ஜெயிலர் 2 விமர்சனம்: ரஜினியே விட்டாலும் ரசிகர்கள் விடமாட்டார்கள்! | Jailer 2 Review
ஜெயிலர் 2 திரைப்படம் எப்படி இருக்கிறது? ரஜினியின் நடிப்பு, நெல்சனின் இயக்கம், நகைச்சுவை, அரசியல் வசனங்கள் குறித்து நாச்சி. செல்வராஜ் விமர்சனம். மதிப்பெண் 70/100.
அவமானம், அசத்தல், ஆச்சரியம் எனப் பல கோணங்களில் ரஜினியைக் காட்டியிருக்கிறார் இயக்குநர் நெல்சன்!
– நாச்சி. செல்வராஜ், பத்திரிகையாளர்
ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் ஒரு சிறந்த பொழுதுபோக்கு விருந்தாக அமைந்திருக்கிறது ஜெயிலர் 2.
படத்தின் முதல் பாதியில் நமோ நாராயணா, மலையாள வில்லன் நடிகர் சுராஜ் ஆகிய இருவருக்கும் இடையே நடக்கும் காட்சிகள் தனிச்சிறப்பு. காமெடி போலத் தோன்றும் வில்லத்தனமும், வில்லத்தனம் போலத் தோன்றும் காமெடியும் மிக அற்புதமாக அமைந்துள்ளன.
இரண்டாம் பாதியில் அனல் பறக்கும் காட்சிகள் அடுத்தடுத்து வருகின்றன. அதனுடன் பிரம்மாண்டமான காட்சிகளும் இணைந்து படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கின்றன.
வித்யா பாலன் சேலை கட்டிக்கொண்டு வித்தியாசமான வில்லத்தனத்தைக் காட்டியிருக்கிறார். ஆனால், அடிக்கடி கையில் சிகரெட்டைப் பிடித்துக்கொண்டு வருவது எதற்காக என்பது புரியவில்லை. அதைத் தவிர்த்திருக்கலாம்.
எஸ்.ஜே. சூர்யா தனது வில்லத்தனத்தை எல்லைக்கோட்டைத் தாண்டாமல் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் ரஜினியை 'வாடா, போடா' என்று பேசும்போது திரையரங்கில் ரசிகர்களிடமிருந்து எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன.
டிஸ்கோ டான்சர் திரைப்படத்தின் மூலம் இந்தியாவையே கலக்கிய மிதுன் சக்கரவர்த்தியை எதற்காகத் தேர்வு செய்தார்கள் என்பது தெரியவில்லை. இருப்பினும் அவரும் தனது பங்கை நேர்த்தியாகச் செய்திருக்கிறார்.
அரசியல் பின்னணியில் வெட்டப்பட்ட காட்சிகளா?
ஜெயிலர் 2 திரைப்படம் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே எடுக்கப்பட்ட படம்.
காக்கை, கழுகு கதை சொல்லி ரஜினி முன்வைத்த விமர்சனம் இன்றுவரை விஜய் ரசிகர்களுக்கு ஒரு நெருடலாகவே இருந்து வருகிறது.
அந்தக் கோணத்தில் சில காட்சிகள் ரஜினியை வைத்து எடுக்கப்பட்டதாகவும், ஆட்சி அதிகார மாற்றத்தால் அந்தக் காட்சிகள் வெட்டப்பட்டு, மீண்டும் புதிய காட்சிகளும் மாற்றப்பட்ட வசனங்களும் படமாக்கப்பட்டதாகவும் திரையுலக நண்பர்கள் தெரிவித்த தகவலை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
75 வயதிலும் ரஜினியின் தனித்துவம்!
75 வயதான ரஜினி தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இந்தத் திரைப்படத்தில் வந்து நின்றுவிட்டுப் போகிறார். அவ்வளவுதான்! ஆனால், அதுவே ரசிகர்களுக்குப் பெரிய சந்தோஷமாக அமைந்துவிடுகிறது.
கடுகடுப்பான முகத்தோற்றத்துடன் நடிப்பது இந்தியத் திரையுலகில் ரஜினிக்கு மட்டுமே பொருத்தமாக இருக்கும் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
தயாரிப்பாளர் கலாநிதி மாறன் சிறுவயது முதலே ரஜினியின் ரசிகர் என்பது பலருக்கும் தெரியாது. அதை நிரூபிக்கும் வகையில் ரஜினியையும் இயக்குநர் நெல்சனையும் நம்பிப் பல கோடி ரூபாயைச் செலவு செய்திருக்கிறார்.
மலையாளத்தில் மோகன்லால், கன்னடத்தில் சிவராஜ்குமார், இந்தியில் ஹிருத்திக் ரோஷன் எனப் பல பெரிய நடிகர்கள் படத்தில் வந்து தலையைக் காட்டிவிட்டுச் செல்கின்றனர்.
இது தேவையற்றதாகவே தெரிகிறது. இவ்வளவு பெரிய நடிகர்களை அழைத்து வந்து இப்படிப் பயன்படுத்தியிருப்பது 'வேஸ்ட்' என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
ரஜினியின் குறும்புத்தனத்துக்கு அளவே இல்லை!
படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் ரஜினி தனது கண்ணாடியைக் கழற்றி வித்யா பாலனைப் பார்த்து 'சூப்பர்' என்பதும், அவரது செல்போன் எண்ணை வாங்கி, 'மெசேஜ் போட்டேன். ஏன் பதில் போடவில்லை?' என்று கேட்பதும் ரஜினியின் குறும்புத்தனத்துக்கு அளவே இல்லை என்பதை உணர்த்துகின்றன.
ரஜினியின் இந்த இயல்பான குறும்புத்தனமும் தனித்துவமான நடிப்பும்தான் அவரை இன்றும் ரசிகர்களின் மனங்களில் நிலைத்திருக்கச் செய்கின்றன.
ஜெயிலர் 3 படத்திற்கான முன்னோட்டமா?
படத்தின் இறுதியில் மனைவி ரம்யா கிருஷ்ணன், மருமகள், பேரன் ஆகியோரிடமிருந்து ரஜினி பிரிந்து இருப்பதாகக் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஜெயிலர் 3 திரைப்படம் வருவதற்கான வாய்ப்பை இயக்குநர் நெல்சன் ஏற்படுத்திவைத்திருக்கிறார்.
அரசியலுக்கு மீண்டும் வருவாரா ரஜினி?
படத்தின் இறுதிக் காட்சியில்,
'50 ஆண்டுகளாக என்னை வீழ்த்த வேண்டும் என்று நிறைய பேர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால்...' என்று ஒரு சிறிய இடைவெளிவிட்டு, ஆதங்கத்துடன் சிரித்தபடி ரஜினி பேசும் வசனம் கவனிக்கத்தக்கது.
இந்த வசனம் வெறும் திரைப்பட வசனமாக மட்டும் தோன்றவில்லை. எதிர்காலத்தில் அரசியலில் ரஜினி ஏதோ ஒன்றைச் செய்யப் போகிறார் என்பதற்கான சமிக்ஞையாகவே தெரிகிறது.
மொத்தத்தில்...
ஜெயிலர் 2 முழுக்க முழுக்கப் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த திரைப்படம்.
காமெடி, வில்லத்தனம், பிரம்மாண்டம், அதிரடி, ரஜினியின் தனித்துவமான நடிப்பு என அனைத்தையும் கலந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் இயக்குநர் நெல்சன்.
ரஜினியின் திரைப் பயணத்தில் ஒரு முக்கியமான படமாகவும் ஜெயிலர் 2 அமைந்துள்ளது.
தமிழ் ஊடகம் திரை விமர்சனம் | ஜெயிலர் 2 — மதிப்பெண்: 70/100
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)