நீர்க்குமிழி அரசியல்வாதி அல்ல சீமான்... தமிழர்களின் அறிவுக் களஞ்சியம்! – நாச்சி செல்வராஜ் சிறப்பு கட்டுரை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அரசியல் ஆளுமை, தமிழ்த் தேசிய சிந்தனை, பெண்களுக்கு 50% அரசியல் அதிகாரம், பொருளாதார பார்வை மற்றும் தமிழர் உரிமைப் போராட்டங்களை மூத்த பத்திரிகையாளர் நாச்சி செல்வராஜ் அலசுகிறார்.
--நாச்சி. செல்வராஜ், பத்திரிகையாளர்
சீமான்: ஒரு அரசியல்வாதியா? தமிழர் சிந்தனையாளரா?
உலகளாவிய அரசியல் நடத்தையை உள்ளூருக்கு ஒப்பிட்டுப் பேசி அரசியலில் புதிய நெறிமுறைகளை வகுத்தவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
அவரது ஆளுமை குறித்து அலசுகிறார் மூத்த பத்திரிகையாளர் நாச்சி செல்வராஜ்.
உலக அரசியலைத் தமிழ்நாட்டுடன் இணைத்த புதிய அரசியல் பார்வை
எந்த ஒரு நாட்டில் பெண்களுக்கு 50% அரசியல் அதிகாரம் ஒதுக்கப்படுகிதோ அந்த நாடே பொருளாதாரத்தில் தலைசிறந்து விளங்கும் நாடாக மாறுகிறது. அந்த வகையில் சர்வதேச அளவில் கியூபா, மெக்சிகோ, நியூசிலாந்து, ஐக்கிய அரபு நாடுகள் போன்ற நாடுகள் இதைப் பின்பற்றுகின்றன.
பெண்களுக்கு 50% அரசியல் அதிகாரம்: சீமானின் முன்னோடி சிந்தனை
இதுபோலவே தமிழ்நாட்டிலும் பெண்களுக்குத் தேர்தலில் போட்டியிட 50% இடம் வழங்கி இந்திய அரசியலில் முன்மாதிரியாக பேசப்பட்டவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
எந்த ஒரு நாட்டிலும் அந்த இனம் சார்ந்த தலைவர் ஆளுவதற்கும், பிற தலைவர் ஆளுவதற்கும் வேறுபாடுகள் உண்டு எனச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டில் புதிய அரசியல் எழுச்சியை ஏற்படுத்தியவர் சீமான்.
மொழி, இனம், தமிழ்த் தேசியம்: சீமானின் அரசியல் அடையாளம்
மொழி இனம் குறித்து எவன் ஒருவன் கவலைப்படுகிறானோ, அதற்கான பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்கிறானோ அவன் மட்டுமே என்னுடன் வர வேண்டும். சாதி மதம் இதைத் தூக்கிப்பிடிப்பவர் எவரும் என்னைப் பின்தொடர வேண்டாம் என திமிரோடு பேசிய ஒரு அரசியல்வாதி சீமான்.
இதுபோன்ற கொள்கைகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு கடந்த 15 ஆண்டுகளாக தமிழர்களுக்காகவும், தமிழர் உரிமைக்காகவும் போராடும் சீமான் தற்போது தடுமாற்றத்தாலும் ஏமாற்றத்தாலும் அரசியலில் பின் தங்குவதாக சிலர் கருதுகின்றனர்.
மக்கள் உரிமைப் போராட்டங்களின் களத்தில் சீமான்
தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மக்கள் உரிமை கேட்டுப் போராடுகிறார்களோ அங்கெல்லாம் சென்று முதலாளாகப் போராடிய சீமான் தற்போது ஒதுங்கி நிற்பது ஏன்? என்கிற கேள்விகள் பலராலும் எழுப்பப்படுகின்றன.
திமுக – அதிமுக ஆட்சிகள் குறித்து சீமானின் விமர்சனங்கள்
கடந்த 60 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் திமுக - அதிமுக ஆட்சிகளில் தமிழக மக்கள் எப்படியெல்லாம் சீரழிக்கப்பட்டனர் என்பது குறித்து அவ்வப்போது மேடைகளில் சீமான் பேசுவதுண்டு.
மாஞ்சோலை முதல் பரமக்குடி வரை: ஆட்சிகளின் மீது எழுப்பிய கேள்விகள்
தமிழினத் தலைவர் எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட கலைஞர் மு கருணாநிதி ஆட்சியில், கடந்த 1999 ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதியன்று, கூலி உயர்வு கேட்டுப் போராடிய மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களில் 17 பேரைத் தாமிரபரணி ஆற்றில் காவல்துறையினர் அடித்தே கொன்றனர்.
அதேபோல, சட்டமன்றத்தில் தான் ஒரு பிராமணப் பெண் என்று அறிவித்துக் கொண்ட ஜெயலலிதாவின் ஆட்சியில், கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதியன்று பரமக்குடியில் ஆறு பேரைக் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.
இப்படிச் சொந்த மக்களையே ஆற்றில் அடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொல்லுவதும் வேறு எந்த நாட்டிலாவது நடக்குமா?
ஆனால் "இந்த மக்களையும் மண்ணையும் நேசிக்கும் நான் ஒருபோதும் தொழிலாளர்களையோ உழைப்பாளிகளையோ இப்படிச் செய்ய மாட்டேன்" என்று மேற்கோள் காட்டி சீமான் பேசியது உண்டு.
சமூக ஒற்றுமையும் தமிழர் அரசியலும்
மேலும் வடக்கே வன்னியரும் பறையரும், தெற்கே தேவேந்திரரும் தேவரும் ஒன்றிணைந்தால் தமிழ்நாட்டில் அரசியல் புரட்சியை ஏற்படுத்தலாம் என புதிய பாதையைப் போட்டவர் சீமான்.
மேடைகளில் அனைத்து சாதிப் பெயர்களையும் உரிமையோடு குறிப்பிட்டுப் பேசித் தன் வசப்படுத்தி அவர்கள் அனைவரையும் தமிழர்களாகக் தோழமையோடு பார்க்கும் ஒரே தலைவர் சீமான் என்பது பல நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன.
தமிழர் வரலாற்றை மீட்டெடுக்கும் அரசியல் முயற்சி
தமிழ்நாட்டில் மொழிக்காகவும் இனத்திற்காகவும் பாடுபட்ட ஒவ்வொரு தலைவர்களையும் சுவரொட்டிகள் மூலம் அவர்களது பிறந்த நாளையும், நினைவு நாளையும் போற்றும் புதிய அரசியல் நெறிமுறைகளை வகுத்து அடுத்தடுத்த தலைமுறைக்கும் அவர்களை அறிமுகம் செய்து வருபவர் சீமான்.
கப்பலோட்டிய சிதம்பரனார், வனக் காப்பாளர் வீரப்பன், தமிழர் வரலாற்று - மொழியியல் ஆய்வறிஞர் தேவநேயப் பாவாணர், திருக்குறளைப் பாதுகாத்த இரட்டைமலை சீனிவாசன், பெரும்பிடுகு முத்தரையர், சுதந்திரப் போராட்டத்தில் திப்பு சுல்தானைப் பாதுகாத்த தீரன் சின்னமலை போன்றோரின் வரலாறுகளை இன்றளவும் மேடைகளில் பேசிப் புத்துணர்ச்சியை ஏற்படுத்துபவர் சீமான்.
பொருளாதாரம், சுற்றுச்சூழல், தற்சார்பு வளர்ச்சி: சீமானின் பார்வை
அது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் மேம்பாட்டுக்காக தற்சார்புப் பொருளாதார வளர்ச்சிகள் எந்தெந்தத் துறைகள் மூலம் வருவாய் ஈட்டுவது குறித்து பொருளாதார நிபுணர் போல கருத்துரை வழங்குவதில் இவருக்கு இணை எந்த அரசியல்வாதியும் இல்லை.
நீர் வளப் பாதுகாப்பு, கால்நடைப் பராமரிப்பு, மீன்வளம் பெருக்குதல், சுற்றுச் சூழல் பாதுகாத்தல், வனப் பாதுகாப்பு என்பதையெல்லாம் தாண்டி தமிழர் இனத்தையும் பாதுகாக்க பல்வேறு கருத்தரங்கங்கள் ஆங்காங்கே நடத்தி அரசியல் விழிப்புணர்வை தமிழக இளைஞர்களுக்கு ஊட்டியவர் சீமான்.
தமிழ்த் தேசியம் மற்றும் திராவிட அரசியலைச் சுற்றிய விவாதங்கள்
தமிழ்த் தேசியத்திற்கு நேர் எதிரியாக இருப்பது திராவிடமும் - ஆரியமும் என சுட்டிக்காட்டி அவர்களை எதிர்த்து அரசியல் போரிட்டு வருபவர் சீமான்.
அண்மைக்கால சர்ச்சைகள்: விமர்சனங்களும் விளக்கங்களும்
தமிழ்த் தேசியத்தை நடத்திய சி.பா.ஆதித்தனார் போன்றவர்கள் எல்லாம் ஆரிய - திராவிடத்திடம் தோல்வியுற்ற நிலையில், "மீண்டும் அதேபோலத் தோற்பேன் என்று நினைத்தாயா ?... நான் சீமான்டா...நிச்சயமாக ஒருநாள் வெற்றி பெறுவேன்" என சூழுரைத்து அரசியல் நடத்தி வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில வாரங்களுக்கு முன்பு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியிடம் மேடையில் கொஞ்சிக் குலாவியதாக, நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பிற அரசியல் பிரமுகர்கள் சர்ச்சையைக் கிளப்பினர்.
திராவிடத்திடம் மண்டியிட்டு விட்டார், அவர்களிடம் கூட்டணி செல்கிறார், பொது வேட்பாளராக நிறுத்தப்படுகிறார் என்றெல்லாம் விமர்சனம் சீமான் மீது வைக்கப்பட்டன.
தமிழர் அரசியலின் நீடித்த முகமாக சீமான்?
எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் உள்ளம் வருந்துவது இயல்புதானே. அந்த வகையில் சீமான் எப்படி நிலை குலைந்து போயிருப்பார் என்பது அவரை அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். ஆனாலும் கொண்ட கொள்கையில் நிமிர்ந்து நின்று, நெஞ்சை உயர்த்திப் பீடு நடை போடுவதாகச் சீமான் கூறி வந்தாலும் அவர் மீது ஏற்பட்ட சந்தேகம் இன்னமும் முடிந்தபாடு இல்லை.
அந்த வகையில் மூத்த பத்திரிகையாளர்கள் பா. ஏகலைவன், வளர்மெய்யறிவான் என்கிற விசுவநாத், கார்ட்டூனிஸ்ட் பாலா போன்றவர்கள் எல்லாம் சீமான் நலன் சார்ந்து விமர்சனம் செய்வதைகூட சீமானுக்கு நேர் எதிராக சில விஷமிகள் திருப்பி விட்டனர். அதேசமயம் உண்மை ஒருநாள் பேசும் என்று கூறி அவர்களும் ஒதுங்கி விட்டனர்.
தமிழர் அரசியலின் எதிர்காலத்தில் சீமானின் இடம்
இந்நிலையில் சீமான் அனைத்து விமர்சனங்களுக்கும் மதிப்பளித்துப் பதில் கூறி நாம் தமிழர் என்ற எழுச்சி பயணத்தைத் தொடர்ந்து தொய்வின்றி முன்னெடுப்பார் என்பதேத் தமிழ் உணர்வாளர்களின் விருப்பமும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
1
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)