தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அதிமுக 36.58%, திமுக 19.51%, தவெக 12.20% — தமிழ் ஊடகம் கள ஆய்வு
தாராபுரம் இடைத்தேர்தலில் 410 மாதிரிகளுடன் தமிழ் ஊடகம் நடத்திய கள ஆய்வு. அதிமுக 36.58%, திமுக 19.51%, தவெக 12.20%; முடிவு வெளிப்படுத்தாத சுமார் 29% வாக்காளர்கள். தண்ணீர் பிரச்சினை முதல் சத்தியபாமா விவகாரம் வரை முழு களநிலவரம்.
தாராபுரம் இடைத்தேர்தல் 2026: வெற்றி வாய்ப்பு யாருக்கு? தமிழ் ஊடகத்தின் கள ஆய்வு !
முன்குறிப்பு :
இது தேர்தல் முடிவு அல்ல.
இது எந்தக் கட்சி அல்லது வேட்பாளருக்கான ஆதரவு அல்லது எதிர்ப்புப் பரப்புரையும் அல்ல.
வாக்காளர்களிடம் பதிவான எண்ணங்களையும் களத்தில் செய்தியாளர் குழு கண்டறிந்த கருத்துப் போக்குகளையும் ஆவணப்படுத்தி வெளியிடுவதே “தமிழ் ஊடகம் — மக்கள் எண்ணங்கள்” கள ஆய்வின் நோக்கம்.
தாராபுரம்: தண்ணீர்தான் முதன்மைப் பிரச்சினையா? வாக்கைத் தீர்மானிப்பது கட்சியா, வேட்பாளரா? தற்போதைய தவெக அரசின் செயல்பாடுகளை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? அதிமுக, திமுக, தவெக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் தற்போதைய ஆதரவு நிலை என்ன? இன்னும் முடிவு செய்யாத வாக்காளர்கள் எத்தனை பேர்?
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு இந்தக் கேள்விகளுடன் களமிறங்கியது தமிழ் ஊடகம் செய்திக் குழு.
தாராபுரம், குண்டடம், மூலனூர் பகுதிகளில் நகரம், கிராமம் என இரு தரப்புகளிலும், ஆண் – பெண் வாக்காளர்களையும், 18 வயது முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரையிலான ஐந்து வயதுப் பிரிவினரையும் சந்தித்து மொத்தம் 410 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. ஆய்வு நடத்தப்பட்ட நாட்கள் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 3 காலை 11 மணி வரை.
கேள்வி – பதில் முறையில் பெறப்பட்ட இந்த 410 மாதிரிகளுடன், பல்வேறு தரப்பினரிடம் தமிழ் ஊடகம் செய்திக் குழு நடத்திய நேரடி உரையாடல்களில் கிடைத்த களத் தகவல்களையும் இணைத்து இந்த ஆய்வு தயாரிக்கப்பட்டுள்ளது.
18 ஆண்டுகளாகத் தேர்தல் கள ஆய்வு
TNTV International News Network நிறுவனம் கடந்த சுமார் 18 ஆண்டுகளாகத் தேர்தல் கள நிலவரங்களை ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது. நிறுவனத்தின் சொந்த முந்தைய கள ஆய்வுப் பதிவுகளின்படி, பெரும்பாலான ஆய்வு முடிவுகள் சுமார் 70 முதல் 85 விழுக்காடு வரை தேர்தல் முடிவுகளுடன் ஒத்துப்போயின.
2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது 234 சட்டமன்றத் தொகுதிகளின் கள நிலவரங்களையும் தமிழ் ஊடகம் ஆய்வு செய்து வெளியிட்டது.
அந்தத் தேர்தலுக்கு முன்பான கருத்துக் கணிப்புகள் ஒரே மாதிரியான முடிவைக் காட்டவில்லை. பல கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணிக்கு முன்னிலை அல்லது ஆட்சிக்கான வாய்ப்பைக் காட்டியிருந்தன. தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான exit polls திமுக கூட்டணிக்கு முன்னிலை காட்டின.
அந்தச் சூழலில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ் ஊடகம் வெளியிட்ட தனது கள அறிக்கையில், திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று மதிப்பிட்டிருந்தது. அதேநேரத்தில், தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பதையும் அன்றைய தமிழ் ஊடகக் கள ஆய்வால் கணிக்க முடியவில்லை என்பதையும் இங்கு பதிவு செய்கிறோம்.
சரியாக அமைந்த மதிப்பீடுகளை மட்டும் எடுத்துக்காட்டாமல், கணிக்க முடியாமல் போன மாற்றங்களையும் பதிவு செய்வது கள ஆய்வின் நம்பகத்தன்மைக்கு அவசியம் என்ற அணுகுமுறையுடனேயே தற்போதைய தாராபுரம் இடைத்தேர்தல் ஆய்வை தமிழ் ஊடகம் மேற்கொண்டுள்ளது.
410 மாதிரிகள் — ஆய்வு எப்படி நடத்தப்பட்டது?
தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தாராபுரம், குண்டடம், மூலனூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் ஆகிய இரு பகுதிகளிலும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. 18 வயது முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரை ஐந்து வயதுப் பிரிவுகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. ஆண் மற்றும் பெண் வாக்காளர்கள் இரு தரப்பினரிடமும் கருத்துகள் பெறப்பட்டன.
இதன் மூலம் இளம் வாக்காளர்கள், நடுத்தர வயதினர், மூத்த வாக்காளர்கள் மற்றும் நகர்ப்புற – கிராமப்புற வாக்காளர்களின் எண்ணங்களைப் பதிவு செய்ய முயற்சி செய்யப்பட்டது.
வாக்களிப்பீர்களா? — 100% பேர் “ஆம்”
“தாராபுரம் சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க முடிவு செய்துவிட்டீர்களா?” என்பது தமிழ் ஊடகம் முன்வைத்த முதல் கேள்வி.
கருத்துக் கேட்டவர்களில் 100 விழுக்காட்டினரும் “ஆம்; உறுதியாக வாக்களிப்போம்” என்று தெரிவித்தனர்.
தமிழ் ஊடகம் சேகரித்த இந்த மாதிரியில் வாக்களிப்பதற்கான ஆர்வம் மிக அதிகமாகப் பதிவாகியுள்ளது.
தாராபுரத்தின் முதன்மைப் பிரச்சினை என்ன?
“தாராபுரம் தொகுதியில், குறிப்பாக உங்கள் ஊரில் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் என்ன?” என்ற கேள்விக்கு பல்வேறு பதில்கள் கிடைத்தன.
ஆனால் அவற்றில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது தண்ணீர் பிரச்சினை.
வேளாண்மைக்குத் தண்ணீர், குடிப்பதற்குப் போதுமான குடிநீர் ஆகியவை முக்கியக் கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டன.
தும்பலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பேருந்து வசதி இல்லாமை, தாளக்கரை ஊரில் உட்புறச் சாலை வசதி இல்லாமை, போதுமான தெரு மின்விளக்குகள் இல்லாமை போன்ற உள்ளூர் பிரச்சினைகளும் மக்களால் குறிப்பிடப்பட்டன.
குறிப்பாக குண்டடம் ஒன்றியத்தில் குடிநீர் மற்றும் வேளாண்மைக்கான நீர்ப் பிரச்சினை அதிகமாக முன்வைக்கப்பட்டது.
“ஆனைமலையாறு – நல்லாறு திட்டம் வேண்டும்”
ஊருக்கு ஊர் உள்ளூர் பிரச்சினைகள் மாறுபட்டாலும் தொகுதியின் பல பகுதிகளிலும் வலுவாக எதிரொலித்த கோரிக்கை ஒன்று இருக்கிறது.
“ஆனைமலையாறு – நல்லாறு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.”
அத்துடன் உப்பாறு அணையை அதிக நீரைத் தேக்கிப் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்த வேண்டும்; நல்லதங்காள் அணைக்கட்டை நீர்த்தேக்கம் மிக்கதாகப் பயன்படுத்த வேண்டும்; அமராவதி – சண்முக நதி நீரை தாராபுரம் தொகுதியின் குடிநீர் வளமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் களத்தில் வலுவாக முன்வைக்கப்பட்டன.
அரசியல் கட்சிகளையும் வேட்பாளர்களையும் தாண்டி தாராபுரம் மக்களின் வாழ்வாதாரத்துடன் நேரடியாகத் தொடர்புடைய முதன்மைக் கேள்வியாக தண்ணீர் இருக்கிறது என்பதே கள உரையாடல்களில் கிடைத்த முக்கியச் செய்தி.
வாக்கைத் தீர்மானிப்பது கட்சியா? வேட்பாளரா?
“உங்கள் வாக்கைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான காரணி எது?” என்று கேட்டோம்.
கட்சி — 90%
வேட்பாளர் — 10%
என்று பதில்கள் கிடைத்தன.
தமிழ் ஊடகம் எடுத்த மாதிரிகளில் வேட்பாளரைவிட கட்சி சார்ந்த நிலைப்பாடே வாக்கைத் தீர்மானிப்பதில் மிக அதிகமாகப் பதிவாகியுள்ளது.
தவெக அரசின் செயல்பாடு — மக்கள் என்ன சொல்கிறார்கள்?
தற்போதைய தவெக அரசின் செயல்பாடு குறித்து கேட்டபோது கிடைத்த பதில்கள்:
மிகவும் திருப்தி — 12.20%
ஓரளவு திருப்தி — 26.83%
திருப்தியில்லை — 14.63%
மிகவும் திருப்தியில்லை — 14.63%
கருத்தில்லை — 29.27%
இதில் 29.27 விழுக்காட்டினர் கருத்தில்லை என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
(விழுக்காடு Round off செய்யப்படவில்லை)
யாருக்கு வாக்களிக்க அதிக வாய்ப்பு?
அடுத்து தேர்தல் களத்தின் முக்கியக் கேள்வியை முன்வைத்தோம்.
“நீங்கள் எந்த வேட்பாளர் / கட்சிக்கு வாக்களிக்க அதிக வாய்ப்பு உள்ளது?”
410 மாதிரிகளில் பதிவான பதில்களின் விழுக்காடு:
அதிமுக கூட்டணி — 36.58%
திமுக கூட்டணி — 19.51%
தவெக — 12.20%
நாம் தமிழர் — 2.24%
இன்னும் முடிவு செய்யவில்லை — 17.07%
சொல்ல விரும்பவில்லை — 12.20%
(விழுக்காடு Round off செய்யப்படவில்லை)
இந்த ஆய்வு நடத்தப்பட்ட நேரத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் அதிமுக கூட்டணிக்கான வாக்கு விருப்பம் மற்ற கட்சிகளுக்கான வாக்கு விருப்பத்தைவிட அதிகமாகப் பதிவாகியுள்ளது.
ஆனால் இதிலேயே மிக முக்கியமான இன்னொரு எண்ணிக்கை இருக்கிறது.
29% வாக்காளர்கள் — இவர்களின் முடிவு என்ன?
இன்னும் முடிவு செய்யவில்லை — 17.07%
சொல்ல விரும்பவில்லை — 12.20%
இரண்டையும் சேர்த்தால் சுமார் 29 விழுக்காடு.
அதாவது தமிழ் ஊடகம் எடுத்த மாதிரிகளில் கணிசமான ஒரு பகுதியினரின் இறுதி வாக்கு நிலைப்பாடு இந்த ஆய்வில் வெளிப்படவில்லை.
இந்த வாக்காளர்கள் இறுதியில் எந்த முடிவை எடுக்கிறார்கள் என்பது தேர்தல் முடிவின் அமைப்பில் முக்கியமானதாக இருக்கக்கூடும்.
எண்களுக்கு வெளியே என்ன சொல்கிறது தாராபுரம்?
410 மாதிரிகளின் கேள்வி – பதில் புள்ளிவிவரங்களைத் தாண்டி பல்வேறு தரப்பினருடன் தமிழ் ஊடகம் செய்திக் குழு உரையாடியது.
அந்த உரையாடல்களில் தண்ணீர் பிரச்சினைக்கு அடுத்தபடியாக அதிகம் பேசப்பட்ட அரசியல் விவகாரங்களில் ஒன்று:
தவெக வேட்பாளர் பி.சத்தியபாமா!
2026 பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பி.சத்தியபாமா 81,100 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளரை 16,727 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார். தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முடிவுகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன.
அதன்பிறகு அவர் தவெகவுக்கு மாறியிருப்பது தற்போதைய இடைத்தேர்தலில் ஒரு முக்கியப் பேசுபொருளாக இருப்பதைக் கள உரையாடல்களில் காண முடிந்தது.
“அதிமுகவில் நின்று தோற்ற பிறகு கட்சி மாறியிருந்தால்கூட பரவாயில்லை; ஆனால் 80 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று பெரிய வெற்றி பெற்ற பிறகு கட்சி மாறியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்ற பொருளில் சில வாக்காளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
குறிப்பாக சில மூத்த வாக்காளர்களிடம் இந்த அதிருப்தி வலுவாக வெளிப்பட்டது.
இது 410 மாதிரிகளில் தனியாக அளவிடப்பட்ட புள்ளிவிவரம் அல்ல. செய்தியாளர் குழு நடத்திய உரையாடல்களில் வெளிப்பட்ட கருத்துப் போக்கு என்பதைத் தெளிவாகப் பதிவு செய்கிறோம்.
சத்தியபாமா — கள உரையாடல்கள் வெளிப்படுத்திய நான்கு அம்சங்கள்
கள உரையாடல்களில் சிலரால் முன்வைக்கப்பட்ட கருத்துகளை நான்கு முக்கிய அம்சங்களாகப் பிரிக்க முடிகிறது.
ஒன்று: தவெக இந்தத் தொகுதியில் வலுவான வெற்றி வாய்ப்பைப் பெறும் சூழலில் விஜயின் தனிப்பட்ட அரசியல் செல்வாக்கு அதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கலாம் என்ற கருத்து.
இரண்டு: தவெக எதிர்பார்த்த வெற்றி வாய்ப்பைப் பெறாத சூழலில் சத்தியபாமாவை வேட்பாளராகத் தேர்வு செய்தது விவாதிக்கப்படும் காரணிகளில் ஒன்றாக இருக்கலாம் என்ற கருத்து.
மூன்று: சத்தியபாமாவின் கட்சி மாற்றம் அதிமுக மற்றும் திமுகவின் சில ஆதரவாளர்களிடம் அவர்களது சொந்தக் கட்சி சார்ந்த வாக்கு நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியிருப்பதாக சிலர் தெரிவித்தனர். அதாவது சத்தியபாமாவுக்குப் பாடம் கற்பிக்க அவரைத் தோற்கடிப்பதற்காகத் தங்களின் வாக்குகள் அதிமுக அல்லது திமுகவுக்கே இட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர்.
நான்கு: கடந்த பொதுத் தேர்தலில் இருந்த “திமுகவை மாற்ற வேண்டும்” என்ற எண்ணத்தை மட்டும் வைத்துப் பார்க்காமல், தற்போதைய தவெக அரசின் செயல்பாடுகளையும் மதிப்பிட்டே வாக்களிப்போம் என்ற கருத்தும் தற்போதைய களத்தில் பதிவாகியுள்ளது.
கடந்த தேர்தல் சொல்லும் கணக்கு என்ன?
2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில்:
அதிமுக — 81,100
திமுக — 64,373
தவெக — 46,438
நாம் தமிழர் — 6,026
வாக்குகள் பெற்றிருந்தன. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தரவின்படி மொத்தம் 1,99,944 வாக்குகள் பதிவாகியிருந்தன.
அதிமுக – தவெக இடையேயான வாக்கு வேறுபாடு 34,662.
திமுக – தவெக இடையேயான வாக்கு வேறுபாடு 17,935.
எனவே தற்போதைய இடைத்தேர்தலில் எழும் முக்கியமான கேள்வி:
அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் முந்தைய வாக்குத் தளங்களில் இருந்து தவெக எந்த அளவுக்கு புதிய வாக்குகளை ஈர்க்கப் போகிறது ?
தலைவர்களின் பரப்புரை எப்படி சென்றடைந்திருக்கிறது?
தாராபுரம் இடைத்தேர்தல் களத்தில் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ஜோசப் விஜய், சீமான் ஆகியோரின் பரப்புரைகள் அவரவர் கட்சிகளின் ஆதரவாளர்களிடம் சென்றடைந்திருப்பதை கள உரையாடல்களில் காண முடிந்தது.
குறிப்பாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பரப்புரை கிராமப்புறங்களுக்கும் சென்றடைந்துள்ளது என்பதைக் களத்தில் உணர முடிந்தது. நாம் தமிழர் வேட்பாளர் மு.கார்த்திகா குறித்தும் சிலரிடம் நல்ல வரவேற்பு இருப்பதை கள உரையாடல்கள் காட்டின.
சிலர், “சீமானின் உரை நன்றாக இருக்கிறது; ஒரு முறையாவது வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்கிறார். ஆனால் இது இடைத்தேர்தல் என்பதால் இந்த முறை அவருக்கு வாக்களிக்க முடியாத நிலையில் இருக்கிறோம். இந்த முறை இல்லாவிட்டாலும் அடுத்த முறை அவரது கட்சிக்கு வாக்களிப்பது குறித்து யோசிப்போம்” என்ற பொருளில் கருத்துத் தெரிவித்தனர்.
கூட்டணி மாற்றங்கள் ஏற்படுத்தும் தாக்கம்?
கடந்த தேர்தலில் திமுகவுடன் இருந்த சில கூட்டணிக் கட்சிகள் தற்போது தவெக அணியில் இருப்பது அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களில் ஒன்று.
இதனால் பட்டியல் சமூகங்கள், உழைக்கும் மக்கள், கிறித்தவ மற்றும் இஸ்லாமிய வாக்காளர் பிரிவுகளில் தவெகாவுக்கு சாதகமான மாற்றம் ஏற்படலாம் என்பதும் களத்தில் வாக்காளர்களிடம் உரையாடியபோது அறிய முடிந்தது.
அந்த வாக்குகளில் ஒரு பகுதி இறுதி நேரத்தில் தவெக பக்கம் நகரலாம் என்ற மதிப்பீடுகளும் சில உரையாடல்களில் முன்வைக்கப்பட்டன.
ஆனால் அந்த வாக்காளர் பிரிவுகள் எந்தக் கட்சிக்குச் செல்லும் என்பதை தமிழ் ஊடகத்தின் இந்த மாதிரி ஆய்வு உறுதிப்படுத்தவில்லை.
அப்படியானால் தாராபுரம் களநிலவரம் என்ன?
தமிழ் ஊடகம் செய்திக் குழு சேகரித்த 410 மாதிரிகளில் கட்சி/வேட்பாளர் வாக்கு விருப்பம் குறித்து கிடைத்த பதில்களில்:
அதிமுக கூட்டணி — 36.58%
திமுக கூட்டணி — 19.51%
தவெக — 12.20%
நாம் தமிழர் — 2.24%
எனப் பதிவாகியுள்ளது.
ஆனால் அதே மாதிரியில் சுமார் 29% பேர் இன்னும் முடிவு செய்யவில்லை அல்லது தங்கள் வாக்கு விருப்பத்தைச் சொல்ல விரும்பவில்லை.
எனவே, ஆய்வு நடத்தப்பட்ட நேரத்தில் அதிமுக கூட்டணிக்கான பதில்கள் அதிகமாகப் பதிவாகியுள்ளன என்பதைத்தான் இந்த மாதிரி நேரடியாகக் காட்டுகிறது.
திமுக, தவெக ஆகியவற்றுக்கான ஆதரவு நிலை மற்றும் இன்னும் நிலைப்பாட்டை வெளிப்படுத்தாத வாக்காளர்களின் முடிவு ஆகியவை தொடர்ந்து கவனிக்க வேண்டிய அம்சங்களாக உள்ளன.
கட்சி அரசியலைத் தாண்டி — தாராபுரம் கேட்பது தண்ணீர்!
இந்தக் கள ஆய்வின் மிக முக்கியமான செய்தி தேர்தல் எண்ணிக்கைகளுக்குள் மட்டும் இல்லை.
தண்ணீர்.
வேளாண்மைக்குத் தண்ணீர்.
குடிநீர்.
உப்பாறு அணை.
நல்லதங்காள் அணைக்கட்டு.
அமராவதி – சண்முக நதி நீர்.
எல்லாவற்றுக்கும் மேலாக:
“ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுங்கள்!”
என்பதே தொகுதியின் பல பகுதிகளிலிருந்தும் வலுவாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையாகப் பதிவாகியுள்ளது.
யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதற்கு அப்பால், வெற்றி பெறுபவரிடம் தாராபுரம் மக்கள் முன்வைக்கும் முக்கியமான வாழ்வாதாரக் கேள்வி இதுவாக இருக்கிறது.
இந்த ஆய்வு குறித்து முக்கிய விளக்கம்
தமிழ் ஊடகம் செய்திக் குழு சேகரித்த 410 மாதிரிகள் மற்றும் பல்வேறு தரப்பு வாக்காளர்களுடன் நடத்திய நேரடி உரையாடல்களின் அடிப்படையில் இந்தக் கள ஆய்வு தயாரிக்கப்பட்டுள்ளது.
இது தொகுதியின் ஒவ்வொரு வாக்காளரின் கருத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
இவை simple random sample எனக் கருதும் புள்ளியியல் அனுமானத்தின் கீழ் எடுத்துக் கணிக்கப்பட்டவை.
மாதிரிகளின் புவியியல் மற்றும் சமூகப் பகிர்வு, பதிலளிக்காதவர்கள், வாக்கு விருப்பத்தை வெளிப்படுத்தாதவர்கள் மற்றும் தேர்தல் நாளுக்கு முன்பு வாக்காளர்களின் முடிவுகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் ஆகியவை இறுதி முடிவுக்கும் இந்தக் கள ஆய்வுக்கும் இடையே வேறுபாட்டை ஏற்படுத்தலாம்.
இது தேர்தல் முடிவு அல்ல.
இது எந்தக் கட்சி அல்லது வேட்பாளருக்கான ஆதரவு அல்லது எதிர்ப்புப் பிரச்சாரம் அல்ல.
வாக்காளர்களிடம் பதிவான எண்ணங்களையும் களத்தில் செய்தியாளர் குழு கண்டறிந்த கருத்துப் போக்குகளையும் ஆவணப்படுத்தி வெளியிடுவதே “தமிழ் ஊடகம் — மக்கள் எண்ணங்கள்” கள ஆய்வின் நோக்கம்.
வரும் 9ஆம் தேதி வெளியாகும் அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவே இறுதியானது.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)