தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவராக தென்காசி ஆனந்தன் அய்யாசாமி ? டெல்லியில் தீவிர ஆலோசனை

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் மாற்றம் தொடர்பாக டெல்லியில் ஆலோசனை நடைபெறும் நிலையில் ஆனந்தன் அய்யாசாமி பெயர் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Jul 10, 2026 - 17:02
Updated: 23 days ago
0 403
தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவராக தென்காசி ஆனந்தன் அய்யாசாமி ? டெல்லியில் தீவிர ஆலோசனை

-நாச்சி.செல்வராஜ், பத்திரிகையாளர் 

கடந்த மே மாதம் தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு தலைவராக இருந்த செல்வப் பெருந்தகை மாற்றப்பட்டு புதிய தலைவராக விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டார். 

இதனைத் தொடர்ந்து பாஜகவின் தமிழ்நாடு மாநிலப் புதிய தலைவர் நியமனம் தொடர்பாக டெல்லியில் தீவிரமாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. 

தற்போது தமிழ்நாடு பாஜக தலைவராக உள்ள திரு.நயினார் நாகேந்திரன் அவர்களின் செயல்பாடு டெல்லி மேலிடத்திற்குத் திருப்திகரமாக இல்லை என்று கூறப்படுகிறது. 

மேலும் கடந்த தேர்தலில் பாஜகவை வழிநடத்திய நயினார் நாகேந்திரன் செயல்பாடுகள் குறிப்பிடும் படியாக இல்லை என்றும் அவர் கட்சியை படு பாதாளத்துக்கு தள்ளிவிட்டார் என்கிற முணுமுணுப்பும் கட்சி வட்டாரத்தில் உரக்க ஒலிக்கத் தொடங்கி விட்டது.

கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் 27 தொகுதிகள் போட்டியிட்ட பாஜக ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது.

பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை இருந்த போது இருந்த கட்சியின் முன்னேற்றம் தற்போது நயினார் நாகேந்திரன் தலைமையில் இல்லை என்பது கட்சியினரின் கருத்தாக உள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அழுத்ததின்பேரிலேயே அண்ணாமலை பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். 

அதன் பின்னர் தென் மாவட்டங்களில் இருந்து ஒரு தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்பதே பாஜகவின் முடிவாக இருந்தது அப்போதே ஆனந்தன் அய்யாசாமி பெயர் அடிபட்டது. ஆனந்தன் அய்யாசாமி தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர். 

எனினும், திருமதி. சசிகலா, திரு.ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அதிமுக கூட்டணிக்கு எதிராக நின்ற காரணத்தாலும், முக்குலத்தோர் வாக்குகளை அதிமுக கூட்டணி கணிசமான அளவில் இழக்கும் நிலையும் இருந்தது. 

சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டும், அதிமுக கூட்டணிக்குத் தென் தமிழ்நாட்டில் முக்குலத்தோர் வாக்குகளைக் கருத்தில் கொண்டும் அப்போது முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.

எனினும், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டபோது அதிமுக - திமுக - தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளுக்கு நயினார் நாகேந்திரன் தலைமையிலான தமிழ்நாடு பாரதிய ஜனதாவால் ஈடு கொடுக்க முடியவில்லை. 

நயினார் நாகேந்திரனிடம் பிற கட்சித் தலைவர்கள் போல மக்களைக் கவர்ந்து இழுக்கும் பேச்சுத் திறனும், திறமையான செயல்பாடுகளும் இல்லை என பாஜக நிர்வாகிகள் சிலர் குற்றம் சாட்டினர்.

அதனடிப்படையிலும், நயினார் நாகேந்திரனை மாற்ற டெல்லி மேலிடம் தற்போது முடிவு செய்துள்ளது. தலைவர் பொறுப்புக்குப் பாஜகவில் பல பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டன. 

அந்தப் பட்டியலில் ஆனந்தன் அய்யாசாமி பெயர் முதலிடத்தில் இருப்பதாகவும் தற்சமயம் அவரே பொருத்தமானவர் என்றும் டெல்லி மேலிடம் கருதுகிறது என்கின்றனர் டெல்லி செய்தியாளர்கள். 

அண்ணாமலை தலைவர் ஆவதற்கு முன்பே ஆனந்தன் அய்யாசாமி பெயர் முன்மொழியப்பட்ட நிலையில், தற்போது அந்த வாய்ப்பு அவருக்கே இருப்பதாகக் கூறப்படுகிறது. 

தென் மாவட்டங்களில் அடர்த்தியாக வாழும் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்த ஆனந்தன் அய்யாசாமி மெத்தப் படித்தவர். அமெரிக்காவில் செமி கண்டக்டர் தொழில்நுட்பத்தில் 20 ஆண்டுகாலம் பணியாற்றியவர். இன்டெல் நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பணியாற்றியவர். 

மேலும் தென்காசியில் "வாய்ஸ் ஆ ஃப் தென்காசி அறக்கட்டளை" என்ற அரசு சாராத நிறுவனத்தைத் தொடங்கி கிராமப்புறங்களில் நூற்றுக்கணக்கான தொழில் முனைவோரை உருவாக்கி, இளைஞர்களுக்கு விவசாயத்திலும் வேலை வாய்ப்பை வழங்கி வருகிறார். 

இது மட்டும் அல்லாது ஆர்எஸ்எஸ் ஆதரவும் ஆனந்தன் அய்யாசாமிக்கு உள்ளது. 

குடியரசு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் ஆதரவும் தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு போன்றோர் ஆதரவும் உள்ளது இதனால் பாஜகவின் புதிய தலைவராக ஆனந்தன் அய்யாசாமி விரைவில் நியமிக்க வாய்ப்பு உள்ளது.

What's Your Reaction?

Like Like 10
Dislike Dislike 0
Love Love 3
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User