விஜய் ஏற்படுத்திய அரசியல் மாற்றம்; தனுஷும் களமிறங்கினால் திராவிடக் கட்சிகளின் எதிர்காலம் என்ன?
விஜயின் அரசியல் வெற்றி தமிழக அரசியலை மாற்றியுள்ள நிலையில், தனுஷின் அரசியல் நகர்வுகளும் கவனம் பெறுகின்றன. திமுகவின் அடுத்த தலைமுறைத் தலைமை, திராவிடக் கட்சிகளின் எதிர்காலம், புதிய தலைமுறை அரசியல் குறித்து ஓர் அலசல்.
நாச்சி. செல்வராஜ், பத்திரிகையாளர்
தமிழ்நாட்டின் அரசியல் களம் ஒரு தலைமுறை மாற்றத்தை நோக்கி வேகமாக நகர்கிறதா என்ற கேள்வியை விஜயின் அரசியல் வெற்றி வலுவாக எழுப்பியுள்ளது. அதனுடன் தனுஷின் அரசியல் நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்புகளும் இணைந்திருப்பதால், திமுக–அதிமுக மையமாக இருந்த திராவிடக் கட்சி அரசியல் அடுத்த பத்தாண்டுகளிலும் அதே வலிமையுடன் நீடிக்குமா? என்ற கேள்வியை இனி எளிதாகப் புறக்கணிக்க முடியாது.
2026 தேர்தலுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் சில சதவீத வாக்குகளையே பெறும், மிகக் குறைந்த இடங்களையே வெல்லும் என்ற கணிப்புகள் இருந்தன. ஆனால் 108 இடங்களுடன் ஆட்சியைப் பிடித்து விஜய் முதலமைச்சரானது, தமிழக வாக்காளர்கள் — குறிப்பாக புதிய தலைமுறையினர் — பாரம்பரிய அரசியல் கட்டமைப்புக்கு வெளியேயும் ஒரு மாற்றத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதை வெளிப்படுத்தியது.
திமுகவின் சித்தாந்த வலிமை குறைகிறதா?
இங்கே திமுகவின் நிலை முக்கியமானது.
சனாதனம், இந்துத்துவம், பாசிசம் ஆகியவற்றுக்கு எதிரான அரசியலை திமுக தொடர்ந்து பேசுகிறது. பாஜக–ஆர்.எஸ்.எஸ். அரசியலுக்கு எதிரான முக்கிய சக்தியாகவும் தன்னை முன்னிறுத்துகிறது.
ஆனால் கொள்கை அளவிலான எதிர்ப்புக்கும் நடைமுறை அரசியலுக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பதாக விமர்சனங்களும் எழுகின்றன. பாஜகவை கடுமையாக எதிர்க்கும் அரசியல் மொழி ஒருபுறம் இருக்க, பாஜக தலைவர்களின் பங்கேற்புடன் நிகழ்ச்சிகள் நடைபெறுவது உள்ளிட்ட சம்பவங்கள் இந்த விமர்சனத்திற்கு இடமளித்துள்ளன.
இதைக் காட்டிலும் திமுக எதிர்கொள்ளும் பெரிய பிரச்சினை அடுத்த தலைமுறை சித்தாந்தத் தலைமை.
துரைமுருகன் போன்ற நீண்ட அரசியல் அனுபவமுள்ள மூத்த தலைவர்கள் கட்சியின் மைய அரசியலில் முன்பிருந்த செல்வாக்குடன் காணப்படவில்லை என்ற பார்வை இருக்கிறது. மறுபுறம் உதயநிதி ஸ்டாலின் அடுத்த தலைமுறை முகமாக உயர்த்தப்பட்டாலும், பெரியார்–அண்ணா–கருணாநிதி காலங்களில் காணப்பட்டதைப் போன்ற சித்தாந்த விவாதத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய தனித்த அரசியல் ஆளுமையாக அவர் இன்னும் தன்னை நிறுவிக்கொள்ள வேண்டியுள்ளது.
அதற்கு அடுத்த நிலையில் மக்களிடம் நேரடியாகச் சென்று திராவிடக் கொள்கையை வலிமையாக எடுத்துச் செல்லக்கூடிய புதிய தலைமுறைத் தலைவர்கள் யார்? என்ற கேள்விக்கும் திமுகவிடம் தெளிவான பதில் தெரியவில்லை.
இதுதான் கட்சியின் நீண்டகால சவால்.
தவெக பழைய அரசியல் கட்டமைப்புக்குள் புகுகிறதா?
விஜயின் வெற்றியை வெறும் ரசிகர் வாக்குகளின் வெற்றியாகப் பார்ப்பதும் சரியல்ல.
திமுகவின் முக்கிய அரசியல் குடும்பங்களுடன் தொடர்புடையவர்கள்கூட புதிய அரசியல் மையத்தை நோக்கி நகர்வது கவனிக்கப்பட வேண்டியது. ஜெகத்ரட்சகனின் மகன் தவெகவில் இணைந்திருப்பது போன்ற நகர்வுகள், தவெக இளைஞர்களின் புதிய கட்சியாக மட்டும் இல்லாமல் பழைய கட்சிகளின் அரசியல் மற்றும் சமூக வலைப்பின்னலுக்குள்ளும் நுழையத் தொடங்கியிருப்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படலாம்.
இதுதான் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் உண்மையான அபாயம்.
ஒரு புதிய கட்சி அவர்களிடமிருந்து வாக்குகளை மட்டும் எடுத்தால் அதை மீண்டும் பெறலாம். ஆனால் தலைவர்கள், இரண்டாம் நிலை நிர்வாகிகள், சமூக ஆதரவுத் தளங்கள் மற்றும் அடுத்த தலைமுறை வாக்காளர்களையும் எடுத்துச் செல்லத் தொடங்கினால் அது கட்டமைப்பு மாற்றமாகிவிடும்.
தனுஷ் வந்தால் என்ன ஆகும்?
இந்தச் சூழலில்தான் தனுஷின் மக்கள் நற்பணி நடவடிக்கைகளும் அரசியல் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.
ரசிகர்களை மாநிலம் முழுவதும் மக்கள் பணிகளில் ஈடுபடுத்துவது, அமைப்பு உருவாக்குவது, அரசியல் கட்சி குறித்த எதிர்பார்ப்புகள் போன்றவை அடுத்த கட்டத்திற்கு நகருமானால், விஜய் உருவாக்கிய பாதையில் இன்னொரு புதிய தலைமுறை அரசியல் சக்தி உருவாகலாம்.
சிலம்பரசன் உள்ளிட்ட மற்ற திரைத்துறை முகங்களும் எதிர்காலத்தில் அரசியலுக்கு வந்தால்,
தமிழ்நாட்டில் Gen Z வாக்குகளை மையப்படுத்திய புதிய அரசியல் போட்டி உருவாகும் வாய்ப்பையும் மறுக்க முடியாது.
ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் உலகிலும் இந்தியாவிலும் மிகப்பெரிய அரசியல் சக்திகளாக இருந்தன. சமூகமும் பொருளாதாரமும் தலைமுறைகளும் மாறியபோது அவற்றின் தேர்தல் செல்வாக்கும் பல இடங்களில் குறைந்தது. எந்த அரசியல் இயக்கத்திற்கும் வரலாறு நிரந்தர ஆதிக்கத்தை எழுதிக் கொடுப்பதில்லை.
அழிவது திராவிடக் கொள்கையா ? இல்லை திராவிடக் கட்சிகளா?
இங்கே முக்கியமான வேறுபாடு இருக்கிறது.
திராவிடக் கட்சிகள் பலவீனமடைவதும் திராவிட இயக்கத்தின் சமூகநீதி சார்ந்த கருத்துகள் மறைந்துவிடுவதும் ஒன்றல்ல.
தமிழ், மாநில உரிமை, சமூகநீதி, சாதி எதிர்ப்பு, பெண்கள் முன்னேற்றம் போன்ற பல கருத்துகள் தமிழகத்தின் பொதுவான அரசியல் மொழிக்குள்ளேயே கலந்துவிட்டன. புதிய கட்சிகளும் அவற்றில் பலவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழல் இருக்கிறது.
எனவே தற்போது உருவாகக்கூடிய மாற்றம் “திராவிட சிந்தனையின் முடிவு” என்பதைவிட “திராவிடக் கட்சிகளின் அரசியல் ஆதிக்கத்தின் முடிவா?” என்பதுதான்.
விஜய் அதற்கான முதல் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளார்.
தனுஷ் போன்ற மேலும் சில புதிய தலைமுறை முகங்கள் அரசியல் கட்சிகளுடன் வந்து வெற்றியும் பெறத் தொடங்கினால், தமிழக அரசியல் திமுக–அதிமுக என்ற பழைய இருதுருவத்திலிருந்து முற்றிலும் புதிய கட்டத்திற்கு நகரலாம்.
கால மாற்றங்களைப் போல அரசியல் மாற்றங்களும் இயற்கையானவை. அடுத்த ஓரிரு தேர்தல்களில் புதிய தலைமுறை இந்தப் பாதையையே தொடர்ந்தால், தமிழ்நாட்டில் கேள்வி “திராவிடக் கட்சிகளுக்கு மாற்று உண்டா?” என்பதாக இருக்காது. “பழைய திராவிடக் கட்சிகளுக்கு அரசியல் இடம் எவ்வளவு மீதமிருக்கும்?” என்பதாகவே மாறக்கூடும்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)