தமிழ் ஈழச் சிக்கல் ஏன் இந்திய மக்களின் அரசியல் மனச்சாட்சியாக மாறவில்லை? தமிழகத்தின் ஈழ ஆதரவு அரசியல்: உண்மையான போராட்டமா, தேர்தல் கால விளம்பரமா?

ஈழத் தமிழர் பிரச்சினை இன்னமும் நினைவேந்தல் மேடைகளில் உயிருடன் இருக்கிறது; ஆனால் அரசியல் தீர்வு மேசையில் பலவீனமாகவே உள்ளது. இனி தேவைப்படுவது இன்னொரு உணர்ச்சிமிக்க முழக்கம் அல்ல; தரவுகளின் அடிப்படையிலான ஆய்வு, ஒற்றுமையான கொள்கை, இந்திய அளவிலான கூட்டணி, சர்வதேசச் சட்ட நடவடிக்கை மற்றும் பாதிக்கப்பட்ட ஈழ மக்களை மையப்படுத்திய நீண்டகால அரசியல் திட்டமே தேவை என்பதை ஆராயும் சிறப்புக் கட்டுரை.

Jul 31, 2026 - 18:09
Updated: 2 months ago
0 31
தமிழ் ஈழச் சிக்கல் ஏன் இந்திய மக்களின் அரசியல் மனச்சாட்சியாக மாறவில்லை? தமிழகத்தின் ஈழ ஆதரவு அரசியல்: உண்மையான போராட்டமா, தேர்தல் கால விளம்பரமா?

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம்

தமிழ்நாட்டில்  கடந்த முப்பது ஆண்டுகளாக இலங்கைத் தமிழர்களின் தேசிய இன உரிமை, இறுதிப்போரில் நடந்த மனித உரிமை மீறல்கள், காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள், நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல், அகதிகளின் குடியுரிமையற்ற வாழ்க்கை போன்றவை தமிழ்நாட்டில் தொடர்ந்து பேசப்பட்டிருக்கின்றன. ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன; சட்டப்பேரவைத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன; நினைவேந்தல்கள் நடத்தப்பட்டுள்ளன; தேர்தல் அறிக்கைகளிலும் ஈழத் தமிழர் பிரச்சினை இடம்பெற்றுள்ளது.

ஆனால் இத்தனை நடவடிக்கைகளுக்குப் பிறகும், ஈழத் தமிழர் பிரச்சினை இந்திய அளவில் ஒரு முக்கிய ஜனநாயக, மனித உரிமை, வெளியுறவுக் கொள்கைப் பிரச்சினையாக ஏன் நிலைபெறவில்லை?

இதற்கான பதில் ஒரே வரியில் இல்லை. இந்திய அரசின் புவிசார் அரசியல், ராஜீவ் காந்தி படுகொலையின் தாக்கம், விடுதலைப் புலிகள் மீதான தடை, தமிழகக் கட்சிகளின் தேர்தல் அணுகுமுறை, ஈழ ஆதரவு அமைப்புகளுக்கிடையேயான பிளவுகள், வடஇந்திய ஊடகங்களின் அக்கறையின்மை, இலங்கைத் தமிழ் அரசியலின் உள் முரண்பாடுகள் ஆகிய அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளன.

1. ஈழப் பிரச்சினையும் விடுதலைப் புலிகளும் ஒன்றாகச் சுருக்கப்பட்டன

இந்திய பொதுமக்களிடம் இலங்கைத் தமிழர் பிரச்சினையை எடுத்துச் செல்லும்போது நிகழ்ந்த மிகப்பெரிய அரசியல் தவறு, “ஈழத் தமிழர் உரிமை” என்ற முழுப் பிரச்சினையையும் “விடுதலைப் புலிகள்” என்ற ஒரே அமைப்போடு இணைத்துக் காட்டியதே ஆகும்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த மொழி, கல்வி, வேலைவாய்ப்பு, நில உரிமை மற்றும் அரசியல் பிரதிநிதித்துவப் பாகுபாடுகளுக்கு பல தசாப்த வரலாறு உள்ளது. ஆயுதப் போராட்டம் உருவாகுவதற்கு முன்னரே தமிழ்த் தலைவர்கள் சமஷ்டி, பிராந்திய சுயாட்சி, மொழிச் சமத்துவம் மற்றும் அரசியல் அதிகாரப் பகிர்வு ஆகியவற்றைக் கோரியிருந்தனர்.

ஆனால் இந்திய ஊடகங்கள் மற்றும் அரசியல் உரையாடல்களில்,

ஈழத் தமிழர் உரிமை = விடுதலைப் புலிகள் = பிரிவினைவாதம் = இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

என்ற மிக எளிமைப்படுத்தப்பட்ட நுட்பமான திட்டமிட்ட சமன்பாடு உருவாக்கப்பட்டது.

1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் இந்த அணுகுமுறை மேலும் வலுப்பெற்றது. இந்திய அரசு விடுதலைப் புலிகள் அமைப்பைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட அமைப்பாக வைத்திருப்பதுடன், அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதிக்கக்கூடும் என்ற பாதுகாப்பு நிலைப்பாட்டையும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளில் முன்வைத்துள்ளது.

இதன் விளைவாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், இடம்பெயர்ந்த பொதுமக்கள், நிலத்தை இழந்த விவசாயிகள், அரசியல் கைதிகள், போரில் உறவுகளை இழந்த குழந்தைகள் ஆகியோரின் தனிப்பட்ட மனித உரிமைப் பிரச்சினைகள்கூட இந்தியப் பொதுவெளியில் பாதுகாப்பு அரசியலின் வடிகட்டியிலேயே பார்க்கப்பட்டன.

இது ஈழத் தமிழர் பிரச்சினையை இந்திய மக்களிடம் கொண்டு செல்லத் தவறிய முதலாவது காரணம்.

2. ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு இந்தியாவில் உருவான அரசியல் தடுப்பு

ராஜீவ் காந்தி படுகொலை இந்திய அரசியல் உளவியலை ஆழமாக மாற்றியது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி, இந்திய அதிகார அமைப்பு, தேசிய ஊடகங்கள் ஆகியவற்றில் ஈழத் தமிழர் அரசியல் மீது சந்தேகமும் எதிர்ப்பும் உருவானது.

இதனால் இரண்டு வேறு கேள்விகள் ஒன்றாக்கப்பட்டன:

+ ராஜீவ் காந்தி படுகொலைக்கான குற்றவியல் பொறுப்பு.

+ இலங்கைத் தமிழர்களின் அரசியல் மற்றும் மனித உரிமைகள்.

ஒரு போராளி இயக்கத்தின் ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதக் குற்றசாட்டு அடிப்படையியல் மட்டுமே அணுகி ஒரு முழு இன மக்களின் உரிமைக் கோரிக்கையை நிராகரிக்கக் கூடாது. ஆனால் இந்திய அரசியல் நடைமுறையில் அந்த வேறுபாடு உறுதியாக நிறுவப்படவில்லை.

தமிழக ஈழ ஆதரவு இயக்கங்களும் இந்த உளவியல் தடையை உடைக்கும் வகையில் இந்திய மக்களிடம் பேசவில்லை. அவர்கள்,

+ இந்திய ஜனநாயகத்தின் மொழியில்,

+ அரசமைப்புச் சட்டத்தின் மொழியில்,

+ கூட்டாட்சி உரிமைகளின் மொழியில்,

+ மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் மொழியில்

ஈழப் பிரச்சினையை மறுவடிவமைத்திருக்க வேண்டும்.

அதற்கு மாறாக, சில அமைப்புகள் தொடர்ந்து உணர்ச்சிப்பூர்வமான முழக்கங்கள், தலைவர்களின் படங்கள், வீர வணக்கங்கள், நினைவேந்தல்கள் ஆகியவற்றை மையப்படுத்தின. அவை தமிழ்நாட்டின் ஒரு பகுதி மக்களிடம் உணர்வைத் தக்கவைத்தாலும், இந்தியாவின் பிற மாநில மக்களிடம் அரசியல் புரிதலை ஏற்படுத்தவில்லை.

3. இந்திய வெளியுறவுக் கொள்கையில் தமிழ்நாட்டுக்கு முடிவெடுக்கும் அதிகாரமில்லை

வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்பு, சர்வதேச ஒப்பந்தங்கள் ஆகியவை இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. தமிழக சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றலாம்; முதலமைச்சர் பிரதமருக்குக் கடிதம் எழுதலாம்; தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பலாம். ஆனால் இலங்கை தொடர்பான இறுதி முடிவை எடுப்பது இந்திய அரசே.

இந்தியாவின் இலங்கை அணுகுமுறையில் பின்வரும் அம்சங்கள் முக்கியமாகக் கருதப்படுகின்றன:

+ இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பு,

+ சீனாவின் இலங்கை முதலீடுகள் மற்றும் துறைமுகச் செல்வாக்கு,

+ கப்பல் போக்குவரத்துப் பாதைகள்,

+ இலங்கையின் அரசியல் நிலைத்தன்மை,

+ இந்திய மீனவர்களின் பிரச்சினை,

+ வர்த்தகம் மற்றும் முதலீடு,

+ பாதுகாப்பு மற்றும் உளவுத் தகவல் ஒத்துழைப்பு.

எனவே இந்திய அரசு, இலங்கைத் தமிழர் உரிமையைத் தனித்த அரசியல் நோக்கமாக அணுகாமல், பெரிய புவிசார் அரசியல் உறவின் ஒரு பகுதியாகவே அணுகுகிறது.

இந்திய அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு பெரும்பாலும் “ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கண்ணியம்”, 13ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் முழுமையான நடைமுறைப்படுத்தல் மற்றும் அதற்கு அப்பாற்பட்ட அதிகாரப் பகிர்வு என்பதாகவே இருந்து வருகிறது.

இதில் தனித் தமிழ் ஈழம், சர்வதேசப் பொதுவாக்கெடுப்பு அல்லது இலங்கை மீது கடுமையான அரசியல் அழுத்தம் போன்ற கோரிக்கைகள் இடம்பெறவில்லை.

அதாவது, தமிழ்நாட்டின் பல இயக்கங்கள் கோரிய தீர்வுக்கும் இந்திய அரசு ஏற்றுக்கொண்ட தீர்வுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது.

4. தமிழக அரசியல் கட்சிகளின் இரட்டை அணுகுமுறை

தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் ஈழத் தமிழர் பிரச்சினையில் வெவ்வேறு காலங்களில் போராட்டங்களையும் தீர்மானங்களையும் முன்னெடுத்துள்ளன. அவற்றை முழுமையாக விளம்பரம் என்று நிராகரிப்பது வரலாற்று உண்மைக்கு முரணானது.

உதாரணமாக, தமிழக சட்டப்பேரவையில் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாகப் பல தீர்மானங்களும் விவாதங்களும் இடம்பெற்றுள்ளன. 2011ஆம் ஆண்டில் போர்க்குற்றம் தொடர்பான தீர்மானமும், 2013ஆம் ஆண்டில் சர்வதேச விசாரணை, பொருளாதாரத் தடை மற்றும் பொதுவாக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளைக் கொண்ட தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தமிழகச் சட்டப்பேரவையின் மின்னணுப் பதிவகத்திலும் இலங்கைத் தமிழர் விவகாரங்கள் தனியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. 

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் சர்வதேச விசாரணை, தமிழர்களின் பாதுகாப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர், மீனவர் பிரச்சினை போன்றவற்றை இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ளனர். 

ஆனால் பிரச்சினை என்னவென்றால், இந்த நடவடிக்கைகள் பெரும்பாலும் தொடர்ச்சியான 

கொள்கையாக மாறவில்லை.

ஆட்சியில் இருக்கும் போது ஒரு நிலை; எதிர்க்கட்சியில் இருக்கும் போது மற்றொரு நிலை

தமிழகத்தின் பெரும்பாலான பெரிய கட்சிகள் ஈழத் தமிழர் பிரச்சினையைத் தங்கள் அரசியல் 

தேவைக்கேற்ப அதிகப்படுத்தியோ குறைத்தோ வந்துள்ளன.

மத்திய அரசில் கூட்டணியில் இருக்கும்போது மிதமான மொழி.

கூட்டணியிலிருந்து வெளியேறியபின் கடுமையான கண்டனம்.

தேர்தல் நேரத்தில் உணர்ச்சிமிக்க வாக்குறுதிகள்.

தேர்தலுக்குப் பிறகு குறைந்த நடவடிக்கை.

நினைவேந்தல் காலங்களில் தீவிரமான அறிக்கைகள்.

ஆண்டு முழுவதும் நிறுவன ரீதியான பணியின்மை.

இந்த மாறுபாடே மக்களிடையே நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியது.

ஒரு பிரச்சினை உண்மையான அரசுக் கொள்கையாக இருக்க வேண்டுமெனில், அது வெறும் அறிக்கை அல்லது தீர்மானத்தோடு நின்றுவிடக் கூடாது. அதற்கென,

+ நிரந்தர ஆய்வுப் பிரிவு,

+ சட்ட வல்லுநர் குழு,

+ சர்வதேச உறவுக் குழு,

+ ஆவணக் காப்பகம்,

+ பாதிக்கப்பட்டவர்களுக்கான சட்ட உதவி,

+ இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒருங்கிணைப்பு

உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

அது எந்த ஆட்சியிலும் முழுமையாக நடைபெறவில்லை.

5. ஈழ ஆதரவு இயக்கங்கள் அனைத்தும் விளம்பரத்திற்காகச் செயல்பட்டனவா?

இல்லை. அப்படிப் பொதுவாகக் குற்றஞ்சாட்டுவது நியாயமல்ல.

பல அமைப்புகள் ஈழ அகதிகளுக்குக் கல்வி, மருத்துவம், உணவு, சட்ட உதவி, மறுவாழ்வு மற்றும் ஆவணப்படுத்துதல் போன்ற பணிகளைச் செய்துள்ளன. சிலர் கைது, வழக்குகள், காவல்துறை கண்காணிப்பு போன்றவற்றையும் எதிர்கொண்டுள்ளனர். மாணவர் இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள், எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள், திரைப்படத் துறையினர், மீனவர் அமைப்புகள் ஆகியோரும் வெவ்வேறு காலங்களில் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

அதே நேரத்தில், சில இயக்கங்கள் மற்றும் அரசியல் குழுக்கள் ஈழத் தமிழர்களின் துயரத்தை,

+ மேடை அரசியலுக்காக,

+ அமைப்பின் செல்வாக்கை வளர்ப்பதற்காக,

+ சமூக ஊடகப் பிரபலத்திற்காக,

+ தேர்தல் ஆதரவைப் பெறுவதற்காக,

+ தனிநபர் தலைமைப் பிம்பத்தை உருவாக்குவதற்காக

பயன்படுத்தியிருக்கலாம் என்ற விமர்சனத்திற்கு நியாயமான அடிப்படை உள்ளது.

அதை மதிப்பிடுவதற்கு எளிய சில கேள்விகள் உள்ளன:

+ அமைப்பு ஆண்டுக்கு எத்தனை நாட்கள் ஈழப் பிரச்சினையில் செயல்படுகிறது?

+ பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நேரடி தொடர்பு உள்ளதா?

+ சட்ட ஆவணங்கள், சாட்சியங்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியல் போன்றவற்றைத் தொகுத்துள்ளதா?

+ தமிழைத் தவிர இந்தி, ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் வெளியீடுகள் செய்துள்ளதா?

+ இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதியாளர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டுள்ளதா?

+ நிதி வரவு–செலவுகள் வெளிப்படையாக உள்ளனவா?

இந்தக் கேள்விகளுக்கு விடை இல்லாமல், ஆண்டுக்கு ஒருமுறை படம், பதாகை, முழக்கம், நினைவேந்தல் என்று முடிவடைந்தால், அது அரசியல் இயக்கத்தைவிட அடையாள அரசியலாக மாறிவிடுகிறது.

6. ஈழத் தமிழர் அரசியல் தலைமைக்குள் ஏற்பட்ட பிளவுகளும் காரணம்

தமிழ்நாட்டின் தோல்வியை மட்டும் சுட்டிக்காட்டுவது முழுமையான ஆய்வாக இருக்காது. இலங்கைத் தமிழர் அரசியல் தரப்புகளுக்குள்ளும் ஒருமித்த தீர்வு வரைபடம் உருவாகவில்லை.

வெவ்வேறு தரப்புகள் வெவ்வேறு கோரிக்கைகளை முன்வைத்தன:

+ தனித் தமிழ் ஈழம்,

+ சமஷ்டி ஆட்சி,

+ வடக்கு–கிழக்கு இணைப்பு,

+ மாகாண சுயாட்சி,

+ 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல்,

+ 13ஆவது திருத்தத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரப் பகிர்வு,

+ சர்வதேச விசாரணை,

+ சர்வதேச குற்றவியல் நடவடிக்கை,

+ உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம்,

+ அரசமைப்புச் சீர்திருத்தம்.

இவற்றில் எது உடனடி கோரிக்கை, எது இடைக்காலத் தீர்வு, எது இறுதி அரசியல் நோக்கம் என்பதில் ஒன்றுபட்ட வழிகாட்டுதல் இல்லை.

இதனால் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முயன்ற தமிழகக் குழுக்களுக்கும் தெளிவான ஒரே கோரிக்கைப் பட்டியல் கிடைக்கவில்லை.

மேலும், இயக்கங்களுக்கிடையே ஏற்பட்ட பரஸ்பர குற்றச்சாட்டுகள், “யார் உண்மையான ஈழ ஆதரவாளர்?” என்ற போட்டி, தலைமை மோதல்கள் ஆகியவை மக்களிடையே சோர்வை ஏற்படுத்தின.

7. இந்திய மொழிகளில் ஈழ வரலாறு கொண்டுசெல்லப்படவில்லை

தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து ஆயிரக்கணக்கான உரைகள், கட்டுரைகள், காணொளிகள் வெளிவந்துள்ளன. ஆனால் அவற்றில் எத்தனை இந்தி, வங்காளம், மராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் அல்லது ஆங்கிலத்தில் தரமான ஆவணங்களாக வெளியிடப்பட்டன?

இதுவே முக்கியமான தோல்வி.

வடஇந்திய மாணவர் ஒருவர் ஈழப் பிரச்சினையை அறிந்துகொள்ள முயன்றால், அவருக்குக் கிடைப்பது பெரும்பாலும்:

+ இலங்கை அரசின் தகவல்,

+ இந்திய அரசின் பாதுகாப்பு அணுகுமுறை,

+ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்கிற ரீதியியிலான செய்திகள்,

+ இறுதிப்போர் பற்றிய சில சர்வதேச அறிக்கைகள்

மட்டுமே.

+ தமிழர்களின் வரலாற்றுப் பார்வை, மொழி உரிமைப் போராட்டம்,

+ 1956 மொழிச் சட்டம்,

+ 1958 மற்றும் 1983 இன வன்முறைகள்,

+ கல்வித் தரப்படுத்தல்,

+ அரசியல் உடன்படிக்கைகள் முறியடிக்கப்பட்ட வரலாறு

ஆகியவை இந்திய மக்களுக்கு முறையாகக் கற்றுக் கொடுக்கப்படவில்லை.

இது ஊடகத் தோல்வி மட்டுமல்ல; அறிவுத் தயாரிப்பின் தோல்வி.

8. உணர்ச்சி அதிகம்; உறுதிப்படுத்தப்பட்ட தரவுகள் குறைவு

தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு மேடைகளில் பயன்படுத்தப்பட்ட சில உணர்ச்சிகளை மட்டுமே கொண்ட பரப்புரைகள், அறிவார்ந்த மக்களின் ஆதரவைப் பெறாமல் விட்டுவிட்டன. இது ஏதோ ஒரு பரப்புரை மட்டுமே என்பது போன்ற தவறான உணர்வுகளை ஏற்படுத்திவிட்டன.

இது எதிர்தரப்புக்கு முழுப் பிரச்சினையையும் “பிரச்சாரம்” என்று நிராகரிக்க வாய்ப்பு அளித்து விட்டது.

அதே நேரத்தில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் விசாரணைகளின்போது, போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்கள் நடந்ததாகவும், அவற்றில் சில போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாக இருக்கக்கூடும் என்றும் பதிவு செய்துள்ளன. 

2024ஆம் ஆண்டின் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐ.நா. அறிக்கை, இலங்கையில் பல தசாப்தங்களாகத் தொடரும் கட்டாயக் காணாமல் ஆக்கல்கள், குடும்பங்களுக்கு நீதி மறுக்கப்படுதல் மற்றும் தண்டனையின்மை குறித்து கடுமையான கவலை வெளியிட்டது. 

இவ்வாறு சர்வதேச அமைப்புகள் வழங்கிய உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை இந்திய மொழிகளில் எளிமைப்படுத்தி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய இடத்தில், பெரும்பாலும் உணர்ச்சிப்பூர்வமான சமூக ஊடகப் பதிவுகளே முன்னிலை பெற்றன.

உணர்ச்சி மக்களைத் திரட்டலாம். ஆனால் சட்டம், தரவுகள், சாட்சியங்கள் மற்றும் தொடர்ச்சியான அரசியல் நடவடிக்கைகள்தான் தீர்வை உருவாக்கும்.

9. 2009க்குப் பிறகு போராட்டம் “நினைவுப் பண்பாடாக” மாறியது

2009 இறுதிப்போருக்குப் பின்னர் தமிழகத்தில் மிகப்பெரிய மக்கள் எழுச்சி ஏற்பட்டது. குறிப்பாக 2013 மாணவர் போராட்டங்கள் தமிழக அரசியல் கட்சிகளுக்கு கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தின.

ஆனால் காலப்போக்கில் ஈழ அரசியல்,

+ முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்,

+ மாவீரர் நாள்,

+ பிறந்தநாள் அல்லது நினைவுநாள் நிகழ்ச்சிகள்,

+ திரைப்பட மற்றும் மேடை உரைகள்,

+ சமூக ஊடகப் பதிவுகள்

என்ற சுழற்சிக்குள் சிக்கிக்கொண்டது.

நினைவுகூருதல் முக்கியமானதே. ஆனால் நினைவுகூருதலை அரசியல் திட்டமாக மாற்றாவிட்டால், அது வரலாற்றைப் பாதுகாக்கலாம்; தீர்வைப் பெற்றுத்தராது.

முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு தமிழகத்தில் உருவாக வேண்டியது:

+ நிரந்தர இனப்படுகொலை மற்றும் மனித உரிமை ஆய்வு மையம்.

+சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களுக்கான பாதுகாப்பான காப்பகம்.

+ சர்வதேசச் சட்ட வல்லுநர்கள் குழு.

+ இந்திய மொழிகளில் பரப்புரை அமைப்பு.

+ நாடாளுமன்ற அழுத்தக் குழு.

+ அகதிகளின் எதிர்காலம் குறித்த சட்டத் திட்டம்.

இவற்றில் எதுவும் தேவையான அளவில் நிறுவப்படவில்லை.

10. அகதிகள் மீதான தமிழகத்தின் அணுகுமுறையே முக்கியமான சோதனை

ஈழத் தமிழர்களுக்கு தமிழகத்தின் உண்மையான அக்கறையை அளவிட வேண்டுமென்றால், முதலில் தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளின் நிலையைப் பார்க்க வேண்டும்.

2022ஆம் ஆண்டு நிலவரத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வில், தமிழ்நாட்டின் 108 முகாம்களில் சுமார் 58,648 இலங்கை அகதிகள் வசித்ததாகவும், முகாம்களுக்கு வெளியேயும் பல ஆயிரம் பேர் வாழ்ந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

சிலர் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசித்தும்,

+ தெளிவான குடியுரிமை வழி,

+ நிரந்தர வாழ்வுரிமை,

+ முழுமையான வேலைவாய்ப்பு உரிமை,

+ சொத்துரிமை,

+ எளிதான உயர்கல்வி வாய்ப்பு,

+ பாதுகாப்பான தாயகம் திரும்பும் திட்டம்

இல்லாமல் சட்டத் தெளிவின்மையில் வாழ்கின்றனர்.

தமிழக அரசு முகாம்களை “மறுவாழ்வு முகாம்கள்” என்று மறுபெயரிட்டது, வீடுகள் மற்றும் நலத்திட்டங்களை மேம்படுத்தியது, பெண்களுக்கான சுயஉதவிக் குழுக்கள் உட்பட வாழ்வாதாரத் திட்டங்களை முன்னெடுத்தது. 2024இல் 667 பெண்கள் சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இவை வரவேற்கத்தக்கவை. ஆனால் நலத்திட்டம் அரசியல் உரிமைக்குச் சமமல்ல.

“ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறோம்” என்று கூறும் தமிழக அரசியல் சமூகம், தமிழ்நாட்டிலேயே பல தலைமுறைகளாக வாழும் அகதிகளுக்கான சட்டபூர்வ எதிர்காலத்தை உருவாக்க முடியவில்லை என்பது ஒரு பெரிய முரண்பாடு.

11. ஐக்கிய நாடுகள் தீர்மானங்களும் இந்தியாவின் மாறுபட்ட வாக்குகளும்

ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானங்கள் வந்தபோது இந்தியா சில ஆண்டுகளில் ஆதரவாகவும், சில ஆண்டுகளில் வாக்கெடுப்பைப் புறக்கணித்தும் செயல்பட்டது.

2012 மற்றும் 2013 தீர்மானங்களுக்கு இந்தியா ஆதரவாக வாக்களித்தது. பின்னர் பல முக்கிய தீர்மானங்களில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தது. இந்தியாவின் நிலைப்பாடு இலங்கைத் தமிழர்களின் நீதியை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல; இந்தியா–இலங்கை அரசியல் உறவு, சீனாவின் செல்வாக்கு மற்றும் பிராந்தியப் பாதுகாப்புக் கணக்கீடுகளையும் சார்ந்தது.

இதில் தமிழக அரசியல் கட்சிகள் செய்ய வேண்டியது, ஒவ்வொரு ஐ.நா. கூட்டத் தொடருக்கும் முன்னதாக:

+ ஒன்றுபட்ட அனைத்துக் கட்சிக் கோரிக்கை,

+ சட்ட ஆதாரங்களுடன் கூடிய அறிக்கை,

+ இந்திய வெளியுறவுத்துறையுடன் அதிகாரப்பூர்வ கலந்துரையாடல்,

+ பிற மாநிலக் கட்சிகளின் ஆதரவு,

+ நாடாளுமன்றத்தில் தீர்மானம்

ஆகியவற்றை முன்னெடுப்பதாக இருந்திருக்க வேண்டும்.

அதற்குப் பதிலாக பெரும்பாலும் கடிதங்கள், அறிக்கைகள், தனித்தனி ஆர்ப்பாட்டங்கள் என்பதோடு நடவடிக்கை முடிந்தது.

12. தமிழ்நாடு ஏன் இன்னும் தீர்வு பெற்றுத்தரும் வலுவான மாநிலமாகவில்லை?

இதற்கான முக்கிய காரணங்கள்:

ஒன்று: அரசமைப்புச் சட்ட வரம்பு

தமிழ்நாடு தனியாக இலங்கையுடன் ஒப்பந்தம் செய்ய முடியாது. வெளியுறவுக் கொள்கை ஒன்றிய அரசின் அதிகாரம்.

இரண்டு: இந்திய அளவிலான கூட்டணி உருவாக்கப்படவில்லை

தமிழகக் கட்சிகள் காஷ்மீர், மணிப்பூர், பழங்குடி உரிமைகள், மாநில சுயாட்சி போன்ற பிரச்சினைகளுடன் ஈழத் தமிழர் உரிமையை இணைத்து இந்திய அளவிலான மனித உரிமைக் கூட்டணியை உருவாக்கவில்லை.

மூன்று: தொடர்ச்சியான கொள்கை இல்லை

ஆட்சி மாறும்போது ஈழக் கொள்கையும் மாறியது. நிரந்தர மாநிலக் கொள்கை ஆவணம் உருவாக்கப்படவில்லை.

நான்கு: இயக்கங்கள் பிளவுபட்டன

ஒற்றைக் குறைந்தபட்சக் கோரிக்கைக்கூட உருவாக்கப்படவில்லை.

ஐந்து: பாதிக்கப்பட்ட மக்களின் குரல் பின்தள்ளப்பட்டது

தமிழ்நாட்டு மேடைகளில் தமிழகத் தலைவர்கள் அதிகம் பேசினர். வடக்கு–கிழக்கில் வாழும் பெண்கள், மீனவர்கள், விவசாயிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் வாழ்வியல் குரல் போதுமான அளவில் இடம்பெறவில்லை.

ஆறு: தேர்தல் கணக்கீடு மேலோங்கியது

ஈழத் தமிழர் பிரச்சினை தமிழகத் தேர்தலில் உணர்ச்சியை உருவாக்கும்; ஆனால் தனியாக ஆட்சியைத் தீர்மானிக்கும் அளவுக்கு வாக்குகளை மாற்றுவதில்லை என்ற கணக்கீடு பெரிய கட்சிகளிடம் உள்ளது.

ஏழு: இந்தியப் பாதுகாப்பு அமைப்புகளின் சந்தேகம்

விடுதலைப் புலிகள் மீதான தடை மற்றும் பிரிவினைவாத அச்சம் காரணமாக ஈழ அரசியல் தொடர்ந்து பாதுகாப்புக் கண்காணிப்பின் கீழ் உள்ளது.

இனி தமிழ்நாடு என்ன செய்ய வேண்டும்?

1. “தமிழக ஈழத் தமிழர் கொள்கை” உருவாக்கப்பட வேண்டும்

+ அனைத்துக் கட்சிகளும் ஏற்கக்கூடிய குறைந்தபட்சக் கொள்கை:

+ தமிழர்களின் சமத்துவம் மற்றும் தாயக உரிமை,

+ அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு,

+ வடக்கு–கிழக்கின் மக்கள்தொகை மற்றும் நில உரிமைப் பாதுகாப்பு,

+ இராணுவமயமாக்கலைக் குறைத்தல்,

+ காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி,

+ அரசியல் கைதிகளின் வழக்குகளை விரைவாகத் தீர்த்தல்,

+ சுயாதீனமான சர்வதேசத் தரநிலையிலான விசாரணை,

+ அகதிகளுக்கான பாதுகாப்பான விருப்பத் தீர்வுகள்.

இந்தக் கொள்கை ஆட்சி மாறினாலும் தொடர வேண்டும்.

2. நிரந்தர சட்ட மற்றும் ஆய்வு ஆணையம்

தமிழக அரசு, பல்கலைக்கழகங்கள், சர்வதேசச் சட்ட வல்லுநர்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிரதிநிதிகள் இணைந்த அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

3. இந்திய மொழிகளுக்கான தகவல் இயக்கம்

ஈழ வரலாறு மற்றும் மனித உரிமை ஆவணங்கள் குறைந்தது பத்து இந்திய மொழிகளில் வெளியிடப்பட வேண்டும்.

4. நாடாளுமன்ற நட்புக் குழு

தமிழக உறுப்பினர்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், பஞ்சாப், வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட இடங்களின் உறுப்பினர்களையும் இணைக்க வேண்டும்.

5. அகதிகளுக்கான தெளிவான சட்டத் தீர்வு

இந்தியாவில் தொடர விரும்புவோருக்கு நீண்டகால வாழ்வுரிமை அல்லது பொருத்தமான குடியுரிமை வழி; இலங்கைக்குத் திரும்ப விரும்புவோருக்கு பாதுகாப்பு, நிலம், வீடு மற்றும் வாழ்வாதார உறுதி வழங்கப்பட வேண்டும்.

6. ஈழ மக்களே தீர்வின் மையமாக இருக்க வேண்டும்

தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் அவர்களுக்குப் பதிலாகப் பேசுவதைவிட, பாதிக்கப்பட்ட மக்களின் நேரடி குரலை இந்திய மற்றும் உலக அரங்குகளுக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.

7. வெளிப்படையான இயக்க அரசியல்

ஈழத்தின் பெயரில் செயல்படும் அமைப்புகள் தங்கள் நிதி, திட்டங்கள், பயனாளிகள் மற்றும் ஆண்டு நடவடிக்கை அறிக்கைகளை வெளியிட வேண்டும்.

தமிழ்நாடு ஈழத் தமிழர்களை முழுமையாகக் கைவிட்டுவிட்டது என்று கூறுவது உண்மையல்ல. தமிழக மக்கள் பல கட்டங்களில் தங்கள் உணர்வையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தியுள்ளனர். மாணவர்கள் போராடியுள்ளனர்; சட்டப்பேரவை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன; அகதிகளுக்கு இடமும் நலத்திட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன; இந்திய அரசுக்கு அழுத்தங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் இவை ஒருங்கிணைந்த, அறிவுசார், சட்டபூர்வ, சர்வதேச மற்றும் இந்திய அளவிலான அரசியல் இயக்கமாக மாறவில்லை.

சிலர் ஈழத் துயரத்தை விளம்பரமாகப் பயன்படுத்தியிருக்கலாம். சிலர் உண்மையான தியாகத்துடன் செயல்பட்டிருக்கிறார்கள். இரண்டையும் வேறுபடுத்திக் காண வேண்டும்.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய தோல்வி அக்கறையின்மை அல்ல.

அந்த அக்கறையை அதிகாரமாக மாற்றத் தவறியதே தோல்வி.

+ உணர்வை ஆவணமாக்கவில்லை.

+ ஆவணத்தைச் சட்ட நடவடிக்கையாக மாற்றவில்லை.

+ சட்ட நடவடிக்கையை இந்திய அளவிலான அரசியல் அழுத்தமாக மாற்றவில்லை.

+ அரசியல் அழுத்தத்தை நிலையான வெளியுறவுக் கொள்கையாக மாற்றவில்லை.

எனவே ஈழத் தமிழர் பிரச்சினை இன்னமும் நினைவேந்தல் மேடைகளில் உயிருடன்

இருக்கிறது; ஆனால் அரசியல் தீர்வு மேசையில் பலவீனமாகவே உள்ளது.

இனி தேவைப்படுவது இன்னொரு உணர்ச்சிமிக்க முழக்கம் அல்ல.

தரவுகளுடன் கூடிய அறிவு, ஒற்றுமையான கொள்கை, இந்திய அளவிலான கூட்டணி, சர்வதேசச் சட்ட நடவடிக்கை மற்றும் பாதிக்கப்பட்ட ஈழ மக்களை மையப்படுத்திய நீண்டகால அரசியல் திட்டமே தேவை.

-------

கட்டுரை ஆசிரியர் வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் : 2012 மற்றும் 2015 ம் ஆண்டுகளில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்திற்கு, தமிழ்நாட்டிலிருந்து நேரில் சென்று புதிய தலைமுறைத் தொலைக்காட்சி வாயிலாக இலங்கை மணித உரிமைகள் தொடர்பான விசாரணைகளை நேரில் நின்று செய்தி வழங்கியவர். மனித உரிமை சார்ந்த, சுற்றுச்சூழல், தமிழர்களின் மெய்யியல், தொல்லியல், தமிழியல் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபாடு கொண்டவர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User