இந்தித் திரையுலகை அதிரவைத்த ரஜினி! ராகவேந்திரா மண்டபத்தின் கதை
ரஜினிகாந்தின் இந்தித் திரைப்பட வெற்றி, ராஜசேகர் கூட்டணி, மாப்பிள்ளை வசூல் சாதனை, சிரஞ்சீவி நட்பு, ராகவேந்திரா மண்டபத்தின் பின்னணி குறித்து நாச்சி. செல்வராஜ் எழுதும் தொடர்.
இந்தித் திரையுலகைப் புரட்டிப் போட்ட ரஜினி... ராகவேந்திரா மண்டபத்தின் கதை!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – தொடர் 9
-நாச்சி. செல்வராஜ், பத்திரிகையாளர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் மறைந்த இயக்குநர் ராஜசேகருக்கும் இடையே மிகச் சிறந்த கூட்டணி அமைந்திருந்தது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் 25 திரைப்படங்களை இயக்கிப் புகழ்பெற்ற ராஜசேகர், குறுகிய காலத்திலேயே மாரடைப்பால் காலமானார்.
ரஜினிகாந்தை வைத்து ஆறு திரைப்படங்களை இயக்கிய ராஜசேகர், அந்த ஆறு படங்களையும் வெற்றிப் படங்களாகக் கொடுத்து, திரையுலகில் முன்னணி இயக்குநராக உயர்ந்தார்.
ரஜினி மறுத்த கதை... வெற்றிப் படமாக மாறிய அதிசயம்!
1983ஆம் ஆண்டு ரஜினிகாந்தை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசையில் அவரைச் சந்தித்துக் கதை சொன்னார் ராஜசேகர்.
கதையைக் கேட்ட ரஜினிகாந்த், "கதை நன்றாக இருக்கிறது. நிச்சயமாக வெற்றிப் படமாக அமையும். ஆனால், என்னால் இப்போது இந்தப் படத்தில் நடிக்க முடியாது. முதலில் ஏதாவது ஒரு படத்தை இயக்கி வெற்றி பெற்றுக் காட்டுங்கள். அதன் பிறகு வாருங்கள். நான் நடிக்கிறேன்" என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.
ரஜினியிடம் சொன்ன அதே கதையைத் திரைப்படமாக எடுத்த ராஜசேகர், தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.
அந்தப் படம்தான் 'மலையூர் மம்பட்டியான்'.
நடிகர் தியாகராஜனின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் அது.
ஜெய்சங்கர், சரிதா, கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்த அந்தப் படம் தமிழகத்தில் வசூலை வாரிக் குவித்தது.
இந்தித் திரையுலகில் ரஜினியின் அதிரடி!
'மலையூர் மம்பட்டியான்' வெற்றிக்குப் பிறகு ரஜினிகாந்தை மீண்டும் சந்தித்த ராஜசேகர், அந்தப் படத்தை இந்தியில் எடுக்கத் திட்டமிட்டார்.
ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, 'கங்குவா' (Gangvaa) என்ற பெயரில் இந்தித் திரைப்படம் உருவானது.
அந்தக் காலகட்டத்தில் ரஜினிகாந்த், 'அந்தா கானூன்', 'மேரி அதாலத்', 'ஜான் ஜானி ஜனார்த்தன்' போன்ற இந்தித் திரைப்படங்களில் நடித்து, பாலிவுட்டில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருந்தார்.
ராஜசேகர் இயக்கத்தில் வெளியான 'கங்குவா' மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
மும்பையில் 100 நாட்களைக் கடந்து ஓடிய அந்தத் திரைப்படம், இந்தித் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. மேலும், பஞ்சாப் மாநிலத்தில் 150 நாட்களைக் கடந்து ஓடி வெற்றி பெற்றது.
ரஜினி – ராஜசேகர் வெற்றிக் கூட்டணி!
'கங்குவா' வெற்றியைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் – ராஜசேகர் கூட்டணியில் 'தம்பிக்கு எந்த ஊரு', 'மாவீரன்', 'படிக்காதவன்', 'மாப்பிள்ளை', 'தர்மதுரை' போன்ற வெற்றிப் படங்கள் வெளிவந்தன.
இந்தத் திரைப்படங்களின் வெற்றியால் ரசிகர்கள் மத்தியில் இயக்குநர் ராஜசேகருக்கு மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டன.
குறிப்பாக, 'மாப்பிள்ளை' திரைப்படம் மிகப்பெரிய வசூல் வெற்றியைப் பெற்றது.
மாப்பிள்ளைக்குப் போட்டியாக வந்த வெற்றி விழா!
1989ஆம் ஆண்டு தீபாவளியன்று வெளியான 'மாப்பிள்ளை' திரைப்படத்திற்குப் போட்டியாக, சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் கமல்ஹாசன், பிரபு நடித்த 'வெற்றி விழா' திரைப்படம் வெளியானது.
பொதுவாக, சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிவாஜி கணேசனைத் தவிர மற்ற நடிகர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டதில்லை. ஆனால், அந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் முதல்முறையாக கமல்ஹாசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்தப் படம்தான் 'வெற்றி விழா'.
படத்தின் பெயரையே 'வெற்றி விழா' என்று சூட்டி, மிக அதிகப் பொருட்செலவில் தயாரித்திருந்தனர்.
ஆங்கிலத் திரைப்படங்களுக்கு நிகராகக் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தை பிரதாப் போத்தன் இயக்கியிருந்தார்.
ரஜினிகாந்த் நடித்து வெளிவரும் 'மாப்பிள்ளை' திரைப்படத்தை வசூலில் தோற்கடிக்க வேண்டும் என்பதே சிவாஜி தயாரிப்பு நிறுவனத்தின் திட்டமாக இருந்தது.
அதற்கேற்ப 'வெற்றி விழா' திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் ஒரு மாதத்திற்கு முன்பே வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.
மறுபுறம், சிரஞ்சீவி தயாரிப்பில் வெளியான 'மாப்பிள்ளை' திரைப்படம் பெரிய ஆரவாரமின்றி வெளியிடப்பட்டது.
அந்தப் படத்தின் பாடல்கள் வெளியாவதற்கும் ஒரு நாள் முன்புதான் வெளியிடப்பட்டன.
இரண்டு திரைப்படங்களுக்கும் இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
அமைதியாக வெளியான 'மாப்பிள்ளை' திரைப்படம், திரையரங்குகளில் அதிரடியாக வசூலை வாரிக் குவித்தது.
அதே அளவுக்கு 'வெற்றி விழா' திரைப்படம் வசூலை ஈட்டாததால், அதன் தயாரிப்புத் தரப்பு எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் ஏமாற்றமடைந்தது.
'மாப்பிள்ளை' திரைப்படத்தின் தயாரிப்பாளரான சிரஞ்சீவி, படப்பூஜையின்போதே அனைத்து விநியோகப் பகுதிகளுக்கான உரிமைகளும் விற்றுத் தீர்ந்ததால் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்.
அந்தக் காலகட்டத்தில் ரஜினிகாந்தின் சம்பளம் ரூ.45 லட்சம், கமல்ஹாசனின் சம்பளம் ரூ.18 லட்சம், கிராமத்து நாயகன் ராமராஜனின் சம்பளம் ரூ.20 லட்சம் என இருந்தது குறிப்பிடத்தக்கது.
சிரஞ்சீவிக்கு ரஜினி வழங்கிய அறிவுரை!
1980களின் தொடக்கத்தில் சிரஞ்சீவியுடன் ரஜினிகாந்த் சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.
ரஜினிகாந்த் நடித்த 'காளி' திரைப்படத்தின் தெலுங்குப் பதிப்பில், தமிழில் விஜயகுமார் நடித்த கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடித்தார்.
அதைத் தொடர்ந்து 'ராணுவ வீரன்' திரைப்படத்தில் 'ஒற்றைக்கண்ணன்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்தார் சிரஞ்சீவி.
அந்தக் காலகட்டத்தில் தெலுங்குத் திரையுலகில் என்.டி. ராமராவ், நாகேஸ்வர ராவ், சோபன் பாபு, கிருஷ்ணா போன்ற மூத்த நடிகர்களின் ஆதிக்கம் குறைந்து கொண்டிருந்தது.
அப்போது சிரஞ்சீவிக்கு ரஜினிகாந்த் ஓர் அறிவுரை வழங்கினார்.
"மூத்த நடிகர்களின் காலம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. இது உனக்குச் சரியான நேரம். நீ தெலுங்குத் திரையுலகில் கவனம் செலுத்தி நடி" என்று ஆலோசனை வழங்கினார்.
ரஜினிகாந்தின் அறிவுரைப்படி தெலுங்குத் திரைப்படங்களில் தீவிரமாக நடிக்கத் தொடங்கினார் சிரஞ்சீவி.
ரஜினி கணித்தது போலவே, 'கைதி' திரைப்படத்தின் மூலம் தனி முத்திரை பதித்த சிரஞ்சீவி, தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து தெலுங்குத் திரையுலகில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.
ராகவேந்திரா திருமண மண்டபத்தின் பின்னணி!
தனது திரையுலக வளர்ச்சிக்கு ரஜினிகாந்த் வழங்கிய அறிவுரையை மறக்காத சிரஞ்சீவி, நன்றிக்கடனாகச் சென்னை கோடம்பாக்கத்தில் இருந்த ஒரு நிலத்தை ரஜினிகாந்துக்கு எழுதிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
அந்த நிலத்தில்தான் பின்னர் ராகவேந்திரா திருமண மண்டபம் உருவானது.
தற்போது அந்தத் திருமண மண்டபம் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் ஐந்து நட்சத்திர விடுதி கட்டுவதற்கான ஆயத்தப் பணிகளை ரஜினிகாந்த் மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினிகாந்துடன் நட்பில் இருந்த சிரஞ்சீவி, பின்னாளில் தெலுங்குத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார்.
அதேபோல், ரஜினிகாந்த் திரையுலகில் மிக உயர்ந்த இடத்திற்குச் செல்லக் காரணமாக இருந்த மற்றொரு இயக்குநர் யார்?
அவரைப் பற்றிய சுவாரசியமான தகவல்களை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்...
(தொடரும்...)
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)