வடலூர் வள்ளலார் பெருவெளி: சர்வதேச மையத் திட்டம் கைவிடப்பட்டது – திமுக அரசின் திட்டத்தை நிறுத்திய தவெக அரசு; வரலாறு, போராட்டம், நீதிமன்றப் பின்னணி
வடலூர் வள்ளலார் பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. 106 ஏக்கர் பெருவெளி, மக்கள் போராட்டம், நீதிமன்ற வழக்கு, அரசின் முடிவு உள்ளிட்ட முழு பின்னணி.
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
வள்ளலார்
திருவருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் என்று அழைக்கப்படும் பெருஞ்சித்தர் இராமலிங்கம் அவர்கள் 1823 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ம் தேதி கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூரில் பிறந்தவர்.
தமிழர் ஆன்மிக உச்சமான நிலையான மரணமிலாப் பெருவாழ்வு நிலையை எட்டியவர் வள்ளற்பெருமான். அந்தப் பெருவாழ்வை எப்படிப் பெறுவது என்று எளிமையான வழிமுறைகளை அனைத்து மக்களுக்கும் சென்றடையும் வண்ணம் எடுத்துரைத்ததோடு நில்லாமல் அந்த முறைகளை ஒரு மார்க்கமாகத் தொடங்கி "சமரச சுத்த சத்திய சன்மார்க்கம்" என்று பெயரிட்டு, அதற்கு கொடி, கொள்கை, இலக்கணம், ஒழுக்க விதிகளை வகுத்துக் கொடுத்தவர் வள்ளற்பெருமானார்.
பெருவெளித் தலம்
இதன் அடையாளமாக பசிபோக்கும் தருமச்சாலை ஒன்றையும், ஞானம் போதிக்கும் ஞானசபை ஒன்றையும் நிறுவ எண்ணினார். அதற்கு, வடலூர் பார்வதிபுரம் மக்கள் 80 காணி நிலம் - 106 ஏக்கர் நிலத்தைத் தானமாக வழங்கினார்கள்.
அதில் இந்த இரண்டு கட்டுமானங்களையும் மட்டும் கட்டிய வள்ளலார் மீதமுள்ள இடங்களைக் காலியாக வைத்தார்.
அதில், கட்டுமானங்கள், வேளாண்மை உள்ளிட்ட எந்தப் பணிகளும் செய்யப்படக்கூடாது, அது ஒரு வெட்ட வெளிப் "பெருவெளித் தலம்" என்று அறிவுறுத்தினார்.
எதிர்காலத்தில் எள்ளுப் போட்டால் எள்ளுக் குனிந்து எடுக்க முடியாத அளவுக்கு நெருக்கமான கூட்டம் வரும் எனவே அந்த 106 ஏக்கர் பெருவெளியில் எந்தக் கட்டுமானம், வேளாண்மை உள்ளிட்டவற்றைச் செய்தல் கூடாது என்று கூறினார்.
அதன்படியே 150 ஆண்டுகள் கழித்தும் இன்றும் ஆண்டுக்காண்டு தைப்பூச மகா வழிபாடு நாளில் குறைந்தது 15 லட்சம் பேர் வந்து குவிகிறார்கள்.
உத்தர ஞான சிதம்பரம்
மூன்று வேளைகள் உணவு சமைத்து ஏழை எளிய மக்கள் முதல் ஒவ்வொரு உயிருக்கும் தரும் தருமச்சாலை மற்றும் ஞானம் உணர்த்தும் ஞானசபை அமைக்கப்பட்ட இந்த 106 ஏக்கர் வெட்ட வெளித்தலம் என்பதற்கு இறைவரால் வழங்கப்பட்ட பெயர்களான "உத்தர ஞான சிதம்பரம்" என்றும் "உத்தர ஞான சித்திபுரம்" என்றும் பெயர்களைச் சூட்டுகிறார் வள்ளற் பெருமானார்.
ஆக, அது ஒரு ஆன்மிக மெய்யியலின், இயற்கையுண்மையின் ஒரு வெட்டவெளித் தலம், "புரம்", சிதம்பரம் !
இந்த இடம் "செத்தாரை எழுப்பும் உத்தர ஞான சித்திபுரம், சிதம்பரம்" என்று வள்ளலார் குறிப்பிட்டு தனியே இதற்கெனவே 11 பாக்களை இயற்றியும் உள்ளார்.
\
பூசம்
ஒவ்வொரு மதம் "பூசம்" விண்மீன் - நட்சத்திர நாளன்றும், ஆண்டுதோறும் தை மாதத்தில் வரும் "பூசம்" விண்மீன் - நட்சத்திர நாளன்றும், பெருவெளித் தலம் ஆற்றல் பெருகிய தலமாக இயங்கும். பிண்டம் எனும் உடலிலுள்ள அருட்பெருஞ்சோதி எனும் இறை ஆற்றலும், அண்டம் எனும் விண்வெளியில் உள்ள அருட்பெருஞ்சோதி இறை ஆற்றலும் ஒன்று சேரும் நாள் இந்த பூச நாள், இடம் பெருவெளித் தலம்.
மேலும், சாதியும், மதமும், சமயமும் பொய் என்று ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி என்றும் கூறுகிறார் வள்ளற்பெருமானார்.
ஆக இப்படிப்பட்ட, பார்வதிபுரம் மக்களால், வள்ளலார் பெயரில் பட்டாப் போட்டுக் கொடுக்கப்பட்ட ஒரு பெருவெளித் தலத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை அந்த 106 ஏக்கரில் 25 ஏக்கர் நிலத்தை 1975 ம் ஆண்டில் (திமுக) தனியாருக்குப் பட்டாப் போட்டுக் கொடுத்துவிட்டது. ஒரு ஆறேகால் ஏக்கர் நிலத்தை ஒரு சிவாச்சாரியார் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டார். இதையும் இந்து சமய அறநிலையத்துறை கண்டுகொள்ளவில்லை.
வள்ளலார் சர்வதேச மையம்
இந்த நிலையில் 2021 ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முதலில் வடலூரில் 100 கோடி ரூபாய் செலவில் "வள்ளலார் சர்வதேச மையம்" கட்டப்படும் என்று அறிவித்தது.
பிறகு, அது இந்தப் பெருவெளித் தளத்திற்குள் கட்டப்படுகிறது என்று அறிவித்தபோதுதான் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.
அந்த சர்வதேச மையம் எனும் பெயரில் "பன்னாட்டு விருந்தினர் தங்கும் விடுதி, விலை உயர்ந்த உணவு விடுதி" உள்ளிட்ட பெருவெளித் தலத்தின் இறைப்பெருமையை சிதைக்கும் நாசகாரத் திட்டத்தை அமல் படுத்தக் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இப்படிப்பட்ட ஒரு வணிக ரீதியான கட்டுமானம் கட்டி, அதற்குத் தலைவராக மு.க.ஸ்டாலின் உறவினர் ஒருவரை அமர்த்திப் பிறகு அந்த அமைப்பைத் தனியார் மயமாக்கிவிடுவது என்பதுதான் இந்தத் திட்டத்தின் பின்னணியாக இருந்தது என்பது தெரியவந்தவுடன் மக்களின் எதிர்ப்புப் பல மடங்கு கூடியது.
வள்ளலார் சன்மார்க்க சங்க நலன் விரும்பிகள், பத்தர்கள், சாதுக்கள், பின்பற்றாளர்கள், அரசியல் கட்சியினர் என பலதரப்பினரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்டுமானம் பெருவெளிக்குள் கூடாது, வேண்டுமானால் வெளியே வேறு இடத்தில் கட்டிக்கொள்ளட்டும், அதுவும் வள்ளலாரின் கொள்கைகளுக்கு விரோதமாக எதுவும் கட்டப்படக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
வள்ளலாருக்கு 106 ஏக்கர் நிலம் தந்த பார்வதிபுரம் மக்களின் வாரிசுகள் பெருவெளிக்கு எனத் தோண்டப்பட்ட அத்திவாரப் பள்ளங்களுக்குள் இறங்கிப் போராடினார்கள்.
அவர்கள்மீது பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினார்.
எதிர்ப்பு
இந்தப் பெருவெளி நாசகாரத் திட்டத்துக்கு, பாமக நிறுவனர் இராமதாஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்து ஒரு பெரிய விளக்கமான நீண்ட அறிக்கையை வெளியிட்டார், அன்புமணி இராமதாஸ் மற்றும் சவுமியா அன்புமணி ஆகியோர் நேரில் வடலூர் வந்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் நேரில் வடலூர் வந்து பார்வதிபுரம் மக்களுக்குத் துணை நிற்பதாகக் கூறினார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேரில் வந்து பார்வையிட்டு பெருவெளியை சிதைக்க அனுமதியோம் என்று உரக்கக் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கைகள் விட்டதுடன், தொடர்ந்து மேடைகளில் பேசினார், ஆட்சிக்கு வந்ததும் பெருவெளி காக்கப்படும் என உறுதி அளித்தார்.
அமமுக நிறுவனர் டி.டி.தினகரன் அவர்கள் அறிக்கை வெளியிட்டு பெருவெளி காக்க முழு ஆதரவு அளித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஒரு பிரிவு பெருவெளி காக்கக் குரல் கொடுத்தது.
பாஜக பெருவெளி காக்க முழு ஆதரவு கொடுத்தது.
இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட பலரும் பெருவெளியை சிதைத்து எந்தக் கட்டுமானமும் கட்டப்படக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தெய்வத் தமிழ் பேரவை, வள்ளலார் பணியகம் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம், வடலூரில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பப்பட்டன.
அடிக்கல் நாட்டு விழா
இப்படிப்பட்ட பெருஞ்சித்தர் வள்ளற்பெருமான் கட்டமைத்த பெருவெளியை சிதைத்து சர்வதேச மையம் கட்ட "அடிக்கல்" நாட்டு விழாவை சென்னையில் இருந்துகொண்டு ரிமோட் கண்ட்ரோல் மூலம் நடத்தினார் மு.க.ஸ்டாலின். அருட்பெருஜோதி ஆண்டவர் உறையும் பெருவெளித் தலத்தில் திமுக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கு சிவப்புக் கம்பளம் விரித்து ஆர்ப்பாட்டங்கள் செய்யப்பட்டன.
அதாவது இறைவர் உறையும் - செத்தாரை எழுப்பும் உத்தர ஞான சிதம்பரத்தில் என்னவெல்லாம் செய்யக்கூடாதோ அத்தனையையும் செய்தது முந்தைய திமுக அரசு. செய்தார் அப்போதைய அமைச்சர் சேகர் பாபு.
இந்த சர்வதேச மையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வடலூரில் முற்றுகைப்போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தை அடக்க மு.க.ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோர் அதிரடிப்படை, கண்ணீர்ப்புகை குண்டுகள், வஜ்ரா வாகனம் ஆகியவற்றைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.
உயர் நீதிமன்றத்தில் மனுக்கள்
இத்தகைய நிலையில், பெருவெளிக்குள் கட்டுமானம் கட்டக்கூடாது, அந்த அரசு ஆணையை இரத்து செய்யவேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தமிழ்வேங்கை என்பவரும் வினோத் ராகவேந்திரா மற்றும் சிவகணேஷ் ஆகியோரும் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர். தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தெய்வத் தமிழ் பேரவை மற்றும் வள்ளலார் பணியகம் சார்பில் இணை மனு தாக்கல் செய்யப்பட்டது, மூத்த வழக்கறிஞர் செந்தில்நாதன் வழக்கில் நேர் நின்றார். அதேபோல, அருட்சபைவேலன் உள்ளிட்டவர்களும் இணை மனு தாக்கல் செய்தனர்.
இதில் ஒரு கட்டத்திற்கும் மேல் தமிழ்வேங்கை மேல்முறையீடு செய்யாமல் ஒதுங்கிக் கொண்டார். இறுதிவரை உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர்கள் மனுதாரர் வினோத் ராகவேந்திராவும், மூத்த வழக்கறிஞர் சுரேஷ் அவர்களும்.
இதில் வழக்கறிங்கர் சுரேஷ் அவர்களின் பணி மகத்தான பெரும்பணி.
நன்றி கூறப்படவேண்டியவர்கள்
பெருவெளித் தலம் காக்கும் இந்தப் பெரும் போராட்டத்தில் அன்போடும், மரியாதையோடும் நன்றி கூறப்படவேண்டிய நீதியரசர்கள் மகாதேவன், சுரேஷ்குமார், ஜெயச்சந்திரன், சவுந்தர் ஆகியோர்.
தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தனிப்பட்ட ரீதியிலும், அலுவல் ரீதியிலும் இந்தப் பெருவெளி காக்கும் போராட்டத்திற்கு ஆதரவு நல்கினார்.
இந்தப் போராட்டங்களுக்கு எல்லாம் அடிப்படையாக இருந்தது வள்ளலார் பணியகம் முருகன்குடி முருகன், சுப்ரமணிய சிவா, வடலூர் பார்வதிபுரம் மக்கள், உத்தர ஞான சிதம்பரம் பாதுகாப்பு அமைப்பு, அரசியல் கட்சியினர், சமூக இயக்கத்தினர், ஆன்மிகப் பெரியவர்கள், நல்லோர்கள் அனைவருக்கும் தமிழ் ஊடகம் மற்றும் TNTV இயற்கையுண்மை ஊடகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தப் பெரும்பணியில் மகத்தான சேவை செய்த அத்தனை பத்திரிகை, ஊடகர்களுக்கும், பத்திரிகை ஊடகங்களுக்கும் நன்றிகள். குறிப்பாக நியூஸ் தமிழ் வடலூர் செய்தியாளர் வினோத், புதிய தலைமுறை கடலூர் செய்தியாளர் ஸ்ரீதர் ஆகியோர் பணிகள் வள்ளற் பெருமானாரின் முழு ஆசிக்கும் உரியவை.
பெருவெளித் தலம் குறித்து "வடலூர் வள்ளற் பெருமானாரின் திருவருட்பெருவெளித் தலம் திரிப்புகளும் பேருண்மைகளும்" எனும் நூலை அச்சிட்டு வெளியிட்ட அநுராகம் படிப்பகம் - கலைஞன் பதிப்பகம் உரிமையாளர் மாசிலாமணி நந்தன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அந்த நூலுக்கு அணிந்துரை, வாழ்த்துரை, மதிப்புரை வழங்கிய ஐயா கி. வெங்கட்ராமன், ஐயா படைப்பை பாலகிருஷ்ணன், ஐயா அண்ணாமலை சுகுமாரன், கோயமுத்தூர் சவுரிபாளையம் சன்மார்க்க சங்க ஐயா குமரேசன், ஐயா இறைநெறி
இமயவன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகள்.
தொடக்கம் முதல் இன்றுவரை இந்தப் பணிகளுக்குப் பேருதவிகள் செய்த திண்டிவனம் பிரசாத், சீனுவாசன், இளங்கோ, சென்னை மனோகரன் ஆகியோருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
முந்தைய திமுக அரசின் இந்தப் பெருவெளி சிதைக்கும் திட்டத்தைக் கைவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களுக்கும், அறநிலையத்துறை அமைச்சர் திரு.ரமேஷ் அவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இந்தத் தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
பெயர் குறிப்பிடாமல் விட்டிருந்தால் அது உள்நோக்கத்துடன் அல்ல, மறதியால் இருக்கலாம், எனவே பொறுத்தருள்க.
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி !
எல்லாம் செயல்கூடும் என்னாணை அம்பலத்தே
எல்லாம் வல்லான் தனையே ஏத்து !
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் - தமிழ் ஊடகம் குழுமம். நிறுவனர் : இராமலிங்க வள்ளலார் மரணமிலாப் பெருவாழ்வு ஆய்வு அறக்கட்டளை,
நிறுவனர் : தமிழியல் நடுவம்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)