சோளிங்கர்: பத்திரிகையாளர் மீது தாக்குதல்? தவெக எம்எல்ஏ கபில் மற்றும் 10-க்கும் மேற்பட்டோர் மீது நடவடிக்கைக் கோரிக்கை | திரிக்கப்பட்ட காணொலி வைரல் ஆனதுதான் பிரச்சனையா ?
சோளிங்கரில் செய்தியாளர் அரங்கநாதன் மற்றும் ஒளிப்பதிவாளர் சிவா தாக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், தவெக எம்எல்ஏ ஜி. கபில், அவரது தம்பி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்திரிகையாளர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
ஒளிப்பதிவாளர் ஒருவர் மீதும் , செய்தியாளர் ஒருவர் மீதும் கொடும் தாக்குதல் நடத்திய ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தொகுதி சட்டமன்ற தவெக உறுப்பினர் ஜி.கபில் மீதும் அவரது தம்பி தனஞ்செழியன் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
ராணிபேட்டையைச் சேர்ந்த அரங்கநாதன் என்பவர் ஒரு சுயாதீன பத்திரிகையாளர். இவர், தினகரன் மற்றும் தினமலர் பத்திரிகைகளுக்கு சுயாதீன செய்தியாளராக செய்திகள் மற்றும் விளம்பரங்களை சேகரித்துத் தரும் பணிகளைச் செய்து வருகிறார்.
இவர் நேற்று இரவு தமது சக பத்திரிகையாளர்கள் சிலருடன் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கபில் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அங்கு பேசுவதைக் காணொலிப் பதிவு செய்திருக்கிறார். படம் எடுக்காதே என்று கூறிய கபில், தினகரன் செய்தியாளரின் சட்டையைப் பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வாக்குவாதம் நடைபெற்ற நிலையில் அலுவலகத்தில் கூடியிருந்த சட்டமன்ற உறுப்பினர் கபிலின் தம்பி தனஞ்செழியன் உள்ளிட்டவர்கள் செய்தியாளர் அரங்கநாதனைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். உடன் வந்த பத்திரிகை ஊடகர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
பத்திரிகையாளர் அரங்கநாதன் மீது உயிருக்கு ஆபத்து வரும் வகையில் தாக்குதல் நடத்திய எம்எல்ஏ கபில் அவரது தம்பி தனஞ்செழியன் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று இரவு பத்திரிகை ஊடகர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை இதுகுறித்து சென்னை பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துத் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளன.
அரங்கநாதனுக்கு முன்னதாக ராணிப்பேட்டையைச் சேர்ந்த சிவா என்கிற ஒளிப்பதிவாளர் மீதும் சட்டமன்ற உறுப்பினரின் ஆட்கள் தாக்குதல் நடத்தியது மற்றுமொரு நிகழ்வு.
இங்கிருந்துதான் பிரச்னை தொடங்கியுள்ளது.
சிவா என்கிற சுயாதீன ஒளிப்பதிவாளர் தவெக ஐ.டி.விங்கில் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது. ராணிப்பேட்டையில் உள்ள சில தொலைக்காட்சிச் செய்தியாளர்கள் இந்த சிவாவிடம் தங்கள் டிவி செய்தி நிறுவனத்தின் ஒலிவாங்கி மற்றும் இலச்சினையைக் (Mic and Logo ) கொடுத்துவிடுவது வழக்கம் என்கின்றனர் அந்த நகரின் செய்தியாளர்கள்.
அவர் எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கே அத்தனை Mic Logo க்களையும் வைத்து ஒளிபரப்பு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் போல.
அந்தவகையில், கடந்த 25 ம் தேதி ஜனநாயகன் படம் பார்த்துவிட்டு அரங்கைவிட்டு வெளியே வந்த சட்டமன்ற உறுப்பினர் கபிலிடம் சிவா கருத்துக் கேட்டதாகத் தெரிகிறது. தங்கள் கட்சி ஐடி விங் ஆள்தானே என்று சிரித்தவாறே கபில் சிவாவின் தோளில் தட்டிக் கொடுக்க கை ஓங்கிய "காட்சிப் பதிவை" வைத்து எம்.எல்.ஏ கபில் தொலைக்காட்சி செய்தி ஊடகவியலாளரைத் தாக்கி விட்டார் என்று செய்தி பரப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தக் காணொலி Slow Motion செய்யப்பட்டு "தொலைக்காட்சி ஊடகர் மீது தவெக எம்.எல்.ஏ., தாக்குதல்" என்று சன் நியூஸ் தொலைக்காட்சியிலும் செய்தி வைரல் ஆனதாகத் தெரிகிறது.
ஆக, இந்தக் காட்சி வைரல் ஆனவுடன் சிவா மீது கோபம் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் கபிலின் தம்பி மற்றும் ஆட்கள் சிவாவை அடித்து உதைத்துள்ளனர்.
இந்த நிலையில்தான் அரங்கநாதன் தமது சக பத்திரிகையாளர்களுடன் நேற்று இரவு சிவா மீதான தாக்குதல் குறித்து விளக்கம் கேட்க கபில் அலுவலகம் சென்றுள்ளனர். அப்போது அரங்கநாதன் ஒலிப்பதிவு செய்துள்ளார். தினகரனுக்கு செய்தி அனுப்பும் அரங்கநாதன் மூலம்தான் அந்தக் காட்சி சன் நியூஸ்க்குப் போயிருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
ஒளிப்பதிவாளர் சிவாவிடம் இதுகுறித்து விசாரிக்க தமிழ் ஊடகம் சார்பில் அவருக்கு அலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவரது அலைபேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளது.
ஒளிப்படக் காட்சி பொய்யாகத் திரிக்கப்பட்டிருந்தாலும்கூட அதற்கு மறுப்புத் தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர் கபில் பிரச்னையை முடித்து வைத்திருக்கலாம். மாறாக, ஒளிப்பதிவாளர் சிவாவுக்கு மிரட்டல் விடுத்துத் தாக்குதல் நடத்தியதுடன், அரங்கநாதன் மீதும் தாக்குதல் நடத்தியதும் கண்டிக்கத்தக்கதும், தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியதும் என்பதே பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)