கீழடி அமர்நாத் ஆய்வறிக்கையில் என்ன நடந்தது ? ASI சிறப்புக் குழு மீண்டும் ஆய்வு !

கீழடி அகழ்வாய்வு, அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கை, ASI மீள் ஆய்வு, ஆய்வறிக்கை தாமதம் மற்றும் பின்னணி குறித்து விரிவாக அலசும் வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் சிறப்புக் கட்டுரை.

Jun 30, 2026 - 10:37
Updated: 6 days ago
0 32
கீழடி அமர்நாத் ஆய்வறிக்கையில் என்ன நடந்தது ?  ASI சிறப்புக் குழு மீண்டும் ஆய்வு !

அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கை குறித்து

ஆராயக் கீழடி வருகிறது சிறப்புக் குழு

கீழடி ; "தமிழ் ஊடகம்" தொடர்ந்து

சொன்ன 100 % உண்மைச் செய்திகள் !

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் 

தமிழ்நாட்டில் கீழடி போல சுமார் 169 இடங்கள் அகழ்வாய்வு செய்து அருங்காட்சியகம் நிறுவும் தகுதியில் உள்ளன.

ஆனால் அது குறித்தெல்லாம் சு.வெங்கடேசன், பாலகிருஷ்ணன் (ஐ.ஏ.எஸ்.ஓய்வு) ஆகியோரெல்லாம் வாயே திறக்க மாட்டார்கள்.

ஆனால் சொல்லி வைத்தாற்போல கீழடி குறித்து மட்டும் சு.வெங்கடேசன் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார். அமர்நாத் ராமகிருஷ்ணன் ஏதோ புரட்சி செய்துவிட்டதைப் போல அதில் அரசியல் செய்வார். அதற்கு ஒத்து ஊதுவார் பாலகிருஷ்ணன் (ஐ.ஏ.எஸ்.ஓய்வு). 

கீழடி விளம்பரத்தை வைத்தே நாடாளுமன்ற உறுப்பினர் ஆன ஒரே நபர் சு.வெங்கடேசன் மட்டுமே.

அது போலவே, தான் மட்டும் இல்லையென்றால் கீழடியை யாருமே கண்டுபிடித்திருக்க மாட்டார்கள் என்பது போல விளம்பரம் தேடிக்கொண்ட ஒரே அகழ்வாய்வு அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் மட்டுமே.

ஆனால், உண்மை என்ன ?! அமர்நாத் ராமகிருஷ்ணன் அடிப்படையில் இந்திய அரசின் தொல்லியல் துறை (ASI-Archaeological Survey of India) ஆய்வு அதிகாரி.

இவரிடம் இந்தியத் தொல்லியியல் துறை தமிழ்நாட்டில் ஒரு அகழாய்வை மேற்கொள்ளக் கூறுகிறது. அவ்வாறு அகழாய்வு செய்ய எந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கலாம் என்று அமர்நாத் ராமகிருஷ்ணன் தேடுகிறார். இறுதியில் அவர் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை ஏற்கனவே மாதிரிக் குழிகள் தோண்டிக் கண்டுபிடித்து வைத்துள்ள 40 இடங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறார்.

அதாவது, இந்திய அரசின் தொல்லியல்துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அதிகாரிகள் கண்டுபிடித்து வைத்த ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே தோண்ட ஆரம்பிக்கிறார்.

இந்தியாவில் எந்த மாநிலத்தில் எந்த அரசாங்கம் அகழ்வாய்வு செய்தாலும், அவர்கள் இந்தியத் தொல்லியல் துறையிடம்  "உரிமம்" வாங்க வேண்டும். அந்த உரிமம் ஒரு ஆண்டுக்கு மட்டும் தரப்படும். அடுத்தாண்டுக்கு வேண்டுமானால் மீண்டும் விண்ணப்பித்துப் பெற வேண்டும்.

இந்தியத் தொல்லியல் ஆய்வாளர் நேரடியாக அகழ்வாய்வு செய்தாலும்கூட இதே விதிமுறைதான்.

அந்த அடிப்படையில் அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு 2014–15 மற்றும் 2015–16 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு உரிமம் தரப்படுகிறது. அதாவது இரண்டு கட்டங்களுக்கு.

அவர் மேற்கொண்ட 2014-15 ம் ஆண்டு முதல் கட்ட ஆய்வில் கட்டட இடிபாடுகள் கிடைக்கின்றன, தொல் பொருட்கள் கிடைக்கின்றன.

ஆனால், அவர் முதல் கட்ட ஆய்வின்போதே அதிலிருந்து ஒரு பொருளை எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் தம்மால் அதற்கு "மாதிரிகள்" (Samples) சேமிக்க முடியாது போயிற்று என்று அமர்நாத் ராமகிருஷ்ணனே கூறுகிறார்.

அடுத்து இரண்டாம் கட்ட ஆய்வில் (2015–16 ம் ஆண்டு) கிடைத்த மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்புகிறார். அதன் காலம் கிமு.300 என்று ஆய்வக அறிக்கை தரப்படுகிறது.

கவனத்தில் கொள்க கி.மு.300 என்று ஆய்வக அறிக்கை கூறுகிறது.

இந்தியத் தொல்லியல் துறை என்பது இந்திய அரசின் முகமை. அதில் ஒரு ஆய்வாளரை ஒரே இடத்தில் பணியில் வைத்திருக்க மாட்டார்கள். பணி உயர்வு, இடமாற்றம் என்பதெல்லாம் அரசு துறையில் வழக்கமான ஒன்று.

ஆக, ஒரு அகழ்வாய்வாளரின் பணி ஒரு இடத்தில் அகழ்வாய்வு செய்து அதில் கிடைக்கக் கூடிய பொருட்களை அப்படியே பாதுகாப்பாக இலக்கமிட்டு வைப்பது - ஆய்வகத்துக்கு மாதிரிகளை அனுப்புவது - தான் செய்த ஆய்வுக்கான அறிக்கையைத் தருவது மட்டுமே.

பத்திரிகை ஊடகத்திற்குக்கூட பேட்டிகள், நேர்காணல்கள் கொடுக்கக் கூடாது.

பத்திரிகை ஊடகத்திற்கு, இந்தப் பொருட்கள் கிடைத்திருக்கின்றன என்று மட்டும் கூறலாம். ஆனால் அந்தப் பொருட்கள் தொடர்பான கதைகளை (Narratives) உருவாக்கக் கூடாது.

ஆனால் அமர்நாத் ராமகிருஷ்ணன் பேட்டி கொடுப்பது, மேடைப் பேச்சுக்கள் பேசுவது என முழு நேரப் பரப்புரையாளராகவே மாறிவிட்டார்.

முன்னதாக, இந்த இரண்டு கட்ட ஆய்வுகள் முடிவுற்ற இப்படிப்பட்ட நிலையில் அமர்நாத் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட சுமார் 25 க்கும் மேற்பட்ட ASI அதிகாரிகள் இடம் மாற்றப்படுகின்றனர்.

உடனே...அமர்நாத் ராமகிருஷ்ணன் தமது அரசியல் ஆதரவாளரும், மனைவிவழி உறவினருமான சு.வெங்கடேச மூலம் இதை அரசியலாக்குகிறார்."தான் கீழடியைக் கண்டுபிடித்ததால் பொறுத்துக்கொள்ளாத இந்திய அரசு வேண்டுமென்றே தமிழர் தொன்மம் வெளி வந்துவிடக் கூடாது என்பதற்காக என்னை இடமாற்றம் செய்து விட்டது" என்று கிளப்புகிறார்.

இதை சு. வெங்கடேசன், கனிமொழி கருணாநிதி, பாலகிருஷ்ணன் (ஐ.ஏ.எஸ் ஓய்வு) உள்ளிட்டவர்கள் பெரும் பரபரப்பு ஆக்குகிறார்கள்.

பிரச்னையை திராவிடம் Vs ஆரியம் என்கிற ரீதியில் கொண்டு போகிறார்கள்.

உண்மையில் அமர்நாத் ராமகிருஷ்ணன் என்ன செய்திருக்க வேண்டும் ? இடமாற்றம் செய்யப்பட்டிருந்தாலும்கூட அவர் அந்த இரண்டு கட்ட அகழ்வாய்வுப் பணி செய்ததற்கான "அறிக்கையை" உடனே சமர்ப்பித்திருக்க வேண்டும்.

மாறாக, அசாம் மாநிலத்துக்கு மாற்றப்பட்ட தன்னை மீண்டும் கீழடிக்கு மாற்றினால் மட்டுமே ஆய்வறிக்கை தருவேன் என்று அடம் பிடித்தார்.

இதற்கிடையில் தனது அரசியல் ஆதரவு சு.வெங்கடேசனின் கம்யூனிஸ்ட் அரசியல் கட்சி, கனிமொழியின் திமுக அரசியல் கட்சி, கார்த்தி சிதம்பரத்தின் காங்கிரஸ் கட்சி ஆகியவை மூலமாக இதை தமிழ்நாட்டுக்கும் இந்திய அரசுக்குமான பிரச்சனை போல கிளப்புகிறார்.

இதையடுத்து, அறிக்கை தயாரிக்கக் கூறி அசாமிலிருந்து தமிழ்நாடு கோயில் கணக்கெடுப்புத் துறைக்கு அமர்நாத் மாற்றப்படுகிறார். அதாவது அவர் அடம் பிடித்தது போல கீழடிக்கு மாற்றவில்லை.

இப்படியே இழுத்தடித்து சுமார் ஆறு ஆண்டுகள் கழித்தே அமர்நாத் தமது அறிக்கையை அளிக்கிறார்.

அந்த அறிக்கையில் கீழடி நாகரிகம் கி.மு.800 என்று குறிப்பிடுகிறார் அமர்நாத் ராமகிருஷ்ணன்.

இங்கேதான் மற்றொரு சிக்கல் உருவாகிறது.

ஒரு ஆய்வாளர் தரும் அறிக்கையை இந்தியத் தொல்லியல் துறை, மூத்த தகுதி வாய்ந்த இரண்டு ஆய்வாளர்களிடம் கொடுத்து அதனை மதிப்பீடு செய்து தரச் சொல்வது வழக்கம். அதாவது ஒரு மாணவனின் தேர்வுத்தாளை சரிபார்க்கும் ஆசிரியர் போல. அதன்பிறகே அந்த அறிக்கை வெளியிடப்படும்.

அமர்நாத் ஆறு ஆண்டுகள் தாமதம் செய்து கொடுத்த அறிக்கையை இரண்டு ஆண்டுகள் கழித்து அதில் உள்ள சில குறைபாடுகளை சுட்டிக்காட்டியது இந்தியத் தொல்லியல் துறைத் தலைமையகம்.

சுட்டிக்காட்டப்பட்ட குறைபாட்டில் மிக முக்கியமானது கீழடியில், தான் கண்டெடுத்த பொருளின் காலம் கிமு. 300 என்பதற்கான ஆய்வறிக்கையை சமர்ப்பித்த அமர்நாத் ராமகிருஷ்ணன் அதற்கு மாறாக கீழடியின் காலம் கி.மு.800 என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கான ஆய்வகச் சான்றை அவர் அளிக்கவில்லை. காரணம் அவரிடம் உள்ள ஆய்வகச் சான்று கி.மு.300 என்றுதான் உள்ளது.

பொதுவாகவே இந்திய அரசோ அல்லது இந்தியத் தொல்லியல் துறையோ எப்படியெல்லாம் தமிழர் வரலாற்றை மறைக்கலாம் என்று கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு காத்திருப்பார்கள்.

அப்படிப்பட்ட நிலையில் இப்படிப்பட்ட ஒரு பெரும் "இடைவெளியை" இந்தியத் தொல்லியல் துறைக்குக் கொடுத்ததோடு அல்லாமல், இதனையும் திமுக Vs பாஜக என்று அரசியலாக்கியதுதான் அமர்நாத் ராமகிருஷ்ணன் செய்த பெரிய பிழையான விளம்பர அரசியல்.

இப்போது இதைக் காரணம் காட்டி, ஆய்வறிக்கையை வெளியிடத் தாமதம் செய்கிறது இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனம்.

உடனே, அதே ராகம், அதே பல்லவியில் கடந்த, மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், "இந்திய அரசே அமர்நாத்தின் கீழடி ஆய்வறிக்கையை உடனே வெளியிடு" என்று குரல் கொடுக்கப்பட்டது, அமர்நாத் குறித்து முரசொலி பத்திரிகையெல்லாம் கட்டுரை வெளியிட்டது.

இதில் வேடிக்கை என்னவென்றால், அமர்நாத் செய்த இரண்டு கட்ட ஆய்வுக்குப் பிறகு மற்றொரு ஆய்வாளரை இந்தியத் தொல்லியல் துறை கீழடிக்கு அனுப்புகிறது.

மூன்றாம் கட்டமாக அவர் செய்த ஆய்வில் மேற்கொண்டு எதுவும் கிடைக்கவில்லை என்றதும் அவர் சென்று விடுகிறார்.

அதன்பிறகு தமிழ்நாடு வழக்கறிஞர் ஒருவர் தொடுத்த வழக்கின் அடிப்படையில் கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறையினரே இறுதியில் அகழாய்வு செய்யட்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்துகிறது.

அதன் அடிப்படையில் கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வு செய்த கட்டங்கள் 10 தண்டி 11 வது கட்டத்தை நோக்கிச் சென்றுவிட்டது.

இதில் நான்காம் கட்டமாக தமிழ்நாடு தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வில் கிடைத்த பொருளின் காலம் கிமு.580 என்று ஆறு ஆய்வகச் சான்றுகள் பெறப்பட்டுள்ளன.

இன்னமும் அந்த அறிக்கையை முந்தைய திமுக அரசே வெளியிடவில்லை. மாறாக, அமர்நாத்தின் அரைகுறை அறிக்கையை வெளியிடக் கோரி திமுக குரல் கொடுத்து வந்தது.

இப்படிப்பட்ட நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எழுதிய கடிதம் ஒன்றுக்கு இந்தியத் தொல்லியல் துறை பொது இயக்குநர் யதுபீர் சிங் ராவத் அளித்துள்ள பதிலில்,

யதுபீர் சிங் ராவத்
பொது இயக்குநர்
இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் (ASI)
பண்பாட்டு அமைச்சகம்
இந்திய அரசு
தரோஹர் பவன், 24, திலக் மார்க்,
புதுடெல்லி – 110001

D.O. No.: N-13/77/2025-CDN
தேதி: 24.06.2026

மதிப்பிற்குரிய ஐயா,

24.05.2025 அன்று தாங்கள் அனுப்பிய D.O. கடிதத்தில், டாக்டர் அமர்நாத் இராமகிருஷ்ணன் சமர்ப்பித்த கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிடுவது தொடர்பாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். அதனை முன்னிட்டு பின்வருவனவற்றைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

2014–15 மற்றும் 2015–16 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கீழடி அகழாய்வு பணிகள் குறித்த அறிக்கை, இரு துறைசார் நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டதுடன், உள்குழு நிபுணர் குழுவினாலும் பரிசீலிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில் சில குறைபாடுகள் மற்றும் போதாமைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றைச் சரிசெய்து, அறிக்கையை வெளியிடத் தகுந்ததாக மாற்றுவதற்காக, அவை அகழாய்வை மேற்கொண்ட ஆய்வாளரிடம் தெரிவிக்கப்பட்டன. ஆனால், அந்தத் திருத்தங்களை ஏற்க அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

இதன் காரணமாக, அந்த அறிக்கையை உள்குழு நேரடியாக அகழாய்வு தளத்திற்குச் சென்று மீண்டும் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முக்கியமான விவகாரத்தில் தாங்கள் காட்டிவரும் அக்கறைக்கும், நாட்டிற்காக ஆற்றி வரும் அர்ப்பணிப்பான சேவைக்கும் எங்களது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன்,

(கையொப்பம்)

யதுபீர் சிங் ராவத்
பொது இயக்குநர்

இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனம்

பெறுநர்:
டாக்டர் டி. ரவிக்குமார்
மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்,
லோக்சபா,
A-7, சிந்து அபார்ட்மெண்ட்,
பி.கே.எஸ். மார்க்,
புதுடெல்லி – 110001.

என்று கூறியுள்ளார்.

கீழடி அகழ்வாய்வு இடத்திற்கு இந்த சிறப்புக் குழுவினர் சென்று ஆய்வு செய்தபிறகு அவர்கள் என்ன அறிக்கை தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

தமிழர் வரலாறு, தொன்மம், ஆய்வுகளில் பிறமொழியாளர்கள் புகுந்து கொண்டு தங்களின் சுயநல விளம்பரத்திற்காக வெட்டி வீணான அரசியல் செய்து அதன் மூலம் தங்களைத் தமிழர்களுக்கே வழிகாட்டி என்பது போல நிறுவிக்கொள்ளும் ஏமாற்று வித்தைகளைத் தமிழர்கள் விழிப்போடு இருந்து உடைத்தெறிய வேண்டும்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User