின் நிலை என்ன?!
வடலூர் வள்ளலார் பெருவெளி, 106 ஏக்கர் நிலம், பன்னாட்டு மையத் திட்டம், நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் திமுக அரசு செய்த வள்ளலாருக்கு விரோதமான தொடர் நடவடிக்கைகள் குறித்து விளக்கும் தொகுப்பு.
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
வடலூர் வள்ளலாரின் சமரச சுத்த சத்திய சன்மார்க்க சங்கத்திற்காக பார்வதிபுரம் மக்கள் கடந்த 1865-67 ம் ஆண்டு கால கட்டங்களில் 81 காணி நிலம் அதாவது 106 ஏக்கர் நிலம் தனமாகக் கொடுத்தார்கள்.
அந்த 106 ஏக்கர் நிலமும் இராமலிங்க வள்ளற் பெருமானார் பெயரில்தான் தனமாக எழுதிக் கொடுக்கப்பட்டது.
அந்த 106 ஏக்கரில் 1867 ம் ஆண்டு சத்திய தருமச்சாலை கட்டப்பட்டது, 1872 ம் ஆண்டு சத்திய ஞானசபை கட்டப்பட்டது.
இந்த 106 ஏக்கர் வெட்டவெளித் தலத்தையே "பெருவெளித் தலம்" என்று வள்ளற் பெருமானார் அழைத்தார். இதற்கு "உத்தர ஞான சிதம்பரம்" - "உத்தர ஞான சித்திபுரம்" என்று இறைவரால் சூட்டப்பட்ட பெயர்களையும் வள்ளற் பெருமானார் சூட்டினார்.
இந்த ஒட்டுமொத்த அமைப்பும் 1938 ம் ஆண்டு மே 12 ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. அன்றுமுதல் இந்த மொத்த அமைப்பும் "திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம்" என்று அறநிலையத்துறையால் அழைக்கப்படுகிறது.
கடந்த 1975 ம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியில் இந்த 106 ஏக்கர் நிலத்திலிருந்து 25 ஏக்கர் நிலம் தனியருக்குப் பட்டாப் போட்டு அளிக்கப்பட்டுவிட்டது. சுமார் 6 ஏக்கர் நிலம் அப்போது இந்த தெய்வநிலையத்தை வள்ளற் பெருமானாரின் சன்மார்க்கக் கொள்கைக்கு நேர் எதிராக உருவ வழிபாடு செய்துகொண்டிருந்த சிவாச்சாரியார் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டது.
பிறகு 2021 ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அறநிலையத்துறை, வடலூரில் 100 கோடி ரூபாய் செலவில் "வள்ளலார் பன்னாட்டு மையம்" கட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்தனர்.
இந்தப் பன்னாட்டு மையம் திட்டம் அறிவித்த நிலையில் "வடலூர் தலைமைச் சங்கம்" எனும் பெயரில் ஒரு அமைப்பு திருமதி. துர்கா ஸ்டாலின் அவர்களின் சகோதரர் ஜெயராஜா மூர்த்தி என்பவரை கவுரவ ஆலோசகராகக் கொண்டு தொடங்கப்பட்டது. அதன் பொறுப்பாளராக ஜெயராஜமூர்த்தியைத் தனது குருவாக அறிவித்த அருள்நாகலிங்கம் என்பவர் "பெருவெளிக்குள் கட்டுமானம் கட்டியே தீருவோம்" என்று கூறி நாடெங்கிலும் உள்ள தனியாரால் நடத்தப்படும் தருமச்சாலைகளுக்கு அண்டா, குண்டா, அடுப்பு, நிதி உதவி என்று அளித்து இதற்கு ஆதரவு திரட்டும் அரசியல் பரப்புரை மேற்கொண்டார்.
பிறகு ஜெயராஜ மூர்த்தி, இந்த அமைப்புக்கும், பன்னாட்டு மையத் திட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்தார். ஆனாலும், அவரது சீடர் அருள் நாகலிங்கம் திமுக ஆட்சி அகலும் வரை வள்ளற் பெருமானாரின் சன்மார்க்க நெறிக்கு நேர் எதிராக நடந்து திமுக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.
முன்னதாக "வள்ளலார் பன்னாட்டு மையம் வடலூரில் கட்டப்படும்" என்று பொதுவான அறிவிப்பு வெளியிட்ட நிலையில் பிறகுதான் தெரிந்தது அவர்கள் போட்டுக் கொடுக்கப்பட்ட மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்பு போக மீதமுள்ள சுமார் 72 ஏக்கர் "பெருவெளித் தல" நிலத்தில் கட்டப் போகிறார்கள் என்று.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் முருகன்குடி முருகன், சுப்ரமணிய சிவா உள்ளிட்டோர் உரிய அதிகாரிகளிடம் மனு கொடுத்து முருகன் அவர்கள் இந்த விவகாரத்தை நேர்காணல் மூலம் வெளி உலகிற்குத் தெரியப்படுத்தினர்.
இதன்பிறகு வள்ளற் பெருமானாரின் சன்மார்க்கம் குறித்து விவரம் அறிந்தவர்கள், வள்ளலாருக்கு 106 ஏக்கர் நிலம் தனமாக அளித்த பார்வதிபுரம் மக்களின் வாரிசுகள், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தெய்வத் தமிழ்ப் பேரவை மற்றும் அரசியல் கட்சியினர் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
வள்ளலார் பன்னாட்டு மையம் கட்டுமானம் கட்டப் பெருவெளியில் தோண்டப்பட்ட பள்ளங்களுக்குள் இறங்கி பார்வதிபுரம் மக்கள் போராடினார்கள். அவர்கள் மீதெல்லாம் பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பாரதிய ஜனதா கட்சியின் கோயில் பாதுகாப்புக் குழுத் தலைவர் வினோத் ராகவேந்திரா எனும் மனுதாரர் சென்னை உயர் மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். மூத்த வழக்கறிஞர் சுரேஷ் அவர்கள் வாதாடினார்.
முதல்கட்டமாக, நீதிமன்றத்தில், 106 ஏக்கரில் 72 ஏக்கர் நிலத்திற்கு மட்டுமே தங்களிடம் பட்டா இருப்பதாக அறநிலையத்துறை கூறியது. இதையடுத்து மீதமுள்ள இடம் எங்கே என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன், அதனைக் கண்டு பிடிக்க கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்து நீதிமன்றமே உத்தரவிட்டது.
அந்தக் குழு கொடுத்த அறிக்கையில்தான் 25 ஏக்கர் நிலம் 1975 ம் ஆண்டு திமுக ஆட்சியில் தனியாருக்குப் பட்டாப் போட்டுக் கொடுத்ததும், 6 ஏக்கர் நிலம் சிவாச்சாரியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதும் அதிகார பூர்வமாகத் தெரியவந்தது.
"இந்த ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் 34 ஏக்கர் நிலத்தை மீட்ட பிறகே சர்வதேச மையம் உள்ளிட்ட எந்தப் புதிய கட்டுமானம் குறித்தும் பேச வேண்டும்" என்று சென்னை உயர் நீதிமன்றம் முதல்கட்டமாக ஆணை பிறப்பித்தது.
இதன்பிறகு இந்த 72 ஏக்கர் நிலத்தை "சைட் A" என்றும், அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 12 ஏக்கர் நிலத்தை "சைட் B" என்றும் பிரித்த அறநிலையத்துறை சைட் B -யில் கட்டுமானம் கட்ட அனுமதி கேட்டது. உயர்நீதி மன்றமும் அதற்கு மட்டும் அனுமதி கொடுத்தது. (சைட் A வில் அல்ல, B யில் மட்டும்)
எனினும், அங்கும் எந்த விதமான விதிமுறைகளையும் பின்பற்றாமல், சட்ட விரோதமாகக் கட்டுமானம் கட்ட அறநிலையத்துறை முயற்சி செய்கிறது என்று உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம், "பெருவெளித் தலம் காக்க உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் முறையாக விசாரிக்கப்படவில்லை. எனவே அனைத்து மனுக்களும் முறையாக முதலில் இருந்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அப்போது சைட் B யில் கட்டுமானம் கட்ட உச்சநீதி மன்றத்திடம் அனுமதி கேட்டது அறநிலையத்துறை. வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதி மன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளோம். ஒருவேளை அந்தத் தீர்ப்பு சைட் B யிலும் கட்டக்கூடாது என்று வந்தால் என்ன செய்வீர்கள் என்று உச்ச நீதி மன்றத்தால் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அறநிலையத்துறை தரப்பு "அப்போது அந்தக் கட்டடத்தை இடித்துவிடுவோம்" என்று கூறியது.
இப்படிப்பட்ட நிலையில் சைட் A -வில், அந்த 72 ஏக்கர் நிலத்தில் கட்டடம் கட்டத் தோண்டப்பட்ட பள்ளங்கள் அப்படியே கிடக்கின்றன. அதை மறைத்து வைக்கப்பட்ட தகரத் தகடுகளுக்குள் மது, மாது, என வள்ளற் பெருமான் போற்றி பாராட்டிய பெருவெளித் தலத்துக்குள் வள்ளலார் பின்பற்றாளர்களை இதயம் சுக்கு நூறாக்கும் செயல்கள் நடைபெற்று வருகின்றன என்கிற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
எனவே, மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களும், மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் அவர்களும் இதில் தலையிட்டு, முதல் கட்டமாக, தகரத் தகடுகளை அகற்றி, பள்ளங்களை மூடி பத்தர்கள் வந்து செல்லும் வகையில் அதனை பெருவெளித் தலமாக மீட்டு எடுக்கவேண்டும். 72 ஏக்கர் நிலத்தையும் தூய்மை செய்து, சிசி டிவி கண்காணிப்பு, பாதுகாவலர்கள் நியமித்து அதனைப் பாதுகாக்க வேண்டும்.
அதன்பிறகு ஆக்கிரமிக்கப்பட்ட 34 ஏக்கர் நிலத்தையும் மீட்டு 106 ஏக்கர் நிலத்தையும் வெட்ட வெளித் தலமாகப் பாதுகாக்க வேண்டும்.
அது வெறும் வெட்டவெளி நிலம் அல்ல, உத்தரஞான சிதம்பரம்...உத்தர ஞான சித்திபுரம். செத்தாரை எழுப்பும் உத்தர ஞான சித்திபுரம் என்கிறார் வள்ளலார்.
அந்தச் சித்தன் சிவத்தின் மகன் "தான்" என்கிறார் அருட்பிரகாச இராமலிங்க வள்ளற் பெருமான்.
சித்தர்களின் கோபத்திற்கு ஆளான திமுகவின் நிலை கடந்த தேர்தலில் எதிரொலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
2
Dislike
1
Love
1
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)