திரைக்குப் பின்னால்: பகலவன் தொலைக்காட்சியில் தமிழர்கள் வெளியேற்றம்? நாம் தமிழர் கட்சியில் போர்க்கொடி? ஆதவ் அர்ஜுனா விவகாரத்தின் பின்னணி | தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள்
பகலவன் தொலைக்காட்சியில் நிகழும் மாற்றங்கள், நாம் தமிழர் கட்சிக்குள் உருவாகும் அரசியல் பரபரப்பு, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த நிகழ்வுகள் மற்றும் ஆதவ் அர்ஜுனா தொடர்பான பின்னணி தகவல்களை விரிவாக அலசும் பருந்தார் தகவல்கள்.
தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள்
சிலு சிலுவென வீசிய காற்றுடன் பருந்தாரும் பறந்து வந்து நமது அறைக்குள் அமர்ந்தார். வணக்கம் சொல்லி வரவேற்று அவருக்குப் பிடித்தமான கோயில்பட்டி கடலை மிட்டாய் கொடுத்தோம். கொறித்தபடியே தொடங்கினார் பருந்தார்.
பகலவன் தொலைக்காட்சியில் செய்திப் பிரிவில் நடக்கும் அநியாயம் நாளுக்கு நாள் அதிகரிச்சுட்டே போவதாகக் கண்ணீர் விடுறாங்க பாதிக்கப்பட்ட பணியாளர்கள். ஈரோட்டுப் பகுத்தறிவுவாதியின் பேரன் போல வெளில அட்டைக் கத்தி வீசும் அந்த டுபாக்கூர் ஆசாமி செய்திப் பிரிவின் முக்கியப் பொறுப்பில் ரெக்கமண்டேஷன்ல வந்து சேர்ந்த காலத்தில இருந்து பேயாட்டம் போடுறாராம். சாதி ஒழித்த பெரியார்னு வெளில உருட்டிட்டு உள்ளே அவர் சார்ந்த சாதிக்கு லட்சம் லட்சமா நன்கொடை கொடுக்கிறார்னு பேச்சு. தான் பணியில சேர்ந்த உடனே அந்த ஆசாமி செய்த முதல் வேலை, தன்னோட மொழி இன வெறியைக் காண்பிச்சதுதான். 32 பேரை புதுசா வேலைக்கு சேர்த்தியிருக்கார். அவங்க அத்தனை பேரின் தாய்மொழியும் தெலுங்காம். அதுல பாதிப்பேருக்கு செய்தியும் எழுதத் தெரியலை, தமிழும் சரியாத் தெரியலைன்னு தலையில அடிச்சுக்கிறாங்க அந்த நிறுவனத்துல. இதுமட்டுமல்ல அப்படிப்பட்ட அரைவேக்காடுகளுக்கு எல்லாம் ஊதிய உயர்வு, பணி உயர்வுன்னு அள்ளி அள்ளிக் கொடுக்க சிபாரிசு செய்யுறாராம் அந்த அட்டைக்கத்தி டுபாக்கூர் ஆசாமி. பத்து வருசத்துக்கும் மேல நல்லா வேலை பார்த்தும் அவங்க தமிழர் அப்படின்னா ஒரு உயர்வும் கொடுக்காம வெறுப்பேத்தி வேலையை விட்டு ஓட வைக்கிறாராம். இது மட்டுமல்ல, பகுத்தறிவுப் பெண்ணியவாதின்னு வெளில உருட்டிட்டு இருக்கும் அந்த டுபாக்கூர் கொண்டுவந்த ஆட்களில் இதுவரை 6 பேர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள்.
எதே...ஆறு பேர் மீதா ?
ஆமாம், ஒருத்தன் திருமணம் கடந்த உறவுன்னு சொல்லிட்டு ஒரு பெரிய பொறுப்பில் இருக்கும் பெண்மணி வீட்டுக்குள்ள ராத்திரில புகுந்து தரும அடி வாங்கினவன். இன்னொருத்தன் மேக் அப் போடுற பெண் மீது கை வைத்தவன். இன்னோருத்தன்....
போதும் போதும் லிஸ்ட்டு பெருசாப் போகுது என்று இடை மறித்தோம்.
இதுல ஒருத்தனை வேலையே விட்டு அனுப்பிட்டாங்க. அவனையும் காப்பாத்த இந்த டுபாக்கூர் ஆசாமி படாத பாடு பட்டிருக்கார்.
அடா அடா...என்னே "சேவை".. என்றோம்
அது சேவை அல்ல "சர்வீஸ்" என்ற பருந்தார், அந்த அர்த்த ராத்திரில புகுந்து தரும அடி வாங்கிவனை மட்டும் எப்படியோ பாதுகாத்துப் பக்கத்துல வச்சிருக்காராம் அந்த ஆசாமி.
அப்படி என்ன அந்த நபர் மீது இந்த நபருக்குப் பாசம் ?! என்று அப்பிராணி போல கேட்டோம்.
அந்த ஆள்தான் இந்த டூபாக்கூருக்கு "வெப்பன் சப்ளையராம்" என்ற பருந்தார் அடுத்து சொன்ன தகவல் அதிரடி.....
இந்த டுபாக்கூர் ஆசாமி விவாத நிகழ்ச்சிகள்ல பேச வைக்க ஒரு ஆளை அறிமுகம் செய்தார். அந்த நபர் அதுக்கு மேல ஒரு பாலியல் பழங்கேடி.
அது யாரு....
அந்த ஆளைத்தான் அவன் சார்ந்திருந்த கட்சியே வெளியேத்திடுச்சே. அப்புறம் சிறைக்குள்ள அனுப்பிட்டாங்க.
ஓ....அந்த ஆளையும் இந்த டுபாக்கூர்தான் அறிமுகம் செய்ததா ? என்றோம்.
ஆமாம், அந்தப் பகலவன் தொலைக்காட்சி மீது அரசியல் கருத்து வேறுபாடு இருந்தாலும் அந்த நிறுவனம் போல பணியாளர்களுக்கு பணி உறுதி, உத்திரவாதம் தரும் வேறு ஒரு நிறுவனமே கிடையாது.
புரியும்படியா சொல்லுங்களேன் என்று கேட்டோம்.
அந்த நிறுவனத்துல வேலைக்கு சேருவதுதான் கடினம், ஆனா அவ்வளவு சீக்கிரம் வெளியேத்திட முடியாது. அந்த அளவுக்குப் பகலவன் நிறுவனத்தின் விதிமுறைகள் பணியாளர்களுக்கு ஆதரவாப் பாதுகாப்பா இருக்கும்.
ஓ....
ஆமாம், அப்படிப்பட்ட நிறுவனத்துல இந்த மாதிரி மட்டரகமான ஆளை ஹை லெவல் ரெகமன்டேஷன்ல சேர்த்துட்டு இப்போ நிறுவனமே கவலையில் இருக்கு போல. இந்த டுபாக்கூர் பேட்டி எடுப்பது கூட தெலுங்கரான்னு பார்த்துப் பார்த்துதான் எடுக்கிறாராம்.
இது என்ன புது பிராடுத்தனமா இருக்கே....
எல்லாம் "கட்டிங்தனம்தான்". இந்த ஆசாமி அந்த செய்திப் பிரிவின் முக்கிய பொறுப்புக்கு வந்தபிறகு அன்றாடம் நிறைய "தனியார் நிறுவன செய்திகள்" அதிகமா வெளியாகுது. அதே போல பிசினெஸ் பிரபலங்கள் செய்தி, பேட்டின்னு "கல்லாப் பெட்டி" நிறையாம வீட்டுக்கே போறது இல்லயாம்.
நிறுவனக் கல்லாப் பெட்டிதானே...என்று கேட்டோம்.
இல்லையில்லை அவரோட சொந்தக் கல்லாப் பெட்டி. இப்படித்தான் ஒரு 35 லட்சம் மதிப்புள்ள எலெக்ட்ரிக் காரும் வந்துச்சாம்.
அடேங்கப்பா....செய்திப் பிரிவுல இவ்வளவு "சம்பாதிக்கலாமா" ? என்று கேட்டோம்...
அட...நீயெல்லாம் எந்த உலகத்துல இருக்க...இந்த டுபாக்கூர் ஆசாமி மட்டுமே 300 கோடி ரூபாய்க்கும் மேல வாரி சுருட்டீட்டாராம்.
என்னது 300 கோடியா...... என்றோம்.
இதுக்கே வாயைப் பிளந்தா எப்படி...இதே போல இன்னொரு ரெண்டு பேரு 350 கோடியைத் தொட்டுட்டங்களாம்.
அது யாரு.... என்றோம் வடிவேலு பாணியில்
ஒருத்தர் முருகனின் நட்சத்திரப் பெண்கள் பேர் கொண்டவர். இந்த நபர் பிரபல கண்ணிமைக்கும் சோதிடக்காரருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் பிசினெஸ் செய்யுறார். அந்தப் பகலவன் டிவி டுபாக்கூர் போலவே இவருக்கும் 35 லட்சம் ரூபாய் மின்சாரக் கார் பார்சேல் பண்ணியிருந்தாங்க.
ஓ....அடுத்து
அடுத்து இன்னொருவர் திருன்னு புனிதமாத் தொடங்கி முடியும் பேர் கொண்டவர். இவருக்கு நாலஞ்சு கார்கள், சென்னைல பிரபலமான இடத்துல பல கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களான்னு ஜெகஜோதியா இருக்கார்.
அடேங்கப்பா...ம்
இது மட்டுமல்ல இன்னொரு பத்திரிகை ஆசாமி திருநெல்வேலி பக்கம் ரியல் எஸ்டேட் பெயரில் பல கோடிகளுக்கு இடம் வாங்கிப் போட்டுட்டு சென்னையில் நேர்மையின் சிகரம் போல முகத்தை வச்சுட்டு ஏழைபோல சுத்திட்டு இருக்கார். அந்தப் பிரபல மீசைக்கார நபர் அருப்புக்கோட்டையில் ரியல் எஸ்டேட் பிசினெஸ் பன்றார் என்று சொன்ன பருந்தாரிடம்...
ரியல் எஸ்டேட்ல புரோக்கரேஜ் பண்றதுல என்ன தப்பு இருக்கு என்று கேட்டோம்...
அதுல ஒரு தப்பும் இல்லை ராசா....இந்த இடங்கள் எல்லாம் சொந்தமா அல்லது பினாமி பேர்ல வாங்கிப் போட்டு பிளாட் போட்டு விற்கிற பிசினெஸ் என்றார் பருந்தார்.
ஓ....ஒன்னுமே இல்லாம பத்திரிகை ஊடகத்துறைக்குள்ள வந்துட்டு மாச சம்பளத்தை மட்டும் வாங்கிட்டு இப்போ ரியல் எஸ்டேட் ஜாம்பவான்கள், கார்கள், பங்களாக்கள்...பேஷ் பேஷ் என்றோம்.
அடுத்த தலைப்புக்குத் தாவினார் பருந்தார்.
நாம் தமிழர் கட்சிக்குள்ள கடுமையான அதிருப்தி மட்டுமில்லாம போர்க்கொடி தூக்கத் தொடங்கியிருக்காங்க என்றவரிடம்,
முதன்முதலா திருச்சில தொடங்கின இந்தப் போர்க்கொடியைப் பருந்தார்தான் பிரேக் செஞ்சு வெளில சொன்னார், அதுக்கு இதோ ஒரு சின்னப் பரிசு என்று கூறி ஒரு அட்வான்ஸ்டு ப்ளூ டூத் இயர் போன் பரிசளித்தோம்.
நன்றி என்ற பருந்தார்....நாம் தமிழர் குறித்து 2026 தேர்தலுக்கு முன்னாடியே பல அரசல் புரசல் தகவல்கள் வெளி வந்தன. ஆனாலும், கட்சிக்காரங்க போலவே ஆதரவாளர்களும் இந்தத் தேர்தல் முடிவையும் பார்த்துவிடுவோம் என்றுதான் இருந்தனர். ஆனால், தேர்தலுக்கு முன்னாடி இருந்தே நாம் தமிழரின் டிராக் மாறியதைக் கண்டு நொந்து போயிட்டாங்க அவங்க.
ஓ....
இதை இப்படி சொன்னா உனக்குப் புரியும் என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்த பருந்தார் ஒரு கேள்வியை நம்மிடம் தொடுத்தார், "2026 தேர்தலுக்கு முன்பு உண்மையில் வெற்றி பெறுவோம் என்று உறுதியாக இருந்த கட்சி எது?" என்று கேட்டார்.
ம்ம்ம்...திமுகதான் ரொம்ப உறுதியா இருந்துச்சு.
கரெக்ட்....அப்போ வாக்குப்பதிவுக்கு முதல்நாள் வரை எந்தக் கட்சியை எதிர்த்து நாம் தமிழர் பரப்புரை செய்திருக்கனும் ? என்று அடுத்த கேள்வியைப் போட்டார் பருந்தார்.
திமுகவைத்தான் மிக அதிகமா எதிர்த்து நின்னு களமாடி இருக்கனும்.
ரொம்ப கரெக்ட்...ஆனா அவங்க யாரை எதிர்த்து களமாடினாங்க ?! என்று அடுத்த கேள்வியைப் போட்டார்.
விஜயின் தவெகவை என்றோம் நாம்.
தவெக ஆட்சிக்கு வரும்னு யாராவது எதிர்பார்த்தங்களா ? என்று அடுத்த கேள்வியைப் போட்டார் பருந்தார்.
உண்மையைச் சொல்லப்போனால் தவெககாரங்ககூட எதிர்பார்க்கலை ! என்றோம்.
சரி....உண்மையில் தவெக யாருக்கு எதிரான போட்டியா இருந்துச்சு....!
திமுகவுக்கு எதிரானதாத்தான் அப்போ இருந்து இப்போ வரைக்கும் தவெக நிலைப்பாடு என்றோம்.
ஆம்....ஆக நாம் தமிழர் கட்சி தவெகவை குறிவைத்து எதிர்மறையான பரப்புரை செஞ்சா அது யாருக்கு இலாபம் ? என்று அடுத்த கேள்வியைப் போட்டார் பருந்தார்.
திமுவுக்குதான் என்றோம்.
இப்போ கூட்டிக் கழிச்சுப் பாரு கணக்கு சரியா வரும் என்ற பருந்தார், "கட்சில நான் வைக்கிறதுதான் சட்டம். எவன் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன். இருக்கப் பிரியம் இருந்தா இரு இல்லாட்டா போர்க்கொடி புடிச்சுட்டு வேற கட்சில சேர்ந்துடு" என்பதுதான் சீமானின் ஒரே கொள்கை. அதுமட்டுமல்ல அவருக்கு கட்சியே கலைஞ்சு போனாலும் பரவாயில்லை சாட்டை துரைமுருகன், பாக்கியராசன் உள்ளிட்ட "நால்வர்" அணி மட்டும் இருந்தாப்போதும் என்கிறாராம்.
அப்புறம் எப்படி தேர்தலை சந்திக்கிறது என்று கேட்டோம்.....
என்ன பெரிய தேர்தல்...எல்லாம் செட் அப்-தானே. சினிமாவுக்குத் துணை நடிகர், நடிகைகள் தேர்ந்தெடுப்பது போல அந்த நேரத்தில், கட்சில இருந்தாலும் இல்லாட்டாலும் யாரையாவது வேட்பாளரா நிறுத்தி கணக்குக் காட்டறதுதானே...இதென்ன பிரமாதம்? Fill up the Blanks - அதாவது இடத்தை நிரப்புவதுதானே....அது சீமானுக்குக் கை வந்த இயக்குநர் கலையாச்சே என்ற பருந்தார், தமிழ், தமிழர், தமிழ்த் தேசியம், தேசியத் தலைவர்னு அவர் பின்னாடி சுத்திட்டு இருக்கிற தம்பி தங்கைகள் நிலைதான் பரிதாபம் என்றவர் அடுத்த தகவலை நோக்கி நகர்ந்தார்....
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கிரிக்கெட் போட்டி நடத்தி இருக்காங்க என்று தொடங்கினார்.
அது வழக்கமா நடக்குறதுதானே என்றோம்.
ஆமாம், பத்திரிகையாளர்கள் 10ம் வகுப்பு 12ம் வகுப்பு பாஸ் பண்றதும் வழக்கம்தான், கிரிக்கெட் விளையாடறதும் வழக்கம்தான்...ஆனா அதுக்குப் பரிசு கொடுக்கவெல்லாம் அமைச்சர்களை அழைக்கனுமா என்பதுதான் இப்போது கேள்வியே என்றவர் தொடர்ந்து பேசினார்.
"இப்போ இருக்கும் சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் எல்லோருமே திமுகவால் அந்தப் பொறுப்புக்கு வந்தவங்க. ஆட்சி மாறியதும் அவர்கள் இப்போ தவெகவை காக்காய் பிடிக்கத் தொடங்கிட்டாங்க. அதுக்குத்தான் உப்புச் சப்பு இல்லாத நிகழ்சிகளுக்கு எல்லாம் அமைச்சர்களை அழைக்கிறாங்க.
ஓ...
இது தெரிஞ்சு, பிரெஸ் க்ளப்ல இருந்து போன் வந்தாலே சங்கடத்துக்கு ஆளாயிடுறாங்க அமைச்சர்கள்.
அடடே....
அப்படித்தான் நேற்று நடந்த கிரிக்கெட் போட்டிக்குப் பரிசு தர அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வருகிறார்னு அழைப்பிதழ்ல போட்டுட்டுட்டாங்க. ஆனா, அவர் வருவது பிற்பகல் 3.30 மணி வரை உறுதியாகலை. கிரிக்கெட் போட்டிக்கு ஸ்பான்சர் செய்த இந்தியன் ஆயில் நிறுவன மண்டல மேலாளர் ஆதவ் அர்ஜுனாவிடம் பேசி ஒரு பத்து நிமிடம் எங்களுக்காக வாங்க அப்படினு கேட்க வந்துட்டு 10 நிமிடங்கள்ல கிளம்பியிருக்கார் ஆதவ் அர்ஜுனா.
ஓ....
இதுல பெரிய உலகமகா நட்ட நடுநிலைப் பத்திரிகையாளர்னு பவுடர் பூசிட்டு, திமுக தரப்பில அண்ணா நகர்ல ஒரு வீடு, அடையார்ல ஒரு வீடு, ஒரு எலெக்ட்ரிக் கார்னு வாங்கிட்டு சுத்திட்டு இருக்கிற ஒரு சேனல் ஆசாமியும் "அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க பாஸ் வாங்க பாஸ்" என்று சொன்னதை சட்டை செய்யவே இல்லயாம் ஆதவ் அர்ஜுனா. அந்த ஆசாமியைப் பொறுத்தவரை திமுவுல "சம்பாதிச்சாச்சு", அடுத்து இந்த தவெக ஆட்சியில அரசு நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி நிறுவனத்துல ஒரு இயக்குநர் போஸ்டிங் வாங்கிட்டா..அடுத்து அப்படியே அமெரிக்க மாப்பிள்ளை...ஆப்பிரிக்கா விருதுன்னு தன் பெயரை கல்வெட்டுல செதுக்கி வைக்க ஆசைப்படுகிறாராம்.
அடப் பாவிகளா உண்மையான செய்தியாளர்கள் மாசா மாசம் சம்பளமே இல்லாம வெளில வெய்யில், குளிர், மழைன்னு பாடுபட்டு சாகாம செத்துட்டு இருக்க இவனுங்க நோகாம நோம்பு கும்பிடுகிறானுக என்று ஆதங்கப்பட்டோம் நாம்.
ஒரு கொசுறுத் தகவல் என்ற பருந்தார், "சென்னை பத்திரிகையாளர் மன்றக் கட்டடத்தைத் திறந்து வைத்தவர் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம். அவர் படத்துக்கு அவரோட நினைவு நாள்ள மாலை போட்டு மரியாதை செலுத்துறது பழைய நிர்வாகிகளின் வழக்கம். இன்னைக்கு ஜூலை 27. கலாம் நினைவு நாள். கிரிக்கெட் போட்டிக்கு லட்சக்கணக்கில் ஸ்பான்சர் வாங்கத் தெரிஞ்ச இப்போதைய நிர்வாகிகளுக்கு கலாம் படத்தை வச்சு ஒரு 100 ரூபாய்க்கு மாலை வாங்கிப் போடத் தெரியாதான்னு கேட்கிறாங்க மன்ற உறுப்பினர்கள் என்று சொன்ன பருந்தாரிடம் குறிப்பெடுத்துக் கொண்டிருந்த நாம் தலையை உயர்த்திப் பார்ப்பதற்குள் பறந்து விட்டிருந்தார் பருந்தார்.
தமிழ் ஊடகம் இணைய இதழை SUBSCRIBE செய்து கொள்ளுங்கள். SUBSCRIBE பொத்தான் மேலே வலது புறம் உள்ளது.
What's Your Reaction?
Like
4
Dislike
1
Love
0
Funny
0
Wow
1
Sad
0
Angry
0
Comments (0)