உண்மையான பகுத்தறிவுப் புரட்சியாளர் தமிழர் பேரறிஞர் மறைமலை அடிகளார் | 150வது ஆண்டு சிறப்புக் கட்டுரை

மறைமலை அடிகளாரின் 150வது ஆண்டு விழாவையொட்டி அவரது தனித்தமிழ் இயக்கம், இந்தி எதிர்ப்பு, சமூகச் சீர்திருத்தக் கருத்துகள், தமிழர் மறுமலர்ச்சி மற்றும் தமிழ்த்தேசியப் பார்வையை விரிவாக விளக்கும் பெ. மணியரசனின் சிறப்புக் கட்டுரை.

Jul 10, 2026 - 07:26
Updated: 24 days ago
0 22
உண்மையான பகுத்தறிவுப் புரட்சியாளர் தமிழர் பேரறிஞர் மறைமலை அடிகளார் | 150வது ஆண்டு சிறப்புக் கட்டுரை

-ஐயா பெ. மணியரசன் தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம் 

தமிழ் மொழியையும் தமிழினத்தையும் காத்த எழுச்சி நாயகர்

வாழ்ந்து செழித்த தமிழ்க் குமுகாயத்தின் மீது அயல் இன ஆதிக்கங்கள் ஆன்மிகத்தின் வழியாக வீடுபுகுந்து தமிழ் மொழியைச் சீரழித்து, தமிழ் இனத்தையும் சீரழித்தது. அதற்கு மேலும் வாய்ப்பளிப்பதாக வகைவகையான அயல் இனப் படையெடுப்புகளும் தமிழ்நாட்டின் மீது நடந்தன. ஆங்கில ஆதிக்கமும் வந்தது. 

இருள் கிழிக்கும் கதிரவன் போல் எழுந்தவர்தாம் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் (15.7.1876 – 15.9.1950)!

தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றமும் நோக்கமும்

மறைமலை அடிகளார் 1916-இல் தொடங்கிய “தனித்தமிழ் இயக்கம்” வடசொல் உள்ளிட்ட அயற்சொல் நீக்கி, தனித்தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் முன்னுரிமை தந்தது. அதே வேளை ஆரிய பிராமணர் – ஆங்கிலம், ஆங்கிலேயர் உள்ளிட்ட அயல் இன ஆதிக்கங்களையும் அகற்றும் இலக்கு கொண்டது.

இந்தித் திணிப்புக்கு எதிராக மறைமலை அடிகளாரின் போராட்டம்

இப்பொழுது சமற்கிருத ஆதிக்கம் மட்டுமல்ல, அதன் கலப்பின மொழியான இந்தி ஆதிக்கமும், ஆங்கில ஆதிக்கமும் தமிழைச் சீரழித்து வருகின்றன.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1937-இல் சென்னை மாகாண முதலமைச்சராகிய காங்கிரசுக்காரரான சி. இராசகோபாலாச்சாரியார் இந்தியைக் கட்டாய மொழிப்பாடமாகத் திணித்தபோது தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி மக்கள்திரள் போராட்டமாக வெடித்தது. அப்போது இந்தித் திணிப்பை எதிர்த்தும், இந்தி மொழியின் தகுதியற்ற தன்மையை விளக்கியும் மறைமலை அடிகளார் 1938-இல் “இந்தி பொதுமொழியா?” என்ற நூல் எழுதினார்.

ஆன்மிகத்தின் வழியே சமூகச் சீர்திருத்தத்தை முன்னெடுத்தவர்

சிவநெறிச் செம்மலாகிய மறைமலை அடிகளார், தமிழர் சமயத்திற்குள் புகுந்து தமிழ்மொழியையும், தமிழர் ஆன்மிகத்தையும் சீரழித்த ஆரிய பிராமணர்களுக்கு எதிராக வள்ளலார் ஆன்மிகத்தை – சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை ஏற்றுப் பரப்பினார். அதன் பெயரைத் தமிழ்ப்படுத்தி, “பொதுநிலைக் கழகம்” என்று அறிவித்தார்.

1931 பொதுநிலைக் கழக மாநாடு – வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்கள்

அந்தப் பொது நிலைக் கழகத்தின் 20 ஆம் ஆண்டு நிறைவு விழா 1931 பிப்ரவரி 2, 3, 4, 5 நாட்களில் சென்னைப் பல்லாவரத்தில் மறைமலை அடிகளார் தலைமையில் நடந்தது. அதில், 4.2.1931 அன்று சென்னைப் பச்சையப்பன் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் மணி. திருநாவுக்கரசு அவர்கள் மறைமலை அடிகளாரின் ஒப்புதலோடு முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சில:

சாதி ஒழிப்பும் கோயில் சமத்துவமும்

தீர்மானம் 5: கடவுள் வழிபாடு ஆற்றும் ஒருவர் (பூசகர்) தவிர ஏனையோர் எல்லார்க்கும் கடவுளை வணங்கும் முறையில் எந்த ஒரு வேற்றுமையும் கோயில்களில் கூடாது. (சாதி வேறுபாடு கூடாது – பெ.ம.)

தீர்மானம்: 6 பழந்தமிழர் குடிமக்கள் (பட்டியல் வகுப்பார்) எல்லாரையும் உயர்வு – தாழ்வு பாராது தூய்மையாகத் திருக்கோயிலிலே சென்று வழிபாடு செய்வற்கு இடையூறின்றி முயற்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பெண்கள் உரிமை மற்றும் சமூக நீதி குறித்து முன்னோடியான கருத்துகள்

தீர்மானம் 7: கோயில்களில் பொது மாதர்க்குப் பொட்டுக் கட்டும் வழக்கம் அடியோடு தொலைய வேண்டும். இனி அம்மாதரைக் கொண்டு ஏதொரு திருப்பணியும் செய்யக்கூடாது.

தீர்மானம் 8: சமய உண்மைக்கு முரண்பாடான அறிவுக்குப் பொருந்தாத திருவிழாக்களை, சடங்குகளைக் கோயில்களில் செய்யக் கூடாது.

தீர்மானம் 11: சாரதா சட்டத்தை (குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தை ) உடனே செயலுக்குக் கொண்டு வரவேண்டும்.

தீர்மானம் 12: பெண்களுக்கு ஆடவரைப் போல் தாயபாகம் (பெற்றோர் சொத்தில் பங்கு) வழங்க வேண்டும்.

தீர்மானம்13: கைம்பெண் (விதவை) மணம் முதல் நூல் முடிவுக்கு ஒத்ததே. அறிவுக்கும் ஒழுக்கத்திற்கும் ஒத்துவராதவை முதல் நூல் முடிவாக இருந்தாலும் இப்போது அவற்றை ஒப்புக்கொள்ள முடியாது. கைம்பெண் மறுமணத்துக்கான நன் முயற்சிகளைத் தலைவர்களும் பொது மக்களும் செய்ய வேண்டும்.

கலப்புத் திருமணம் மற்றும் கைம்பெண் மறுமணத்திற்கு ஆதரவு

தீர்மானம் 14: சாதிக் கலப்பு மணம் (கலப்புத் திருமணம் –பெ.ம.) மிகவும் ஏற்றது என இக்கழகம் முடிவு செய்கிறது. கோயில் அந்தணர் குலத்தில் பிறந்த சுந்தரமூர்த்தி நாயனார் தம் குலத்தவரல்லாத பரவை, சங்கிலி நாச்சியார்களை மணந்தமை எவரும் அறிந்ததேயாம்!

தமிழுக்கு உயரிய இடம் வேண்டும் என்ற மறைமலை அடிகளார்

தீர்மானம் 15: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தமிழ்மொழிக்கே முதன்மை இருக்க வேண்டும் என்று செட்டிநாட்டுத் தமிழ் மன்னர் அண்ணாமலைச் செட்டியார் அவர்களை இக்கழகம் கேட்டுக்கொள்கிறது.

தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்விக்கான வலியுறுத்தல்கள்

தீர்மானம் 16: சென்னைப் பல்கலைக் கழகத்தார் தமிழ்மொழிக்கு இன்னும் தலைமை தராதிருப்பதற்கு இக்கழகத்தார் (பொது நிலைக் கழகத்தார் – பெ.ம.) வருந்துவதுடன், தமிழ்நாட்டில் தமிழுக்கே முதன்மை இருக்க வேண்டுமென வற்புறுத்தி, இனித் தமிழை உயர்தனிச் செம்மொழியாகக் கொண்டு செய்ய வேண்டுவனவற்றைச் செய்ய முற்பட வேண்டும் எனவும் அவர்தம்மை இக்கழகம் வேண்டுகின்றது.

தீர்மானம் 17: தமிழைத் தனிப்பாடமாக பி.ஏ. சிறப்பு வகுப்புக்கு (B.A. Honours course) ஏற்படுத்த வேண்டுமென சென்னைப் பல்கலைக் கழகத்தாரையும், பொதுவாக எல்லா கல்லூரித் தலைவர்களையும், சிறப்பாகப் பச்சையப்பன் கல்லூரித் தலைவரையும் இக்கழகம் கேட்டுக் கொள்கிறது.”

மேற்கண்ட தீர்மானங்களில் தமிழர் மறுமலர்ச்சி நிலைபாடுகளும் சமூகச் சீர்திருத்தக் கொள்கைகளும் இடம் பெற்றுள்ளன.

இதுதான் தமிழர்களின் மரபு ! 

இதை முன்கூட்டியே வள்ளலார் “வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் யானும் ஒருவன் அலனோ?” என்று பாடினார்.

'சங்கம்' முதல் 'கழகம்' வரை – தமிழ்ச் சொல்லாக்கப் புரட்சி

இன்னொன்றையும் இங்கு கவனிக்க வேண்டும். “சங்கம்” என்று இருந்ததைக் “கழகம்” என்று நற்றமிழில் மாற்றி 1930 களிலும் அதற்கு முன்பும் பயன்படுத்தியவர் மறைமலை அடிகளார். (“கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோடமர்ந்து” என்று பாடினார் பரஞ்சோதி முனிவர்.) சமற்கிருதத்தையும், இந்தித் திணிப்பையும் எதிர்த்தவர் மறைமலை அடிகளார். திராவிடர் கழகம் 1944 கிலும் திராவிட முன்னேற்றக் கழகம் 1949 திலும் உருவானவை என்பதையும் கவனத்தில் கொள்க.

தமிழ்த்தேசிய மறுமலர்ச்சியின் முன்னோடிகளில் மறைமலை அடிகளார்

தமிழர் மறுமலர்ச்சியின் - தமிழ்த்தேசிய எழுச்சியின் முதல்நிலை நாயகர்களில் ஒருவரான மறைமலை அடிகளாரின் 150 ஆம் ஆண்டு நிறைவுநாள் 15.7.2026 அன்று வருகிறது. தமிழ்த்தேசியப் பேரியக்கம் தனது முத்திரையில் திருவள்ளுவர் – மறைமலை அடிகளார் – பாவேந்தர் என மூவரையும் வைத்துள்ளது.

150வது ஆண்டு விழா – தலைமுறைகளுக்கான அழைப்பு

அடிகளாரின் 150 –ஆம் ஆண்டு விழாவை, கருத்தரங்குகளாக, பாவரங்குகளாகக் கொண்டாடுங்கள்! கட்டுரைகள், சிறப்பு நூல்கள் வெளியிடுங்கள்! பிள்ளைகளுக்குத் தனித்தமிழில் பெயர்சூட்ட உறுதி எடுங்கள். “சுவாமி வேதாச்சலம்” என்ற தனது பெயரை மறைமலை அடிகள் என்று தனித்தமிழில் மாற்றிக்கொண்டார். பிள்ளைகளைத் தமிழ்வழியில் படிக்க வையுங்கள். ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாக இருக்கட்டும். இந்தி, சமற்கிருத ஆதிக்கத்தைத் தடுக்க களம் காணுங்கள். தமிழ்த்தேசியம் ஏந்துங்கள்.

நுகர்வு வெறிக்குப் பலியாகாமல் மனக்கட்டுப்பாடுள்ள வாழ்க்கையை வாழ முயலுவோம். மறைமலை அடிகளார் புகழ் ஓங்குக

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User