தமிழ்த் திரையுலகின் ஜாம்பவான்கள் எம்ஜிஆர் - சிவாஜி படங்களை வசூலில் வீழ்த்திய ரஜினிகாந்த்! | சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர் – 1
எம்ஜிஆர், சிவாஜி கணேசன் ஆகியோரின் வசூல் சாதனைகளை முறியடித்து தமிழ் சினிமாவின் புதிய வசூல் மன்னனாக உருவெடுத்த ரஜினிகாந்தின் ஆரம்பகால பயணத்தை விவரிக்கும் சிறப்புக் கட்டுரை.
-நாச்சி. செல்வராஜ், பத்திரிகையாளர்
50 ஆண்டுகளாக நீடிக்கும் சூப்பர் ஸ்டார் பேரரசு
ஆசியாவின் பவர் மேன் யார் என பத்தாண்டுகளுக்கு முன்பு எடுத்த கருத்துக் கணிப்பில் ஜாக்கிசான், அடுத்து ரஜினிகாந்த் எனப் பெயர்கள் வெளியாகின. ஆனால் இன்று ஜாக்கி சான் திரை உலகில் ரஜினிகாந்த் போல நீடித்து நிற்கவில்லை.
ஆனால் ரஜினிகாந்த் தொடர்ந்து "சூப்பர் ஸ்டார்" என்ற பட்டத்தையும் "வசூலில் நம்பர் ஒன் என்ற இடத்தையும்" தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
அவரது 75 வயதிலும் கூட "ரஜினிகாந்த்தின் அடுத்த படம் என்ன" என்பதுதான் ஆறு வயது முதல் 60 வயது உள்ளவரை ரசிகர்கள் இன்றும் எதிர்பார்த்துக் கேட்கக் கூடிய கேள்வியாக இருக்கிறது. இதுதான் ரஜினிகாந்தின் அசைக்கமுடியாத உறுதியும் பலமும்.
குணச்சித்திர நடிகரிலிருந்து கதாநாயகனாக எழுந்த பயணம்
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் குணச்சித்திர நடிகராக அறிமுகமான ரஜினிகாந்த் திரையுலகின் உச்சத்தைத் தொட்டு நிற்கும் வேளையில், திரும்பிப் பார்த்தால் அவருடன் அப்போது நடித்த சக கதாநாயகன்கள் எவருமே இப்போது திரைத் துறையில் இல்லை, சிலபேர் உயிருடன் கூட இல்லை.
ஆனால் தனது 75 வயதிலும் சூப்பர் ஸ்டார் என்ற தகுதியைத் தக்க வைத்துக்கொண்டு வசூலிலும் ஆயிரம் கோடியைத் தாண்டுபவர் என்ற எதிர்பார்ப்பைக் குறையாமல் வைத்திருக்க முடிகிறது என்றால் அதுதான் ரஜினிகாந்த்தின் ஆன்ம பலம்.
எம்ஜிஆர் - சிவாஜி ஆட்சி செய்த பொற்காலத் தமிழ் சினிமா
ஆரம்ப காலங்களில் ரஜினிகாந்த் நடிக்கும் பொழுது எம்ஜிஆர் சிவாஜி கணேசன் இருவரும் தமிழ்த் திரை உலகில் ஜாம்பவான்களாக இருந்தனர்.
சிவாஜி - எம்ஜிஆர் படம் வெளியாகும் போது திரையரங்கு முன்பு அவர்களது ரசிகர்கள் கூடி இனிப்புகளை வழங்கியும் தோரணங்கள் கட்டியும் கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது ரஜினிகாந்த் ஒரு குணசித்திர நடிகர் மட்டுமே.
'பைரவி' மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரஜினிகாந்த்
முதன் முதலாகக் கலைஞானம் வழங்கும் பைரவி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார் ரஜினிகாந்த்.
அந்த படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. யாரோ ஒருவர் முடி நீளமாகவும் கருப்பாகவும் வைத்துக்கொண்டு வந்திருக்கிறார், வசன உச்சரிப்பு உடல் மொழியெல்லாம் வித்தியாசமாக இருக்கிறது என கூறி ரசிகர்கள் திரையரங்கை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர்.
அந்தக் காலகட்டத்தில் எம்ஜிஆர் சிவாஜி படங்கள் சக்கைப் போடு போட்டன . திரையரங்குகளில் கட்டணங்கள் தரை 50 பைசா, மர பென்ச் 75 பைசா, மர நாற்காலி ஒரு ரூபாய் அல்லது ஒரு ரூபாய் 50 பைசா, அதிகபட்சம் இரண்டு ரூபாய் இப்படித்தான் இருந்தன.
உலகம் சுற்றும் வாலிபன்: எம்ஜிஆரின் வசூல் உச்சம்
இந்தக் காலகட்டங்களிலேயே எம்ஜிஆர் படங்கள் வசூலில் வாரி குவித்தன. எம் ஜி ஆர் நடித்து 1972 ஆம் ஆண்டு வெளிவந்த உலகம் சுற்றும் வாலிபன் அவர் நடித்த படங்களிலேயே "ரெக்கார்ட் பிரேக்" திரைப்படம்.
எம்ஜிஆர் இயக்கிய உலகம் சுற்றும் வாலிபன் பாடல்களும் காட்சி அமைப்புகளும் வித்தியாசமாக இருந்தன. அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி இந்தப் படத்தை வெளியிடப் பல வகையில் இடையூறு செய்தார்.
திமுகவின் முக்கியப் புள்ளியான மதுரை முத்து, உலகம் சுற்றும் வாலிபன் வெளி வந்தால் தனது கையில் வளையல் போட்டுக் கொள்கிறேன் என்று சபதம் எடுத்தார். இதை எல்லாம் மீறி அந்தப் படம் வெளிவந்தது.
மக்களின் ஏகோபித்த பாராட்டுப் பெற்று வசூலை வாரிக் குவித்தது. எம்ஜிஆர் படங்களிலேயே இன்று வரை உச்சபட்ச வசூல் செய்த படம் உலகம் சுற்றும் வாலிபன் மட்டுமே அந்த காலத்திலேயே 60 லட்சம் ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.
திரிசூலம்: சிவாஜி கணேசனின் சாதனைப் படம்
அதுபோல சிவாஜி கணேசன் அப்போது திரை உலகின் சிம்ம சொப்பனமாக இருந்தார். எம்ஜிஆர் படங்களை காட்டிலும் சிவாஜிக்கு கொஞ்சம் குறைவாக வசூல் எட்டியது ஆனாலும் பெரும்பாலான படங்கள் சிவாஜிக்கு 75 நாள் 100 நாள் ஓடிய படங்களாக அமைந்தன.
அப்படி அமைந்த படங்களில் ஒன்று திரிசூலம். மூன்று வேடங்களில் சிவாஜி நடித்து, அவரது சொந்தத் தயாரிப்பில் வெளியான படம் திரிசூலம், 1979 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் நாள் குடியரசு நாளில் வெளியானது.
சிவாஜியின் திரையுரக வரலாற்றில் உச்சபட்ச வசூல் செய்த படம் திரிசூலம். 27 ஆண்டுகள் திரையுலகில் இருந்தாலும் அவரது படங்களிலேயே அதிகபட்ச வசூல் செய்த படம் திரிசூலம். அன்றே 92 லட்ச ரூபாயை ஈட்டி சாதனை படைத்தது திரிசூலம்.
எம்ஜிஆர் - சிவாஜி எனும் இரண்டு பேராளுமைகள் இப்படித் திரை உலகில் கோலோச்சிக் கொண்டிருந்த வேளையில்தான் ரஜினிகாந்த் எனும் ஒரு கருப்புக் காந்தம் ஒட்டு மொத்தத் திரை உலகினரையும், தமிழ் கூறும் நல்லுலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
பில்லா முதல் முரட்டுக்காளை வரை உருவான வசூல் புரட்சி
அதில் முதல் படம் "பில்லா". அதிக சம்பளம் மட்டுமல்லாமல் அதிக வசூலையும் பெற்றுத் தந்த
ரஜினிகாந்தின் முதல் படமும் அதுதான்.
எம்ஜிஆர் - சிவாஜி சாதனைகளை முறியடித்த முரட்டுக்காளை
எம்ஜிஆர் - சிவாஜி போன்ற ஜாம்பவான்களை வசூலில் முறியடிப்பார் என்று எவரும் நினைத்துப் பார்க்காத நிலையில் 1982ல் வெளியான ரஜினிகாந்தின் "முரட்டுக்காளை" படம் எம்ஜிஆர் - சிவாஜி ஆகியோரின் வசூல் சாதனையை முறியடித்தது.
அதற்கு முன்னதாக ரஜினிகாந்த் நடித்து வெளியான "மூன்று முகம்" "தங்க மகன்" படங்களும் வசூலில் சாதனை படைத்தன.
ஒரு கோடி வசூல் காலத்தைத் தொடங்கிய ரஜினிகாந்த்
எம்ஜிஆர் - சிவாஜி படங்கள் தமிழக முழுவதும் 30 திரையரங்குகளில் மட்டுமே வெளியாகி இந்த சாதனையைப் படைத்த நிலையில் ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை திரைப்படம் 50 திரையரங்குகளில் வெளியாகி ஒரு கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
அடுத்த தொடரில்: கமல்ஹாசன் உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் ரஜினிகாந்தின் வசூல் போட்டி
அடுத்தடுத்து கமலஹாசன் உள்பட எந்தெந்த நடிகர்களின் படங்கள் ரஜினிகாந்த் படத்துடன் மோதின என்பது குறித்து அடுத்த வாரம் பார்க்கலாம்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)