மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தமிழில் நன்னீராட்டு நடத்த அனுமதிக்க வேண்டும்: பேரூராதீனம் வலியுறுத்தல்
மதுரை மீனாட்சி–சொக்கநாதர் கோயிலில் தமிழ் வேள்வி ஆசிரியர்களைக் கொண்டு தமிழ்த்திருக்குட நன்னீராட்டு மற்றும் தமிழ்நெறி வழிபாடு நடத்த வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பேரூராதீனம் வலியுறுத்தியுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தமிழில் திருக்குட நன்னீராட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் — பேரூராதீனம் வலியுறுத்தல்
மதுரை மீனாட்சி–சொக்கநாதர் திருக்கோயிலில் தமிழ் வேள்வி ஆசிரியர்களைக் கொண்டு தமிழ்த்திருக்குட நன்னீராட்டு மற்றும் தமிழ்நெறி வழிபாட்டை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்று பேரூராதீனம் 25-ஆம் குருமகாசந்நிதானம் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் தமிழக அரசையும் உயர்நீதிமன்றத்தையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தொல்காப்பியர் காலம் முதல் இலக்கியப் பெரியோர்களால் போற்றப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்த தமிழ்மொழி, இடைக்காலத்தில் வழிபாட்டுத் துறையில் தொய்வைச் சந்தித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மதுரை திருக்கோயிலும் தமிழ் வழிபாடும்
மதுரைத் திருக்கோயில் பழமையான வழிபாட்டு மரபைக் கொண்டது என்றும், மங்கையற்கரசியார் உள்ளிட்ட வழிபாட்டாளர்கள் பூவும் நீரும் கொண்டு வழிபட்ட திருக்கோயில் என்பதை திருமுறைகள் உணர்த்துவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இன்று இறைவன்–இறைவி மீனாட்சி–சொக்கநாதர் என்ற பெயர்களில் வழங்கப்படுவதாகவும் அடிகளார் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் வேள்வி ஆசிரியர்கள் திருக்கோயில் கருவறைகள், விமானங்கள் மற்றும் வேள்விக் குண்டங்களில் அமர்ந்து வேள்வி வழிபாடு செய்து, திருக்குட நன்னீராட்டு நடத்துவதற்கான உரிமை இடைக்காலத்தில் மறுக்கப்பட்டு வருவது வருத்தத்திற்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழில் வழிபாடு செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றங்கள் பல்வேறு வழக்குகளில் உத்தரவுகள் பிறப்பித்திருந்தபோதிலும், அவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
1954-லேயே தமிழ்த்திருக்குட நன்னீராட்டு
திருக்கோயில்களின் அருளியல் நிகழ்வுகளில் தமிழை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை 1940-களிலிருந்தே குன்றக்குடி ஆதீனம் வலியுறுத்தி வந்ததாக அடிகளார் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக பேரூராதீனம் 24-ஆம் குருமகாசந்நிதானம் சாந்தலிங்க இராமசாமி அடிகளாரும், சிரவையாதீனம் மூன்றாம் குருமகாசந்நிதானம் சுந்தரம் அடிகளாரும் இணைந்து 1954-இல் தமிழ்த்திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவை நடத்தி தமிழ்நெறி வழிபாட்டை மீண்டும் புத்தொளிர் பெறச் செய்தனர் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பல்லாயிரக்கணக்கான திருக்கோயில்கள், அறநிலையத்துறை சார்ந்த மற்றும் சாராத கோயில்கள், சிவாலயங்கள், திருமால் திருக்கோயில்களில் தமிழ் முறை வழிபாடுகளும் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாக்களும் நடைபெற்று வருகின்றன. எனவே இது இந்து சமய அறநிலையத்துறைக்குப் புதிய நடைமுறை அல்ல என்றும் அடிகளார் தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு
சண்டிகேசுவரர் நற்பணி மன்றத் தலைவர் து. சுரேஷ்பாபு பல்வேறு திருக்கோயில்கள் தொடர்பாக நீதிமன்றங்களை அணுகி உத்தரவுகள் பெற்றபோதிலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சூழல் ஏற்படாமல் இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக W.P.(MD) No.12387/2026 என்ற எண்ணில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிப்பேராணை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், நீதியரசர் சரவணன் முன்னிலையில் விசாரணை நடைபெற்று, விரிவான விசாரணைக்குப் பின்னர் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இனத்தின் அடிப்படையில் வழிபாட்டு உரிமையைத் தடுக்க முடியாது”
நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதங்களை முன்னிட்டு, குறிப்பிட்ட இனத்தை முன்னிறுத்தி மற்றவர்கள் இந்த வழிபாட்டை நடத்தத் தகுதியற்றவர்கள் என்ற நிலை முன்னெடுக்கப்படுவதாக அறியப்படுவதாக அடிகளார் கூறியுள்ளார்.
இது இந்திய அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு முரணானது என்றும், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 26 இதனை மறுப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இனத்தின் அடிப்படையில் ஒருவரது வழிபாட்டு உரிமையைத் தடுக்க முடியாது என்றும், தாங்கள் ஆகமத்திற்கு எதிராகச் செயல்படவில்லை என்ற நிலையை வழக்குத் தொடர்ந்துள்ள து. சுரேஷ்பாபு முன்வைத்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் வழிபாடு ஏற்கப்பட்டால் வரலாற்றுச் சிறப்பு”
நக்கீரர் மற்றும் திருவள்ளுவர் தொடர்பான தமிழ் மரபுகளுடன் மதுரைத் திருக்கோயிலின் சிறப்பைச் சுட்டிக்காட்டியுள்ள அடிகளார், இத்தகைய சிறப்புமிக்க மதுரைத் திருக்கோயிலில் தமிழ் வழிபாடு ஏற்றுக்கொள்ளப்பட்டால் அது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.
எனவே இந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைத்து, மதுரையில் தமிழ்நெறி வழிபாட்டை மேற்கொள்ளும் தமிழ் வேள்வி ஆசிரியர்களையும் திருக்குட நன்னீராட்டு வழிபாட்டில் ஈடுபடுத்த வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசையும் உயர்நீதிமன்றத்தையும் பேரூராதீனம் கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வாறு பேரூராதீனம் 25-ஆம் குருமகாசந்நிதானம் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் தமது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
What's Your Reaction?
Like
2
Dislike
1
Love
1
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)