லஞ்சம் முதல் EVM வரை: தவெக அரசு, திமுக, சோளிங்கர் எம்எல்ஏ – பருந்தார் தகவல்கள்
தவெக அரசின் சிக்கன நடவடிக்கைகள், திமுகவின் EVM ஆய்வு, சோளிங்கர் எம்எல்ஏ மீது வழக்கு, அமைச்சர் ஜெகதீஸ்வரி மீதான தாக்குதல், ஊடகங்களில் லஞ்ச குற்றச்சாட்டு உள்ளிட்ட பருந்தார் தகவல்களை விரிவாக வாசியுங்கள்.
+ பழைய தலைமுறைகளில் தலைவிரித்தாடும் "லஞ்சம்"
+ சோளிங்கர் எம்எல்ஏ மீது வழக்கு : நீதிமன்றம் போகும் செய்தியாளர்கள்
+ அமைச்சர் ஜெகதீஸ்வரி மீது திட்டமிட்ட தாக்குதல்
+ அமைச்சரின் உதவியாளர்களுக்கு NO அரசு வாகனம்
சுடச் சுட...
தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள்
ஏதோ தானே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது போல நிறையக் கோப்புகளைத் தூக்கிக்கொண்டு வந்தார் பருந்தார்.
நிதிநிலை அறிக்கையை வைத்து சாமி கும்பிட நீங்க திருப்பதி போனீங்களா, இல்லை தேவாலயம் போனீங்களா என்று கேட்டோம்.
சிரித்துக்கொண்டே நமக்கு எங்கே அப்படிப் போகவெல்லாம் நேரமிருக்கு என்று அடுத்த வினாடி பெருமூச்சு விட்டார்.
சரி..சரி இந்த பத்திரிகை ஊடகத் தொழிலுக்கு வந்தபிறகு சலித்து என்னாவது உங்களின் சேவை இந்த நாட்டுக்குத் தேவை என்று பருந்தாரைத் தேற்றினோம்.
நாம் கொடுத்த பாதாம் பாலை உறிஞ்சிக்கொண்டே ஆரம்பித்தார் பருந்தார்.
முதலில் தலைமைச் செயலகத் தகவல்களைப் பாப்போம் என்றவர், காலையில் 10 மணிக்கு அலுவலக நேரத்திற்கு வரும் முதலமைச்சர் என்கிற பெயரை மட்டுமல்ல, வேறு பல சிக்கன நடவடிக்கைகளையும் நிர்வாக ரீதியாக எடுத்திருக்கார் முதலமைச்சர் ஜோசப் விஜய்.
நல்லது என்ன அது ? என்று கேள்வி எழுப்பினோம்.
அமைச்சர்களுக்கு மொத்தம் மூன்று அதிகார பூர்வ உதவியாளர்கள் இருப்பார்கள். அதில் சிறப்பு உதவியாளர் (Special PA) ஒருவர். இதுவரை இந்த சிறப்பு உதவியாளருக்கு அரசாங்கத்தின் கார் மற்றும் பிற இரண்டு உதவியாளர்களுக்கு ஜீப்புகள் தருவது வழக்கம்.
ஆமாம் என்று தலையாட்டினோம்.
தவெக ஆட்சியில் அந்த மூன்றுபேருக்குமே வாகனங்கள் தருவதில்லை.
அடடே...அப்புறம்.
அவர்கள் சொந்த வாகனத்தில்தான் வந்து செல்லனும்னு சொல்லிட்டாங்களாம்.
ரொம்ப நல்லது அப்புறம்.
அதேபோல காருக்குள் வைக்கப்படும் வாசனை எந்திரம் (Perfume spray) எண்ணிக்கையைக் கூட குறைச்சிட்டாங்களாம். அதேபோல டிஷ்யூ காகிதங்கள்கூட எண்ணி எண்ணிதான் தரப்படுதாம்.
ஏன் என்ன காரணம் ?
எல்லாம் சிக்கன நடவடிக்கைதான். அமைச்சர் புஸ்ஸி ஆனந்தே புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி போல இருசக்கர வாகனத்துலதான் சுத்துறாரே என்றார் பருந்தார்.
ஆமாம் பார்த்தோம், அதுமட்டுமல்லாம முதலமைச்சரோட வாகனம், தனி வானூர்தி எதுக்கும் அரசு செலவுல பயணப்படி எடுப்பதில்லைன்னு ஏற்கனவே சொல்லியிருந்தீங்க என்று நினைவு படுத்தி, நல்ல நடவடிக்கைகளைப் பாராட்டுவோம் என்று சொல்லி, என்ன அதிமுக, திமுக கட்சிகள் ஆட்சிக்கு எதிரா பெரிதா ஏதும் சண்டை போடலயே என்று கேட்டோம்.
கடந்த 2026 தேர்தலில் அடைந்த தோல்வி குறித்து விடாம ஆழமாகத் தோண்டித் தூர் வாரி ஆய்வு செய்து கொண்டிருக்கும் ஒரே கட்சி திமுகதான். அதிமுககூட நிர்வாகிகளின் கருத்துக் கேட்புக் கூட்டம் மட்டும்தான் நடந்துச்சு, ஆனா திமுக, ஒரு தனி ஆய்வுக்குழு அனுப்பி மாநிலம் முழுதும் தரவுகள் திரட்டுச்சு, நேரடியாகவும் கருத்துக்களைத் திறந்த மனதோடும் கேட்டுச்சு, அதுமட்டுமில்லாம வாக்குப்பதிவு மின்னணு எந்திரங்களையும் பிரித்துப் போட்டு ஆய்வு செஞ்சுட்டு இருக்கு.
ம்....
இதுல ஒரு படி மேலே போய் திமுக தரப்பில் ஒரு முக்கிய, அதிலும் தொழில் நுட்பம் அறிந்த ஒரு ஆளுமை இந்த EVM மின்னணு எந்திரங்கள் குறித்து வெளிநாடுகளிலும் தகவல் திரட்டிட்டு இருக்காராம் என்ற பருந்தாரிடம்,
ஆனா, இந்த மின்னணு எந்திரங்கள் ஒழுங்கா செயல்பட்டுச்சான்னு ஆராயும் குழுவினர், 8 எந்திரங்களில் 3 எந்திரங்கள் சரிவர வேலை செய்யலைன்னு சொல்றாங்களே.
ஆமாம், மின்னணு எந்திரங்கள் மீது சும்மா குறை மட்டுமே சொல்லிட்டு இருந்தா பத்தாது அதை அறிவியல் பூர்வமா நிரூபிக்கணும் அப்படின்னு களம் இறங்கி இருக்கு திமுக தரப்பு. வெளிநாட்டுல இந்த நுட்பங்கள் பத்தி எங்கெல்லாம் தரவுகள் கிடைக்குதோ அதையெல்லாம் திரட்டிட்டு இருக்காங்களாம் என்றார் பருந்தார்.
ஆனா அப்படிப் பார்த்தா கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுச்சே, அப்போதும் இதே மின்னணு எந்திரங்கள்தானே, மக்கள் அதைக் கேள்வி கேட்க மாட்டாங்களா என்று கேட்டோம்.
மிகச்சரி...அதனாலதான் மின்னணு எந்திரங்கள் தொடர்பான திமுக தரப்பின் எதிர்வினை மேலோட்டமா இருக்கு. இந்த சோதனைல 8 க்கு 3 எந்திரங்கள்ல Mistakes இருக்குன்னாக்கூட நீதிமன்றத்துல நிரூபிக்கும் அளவுக்கு அது ஆதாரங்களாகுமான்னு தெரியலையே என்றார் பருந்தார்.
அனிதா ராதாகிருஷ்ணன் ஒருபடி மேலே போய், நாம் கொடுக்கிறதை வாங்கிட்டு நமக்கு ஏன் ஓட்டுப் போடாம இருக்காங்கனு வேற வெளிப்படையாக் கேட்டு வச்சிருக்காரே...என்று பருந்தாருக்கு எடுத்துக் கொடுத்தோம்
ஆமாம், திமுகவினரின் மூளைக்குள்ள ..."பணம் கொடுத்தும் ஏன் வாக்குகள் வரலை ? மின்னணு எந்திரத்தில் கோளாறா ? சமூக ஊடகங்களை வச்சே தவெக ஆட்சிக்கு வந்துட்டுதா?" அப்படின்னு தேர்தல் முடிஞ்சு இன்னுமும் இதே கேள்விகள்தான் ஓடிட்டிருக்கு.
ஆக, தன்னோட ஆட்சியின் தவறுகள் என்னன்னு இன்னமும் அவங்களுக்குப் புரியலையா இல்ல புரியாதது போல நடிக்கிறாங்களா ?! என்று கேட்டோம்.
ரெண்டுமே....சில தலைவர்களுக்கு நல்லாவே புரிஞ்சிருக்கு, ஆனாத் தலைமைக்குப் புரியாம மறைக்கப்படுது என்று பூடகமாகச் சொல்லிவிட்டு அடுத்த தலைப்புக்குத் தாவினார் பருந்தார்.
அமைச்சர் ஜெகதீஸ்வரியை ஏதோ பெரிய தாதா போல சமூக ஊடகங்கள்ள Narrative செட் பண்றாங்களே ஏன் ? என்று கேட்டோம்.
பொதுவாகவே அரசியலுக்கும், அதிகாரத்திற்கும் புதியவர்கள்தான் இந்த அமைச்சர்கள் எல்லோருமே. தெரியாம செய்கிற தவறுகள் நடக்கலாம். ஆனா குறிப்பிட்ட சில அமைச்சர்கள் மீது குறிவைத்து நடத்தப்படுக்கிற தாக்குதலை உளவுப்பிரிவினர் நுட்பமா கவனிக்கிறாங்க. வெளிவரும் தகவல்கள்ள எது சரி எது தவறுன்னு துல்லியமா அரசு கணக்கெடுக்குது. ஜெகதீஸ்வரிக்கு எதிரா ஏதோ ஒரு டீம் வேணும்னே தொடர்ந்து வேலை செய்யறதை கண்டுபிடிச்சுட்டாங்க. நாம் விசாரிச்சவரை அந்தப் பெண்மணி அவ்வளவு டெர்ரர் எல்லாம் இல்லை என்ற பருந்தார், சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் கபில் தன்னோட ஐடி விங்ல நாலு மாசம் வேலை செஞ்ச அந்த சிவா அப்படிங்கிற ஒளிப்பதிவாளரை நோக்கி அடிக்கக் கை ஓங்கினது உண்மைதானாம். அந்த "அடிக்கிற மாதிரியான காணொலி பொய் அப்படினு
சொல்லச் சொல்லி" சிவாவை தன்னோட எம்எல்ஏ அலுவலகத்துல வச்சு மிரட்டி காணொலி போட வச்சிருக்கார் எம்எல்ஏ கபில்.
ஓ...
உண்மையில் அதோட பிரச்சனை முடிஞ்சிருக்கும். ஆனா, கபில்கிட்ட யாரோ அந்த "மறுப்புக் காணொலியை" சிவா நீக்கிட்டதாப் பொய் சொல்ல அதைக் கூட சரிவரப் பார்க்காம சிவாவின் அலுவலகம் புகுந்து கம்பியூட்டர், ஹார்ட் டிஸ்க்னு உடைச்சு சிவாவையும் அடிச்சுருக்காங்க கபிலும் அவரது தம்பி தனஞ்செழியனும். அதைத் தடுக்க வந்த தினகரன், தினமலர் செய்தியாளர்களையும் அடிச்சிருக்காங்க...
ஆளாளுக்கு ஒன்னு சொல்றாங்க...எது உண்மைன்னு தெரியலையே...என்று கேள்வி எழுப்பினோம்.
இல்லை நாம் சொல்ற இந்தத் தகவல், சிவாவிடம் நேரடியா விசாரிச்ச என்னோட தகவலாளர் சொன்னது என்றார் பருந்தார்.
ஓ....
எம்எல்ஏ கபில் மற்றும் அவரது தம்பி உள்பட 10 பேர் மீது புகார் இன்னமும் பதிவு செய்யப்படலை. அதனால நீதிமன்றத்தை நாட முடிவு செஞ்சிருக்காங்க.
ஓஹோ...
எப்படியும் கபில் மற்றும் அவரது தம்பி உள்பட 10 பேர் மீது வழக்குகள் பதியவேண்டிய நிலையில காவல்துறை இருக்கு என்ற பருந்தார் பழைய தலைமுறைகள் பக்கம் தாவினார்.
இப்பல்லாம் பழைய தலைமுறைகள் எல்லாம் வீணாப் போயிடுச்சு...ஒரு எட்டுப் பேரை ஒருவாரம் பணியிடை நீக்கம் செஞ்சிருக்காங்க.
அடடே..எதுக்கு ?!
அந்தக் கதையைக் கேட்டாத் தலை சுத்தும்..."அந்த நிறுவனத்தில நெற்றியில பட்டையோட திரியற அந்த நபர் ஆட்டம் தாங்க முடியலையாம். கட்டுரை எழுதறதைத் தவிர தொலைக்காட்சி செய்தி ஊடகம் பத்தி எதுவுமே தெரியாத அவரைக் கொண்டுபோய் அந்த இடத்துல வச்ச காலத்துல இருந்து அந்த நிறுவனம் பின்னாடிப் போயிடுச்சாம்.
ம்ம்....
அந்த நபருக்கும், அடுத்த நிலையில் இருக்கும் நபருக்கும் மாதா மாதம் முக்கியமான கட்சிகளிடம் இருந்து "கனமாக" வந்து சேர்ந்துடுதாம்.
அது எதுக்கு மாதா மாதம் கொடுக்கிறாங்க..?! என்று அப்பிராணி போல கேட்டோம்.
"எங்க கட்சியைப் புகழ்ந்து அதிலும் என்னையைப் (தலைமை) பற்றி புகழ்ந்து போடாட்டாலும் பரவாயில்ல negative ஆ இகழ்ந்து ஒரு செய்தியையும் போட்டுடாதீங்கப்புன்னு" அன்பாக் கொடுக்கறாங்களாம்.
ஓ..அப்படிப் போகுதா கதை...?! என்று இழுத்தோம் நாம்.
அப்படி மாதா மாதம் செய்தித் தலைமைகள் "வாங்கிட்டு" இருக்கிற நிலைமையில ஒரு மூத்த அனுபவம் வாய்ந்த கை நீட்டாத நேர்மையான செய்தியாளர் ஒரு கட்சித் தலைவர் குறித்து அவங்க கட்சி நிர்வாகி பேசியதை செய்தியாப் போட்டுட்டாராம்"
ஓ.... கொடுக்கிற இடத்தில இருந்து செய்தித் தலைமைகளுக்கு அழைப்பு வந்திருக்குமே.. என்றோம் நாம்.
பின்ன...லட்டு மாதிரி வாங்கிட்டு எதிர்த்து நியூஸ் போட்டா கேட்கமாலா இருப்பாங்க...என்ற பருந்தாரிடம்
அப்புறம் என்ன நடந்துச்சு என்று கேட்டோம்.
அப்புறம் என்ன அந்த ஒரு செய்தியாளர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தா பிரச்னை ஆயிடும்னு, அந்த நிறுவனத்துல கடந்த ரெண்டு ஆண்டுகளாக நிறுவன விதிமுறைகளை மீறி யார் யார் கிள்ளினாங்க, யார் யார் சொறிஞ்சுக்கிட்டாங்கன்னு கணக்கெடுத்து பழைய குப்பைகளையெல்லாம் திரட்டி இந்த செய்தியாளரோடு சேர்த்து எட்டு பேரை ஒரு வாரத்திற்குப் பணியிடை நீக்கம் செஞ்சாங்களாம்.
அடடே...பேஷ் பேஷ்..."கொடுக்கிற" முதலாளிக்கு விசுவாசத்தை இப்படியெல்லாம் காட்ட முடியுமா என்ன ?! என்று வியந்தோம் நாம்.
சொல்லாமல் கொள்ளாமல் புறப்பட்டிருந்தார் பருந்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)