வடலூர் வள்ளலார் பெருவெளி: திமுகவின் சன்மார்க்க அழிப்புத் திட்டத்திற்குத் துணை போகிறாரா கே.எஸ்.அழகிரி? | வளர்மெய்யறிவான் கேள்வி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரியின் கடிதத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களுக்கு விரிவான மறுப்பும், வள்ளலார் உருவாக்கிய பெருவெளியின் அடிப்படை தத்துவமும்.

Aug 02, 2026 - 19:41
Updated: 2 days ago
0 3
வடலூர் வள்ளலார் பெருவெளி: திமுகவின் சன்மார்க்க அழிப்புத் திட்டத்திற்குத் துணை போகிறாரா கே.எஸ்.அழகிரி? | வளர்மெய்யறிவான் கேள்வி

ஞானம் போதிக்கும் பெருவெளியைக் "கல்லாக் கட்டும்""வணிகக் கோயில்" வளாகம் ஆக்க் கோருவதா ?!

-வளர்மெய்யறிவான் () விசுவா விசுவநாத்,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரியின் தவறான கடிதம்

வடலூர் வள்ளலார் பெருவெளித் தலத்தில் சர்வதேச மையம் கட்டி அதனை சிதைத்து வணிக வளாகம் ஆக்கும் திமுகவின் சன்மார்க்க அழிப்பு நாசகார 100 கோடி ரூபாய் திட்டத்தைக் கைவிட்டுள்ளது வெ அரசு.

இதை உண்மையான வள்ளலாரின் பின்பற்றாளர்கள், பத்தர்கள், உலகெங்கிலுள்ள சன்மார்க்க சங்கத்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், "அந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டாம்" என்று கூறி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு ஒரு கடிதம் எழுதி அதில் மிக அபத்தமான, தவறான, புரிதலற்ற, பொய்யான தகவல்களை அளித்திருக்கிறார்.

உண்மை என்ன ? : வடலூர் பெருவெளித் தலத்தில் உள்ளது ஞான சபையே தவிர சராசரிக் கோயில் அல்ல

கடலூர் மாவட்டம் வடலூரில் கடந்த 1865 ம் ஆண்டு பார்வதிபுரம் கிராம மக்களிடம் 80 காணி நிலம் அதாவது 106 ஏக்கர் நிலங்களைத் தனமாகப் பெற்று அதில் பசித்தோருக்கு உணவு வழங்கும் தருமச்சாலை ஒன்றையும், ஞானம் போதிக்கும் சத்திய ஞான சபை ஒன்றையும் அமைத்தார் திருவருட்பிரகாச இராமலிங்க வள்ளலார்.

நன்கு கவனிக்கவும், அங்கு "கோயில்" அமைக்கவில்லை, அது "ஆலயமும்" அல்ல.

அது "சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை" மற்றும் "சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை". அதாவது பசிபோக்கும் தருமச்சாலையும், ஞானம் போதிக்கும் ஞான சபை ஒன்றையுமே அமைத்தார்.

ஞானசபையின் வடிவமும் தமிழர் சித்தரியல் தத்துவமும்

அந்த ஞானசபையை ஒரு மனிதத் தலை வடிவில் தெற்கு நோக்கி இருக்குமாறு அமைத்தார் வள்ளலார். அதன் உள்ளே நடுவே ஒரு ஒளி விளக்கு ஒன்றை மட்டுமே அமைத்தார். அந்த விளக்குக்கு முன்பு 7 வண்ணங்களில் திரைகள் அமைத்தார்.

அந்த நடு விளக்கு என்பது மனிதனின் நெற்றிப்பொட்டு எனும் "சிற்றம்பலத்தை" குறிக்கக்கூடியது.

தைப்பூச முழு நிலவு நாளன்று ஞானசபையை நோக்கி நாம் நின்றால் வானத்தில் வலதுபுறம் சூரியன் கண்களுக்குத் தெரியும், இடதுபுற வானத்தில் சந்திரன் தெரியும்.

ஆக, வலது கண் சூரியன், இடது கண் சந்திரன், நெற்றிப்பொட்டு சிற்றம்பலம் எனும் சுழுமுனை ஆகியவற்றைக் குறிக்கும் ஞானம் போதிக்கும் ஞான சபை அது.

சித்தரியலில், வலது மூக்கில் வரும் காற்று சூரிய கலை என்றும், இடது மூக்கில் வரும் காற்று சந்திர கலை என்றும் நெற்றிப் பொட்டில் ஓடும் காற்று சுழுமுனை என்றும் அழைக்கப்படுகிறது.

திருவுருவப் படம், சிலை உள்ளிட்ட எந்த உருவங்களும் அந்த ஞான சபையிலோ, 106 ஏக்கர் பெருவெளித் தலத்திலோ வள்ளலார் எங்குமே அமைக்கவில்லை, அமைக்கவும் அனுமதிக்கவில்லை. உண்மையில் அது ஆலயம், கோயில் எனும் பெயர்களுக்கு சற்றும் பொருத்தமில்லாத ஞான சபை அது.

106 ஏக்கர் பெருவெளியும் வெட்டவெளியாகக் காலியாகவே இருக்க வேண்டும்

இந்த 106 ஏக்கர் இடத்திலும் இந்த இரண்டு கட்டுமானங்கள் தவிர வேறு எதையும் கட்டக்கூடாது என்றும் வேளாண்மை உள்ளிட்ட எதற்கும் அந்த இடத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றும் வள்ளற் பெருமானார் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், எப்படி சபரி மலை என்பது மாத பூசை மற்றும் மார்கழி மாதம் ஆகிய குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும் நடை திறக்கப்பட்டு பூசை செய்யப்படுகிறதோ...அதுபோல, அனால் அதேவேளை வடலூர் பெருவெளித் தலத்தில் உருவ வழிபாடு இல்லாமல் "சோதி வழிபாடு" மட்டும் மாதம்தோறும் "பூச" விண்மீன் (நட்சத்திரம்) நாளன்றும், ஆண்டுக்கு ஒரு முறை தை மாதத்தில் வரும் "பூச" விண்மீன் நாளன்று மட்டுமே அங்கு சிறப்பு மற்றும் மகா சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.

மற்ற நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒரு முறை மட்டும் நடைக்கதவு திறக்கப்பட்டு ஒரே ஒரு விளக்கு மட்டும் ஏற்றிக் காண்பிக்கப்படும்.

ஆக, அந்த வடலூர் வள்ளலார் உருவாக்கிய இந்த 106 ஏக்கர் தலத்தின் அடிப்படையே இதுதான்.

அது மணி ஆட்டி, பூசை செய்து அர்ச்சனை, அபிடேகம் செய்யும் கோயில் அல்ல

அதாவது, அன்றாடம் காலை முதல் மாலை வரை மணி ஆட்டிப் பூசை செய்து அபிடேகம், அலங்காரம், அர்ச்சனை செய்யகூடிய வழக்கமான கோயில் அல்ல.

இந்த அடிப்படைகூட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களுக்குத் தெரியாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

கே.எஸ். அழகிரியின் தவறான பொய்யான தகவல்கள்

ஆக, இத்தகைய தமிழர்களின் மாபெரும் உயரிய ஞானத்தைப் போதிக்கும் ஒரு ஞானசபையை ஏதோ ஒரு சராசரி ஆலயம் போலவும், கோயில் போலவும் கே.எஸ்.அழகிரி கற்பனை செய்துகொண்டு முதலமைச்சருக்குத் தவறான கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் அந்தக் கடிதத்தில் கே.எஸ்.அழகிரி உண்மைக்கு மாறாகக் கொடுத்த தகவல்கள்

01. "வடலூரில் ஸ்ரீஇராமலிங்க சுவாமி திருக்கோயில்" உள்ளதாகக் குறிப்பிட்டிருக்கிறார் கே.எஸ். அழகிரி

வள்ளலார் ஸ்ரீ எனும் சமசுக்கிருதப் எழுத்தைப் பயன்படுத்தியது இல்லை. மேலும், அது இராமலிங்க வள்ளலாரின் கோயில் அல்ல அது. அது அருட்பெருஞ்சோதி உறையும் ஞானசபை.

02. திமுக செய்ய முயற்சி செய்தது நல்ல பணி அல்ல...நாசகாரப் பணி !

106 ஏக்கர் பெருவெளித் தலத்தில் (தருமச்சாலை, ஞானசபை தவிர) வேறு எந்தக் கட்டுமானமும் கூடாது, வேளாண்மை செய்தல் கூடாது என்று உத்தரவிட்டிருந்தார் வள்ளலார். கலைஞர் மு.கருணாநிதி ஆட்சியில் கூட அதில் எதுவும் கட்டப்படக் கூடாது என்று கருணாநிதியே தெரிவித்துள்ளார். ஆக, அந்த இடத்தில் அமெரிக்க 1200 கோடி ரூபாய் மோசடி அமைப்பான நண்பன் பவுண்டேஷன் எனும் அமைப்பின் தூண்டுதலால் கடந்த திமுக ஆட்சியில் சர்வதேச மையம் எனும் பெயரில் பெருவெளியை சிதைத்து, வணிக வளாகம் போல கட்ட எண்ணினார்கள். அந்த தித் திட்டம்தான் முறியடிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய மோசடி நிறுவனத்தின் பின்னணியிலான ஒரு திட்டத்திற்கு கே.எஸ்.அழகிரி துணை போகிறாரா ?

03. அருட்பெருஞ்சோதி பக்தர்களுக்கு ஏமாற்றம் என்று பச்சைப் பொய் பேசும் கே.எஸ்.அழகிரி

பெருவெளியைக் காப்பாற்ற உண்மையான அருட்பெருஞ்சோதித்தர்கள் கடந்த இரண்டரை ஆண்டுகள் உயிரைப் பணயம் வைத்து போராடி வருகிறார்கள், வழக்குகளை சந்தித்து வருகிறார்கள் என்பது கே.எஸ்.அழகிரிக்குத் தெரியவில்லை போல.

04. கே.எஸ்.அழகிற்கு திருக்கோயிலுடைய தோற்றம் வெறிச்சோடி, வறட்சியாக காணப்படுகிகிறதாம்

இதை ஏன் கே.எஸ். அழகிரி அவர்கள் இத்தனை நாளாகக் கண்டுபிடிக்காமல் இப்போது புதியதாகப் புரளியைக் கிளப்புகிறார் ? நாம் மேலே சொன்னது போல அது ஒரு வெட்டவெளித் தலம், மாதப் பூசம், தைப்பூசம் மட்டுமே சிறப்பு வழிபாடு.

மீதமுள்ள நாட்களில் ஒரு வேளை ஒன்றுக்கு சுமார் 2000 பேர் தருமச்சாலையில் உணவு உண்ணுகிறார்கள். ஞானசபைக்கு ஆயிரக்கணக்கில் வந்து செல்கிறார்கள். இதெல்லாம் ஒன்றுமே தெரியாமல் முதலைக் கண்ணீர் வடிக்கிறார் கே.எஸ்.அழகிரி. யாரை திருப்பதி படுத்த இத்தனை பொய்களை அள்ளி விடுகிறாரோ தெரியவில்லை.

05. கே.எஸ்.அழகிரிக்கு... இது நடராஜர் ஆலயம் போல, அயோத்தி இராமர் கோவிலைப் போல, திருப்பதி வெங்கடாசலபதி கோயில் போல இல்லையாம்...!

உண்மை நிலை அறியாத சாத்திர - வேதம் கடந்த ஞான சபை எனும் அறிவுச் சபையை மீண்டும் மணிட்டிப் பூசை செய்யும், தரிசனம், சிறப்பு தரிசனம் என்று திருப்பதி போல லட்சக்கணக்கில் வசூல் செய்யும் மையம் போல மாற்ற நினைக்கும் இந்த சிந்தனை கே.எஸ்.அழகிரியின் "அரிய" சிந்தனையா இல்லை திமுக பினாமி ஆட்கள் எழுதிக் கொடுத்த வசனமா ?

06. பெருவெளியில்...நெருஞ்சி முள்ளும், கரடுமுரடான கற்களும் கிடப்பது கே.எஸ். அழகிரிக்குத் துயரம் தருகிறதாம் ?

கடந்த 2021 முதல் 2026 வரை கே.எஸ்.அழகிரியின் கூட்டாளியான மு..ஸ்டாலின் அவர்கள் ஆட்சிதான் நடந்தது. 106 ஏக்கரில் 25 ஏக்கர் நிலத்தைத் தனியாருக்கு பட்டாப் போட்டு தாரை வார்த்ததும் 1975 ம் ஆண்டு திமுக ஆட்சியில்தான், இன்னொரு ஆறு ஏக்கர் சிவாச்சாரியார் குடும்பத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த 31 ஏக்கர் நிலத்தை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்காத போது அழகிரி அவர்களுக்கு வராத துயரம் இப்போது மட்டும் எங்கே வந்து ?

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெருவெளியில் முள், கல் இருப்பதை ஏன் முந்தைய திமுக அரசு அகற்றித் தூய்மை செய்யவில்லை என்று கே.எஸ். அழகிரி ஏன் கடநத 5 ஆண்டுகளாக கேட்டு அந்தத் துயரத்தைப் போக்கிக் கொள்ளவில்லை ?!

கே.எஸ்.அழகிரி அவர்களே வள்ளற் பெருமானார் உருவாக்கிய "சமரச சுத்த சத்திய சன்மார்க்கத்தை" அழித்துப் "பெருவெளியை" சிதைத்து, ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் மக்களின் எண்ணிக்கையைக் குறைத்து, முற்றும் முழுதுமாக தமிழர்களை உயிரிய ஞான அடையாளத்தை அழித்துவிடத் துடிக்கும் மோசடித் திட்டத்திற்கு துணை போய் அருட்பெருஞ்சோதி ஆண்டவரின், வள்ளற் பெருமானாரின் கோபத்திற்கு ஆளாகிவிடாதீர்கள்.

சொல்வதைச் சொல்லிவிட்டோம் !

அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை

எல்லாம் செயல்கூடம் என்னாணை அம்பலத்தே

எல்லாம் வல்லான் தனையே ஏத்து !

தயவுடன்,

வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்,

ஆசிரியர் : தமிழ் ஊடகம் குழுமம்

நூல் ஆசிரியர் : வடலூர் வள்ளற் பெருமானாரின் திருவருட் பெருவெளித் தலம் - திரிப்புகளும் பேருண்மைகளும்"

நிறுவனர் : இராமலிங்க வள்ளலார் மரணமிலாப் பெருவாழ்வு ஆய்வு அறக்கட்டளை

நிறுவனர் : தமிழியல் நடுவம் 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User