தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக, திமுக, நாம் தமிழர் தீவிர களப்பணி; தடுமாறும் தவெக? | பருந்தார் தகவல்கள்

தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, நாம் தமிழர் தீவிர களப்பணி; தவெக எங்கே தடுமாறுகிறது? ஜெம் வீரமணி வழக்கின் பின்னணி உள்ளிட்ட பருந்தார் தகவல்கள்.

Oct 04, 2026 - 15:57
Updated: 29 days ago
0 157
தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக, திமுக, நாம் தமிழர் தீவிர களப்பணி; தடுமாறும் தவெக? | பருந்தார் தகவல்கள்

+ இடைத்தேர்தல் - வெறியோடு களப்பணி செய்யும் அதிமுக, திமுக, நாம் தமிழர்

+ அனுபவம் போதாமையால் தடுமாறும் தவெக கட்சியினர்

+ ஜெம் வீரமணி பாலியல் வழக்கு ; பதுங்கி நடிக்கும் சில பத்திரிகையாளர்கள்

+ செய்தித்துறை : கூட்டணி கட்சியினரைத் திருப்திப் படுத்திய அமைச்சர் ராஜ்மோகன்

தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள்

திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக, இடதுசாரிகள் கொடிகளையெல்லாம் இரண்டு கைகளிலும் பிடித்துக்கொண்டு சிறுபிள்ளை போல மகிழ்ச்சியுடன் வந்தார் பருந்தார்.

என்ன பருந்தாரே எல்லாக் கட்சிகளுக்கும் ஓட்டுப் போடுவீங்க போல, வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை ஒரு ஓட்டுதான் போட முடியும் நினைவிருக்கட்டும் என்றோம்.

சிரித்தபடி...மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத் தேர்தல் களங்கள் இப்படிக் களைகட்டி இருக்கின்றன. அதைப் பார்த்துதான் மகிழ்ச்சி என்ற பருந்தார், தாராபுரம், மதுராந்தகம் சட்டமன்றத் தேர்தல் களங்களில் எல்நினோ வெய்யிலையும் தாண்டி அனல் பறக்கிறது என்றார்.

இருக்காதா பின்னே, சனநாயகத் திருவிழா ஆச்சே என்றோம்.

ஆமாம், ஆனால் இந்த இடைத்தேர்தல் முற்றிலும் வேறாக இருக்கிறது. இதுவரை எங்களைத்தவிர யாருமேயில்லை என்றிருந்த திமுக - அதிமுகவுக்கு மூன்றாவதாக ஒரு பெரிய அரசியல் போர்ஸ் தவெக காலூன்றியிருக்குன்னு இப்போதுதான் உறைக்கத் தொடங்கியிருக்கு என்றார் பருந்தார்.

உண்மைதான் தவெக இந்த அளவுக்கு வெற்றி பெரும் அப்படின்னு கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னாடிவரை யாருமே கணிக்கலயே என்றோம்.

ஆறுமாதம் வரை இந்த அரசை விமர்சனம் செய்யக்கூடாதுன்னு இருந்த திமுக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினே நான்கு மாதத்தில் இறங்கி அடிக்கும் நிலை உருவாகியிருக்கு.

அந்த அளவுக்கு ஆட்சி மோசமா ?! என்று கேட்டோம்.

அப்படியல்ல, ஜோசப் விஜய் குறித்து திமுக குறைச்சு மதிப்பிட்டுடுச்சு. அதனால ஆறுமாதம் நாங்கள் பொறுத்திருப்போம்னு சொன்னாங்க. ஆனா, ஜோசப் விஜயின் அரசியல் அவங்க எதிர்பார்த்ததைவிட வேறு ரகத்தில் இருப்பதால இப்போ நான்கு மாதத்திலேயே விரதத்தை முறித்துக் கொள்ளவேண்டிய நிலை திமுகவுக்கு என்றார் பருந்தார்.

ஓ....

சில திட்டங்களில் தவெக பெரிய அளவுல ஸ்கோர் பண்ணிட்டாங்க. அதிலும் இடைத்தேர்தல் நடக்கிற நிலையிலேயே தாய்மாமன் தங்க மோதிரம், பெண்களுக்கான கட்டணமில்லாத பேருந்து வசதின்னு அறிவிப்புகள் பெண்கள் மத்தியில் ஜோசப் விஜய்க்கு நல்ல பெயரைக் கொடுத்திருக்கு. பாலியல் வழக்கில் ஜெம் வீரமணி உள்ளிட்ட மூன்றுபேர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளும் பெண் பிள்ளைகள் உள்ள பெற்றோருக்கு ஆறுதல் தந்திருக்கு என்ற பருந்தாரிடம்,

ஆனாலும் இன்னும் நிறைய சரி செய்துகொள்ளவேண்டியிருக்குன்னு பேசிக்கிறாங்களே என்று கேட்டோம்.

ஆமாம், வேளாண் பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் மின்சாரம் மற்றும் மின்சாரக் கட்டணம் தொடர்பாவும் மக்களுக்கு அதிருப்திதான் என்ற பருந்தார், ஒருபுறம் ஆட்சி நிர்வாகம், மறுபுறம் பெரும்பான்மை பெறுவதற்கு கூடுதல் இடங்களில் வெற்றி பெறவேண்டிய நிலை, இன்னொருபுறம் எதிர்க்கட்சிகளின் அழுத்தம்னு ஜோசப் விஜய்க்கு ரவுண்டு கட்டி நிற்கிது பிரச்சனைகள். எல்லாவற்றையும் சமாளித்து ஆகனும். அதனால சரி செய்யவேண்டிய பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும் என்கிறார்கள் விஜயின் ஆதரவாளர்கள் என்றார் பருந்தார்.

ஆனா, தாராபுரம், மதுராந்தகம் தொகுதியில் அதிமுக எம்எல்ஏக்களை தங்கள் கட்சிக்கு வரவேற்று அவர்களையே தவெக சார்பில் போட்டியிடவைத்த ஜோசப் விஜயின் அரசியல் இரசிக்கும்படியா இல்லைன்னு பேச்சு ஓடுதே என்றோம்.

ஆமாம், அதுதான் தவெகெ எடுத்த மிகப்பெரிய தவறான முடிவு. மற்ற தொகுதிகளில் எப்படியோ கொங்கு மண்டலத்தில் குறிப்பாக தாராபுரத்தில் தவெக எடுத்த முடிவு மிக மிகத் தவறான முடிவு. ஒட்டுமொத்த அரசியலையும் கேலிக்கூத்தாக்கிட்டாங்க அப்படினு தொகுதி மக்கள் கடும் கோபத்தில் இருக்காங்க என்ற பருந்தார் அதேவேளை எலியும் - பூனையுமாக, கீரியும் - பாம்புமாக சண்டையிட்டுக் கொண்டிருந்த அதிமுக திமுக ரெண்டு கட்சிகளும் ஒன்று சேர்ந்து விஜயை எதிர்த்தா என்ன தவறுன்னு ? திமுக முன்னாள் அமைச்சர் சாமிநாதனே பேசும் அளவுக்கு நிலைமை இப்போ மாறியிருக்கு என்றார்.

ம்.....

இதுதான் ஜோசப் விஜயின் "டார்கெட்". அதாவது திமுக - அதிமுக ரெண்டு கட்சியும் ஒண்ணுதான். அதனால, அவங்க ரெண்டுபேரையும் பலவீனப்படுத்தி அரசியல் ரீதியாக வீழ்த்தனும் அப்டிங்கறதுதான் விஜயின் திட்டம் என்ற பருந்தாரிடம்,

இது என்னவோ விஜயின் திட்டம் போல மட்டும் தெரியலையே என்று கேட்டோம்.

வாய்விட்டு சிரித்த பருந்தார், ஆமாம் இது விஜயின் திட்டம் மட்டுமல்ல உன்னிப்பாக கவனித்தால் இந்திய தேசிய அரசியல் கட்சிகள் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளின் நீண்டநாள் திட்டமும்கூட என்று சொன்ன பருந்தார் அதற்கேற்ப இந்த ரெண்டு கட்சிகளும் ஓவரா "சம்பாதிச்சு" பெயரைக் கெடுத்துக்கிட்டாங்களே என்றார் பருந்தார்.

ஆமாம், இவங்க சரியா இருந்தா மாற்று அரசியல் கட்சிகள் தேவையே பட்டிருக்காதே என்றோம் நாம்.

சரியாகச் சொன்னீங்க. ஆனா அதே வேளை மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அதிமுக சார்பில் நின்று வெற்றி பெற்ற வேட்பாளர்களைத் தங்கள் பக்கம் இழுத்து அவர்களை தவெக சார்பில் போட்டியிட வைத்தது அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் வரை ஏகத்துக்கும் கடுப்பேத்தியிருக்கு என்றார்.

ம்....

தாராபுரம் தொகுதியில் அதிமுகவின் ஒவ்வொரு தொண்டரும், தவெகாவுக்குச் சென்ற வேட்பாளர் சத்தியபாமாவை வீழ்த்தியே ஆகனும்னு கங்கணம் கட்டிட்டு வேலை செய்யுறாங்க. அவங்களுக்கு விஜய் மீதோ, தவெக மீதோகூடக் கோபமில்லை, முழுக்கோபமும் சத்தியபாமா மீதுதான் என்ற பருந்தார், இந்தத் துருப்புச் சீட்டை திமுவும் கையில் எடுத்துக்கிடுச்சு என்றார்.

ஆமாம், மு.க.ஸ்டாலினே இறங்கி "பெட்டிபாமா, பல்டி பாமா" என்று ஏகத்துக்கும் பேசியிருக்காரே என்று நினைவூட்டினோம்.

ஆனால், மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் பேசிய பேச்சுக்கள் தாராபுரம் தொகுதி மக்களால் இரசிக்கப்படலை, குறிப்பா பெண்கள் மத்தியில் Backfire ஆகியிருக்கு என்றார் பருந்தார்.

ஆமாம், ஒவ்வொரு தேர்தலின்போதும் திமுக தரப்புல இப்படி யாராவது பேசிவைக்க அது வில்லங்கமாகிவிடும் என்றோம் நாம்.

ஆமாம், அப்படித்தான் இப்போதும். ஆனா, பொதுவா அப்படி இரண்டாம் கட்ட மூன்றாம் கட்டத் தலைவர்கள்தான் பேசுவாங்க. இந்தமுறை மு.க.ஸ்டாலினே அப்படிப் பேசியிருக்கார். மு.க.ஸ்டாலினுக்கே இந்த அளவுக்குக் கோபம் வருதுன்னா, தன்னோட கட்சில இருந்து முக்கியமான தலைவர்களை எல்லாம் இழுக்கும் ஜோசப் விஜய் மீது எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு என்ன கோபம் இருக்கும் ?! என்று கேட்ட பருந்தார், அதற்குப் பதிலடி தரத்தான் தாராபுரம் தொகுதியில் அதிமுகவினர் வெறித்தனமாக வேலை செய்யுறாங்களாம் என்றார்.

அப்போ, தவெகவினர் எப்படி வேலை செய்யுறாங்க ?! என்று கேள்வி எழுப்பினோம்.

திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு போன்ற மூத்த தலைவர்கள் எல்லாம் வயதான காலத்திலும் தாராபுரம் தொகுதியில் அலங்கியம் பக்கமெல்லாம் கதவுக்கு கதவு சென்று வாக்கு கேட்கிறாங்க.

அடடே...ம்

நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா முழு ஈடுபாட்டோடு, நேர்த்தியாகக் களப் பணி செய்கிறார். அவரை ஆதரித்து சீமான் சளைக்காமல் தொகுதிகளில் வலம் வந்து ஆங்காங்கே கூட்டங்கள் போட்டு வாக்குகள் கேட்டுப் பேசியிருக்கார்.

ம்...

இத்தனை களேபரத்துக்கும் நடுவில் கார்த்திகா, சீமான் ஆகியோரின் அர்த்தமுள்ள பேச்சுக்கள் கிராம மக்கள் அளவுக்குச் சென்று சேர்ந்திருக்கு என்றார் பருந்தார்.

ஆக, தாராபுரம் தேர்தல் ஒன்றைப் பதிவு செய்கிறது..."அதிமுக, திமுக, நாம் தமிழர்" கட்சிகள் தங்களை மறுசீரமைக்க, மீட்டெடுக்க வேண்டிய தேவை இருப்பதை உணர்ந்து இருக்காங்க அப்படின்னு எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டோம்.

நிச்சயமாக அதுதான் உண்மை என்ற பருந்தார், தவெக கட்சியினர் கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் பணி செய்ததற்கும், இடைத்தேர்தலில் வேலை செய்வதற்கும் நிறைய வேறுபாடு. அன்று பெரிய ஒரு அரசியல் அலை வந்ததால் இவர்களின் பணி பெரிதாகத் தேவைப்படல. ஆனா, இப்போ ரெண்டே ரெண்டு தொகுதிகள், எதிரில் திமுக- அதிமுக - நாம் தமிழர் - கம்யூனிஸ்டுகள் அப்படின்னு பெரிய பெரிய வலுவான கட்சிகள்.

ஆமாம்...

அந்தக் கட்சியினரின் தேர்தல் அனுபவங்கள் மிகவும் பெரியது. குறிப்பாக உள்ளூர் அளவில் செல்வாக்குப் பெற்ற கட்சியினர், புள்ளிவிவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் பூத் ஏஜென்டுகள் அப்படினு தவெவினருக்கு கொஞ்சம் தலைவலிதான் என்றார் பருந்தார்.

ம்....

தவெகாவுக்கு இருக்கும் ஒரே பெரிய பலம் ஜோசப் விஜய்தான். எனவே, 9 ம் தேதி வெளியாகும் இரண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அவருக்கு மேலும் பலம் சேர்க்குமா என்பதைச் சொல்லிவிடும் என்ற பருந்தார் அடுத்த தகவலுக்கு மாறினார்.

ஜெம் வீரமணி வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டதன்பிறகும், குண்டர் தடுப்புக் காவல் சட்டம் அமல்படுத்தப்பட்டதும் ஆடிப்போயிருக்கிறார்கள் அந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் காவல் அதிகாரிக்கு நெருக்கமான பத்திரிகை வியாபாரிகள் என்றார் பருந்தார்.

ஓஹ்....

அந்த அதிகாரியைத் தனது பாக்கெட்டில் வைத்திருப்பதாக உதார் விட்டுக்கொண்டிருந்தவர்கள் இப்போது உறக்கமின்றித் தவிக்கிறார்களாம்.

ஏனாம்....

அந்த முன்னாள் அதிகாரி, குண்டர் சட்டத்தைத் தாறுமாறாக பயன்படுத்திய அதிகாரி. அதேபோல பொய்ப் புகாரில் வழக்கு பதிவு செய்வதிலும் "புகழ்" பெற்றவர். அவர் அப்படிப் பதிவு செய்த பொய்ப் புகார்கள் குறித்து விரிவான அறிக்கையை 15 நாட்களுக்குள் தரவேண்டும் அப்படினு காவல்துறை தலைவர் உத்தரவிட்டிருக்கிறாராம்.

ஓ...மிக அருமை, அப்புறம்.

அப்புறம் என்ன, துறை ரீதியான நடவடிக்கைகளுக்கும் அந்த அதிகாரி ஆளாக நேரிடும் என்று பேசிக்கொள்கிறார்கள் காவல்துறை தரப்பில்.

ம்....

ஆக, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாத நிலை இந்த அள்ளக்கை பத்திரிகை வியாபாரிகளுக்கு.

ம்....

தலையே மாட்டும்போது வால்கள் மட்டும் தப்புமா என்ன என்ற பருந்தார், இப்படிப் போன திமுக ஆட்சியில் மேட்டர் முடிப்பது, சிபாரிசு, கட்டிங், கமிஷன், வழக்கை ஊத்தி மூடுவது, டபுள் டாகுமெண்ட் பிரச்சனை, நில ஆக்கிரமிப்பு வழக்கு, அரசுத் துறையில் வேலையை முடித்துத் தருகிறேன் என்று சொல்லி பணம் பார்த்தது என்று பல வகைகளில் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த பத்திரிகை வியாபாரிகள் எல்லாம் கண்காணிப்பு வளையத்துக்குள் இருக்காங்களாம்.

ஓ....

இது அரசல் புரசலாத் தெரிஞ்ச அந்த டுபாக்கூர் செய்தி ஆசிரியர், டுபாக்கூர் பத்திரிகை ஆசாமிகள் இப்போதெல்லாம் எல்லோரையும் அப்படியே மதிச்சு, சிரிச்சுப் பேசி மெழுகா உருகறாங்களாம்.

ஓ....

திமுக ஆட்சியில் எல்லோரையும் துரும்பைவிட மோசமாகப் பார்த்து அவமதிச்ச இந்த ஆசாமிகள் இப்போ பவ்யமா நடந்துக்கிறாங்களாம் என்ற பருந்தாரிடம்,

உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துதானே ஆகணும். அதுவும் ஓசில கிடைச்சுதுன்னு கிலோ கணக்கில் உப்பைத் தின்றால் இப்படித்தான் என்று சொன்னோம்.

ஆமாம், உண்மைதான் என்ற பருந்தார், இப்போது அந்த வசூல் ராஜா பத்திரிகை வியாபாரிகளுக்கு இருக்கும் ஒரே பிரச்னை தாங்கள் செய்த இந்தத் திருட்டுத்தனங்கள், பிராடுத்தனங்கள் எல்லாம் அவங்க பத்திரிகை - ஊடக முதலாளி காதுக்குச் சென்று விடக்கூடாது என்பது மட்டும்தானாம். அதற்காக கீழ்மட்ட அதிகாரிகளுக்கு சகல கவனிப்புகளும் செய்யப்படுகிறதாம், ஆனா அந்த நிறுவனக் குழுமத்தின் தலைமைக்கு ஏற்கனவே தகவல்கள் போயிடுச்சாம். இப்போ அந்த திருட்டுப் பத்திரிகை ஊடக வியாபாரிகள் அந்த நிறுவனத்தின் "ராடார்" கண்காணிப்பில்தான் இருக்கங்களாம்.

உண்மையாக உழைக்கும் பலரைக் கவிழ்த்துவிட்டு சிபாரிசின் பேரில் இந்தப் பொறுப்புகளில் சென்று அமர்ந்து கொண்டு மேலிடத்துக்கு நெருக்கமானவர்களுக்கு கவனிப்புகள் செய்து சுரண்டுவது, கொள்ளையடிப்பது, ஆட்டையைப் போடுவது என்று இருந்தால்...பலநாள் திருடன்கள் ஒருநாள் அகப்படுவான்கள்தானே என்றோம் நாம்.

உண்மைதான் என்ற பருந்தார், தமிழ்நாடு அரசு பருவ இதழ் (Periodic Press Pass) பத்திரிகையாளர் அங்கீகாரக் குழுவில் மதிமுகவின் சங்கொலி பத்திரிகை, கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனசக்தி பத்திரிகையாளர்களுக்கு இடம் கொடுத்திருக்காங்க என்றார் பருந்தார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் இன்னொரு பத்திரிகை தீக்கதிர் பத்திரிகையாளருக்கு ஏற்கனவே இன்னொரு குழுவில் இடம் கொடுத்து இருக்காங்களே என்று நினைவூட்டினோம்.

ஆமாம், கூட்டணிக் கட்சியினரை இப்படியாவது திருப்தி படுத்தலாமே என்று இருக்கலாம் என்று சிரித்துக்கொண்டே சொன்ன பருந்தார், அடுத்து தலைநகரத்தில் ஒரு பிரபலமான சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வரும்போல. அநேகமாக தாராபுரம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகள் வாக்குப்பதிவு முடிஞ்ச அடுத்த நாள் "அந்தத் தகவல்" வெளியாக வாய்ப்பு இருக்குன்னு ஒரு தகவல் என்று பகீர் கிளப்பிவிட்டு வானத்தை நோக்கி விர்ரென்று பறந்து மறைந்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 1
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User