சிதைக்கப்பட்ட வள்ளலார் பெருவெளித் தலம்: சீரமைக்க தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை

வடலூரில் உள்ள வள்ளலாரின் 106 ஏக்கர் பெருவெளித் தலத்தின் வரலாறு, நில ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டுகள், நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் மீதமுள்ள 72 ஏக்கர் பரப்பை சீரமைத்து பாதுகாக்க தமிழ்நாடு அரசுக்கு வள்ளலார் பணியகம் விடுத்துள்ள கோரிக்கையை இக்கட்டுரை விரிவாக விளக்குகிறது.

Jul 08, 2026 - 01:26
Updated: 4 months ago
0 99
சிதைக்கப்பட்ட வள்ளலார் பெருவெளித் தலம்: சீரமைக்க தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்

"சித்தர் மகன்" இராமலிங்க வள்ளலார்

அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் மகன்  "தான்", என்பதை "சித்தர் மகன் நான்" என்று தம்மை உலகிற்கு அறிவித்தவர் சிதம்பரம் இராமலிங்கம் எனும் இராமலிங்க வள்ளலார். 

மக்களின் பசிப்பிணி போக்கும் தருமச்சாலை

கடந்த 1865 ம் ஆண்டு வடலூர் கருங்குழி கிராமத்தில் "சன்மார்க்க சங்கம்" எனும் இறையியல் அமைப்பைத் தொடங்கிய இராமலிங்க வள்ளற்பெருமானார், 1867 ம் ஆண்டு வடலூர் பார்வதிபுரம் மக்கள் தங்கள் சொந்தச் செலவில் தானமாகக் கிரயம் செய்து கொடுத்த 81 காணி - அதாவது 106 ஏக்கர் நிலத்தில் பசிப்பிணி போக்கும் வகையில் பசித்தவர்க்கு உணவு அளிக்கும் "தருமச்சாலை" ஒன்றை அமைத்தார். இந்தத் தருமச்சாலை 1867 ம் ஆண்டு மே மாதம் 23 ம் தேதி தொடங்கப்பட்டது. 

அவர் தமது அருட்கரங்களால் அன்று பற்ற வைத்த அந்தப் பசிப் பிணி போக்கும் அடுப்பு இன்றும் அணையாமல், புகைந்துகொண்டே கடந்த 150 ஆண்டுகளாகப் பலநூறு கோடி மக்களின் பசித் தீயை அணைத்து வருகிறது.

ஞான சபை

அந்த 106 ஏக்கர் நிலத்தில் இந்தத் தருமச்சாலைக்கு அடுத்து வள்ளற்பெருமானார் "ஞான சபை" ஒன்றைக் கட்டினார். இந்த ஞானசபை 1872 ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

பசிக்கு உணவு, இறைவழிபாட்டுக்கு - உண்மையான இறைஞானத்துக்கு ஞானசபை என்று அமைத்த இராமலிங்க வள்ளற்பெருமானார் அந்த 106 ஏக்கர் நிலமே "பெருவெளித் தலம்" என்று அறிவித்து அந்த ஒட்டுமொத்த இடத்திற்கும் "உத்தர ஞான சிதம்பரம்" மற்றும் "உத்தர ஞான சித்திபுரம்" என்றும் இறைவரால் அருளப்பெற்ற திருவருட் பெயர்களைச் சூட்டினார். 

"ஞானசபை" எனும் இந்த இயற்கை உண்மை விளக்க சபையை, உலகில் வேறு எங்குமே இல்லாத வகையில் இறை ஞான விளக்கம் அருளும் சபையாகக் கட்டினார்.

எட்டு கோணங்கள் எனும் எண்கோண வடிவில் கட்டப்பட்ட அந்த சபை ஒரு மனிதத் தலை வடிவில் கட்டப்பட்டுள்ளது. அதில் இடது கண் சந்திரன், வலது கண் சூரியன் என்பதைக் குறிக்கும் வகையிலும், சபையின் நடுப் பகுதி மனிதனின் நெற்றிப்பொட்டைக் குறிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டு, அந்த நடுப்பகுதியில் ஒரு விளக்கு ஏற்றப்படுகிறது. 

இதுவே "அருட்பெருஞ்சோதி" எனும் இறைவனின் வடிவம் எனும் தத்துவத்தைக் குறிக்கும் வகையில் இந்த சபை கட்டப்பட்டுள்ளது. 

அதாவது மனிதனின் தலை என்பது இடதுகண் - வலது கண் என இரு கண்கள் மற்றும் நெற்றிப்பொட்டு எனும் "நெற்றிக்கண்" அடங்கிய இறைவன் குடியிருக்கும் "சிற்றம்பலம்" அதாவது சிறிய கோயில் என்றும், வான்வெளியில் சந்திரன் - சூரியன் மற்றும் அக்கினி எனும் ஒளி அடங்கிய பேரண்டத்தின் ஒருபகுதி இறைவனின் "பேரம்பலம்" பெரிய கோயில் என்பதையும் உணர்த்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

உருவ வழிபாடு இல்லை

இங்கே உருவ வழிபாடு இல்லை, அர்ச்சனை, அபிசேகம், ஆராதனை என எந்தச் சடங்கும் இல்லை.

இறைவரை மெல்லத் துதிக்கும் தலம் இது.

எனினும், இத்தகைய பெருமை மிகு தலம் பிறகு சிவாச்சாரியார் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டு இராமலிங்க வள்ளலாரின் சன்மார்க்கக் கொள்கைக்கு எதிராக உருவவழிபாடு, அர்ச்சனை, அபிசேகம் என்று நடந்தது.

நில ஆக்கிரமிப்பு

அதேபோல 106 ஏக்கர் நிலமும் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. அதில் சுமார் ஆறே கால் ஏக்கரை அந்த சிவாச்சாரியாரே தன் பெயருக்கு மாற்றிக்கொண்டுவிட்டார்.

அடுத்து 1975 ம் ஆண்டு அப்போதய திமுக ஆட்சியின்போது மேலும் ஒரு 25 ஏக்கர் நிலம் தனியருக்குப் பட்டாப் போட்டுக் கொடுக்கப்பட்டுவிட்டது.

இதனையடுத்து வெறும் 72 ஏக்கர் நிலம் மட்டுமே வள்ளலாரின் "பெருவெளித் தல" சொத்தாக உள்ளது.

அந்த 72 ஏக்கர் நிலத்திலும் "வள்ளலார் சர்வேதச மையம்" என்கிற பெயரில் 100 கோடி ரூபாய் செலவில் கட்டடங்கள் கட்ட, கடந்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் திட்டம் தீட்டப்பட்டது.

இதில் கொடுமை என்னவெனில், இந்து மதத்தின் கீழ் வராத "சமரச சுத்த சத்திய சன்மார்க்கம்" எனும் வள்ளலாரின் இந்த மையம் 1938 ம் ஆண்டிலிருந்து இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திலேதான் உள்ளது.

சர்வேதச மையம் 

இப்படிப்பட்ட பெருமை மிகுந்த அறிவியல் விளக்கங்களுடன் கூடிய திருவருட் பெரு வெளித் தலத்தின் 106 ஏக்கரில் ஏற்கனவே 31 ஏக்கர் ஆக்கிரமிக்கட்டுள்ள நிலையில் மீதமிருக்கும் 72 ஏக்கர் நிலத்தையும் ஆக்கிரமித்து அதில் சர்வேதச மையம் எனும் பெயரில் தங்கும் விடுதி, நவீன பன்னாட்டு உணவகம் ஆகிவை அமைக்கத் திட்டமிடப்பட்டு முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் இந்தப் புனித பெருவெளித் தலத்தை வணிக மையமாக மாற்ற முயற்சி நடைபெற்றது.

வெட்டவெளித் தலமாக, பெருவெளித் தலமாகவேதான் இருக்க வேண்டும்

வள்ளற்பெருமானின் கட்டளைப்படி 106 ஏக்கரில் தருமச்சாலை மற்றும் ஞானசபை தவிர மீதமுள்ள இடங்களில் வேளாண்மை செய்தல் கூடாது, கட்டடங்கள் கட்டக் கூடாது, அது வெட்டவெளித் தலமாக, பெருவெளித் தலமாகவேதான் இருக்க வேண்டும் என்பது விதிமுறை.

காரணம், எதிர்காலத்தில் "எள்ளுப் போட்டால் குனிந்து எள்ளு எடுக்க முடியாத" அளவுக்கு கூட்டம் வரும் என வள்ளற்பெருமானார் கூறியிருந்ததே. 

15 முதல் 20 லட்சம் பேர் வருகின்றனர்.

அதன்படியே மாதம் தோறும் பூச விண்மீன் (நட்சத்திர) நாளில் ஆயிரக் கணக்கிலும், ஆண்டுக்கொரு முறை தை மாதத்தில் வரும் பூச விண்மீன் நாளன்று சுமார் மூன்று நாட்கள் மட்டும் 15 முதல் 20 லட்சம் பேர் வருகின்றனர். 

வணிக வளாகமாக மாற்றத் திட்டம் 

சாதியும், மதமும், சமயமும் பொய் என்று ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி என்ற முழக்கத்தோடு "சமரச சுத்த சத்திய சன்மார்க்கம்" எனும் அமைப்பை உருவாக்கி அதற்கென்று உலகில் மிகப்பெரிய வெட்டவெளிக் கோயிலை உருவாக்கி ஏழை எளிய மக்களின் பசியாற்றும் இறைத் தலமாக வள்ளலார் உருவாகியுள்ள நிலையில், அதனை ஒரு வணிக வளாகமாக மாற்றி அதன் பொறுப்பை மு.க.ஸ்டாலின் குடும்பத்தில் ஒருவருக்கு அளிக்கத் திட்டமிட்டது முந்தைய திமுக அரசு.

இதனை எதிர்த்து மக்களின் போராட்டம்

இதனை எதிர்த்து, நிலம் கொடுத்த பார்வதிபுரம் மக்களின் போராட்டம், திமுக, விசிக தவிர தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளின் எதிர்ப்பு, வள்ளலார் பின்பற்றாளர்களின் எதிர்ப்பு, நீதிமன்ற உத்தரவு ஆகியவை காரணமாக இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது.

நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்ற சட்டப்போராட்டத்தில் மனுதாரர் வினோத் ராகவேந்திரா மற்றும் மூத்த வழக்கறிஞர் சுரேஷ் அவர்கள் ஆகியோரின் பணி அளப்பரிய பணி. அவர்கள் இல்லையென்றால் இந்நேரம் பெருவெளித் தலம் முற்றாக சிதைக்கப்பட்டிருக்கும். 

பெருவெளியை சிதைத்த சேகர் பாபு

எனினும், முன்னதாக உள்ளாட்சி முதல் கோயில் பாதுகாப்பு சிறப்புக் குழுவினர் வரை எந்த முறையான அனுமதிகளும் பெறாமல் அந்தப் பெருவெளியில் அத்திவாரப் பள்ளங்கள் தோண்டி, அதனை சிதைத்து வைத்துவிட்டது மு.க.ஸ்டாலின் தலைமையிலான சேகர்பாபுவின் இந்து சமய அறநிலையத்துறை.

பெருவெளியைத் தூய்மைப் படுத்தித் தர வேண்டும்

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்கள், முதல் கட்டமாக வள்ளலாரின் மீதமுள்ள 72 ஏக்கர் நிலத்தில் உள்ள அத்திவாரபள்ளங்களை மூடி, தகரத் தகடுகளை அகற்றித் தூய்மைப் படுத்தி தர வேண்டும் என்கிறார் வள்ளலாரின் பெருவெளி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள "வள்ளலார் பணியகம்" அமைப்பின் பொதுச்செயலாளர் சுப்ரமணிய சிவா.

இரவில் தவறான செயல்கள் 

"வெட்ட வெளியாக இருந்தவரை இரவு அங்கு எந்தத் தவறான செயல்களும் நடைபெறாமல் இருந்த இந்நிலையில் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இந்த அத்திவாரப் பள்ளம் மற்றும் தகரத் தகடு மறைப்புகள் மிக மோசமான செயல்களுக்கு மறைவிடமாக ஆகிப்போனதாக" மனம் வெதும்பிக் கூறுகிறார் சுப்ரமணிய சிவா.

இந்தப் பெருவெளித் தலம் குறித்து மட்டுமே 11 தனிப்பாடல்கள் எழுதியுள்ள வள்ளலார் இந்த 106 எக்கரையும் ஒரு வெட்ட வெளிக் கோயிலாகவே வருணிக்கிறார் என்கிறார் அவர்.

மாதா மாதம் பூச வழிபாட்டுக்கு வரக்கூடிய ஆயிக்கணக்கானவர்களுக்கு இந்தத் தடுப்புகள் பெரும் இடையூறு தருவதாகவும், பெருவெளியைத் தூய்மை செய்து, மின் விளக்குகள், சிசிடிவி ஏற்பாடுகள், 24 மணி நேரக் காவலர் வசதி ஆகியவை ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும் சுப்ரமணிய சிவா கூறுகிறார்.

இதற்கு பெரும் பொருட்செலவுகள் ஆகாது என்றும் வள்ளலார் தெய்வ நிலையத்தில் இவற்றுக்குப் போதுமான நிதி இருப்பதாகவும் சுப்ரமணிய சிவா கூறுகிறார்.

மேலும், உயர்நீதிமன்ற உத்தரவின்படி 72 ஏக்கர் பெருவெளி எனும் "A" சைட்-ல் எந்தக் கட்டுமானமும் கட்டக் கூடாது என்கிறபடியால் முதலில் அதனைத் தூய்மை செய்து தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுகிறார் சுப்ரமணிய சிவா.

திமுகவின் தீவிர ஆதரவாளரும், வள்ளலாரின் பின்பற்றாளருமான சீனிவாசன் என்பவர், "வள்ளலாரின் பெருவெளித் தலத்தில் ஆடக்கூடாத ஆட்டமெல்லாம் ஆடியதால்தான் திமுக படுதோல்வி அடைந்தது. எனவே அதனைச் சரி செய்ய முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்களால் மட்டுமே முடியும். அவர்களை வள்ளற்பெருமானார் செய்ய வைப்பார்" என்று தாம் உறுதியாக நம்புவதாகக் கூறுகிறார்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User