லண்டனில் விஜய் நிகழ்ச்சி இரத்து ; காற்றில் பறந்த தமிழர்களின் “பெயர்”! தேய்ந்துபோன ஈழத் தமிழர்களின் இனவழிப்புக் குரல்கள்! | பருந்தார் தகவல்கள்
லண்டனில் விஜய் சந்திப்பு நிகழ்ச்சி பாதுகாப்புக் காரணங்களால் ரத்து செய்யப்பட்ட பின்னணி என்ன? ஈழத் தமிழர்களின் கடந்தகால போராட்டங்கள், ஜெனீவா மனித உரிமைகள் அரங்கு, இலங்கை போர்க்குற்ற நீதி கோரிக்கை ஆகியவற்றை இணைத்து அலசும் தமிழ் ஊடகம் பருந்தாரின் பரபரப்புத் தகவல்கள்.
அதிகாலை மூன்று மணிக்குக் கதவு தட்டப்படும் ஓசை; திறந்தால் பருந்தார். வானூர்தி நிலையத்திலிருந்து நேரே வந்திருப்பார் போல, அவரது துணிப்பெட்டியில் வானூர்தி நிலைய பொதி மற்றும் பாதுகாப்புச் சோதனை அட்டைகள் தொங்கின.
வாங்க, வாங்க என்று வரவேற்று... என்ன பருந்தாரே இந்நேரம் என்று கேட்டுக்கொண்டே அமர வைத்தோம். கலப்படமற்ற இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தேநீர் இலைப்பொடி போட்ட தேநீர் கொடுத்தோம். உருசித்துக்கொண்டே உற்சாகமானார்.
லண்டன் போய்விட்டு அப்படியே சுவிட்சர்லாந்து வரை போய்விட்டு வந்தேன் என்றவர், "முதலமைச்சர் ஜோசப் விஜயின் லண்டன் பயணம் அதிக அளவு எதிர்மறை விமர்சனங்களையே மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தனது இரசிகர்களை விஜய் சந்திக்கவிருந்த பொது நிகழ்ச்சியை லண்டன் காவல்துறை இரத்து செய்தது தமிழர்களுக்கு பெருத்த அவமானம் என்றார்.
அவமானமா எப்படி என்றோம்...
உலகில் சுமார் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். இதில் இந்தியாவில் தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் ஒரு தரப்பு என்றால் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஈழத் தமிழர்கள் மறுதரப்பு. இதில், இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஈழத் தமிழர்கள் சுமார் 10 லட்சம் பேர் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். பிரிட்டனில் அதிக அளவு வாழ்கிறார்கள். கடந்த 2009 முள்ளிவாய்க்கால் இனவழிப்பைக் கண்டித்து லண்டனில் மட்டும் 3 லட்சம் ஈழத் தமிழர்கள் ஒன்று கூடி நின்று பெருத்த கண்டனக்கூட்டம் நடத்தினார்கள். 3 லட்சம் பேர் கூடிய அந்தக்கூட்டத்தில் சிறு சலசலப்பு கூட ஏற்படவில்லை. அவ்வளவு ஏன், லண்டன் காவல்துறை எங்குமே காணப்படவில்லை, அந்த அளவுக்கு ஈழத் தமிழர்கள் கட்டுப்பாடுடன் லண்டன் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றினார்கள். ஆனால், முதலமைச்சர் ஜோசப் விஜயின் இரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி குறித்து லண்டன் நுண்ணறிவுப்பிரிவு கொடுத்த தகவலால் அதிர்ச்சி அடைந்த காவல்துறை பொது நிகழ்ச்சிக்கு "NO" சொல்லிவிட்டது. உங்களுக்குத் தெரியுமில்லையா லண்டனில் அரசாங்கமோ, காவல்துறையோ NO சொல்லிவிட்டால் அவ்வளவுதான் பெட்டியைக் கட்டிக்கொண்டு புறப்படவேண்டியதுதான்...
ஆமாம்...தெரியும் என்றோம்.
இது ஜோசப் விஜய் அவர்களுக்கு நன்கு தெரியும், நிலைமையை உணர்ந்து புறப்பட்டுவிட்டார் இந்தியாவுக்கு.
ஓ....
2009 ம் ஆண்டுக்கும் 2026 ம் ஆண்டுக்கு என்ன வேறுபாடு என்றால், அன்று கட்டுப்பாட்டோடு நின்ற ஈழத் தமிழர்களின் அடுத்த இளைய தலைமுறை இப்போது விஜய் இரசிகர்களாக மாறி நின்று லண்டன் காவல்துறையினரையே முகம் சுளிக்க வைத்திருக்கிறார்கள்.
அன்று முள்ளிவாய்க்கால் அவலத்தைச் சுமந்து கட்டுப்பாட்டோடு நின்ற ஈழத் தமிழர்களின் வாரிசுகள் இன்று இரசிகர்களாக மாறி நிற்பதைக் கண்டு வேதனைப்படுகிறார்கள் லண்டன் ஆங்கிலேயர்கள். வலிகளை மறந்து இரசிகர்களாக மாறிவிட்டார்களே ஈழத் தமிழர்கள் என்று கவலை கொண்டுள்ளனர் என்ற பருந்தாரிடம்,
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஐநா மனித உரிமைகள் ஆணைய 63 வது கூட்டத்தொடர் செப்டம்பர் 7 ம் தேதி தொடங்கி இருக்கிறது....அங்கு கூட வேண்டிய கூட்டம், அதற்காக லண்டன் உட்பட உலகம் முழுதும் கூடி இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம், இனவழிப்புக்கான நீதி கேட்கவேண்டிய தமிழர் கூட்டம் இன்று உருமாறி லண்டன் தெருக்களில் காவல்துறை தடை போடும் இரசிகக் கூட்டமாக மாறி நிற்பது அவமானம் மட்டுமல்ல அவலமும் கூட என்றோம்....
மிகச்சரியாகப் புரிந்து கொன்டுள்ளாய் என்று நம்மைப் பாராட்டிய பருந்தார் தொடர்ந்து பேசினார்.
இலங்கையில் கடந்த 1950 ம் ஆண்டுகளில் தொடங்கி 2009 ம் ஆண்டுவரை தொடர்ந்து நடைபெற்று வரும் தமிழர் இனவழிப்புக் கொடுமைகள் ஒருவழியாக கடந்த 2012 ம் ஆண்டு ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் அரங்கத்தில் எதிரொலித்தது. அந்த ஆண்டு, இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்காவே ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தது, அதற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்து "போர்க்குற்றம் தொடர்பாக இலங்கையில் பன்னாட்டு விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும்" என்பதே அந்தத் தீர்மானம்.
ம்....
பிறகு, "இல்லையில்லை நாங்களே விசாரித்து நாங்களே குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை கொடுப்போம்" என்று சொன்ன இலங்கை அரசு, இதுவரை அப்படி எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை, அப்படி எந்தத் தண்டனையும் கொடுக்கவில்லை. மாறாக, போர்குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு வேறு பெரிய அரசு வேலை கொடுத்து அவர்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.
ம்....
அதேவேளை, மறுபுறம் ஐநா மனித உரிமைகள் ஆணையத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், இலங்கை மற்றும் இந்தியாவில் செயல்படும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், போரினால் பாதிக்கப்பட்ட சாட்சிகள் ஆகியோரை சுவிட்சர்லாந்துக்கு வரவிடாமல் தடுக்கும் வேலையை இலங்கை அரசு மறைமுகமாகச் செய்து வருகிறது. இந்திய மற்றும் இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரக அதிகாரிகளை "என்ன மாயமோ மந்திரமோ" செய்து இந்த வேலைகளைச் செய்கிறது இலங்கை அரசு.
அடக்கடவுளே....
இதனால் ஆண்டுக்கு ஆண்டு சுவிஸ் நாட்டின் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் ஈழத் தமிழர்களின் குரல் தேய்ந்துகொண்டே இருக்கிறது என்ற பருந்தாரிடம்,
ஆக...ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான அழுத்தம் குறைக்கப்படவேண்டும், ஈழத் தமிழர் குரல் ஒடுக்கப்படவேண்டும், மறுபுறம் ஈழத் தமிழர்கள் கடந்த கால வலிகளை மறந்து திரைப்பட இரசிகர் கூட்டமாக ஆகவேண்டும்....தமிழ்நாட்டிலும் அத்தகைய நிலை உருவாகி ஈழத்தமிழர்களின் ஆதரவுக் குரல் ஒடுங்க வேண்டும்....இதுதானே மாஸ்டர் பிளான் ? என்று கேட்டோம்.
மிகச்சரியாகப் புரிந்துகொண்டாய்...உலகெங்கிலும் 14 கோடி தமிழர்கள் வாழ்கிறார்கள். தமிழ்நாட்டில் 7 கோடி தமிழர்கள் வாழ்கிறார்கள், ஆனால் படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தரமுடியாத அவல நிலையில்தான் தமிழர்கள் ஆளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்...எவ்வளவு பெரிய அவலம் இது ? என்ற பருந்தார் இரு வீடு வரை போய்விட்டு மறுபடியும் வருகிறேன். Gem கிரானைட் வீரமணி சிறுமிகள் பாலியல் குற்ற வழக்கும், கல்வித்துறையில் பி.டி.குமார் - அன்பில் வழக்கும் பத்திரிகை - ஊடகத்தில் புரோக்கர் வேலை பார்த்து வருபவர்களைச் சுற்றி இறுக்கமாகிவிட்டது. இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாத நிலை ! வந்து சொல்கிறேன் என்று புறப்பட்டார் பருந்தார்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)