அதிமுகவுக்கு தேர்தல் பணி செய்த ‘மெய்நிகர்’ நிறுவனத்தில் உள்ளிருப்புப் போராட்டம்! 2 மாத ஊதியம் தரவில்லை என ஊழியர்கள் புகார்

அதிமுகவுக்குத் தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொண்டதாகக் கூறப்படும் ‘மெய்நிகர்’ நிறுவனத்தில் ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம். இரண்டு மாத ஊதியம் வழங்கப்படவில்லை என ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில், பிரமாணியா–மெய்நிகர் நிறுவனங்களுக்கு இடையேயான பணப் பரிவர்த்தனை மற்றும் GST தொடர்பாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Aug 30, 2026 - 17:58
Updated: 17 days ago
0 59
அதிமுகவுக்கு தேர்தல் பணி செய்த ‘மெய்நிகர்’ நிறுவனத்தில் உள்ளிருப்புப் போராட்டம்! 2 மாத ஊதியம் தரவில்லை என ஊழியர்கள் புகார்

அதிமுக கட்சிக்குத் தேர்தல் பணியாற்றுவதற்காக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரமாணியா எனும் நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டு பணியாற்றியது. அந்த நிறுவனம் தமிழ்நாட்டில் செயலாற்றும் சில நிறுவனங்களுடன் துணை ஒப்பந்தங்கள் செய்து பணிகளை ஒதுக்கியிருந்தது.

அப்படிப் பணி பெற்ற நிறுவனங்களில் "மெய்நிகர்" நிறுவனமும் ஒன்று. இந்த மெய்நிகர் நிறுவனத்தின் உரிமையாளர் சத்யா என்கிற சத்யமூர்த்தி.

பிரமாணியாவுடன் ஒப்பந்தம் தவிர மெய்நிகர் நிறுவனம் நேரடியாகவும் அதிமுகவுக்குப் பணியாற்றியதாகத் தெரிகிறது.

தேர்தலுக்கு முன்பாக இந்த மெய்நிகர் நிறுவனத்தில் சுமார் 130 பேர் பணியாற்றியதாக அதன் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தேர்தல் முடியும்வரை ஒழுங்காக ஊதியம் கொடுத்துக்கொண்டிருந் சத்யமூர்த்தி தேர்தல் முடிவடைந்த நிலையில் இரண்டு மாதங்களாக ஊதியம் தராமல் தாமதம் செய்து வந்துள்ளார்.

இதன் காரணமாகவும் வேறு சில காரணங்களாலும் சுமார் 100 பேர் வரை வேலையை விட்டு சென்றுவிட்ட நிலையில், தற்போது சுமார் 30 பேர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

அவர்களுக்குக் கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் தராமல் தாமதம் செய்து வருவதுடன் முறையான பதிலும் அளிக்காமல் இருந்துள்ளார் சத்யமூர்த்தி.

இதையடுத்து அந்தப் பணியாளர்கள் தேனாம்பேட்டையில் உள்ள மெய்நிகர் நிறுவனத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தனக்கு பிரமாணியா நிறுவனம் இரண்டேகால் கோடி ரூபாய் தரவேண்டியுள்ளதால் தன்னால் ஊதியம் தரமுடியவில்லை என்று சத்யா எனும் சத்யமூர்த்தி கூறிவந்த நிலையில், பிரமாணியா நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், "பணம் தரவேண்டியது உண்மைதான் என்றாலும், அதற்கான முறையான பில்கள், ரசீதுகள் உள்ளிட்ட விவரங்கள் மெய்நிகர் தரவில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும், மெய்நிகர் நிறுவனம் GST கட்டாத காரணத்தால் தங்களுக்கு சுமார் 40 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்."

இது மெய்நிகர் மற்றும் பிரமாணியா ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு இடையானே பிரச்சனை எனும் நிலையில், பணியாற்றிய பணியாளர்களுக்கு ஊதியம் தராமல் தாமதம் செய்வது மெய்நிகர் நிறுவனத்தின் தவறு என்று கூறும் பணியாளர்கள் தொடர்ந்து நிறுவனத்தினுள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மெய்நிகர் உரிமையாளர் சத்யா என்கிற சத்தியமூர்த்தி சார்பில் "ஊழியர்கள் தன்னை சிறை வைத்துள்ளதாகக் காவல்துறையினருக்குப் பொய்ப் புகார்" அளித்துள்ளதாகத் தெரிகிறது.

தேர்தல் பணி செய்து பல கோடிகள் வருவாய் பெற்றுவிட்ட சத்யா என்கிற சத்தியமூர்த்தி 30 பணியாளர்களுக்கு ஊதியம் தராமல் ஏமாற்றிவருவது பணியாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெய்நிகர் நிறுவனம் உடனடியாக பணியாளர்களுக்கு ஊதியம் தந்து பிரச்சனையை சுமூகமாக முடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் பணியாளர்கள்.

அதிமுக தேர்தலில் தோல்வி அடைந்ததையும், பிரமாணியா நிறுவனம் கடைசித் தொகை செலுத்ததையும் காரணம் காட்டி பணியாளர்களை மெய்நிகர் நிறுவனம் ஏமாற்ற முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து இப்பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வு காண்பது அவசியம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User