வடலூர் பெருவெளியில் பன்னாட்டு மையம் அமைக்கக் கூடாது; தோண்டப்பட்ட பள்ளங்களை மூட வேண்டும்: அறநிலையத்துறை ஆணையரிடம் வள்ளலார் பணியகம் மனு
வடலூர் சத்திய ஞானசபை பெருவெளியில் பன்னாட்டு மைய கட்டிடங்களை அமைக்கக் கூடாது என வள்ளலார் பணியகம் இந்து சமய அறநிலையத்துறையிடம் மனு அளித்தது.
வடலூர் பெருவெளியில் பன்னாட்டு மையக் கட்டடங்களை அமைக்கக் கூடாது, வடலூர் பெருவெளியில் தோண்டப்பட்ட பள்ளங்களை மூட வேண்டும், அதைச் சுற்றி அடைக்கப்பட்டுள்ள தகர அடைப்புகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வள்ளலார் பணியகம் சார்பில், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் திரு.வினய் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.
வள்ளலார் பணியகத்தின் தலைவர் மு.சுந்தரராசன் தலைமையில் துணைத் தலைவர் க. முருகன், பொதுச் செயலாளர் முனைவர் வே.சுப்ரமணியசிவா, பொருளாளர் வீ.தியாகராசன், சென்னை மண்டல பொறுப்பாளர் ப.ராஜா, தஞ்சை மண்டல செயலாளர் த. மகாலிங்கம் ஆகியோர் ஆணையரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
இம்மனுவில், தமிழர் மெய்யியலில் 19-ஆம் நூற்றாண்டில் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் என்ற புதுநெறியை நிறுவியர் அருளாளர் திருவருட்பிரகாச வள்ளலார். 1865-ஆம் ஆண்டு பார்வதிபுர மக்கள் தானமாக கொடுத்த 80 காணி (106 ஏக்கர்) நிலப்பரப்பில் சத்திய தருமசாலை நிறுவி ஏழை எளிய மக்களுக்கு பசியாற்றினார். சுத்த சன்மார்க்க மெய்யியலில் தத்துவ விளக்கமாக 1872-ஆம் ஆண்டு சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை நிறுவினார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக அரசு வள்ளலார் பன்னாட்டு மையம் என்ற பெயரில் 100 கோடி ரூபாய் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தை, செயல்படுத்தும் விதமாக 2024-ஆண்டு சத்திய ஞானசபை பெருவெளியிலேயே கட்டடங்கள் கட்டப்படும் என்று கூறி அருட்பிரகாச வள்ளலார் சுத்த சன்மார்க்க மெய்யியல்படி அமைத்த சத்திய ஞானசபை பெருவெளியில் பள்ளங்கள் தோண்டப்பட்டது. இதை எமது வள்ளலார் பணியகம் உள்ளிட்ட பல்வேறு வள்ளலார் சன்மார்க்க சங்கங்கள், சன்மார்க்க மெய்யன்பர்கள், வள்ளற்பெருமானாருக்கு நிலம் கொடுத்த பார்வதிபுரம் மக்கள், ஆன்மிக அன்பர்கள் என அனைவரும் எதிர்த்தோம்.
"வள்ளலார் பன்னாட்டு மைய கட்டிடங்களை பெருவெளியில் அமைக்க வேண்டாம். வேறு இடத்தில் கட்டுங்கள்" என்று கோரி வள்ளலார் பணியகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் அறவழி போராட்டங்கள், இயக்கம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தோம். எதிர்ப்புகளை மீறி திமுக அரசு அருட்பெருவெளியில் பள்ளங்கள் தோண்டப்பட்டது.
இதை எதிர்த்து எமது வள்ளலார் பணியகம் உள்ளிட்ட சன்மார்க்க அமைப்புகளும் சன்மார்க்க அன்பர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் (வழக்கு எண்: WMP.29990/2024 தொடரப்பட்டது
வடலூர் சத்திய ஞானசபையை சுற்றியுள்ள வெட்டவெளியே பெருவெளி ஆகும். பெருவெளி என்பது காலி இடமல்ல, அது சுத்த சன்மார்க்கத்தின் தத்துவ குறியீடு. பெருவெளி என்பது பல வெளிகளை தன்னுள் அடங்கி வைத்திருப்பதாகும். பெருவெளி என்பது நானும் (வள்ளலாரும்) அருட்பெருஞ்சோதி இறைவனும் ஒன்றாக கலந்த அனுபவம் என்று வள்ளற்பெருமானாரே திருவருட்பா பாடல்களில் குறிப்பிடுகின்றார்.
பெருவெளிக்குள் சத்திய ஞான சபையில் சோதி வடிவாக அருட்பெருஞ்சோதி இறைவன் இருக்கின்றார் என்பதைத்தான் புறத்தில் பெருவெளிக்குள் சத்திய ஞான சபையை நிறுவினார் வள்ளலார்.
சத்திய ஞானசபையும் - பெருவெளியும் ஒருங்கிணைந்த ஒரே அமைப்பாகும். திருக்கோயில் அமைப்புகளில் உள்ளது போல கருவறை, முன்மண்டபம், மகா மண்டபம் கோபுரம், கொடிமரம், பலிபீடம், திருச்சுற்று (பிரகாரம்) உள்ளிட்டவையெல்லாம் எப்படி கோயில் என்ற ஒருங்கிணைந்த அமைப்போ அப்படிதான் பெருவெளியும் சத்திய ஞான சபையும் ஒரு அமைப்பாகும். பெருவெளியும் ஞானசபையும் தனித்தனியானது அல்ல. சத்திய ஞானசபையின் உறுப்புதான் பெருவெளி. ஞானசபையையும் பெருவெளியையும் பிரிக்க முடியாது.
வள்ளல்பெருமானார் சத்திய ஞானசபை பெருவெளியில் தருமச்சாலையை தவிர வேற எதையும் நிறுவவில்லை.
பெருவெளியில் வேளாண்மை செய்யலாம், குளம் தோண்டலாம் என்று அன்பர்கள் வள்ளலாரிடம் கேட்ட போது அதற்கான இடம் இது இல்லை என்று கூறி அதை வள்ளலார் அனுமதிக்க வில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது.
பெருவெளியில் பன்னாட்டு மையக் கட்டிடங்களை அமைப்பது சுத்த சன்மார்க்க ஞானசபையை சிதைப்பதாகும் மேலும் வள்ளலார் கூறிய சுத்த சன்மார்க்க நெறிக்கு எதிரானதுமாகும்.
எனவே சத்திய ஞான சபைப் பெருவெளியில் கட்டிடங்களை அமைக்கக் கூடாது என்கின்றோம். பன்னாட்டு மையக் கட்டடங்களைப் பெருவெளியில் சைட் ஏ-யில் அமைக்காமல் வேறு இடத்தில் அமைக்கலாம்.
நாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகள்:
1. பன்னாட்டு மையக் கட்டிடங்களை வடலூர் சத்திய ஞான பெருவெளியில் அமைக்க கூடாது, வேறு இடத்தில் அமைக்க வேண்டும்
2. பெருவெளியில் தோண்டப்பட்ட பள்ளங்களை மூட வேண்டும். அதைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள தகர அடைப்புகளை நீக்க வேண்டும்
3. பெருவெளி முழுவதும் மின் விளக்குகளை அமைக்க வேண்டும்
4. சத்திய ஞானபெருவெளியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும்.
5. பெருவெளியில் முழு நேரக் காவலர்களை நியமிக்க வேண்டும்
மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி சுத்த சன்மார்க்க நெறிக்கு துணை நிற்க வேண்டும் என்று வள்ளலார் பணியகம் சார்பில் தயவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட கோரிக்கைகளை இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் திரு வினய் அவர்களுடன் வள்ளலார் பணியகத்தின் பொதுச்செயலாளர் முனைவர் வே.சுப்ரமணியசிவா விரிவாக விளக்கினார். ஆணையரும் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.
(வள்ளலார் பணியகம் தொடர்புக்கு: 9688155886, 8438530632)
What's Your Reaction?
Like
3
Dislike
0
Love
2
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)