மேக்கேதாட்டு அணை விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் முக்கிய கடிதம்
மேக்கேதாட்டு அணை தொடர்பாக மத்திய நீர்வளத் துறை அமைச்சரின் மாநிலங்களவை பதிலை திரும்பப் பெற வேண்டும் என்றும், உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி தீர்ப்பாய உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
மேக்கேதாட்டு அணை தொடர்பாக இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு, தமிழக முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் 28.07.2026 அன்று எழுதிய அரைஅதிகாரப்பூர்வ (D.O.) கடிதத்தின் தமிழாக்கம்
மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு,
மேக்கேதாட்டு அணை தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய ஜல் சக்தி துறை இணையமைச்சர் அளித்த பதிலை தங்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். அந்தப் பதிலில், 2018 பிப்ரவரி 16-ஆம் தேதி வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பில், காவிரி ஆற்றின் குறுக்கே எந்த அமைப்பையும் கட்டுவதற்கு முன்பு கர்நாடக அரசு கீழ்ப்பாயும் மாநிலங்களின் (Lower Riparian States) ஒப்புதலைப் பெற வேண்டும் என்று வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
இணையமைச்சரின் இந்தப் பதில், கீழ்ப்பாயும் மாநிலங்களின் ஒப்புதல் தொடர்பாக நிலவிவரும் சட்டநிலை மற்றும் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டுள்ள சட்டக் கொள்கைகளை கருத்தில் கொள்ளாமல் வழங்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் – ஆந்திரப் பிரதேசம் இடையேயான அலமட்டி அணை வழக்கில், உச்சநீதிமன்ற அரசியலமைப்புச் சட்ட அமர்வு வழங்கிய தீர்ப்பை தங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். அந்தத் தீர்ப்பில், கீழ்ப்பாயும் மாநிலத்தின் ஒப்புதல் கட்டாயமானது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் Vs ஆந்திரப் பிரதேசம் [2000 (9) SCC 572], பத்தி 100-ல் கூறப்பட்டுள்ளதாவது:
"...மத்திய அரசின் ஒப்புதலின்றியும், மற்ற அனைத்து கீழ்ப்பாயும் மாநிலங்களின் ஒப்புதலின்றியும், கர்நாடக மாநிலம் அந்த உயரம் வரை எந்த அணைக் கட்டுமானத்தையும் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது..."
மேலும், காவிரி நீர்விவகாரத் தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பின் XVIII-ஆம் பிரிவை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. அந்தப் பிரிவின்படி, ஒவ்வொரு மாநிலமும் தமது எல்லைக்குள் உள்ள நீரை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் பெற்றிருந்தாலும், அது தீர்ப்பாயத்தின் உத்தரவுகளுக்கு முரணாக இருக்கக் கூடாது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, தீர்ப்பாயம் வகுத்துள்ள நீர்விடும் ஒழுங்குமுறையை பாதிக்கும் எந்தத் திட்டமும், அந்தத் தீர்ப்புடன் ஒத்துப்போகிறதா என்பதை சட்டரீதியாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது.
தீர்ப்பாயம் வழங்கிய வழிகாட்டுதல்கள்
கேரள மாநிலத்தின் பாம்பார் நீர்மின் திட்டம் தொடர்பாக, வெறும் 0.1 டி.எம்.சி. நீர் பயன்பாடு மட்டுமே இருந்தபோதிலும், கீழ்ப்பாயும் பாசனப் பகுதிகள் பாதிக்கப்படாமல் இருக்க, கேரளமும் தமிழகமும் இணைந்து நீர்விடும் கால அட்டவணையை நிர்ணயிக்க வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதன் மூலம், ஆண்டு முழுவதும் பகிரப்படும் நீரின் அளவை மட்டுமல்லாமல், நீர்விடும் ஒழுங்குமுறையையும் (Regulated Releases) தீர்ப்பாயம் மிகுந்த முக்கியத்துவத்துடன் கருதியது என்பது தெளிவாகிறது.
மேலும்,
தீர்ப்பின் XI-ஆம் பிரிவு, கீழ்ப்பாயும் மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய திட்டமிட்ட நீர்விடுதலை பாதிக்கும் எந்த நடவடிக்கையையும், பரஸ்பர ஒப்புதல் மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்துடன் ஆலோசனை இன்றி மேற்கொள்ளக் கூடாது என்று கூறுகிறது.
XX-ஆம் பிரிவு, தீர்ப்பில் மாற்றங்கள் செய்ய வேண்டுமானால், சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களின் ஒப்புதல் அவசியம் என்பதை வலியுறுத்துகிறது.
தமிழக அரசின் நிலைப்பாடு
எனவே, மேக்கேதாட்டு திட்டத்தை வெறும் பொறியியல் திட்டமாக மட்டும் மதிப்பீடு செய்ய முடியாது என்பது தமிழக அரசின் தெளிவான கருத்தாகும்.
அதன் சட்டப்பூர்வத் தன்மை முதலில் பின்வரும் அம்சங்களின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட வேண்டும்:
காவிரி நீர்விவகாரத் தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பு,
2018 பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு,
கீழ்ப்பாயும் மாநிலங்களின் உரிமைகள்.
மேலும், 2019-ஆம் ஆண்டு கர்நாடக அரசு சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கையை (DPR), காவிரி தீர்ப்பாய உத்தரவுகளுக்கும் நடைமுறைக் கையேடுகளுக்கும் இணங்க திருத்தம் செய்ய வேண்டும் என்று மத்திய நீர்வள ஆணையம் (CWC) திருப்பி அனுப்பியிருந்தது. இதுவே தீர்ப்பாய உத்தரவுகளைப் பின்பற்றுவது தவிர்க்க முடியாத முன் நிபந்தனை என்பதை உறுதிப்படுத்துகிறது.
எனவே, இந்திய அரசை வலியுறுத்துவது:
இந்த சூழ்நிலையில், இந்திய அரசு பின்வரும் நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
முதலில், 2026 ஜூலை 27-ஆம் தேதி மாநிலங்களவையில் கேள்வி எண் 876-க்கு ஜல் சக்தி துறை இணையமைச்சர் அளித்த பதில், மாநிலங்களுக்கு இடையேயான நீர்விவகாரங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சட்டக் கொள்கைகளை கருத்தில் கொள்ளாமல் வழங்கப்பட்டிருப்பதால், அந்தப் பதிலை திரும்பப் பெற வேண்டும்.
மேலும்,
(i) காவிரி நீர்விவகாரத் தீர்ப்பாயத் தீர்ப்பும், உச்சநீதிமன்றத் தீர்ப்பும் முழுமையாகப் பின்பற்றப்படுவதாக நிரூபிக்கப்படாத வரை, மேக்கேதாட்டு திட்டத்திற்கு எந்தவித சட்டப்பூர்வ அல்லது நிர்வாக அனுமதியும் வழங்கக்கூடாது.
(ii) கீழ்ப்பாயும் மாநிலங்களின் நீரின் அளவு (Quantum) மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட நீர்விடும் முறை (Regulated Pattern of Releases) ஆகிய உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.
(iii) எதிர்காலத்தில் இந்தத் திட்டம் மீண்டும் பரிசீலிக்கப்பட வேண்டுமெனில், கீழ்ப்பாயும் அனைத்து மாநிலங்களின் கவலைகளையும் கருத்தில் கொண்டு, முழுமையான தொழில்நுட்ப மற்றும் சட்ட ஆய்வுக்குப் பிறகே மேற்கொள்ளப்பட வேண்டும்.
காவிரி ஆறு என்பது வெறும் நீராதாரம் மட்டுமல்ல; தென்னிந்தியாவில் வாழும் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் உயிர்நாடியாகும்.
காவிரி தீர்ப்பாயத் தீர்ப்பின் ஒருமைப்பாட்டையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மதிப்பையும் பாதுகாப்பது, மாநிலங்களுக்கு இடையேயான நதிகளை ஒழுங்குபடுத்தும் அரசியலமைப்புச் சட்ட அமைப்பின் மீது மக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கு அத்தியாவசியமானதாகும்.
எனவே, நீதி, கூட்டாட்சித் தத்துவம் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளின் நேர்மையான அமலாக்கம் ஆகிய உயர்ந்த நோக்கங்களின் அடிப்படையில் தங்களது தலையீட்டை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)