சீமானுக்கு ஆபத்து! திருமாவளவன் விடுத்த எச்சரிக்கை – நீதிக்கட்சி வரலாறும் அரசியல் விமர்சனமும்!
சீமானைச் சுற்றியுள்ள சாதிய மதவாத அரசியல் குறித்து திருமாவளவன் எச்சரிக்கை! நீதிக்கட்சியின் உண்மை வரலாறு, தமிழ்த் தேசியம், திராவிட அரசியல் குறித்த சிறப்பாய்வு.
சீமானுக்கு பெரும் ஆபத்து !
நுட்பமாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறி பாடம் நடத்திய தோழர்.தொல் திருமவளவன்
அவர் மீதும் ஆபாச, அருவருப்பு அமிலம் தெளிக்கும் நாதக "சாதிய மதவாதக் கும்பல்" !
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம்
கடந்த காலங்களில் தோழர். தொல் திருமாவளவன் திராவிட முகமூடிகளின் மேடைகளில் நின்றுகொண்டு மேதகு தலைவர் அவர்களின் திருமணம் குறித்தும் சாதி வேறுபாடு பேசியவர்களைத் தலைவர் சுட்டார் என்றெல்லாம் தவறான தகவல்களைப் பேசி அதற்கு மறுப்பும் கண்டனமும் எழுந்த பிறகு அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
திராவிடம் Vs தமிழ்த் தேசியம் குறித்த அவரது முன்னுக்குப் பின் முரணான பேச்சுக்கள் விமர்சனத்துக்கு உட்பட்டது என்றாலும்கூட தோழர்.திருமாவளவனின் சமூக, பொருளாதார, அரசியல் போராட்டத்தை ஒரு நடுநிலையான, எந்தவித முன்முடிவும் இல்லாது உன்னிப்பாகக் கவனித்தால் ஒரு நுட்பமான பேருண்மை புலப்படும்.
திருமாவின் சமூக, பொருளாதார, அரசியல் புரிதல் மிகவும் ஆழமானது, நுட்பமானது, கொஞ்சம் கூட கற்பனை இல்லாத நடைமுறை வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது. அதை அவரது இடத்தில் நின்று சிந்தித்தால்தான் புரிந்து கொள்ள முடியும்.
"சாதியும், சமயமும், மதமும் பொய் என்று ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி" என்று இராமலிங்க வள்ளலார் எழுத வேண்டிய தேவை எழுந்ததன் பின்னணி என்ன ?
சாதி, சமயம், மதம் ஆகிய மூன்றும் இந்த தமிழ்ச் சமூகத்தை சின்னாபின்னமாக்கி, சீரழித்து வருகிறது என்று பொருள்.
இத்தகைய பேருண்மையை வள்ளலார் சொன்னது அவருடைய உரைகளைக் கேட்கவந்த, ஆசி பெற வந்த, சித்துக்களை மட்டுமே பார்க்க வந்த பலருக்கு பிடிக்கவில்லை என்று வள்ளலாரின் சீடர் தொழுவூர் வேலாயுதம் பதிவு செய்துள்ளார்.
ஆக, அரசின் பட்டியல் சாதியில் வராத குடியில் பிறந்த வள்ளலாருக்கே இந்த நிலை என்றால் ஒடுக்கப்பட்ட சாதிக் குடிகளைச் சேர்ந்தவர்களின் சமூக, பொருளாதர, அரசியல் முழக்கங்கள், போராட்டங்கள் என்பவை அவ்வளவு எளிதானதாக இருக்க முடியாது.
மிக ஆபத்தான, கொடூரமான "சாதிய மதவாத" வெறித்தனம்தான் தமிழ்ச் சமூகத்தின் மிகமுக்கிய எதிரி என்பதை யாராலும் மறுக்க முடியாது.
கொஞ்சம் ஊதியமாவது பெற நிறையக் கடுமையான வேலைகள் செய்து களைத்துப்போய் இரவு வீட்டில் உறங்கி காலையில் எழுந்து ஊருக்குள் வந்தால் தேநீர்க் கடைகளில் தனிக் குவளை, ஏதோ வேற்றுகிரக வாசிகளைப் போல சக மனிதர்களால் பார்க்கப்படும்-நடத்தப்படும் நிலை, கோயில்களுக்குள் சென்று வழிபட முடியாத நிலை, கல்வி வேலைவாய்ப்புகளில் புறக்கணிப்பு, திருமண உறவுகளில் கூட பிற உயர்த்தப்பட்ட சாதிகளில் கொள்வன கொடுப்பன செய்து கொள்ள முடியாத புறக்கணிப்பு, நிராகரிப்பு நிலை.... என இந்த மானுட சமூகத்தில் தனிமைப் படுத்தப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களாக வாழும் நிலை மாற்றப்படாவிட்டால் மனிதன் அறிவானவன், செவ்வாய்க் கோளுக்கு விண்கலம் விடுகிறான், சந்திரனில் கால் வைக்கிறான் என்று சொல்வதற்கு என்ன பொருள் இருக்கப்போகிறது ?!
இந்தப் பார்வையில் தோழர். தொல் திருமாவளவனின் அரசியலை நாம் பார்த்தால் அவரது நிலைப்பாடு புரிந்துகொள்ளக்கூடியதே.
சாதியற்ற, மதமற்ற இந்தியா என்பதே தேசிய இனங்களின் உண்மையான கூட்டாட்சியாக இருக்க முடியும் என்பதே திருமாவளவனின் பார்வை என்பதை அவரது 2026 ம் ஆண்டு அக்டோபர் 11 ம் தேதி திண்டிவனம் உரையின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால், அதேவேளை "திராவிட முகமூடிக்குள்" நுட்பமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் மொழி அழிப்பு, தமிழர் அடையாள அழிப்பு, தமிழர் இனவழிப்பு ஆகிவற்றைத் தமிழ்த் தேசியர்கள் எதிர்ப்பதை ஏதோ வெறும் "தெலுங்கு எதிர்ப்பு" என்று தோழர். தொல் திருமாவளவன் பொதுமைப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழில் என்ன மயிரா இருக்கிறது ? என்று கேள்வி கேட்ட பெரியார் ஈ.வெ.இராமசாமியின் கூற்றை விமர்சிக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியுமா என்ன ?!
நீங்களெல்லாம் பொதுத் தொகுதிக்கு ஆசைப்படலாமா என்று பறையர் பெருங்குடி மக்களைப் பார்த்துக் கேட்ட கலைஞர் கருணாநிதியை விமர்சிக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியுமா என்ன ?!
ஒன்றரை லட்சம் பேரைப் பொசுக்கிச் சாம்பலாக்கிய முள்ளிவாய்க்கால் அழிவின் முடிவு குறித்து அனைத்தும் அறிந்தும் அரைநாள் உண்ணாவிரத நாடகம் ஆடிய கலைஞர் கருணாநிதியை விமர்சிக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியுமா என்ன ?
"எதே விசிகவினருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கா....இந்தப் பேச்செல்லாம் இங்கே பேசக்கூடாது" என்று வெளிப்படையாகக் கூறிய மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவினரை விமர்சிக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்ன ?
திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தபோது வீதிகளில் கதவுக்குக் கதவு பரப்புரைக்கு உடன் வர மறுத்த திமுகவினரை, விசிக கொடிக்கம்பம் கூட ஊருக்குள் நட அனுமதி மறுத்த திமுகவினரை அப்படியே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டுமா என்ன ?
தமிழர் நாகரிகங்களை திராவிட நாகரிகம், தமிழர் இலக்கியங்களைத் திராவிட இலக்கியங்கள் என்று சாயம் பூச முனைந்த திராவிட முகமூடிகளுக்குள் இருந்த சூழ்ச்சியாளர்களை எதிர்ப்பதை, விமர்சிப்பதை ஏதோ வெறும் தெலுங்கு எதிர்ப்பு, தெலுங்கு வெறுப்பு என்று பொத்தாம் பொதுவாக போகிற போக்கில் தோழர்.தொல் திருமாவளவன் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
"ஆட்சி அதிகாரத்தில் நீதிக்கட்சி காலத்திலிருந்து தெலுங்கர்கள் இருப்பதால் அவர்கள் கை மேலோங்கியிருக்கிறது அதனால் தெலுங்கர்கள் ஆதிக்கம் இங்கே இருக்கிறது, காரணம் நீதிக்கட்சியை தமிழர்கள் தொடங்கவில்லை" எனும் தோழர் திருமவளவனின் கருத்தும் பிழையான கருத்து.
நீதிக்கட்சி தொடங்கப்பட்டதற்கு முன்னோடி டாக்டர். நடேசன் எனும் தமிழர்.
எஸ்.முத்தையா அவர்கள் தி ஹிந்து நாளிதழில் எழுதிய "The Forgotten Founder" எனும் தலைப்பிலான கட்டுரையில் "நீதிக்கட்சியைத் தொடங்கியவர்கள் யார் என்று, அதன் வரலாற்றை நினைவுகூரும் எவரிடமாவது கேட்டால், ஏறத்தாழ அனைவரும் பிட்டி தியாகராயச் செட்டியார், டாக்டர் டி.எம். நாயர் ஆகிய இருவரின் பெயர்களையே குறிப்பிடுவார்கள். ஆனால், நீதிக்கட்சியின் தோற்றத்தில் டாக்டர் சி. நடேச முதலியார் ஆற்றிய முக்கியமான பங்கு பெரும்பாலும் மறக்கப்பட்டுவிட்டது. உண்மையில், அவர் ஆற்றிய பங்களிப்பைக் கருத்தில் கொண்டால், அவரையும் நீதிக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவராகக் குறிப்பிடுவதற்கு முழுத் தகுதி உண்டு."
என்று குறிப்பிடுகிறார்.
மேலும் அதே கட்டுரையில் எஸ்.முத்தையா அவர்கள்,
"இந்த வரலாறு, பிராமண உயர் அதிகாரிகளால் தாங்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாகவும், நியாயமற்ற முறையில் அணுகப்படுவதாகவும் உணர்ந்த பிராமணரல்லாத சில அரசு ஊழியர்களிடமிருந்து தொடங்குகிறது. சென்னை திருவல்லிக்கேணியில் ஆங்கில மருத்துவம் பயின்ற மருத்துவராகப் பணியாற்றியதுடன், அப்பகுதி மக்களுக்குப் பல்வேறு சமூகச் சேவைகளையும் செய்து வந்தவர் டாக்டர் சி. நடேச முதலியார். அவரது ஆலோசனையின்பேரிலும் வழிகாட்டுதலின்பேரிலும், அந்த அரசு ஊழியர்கள் ஒன்றிணைந்து ‘சென்னை ஐக்கியக் கழகம்’ (Madras United League) என்ற அமைப்பைத் தொடங்கினர். 1912ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி நடைபெற்ற அந்த அமைப்பின் முதலாவது ஆண்டு பொதுக்கூட்டத்தில், அதன் பெயர் ‘சென்னை திராவிடர் சங்கம்’ (Madras Dravidian Association) என்று மாற்றப்பட்டது."
என்று பதிவிடுகிறார் எஸ்.முத்தையா.
இந்த ‘சென்னை ஐக்கியக் கழகம்’ (Madras United League)' தொடங்கப்பட்டு சுமார் நான்கு ஆண்டுகள் கழித்துதான் நீதிக்கட்சி தொடங்கப்பட்டது.
அதே கட்டுரையில்...
1916ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி, சென்னை மற்றும் வெளியூர் மாவட்டங்களைச் சேர்ந்த சமூகத்தில் உயர்ந்த நிலையிலும் செல்வாக்குடனும் விளங்கிய பிராமணரல்லாத முக்கியப் பிரமுகர்கள், சென்னையிலுள்ள விக்டோரியா பொதுமக்கள் மன்றத்தில் (Victoria Public Hall) நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றுகூடினர்.
அந்தக் கூட்டத்தில் இரண்டு அமைப்புகளைத் தொடங்குவதென முடிவு செய்யப்பட்டது.
முதலாவது அமைப்பு, ‘தென்னிந்திய மக்கள் சங்கம்’ (South India People’s Association) என அழைக்கப்படவிருந்தது.
இது ஒரு கூட்டுப் பங்கு நிறுவனமாக (Joint Stock Company) செயல்படுவதற்காகத் திட்டமிடப்பட்டது.
பிராமணரல்லாத மக்களின் கருத்துகளையும் நிலைப்பாடுகளையும் பொதுவெளியில் எடுத்துரைக்கும் நோக்கில், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் செய்தித்தாள்களை வெளியிடுவது இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.
இரண்டாவது அமைப்பு, ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ (South India Liberal Federation) எனப் பெயரிடப்பட்டது.
இந்த அமைப்பு, ‘பிராமணரல்லாத சாதி இந்துக்களின் நலன்களை முன்னேற்றுவது’ என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.
1917ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி, ‘ஜஸ்டிஸ்’ (Justice) என்ற பெயரிலான ஆங்கிலச் செய்தித்தாளின் முதல் இதழ் வெளியானது.
அதே ஆண்டு ஜூன் மாதம் முதல் ‘திராவிடன்’ (Dravidan) என்ற தமிழ்ச் செய்தித்தாளும் வெளிவரத் தொடங்கியது.
‘ஜஸ்டிஸ்’ என்ற ஆங்கிலச் செய்தித்தாள், தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் கொள்கைகளையும் கருத்துகளையும் எடுத்துரைக்கும் முக்கிய ஊடகமாக விளங்கியது.
இதன் காரணமாக, அந்தச் செய்தித்தாளின் பெயரையே அடிப்படையாகக் கொண்டு, தென்னிந்திய நல உரிமைச் சங்கம் பின்னாளில் ‘நீதிக்கட்சி’ (Justice Party) என்று அழைக்கப்படத் தொடங்கியது.
என்று தெளிவாகப் பதிவிடுகிறார் கட்டுரை ஆசிரியர் எஸ்.முத்தையா
தோழர் திருமாவளவன் இந்த வரலாற்றை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
மேலும், நீதிக்கட்சியின் அடிநாதம் "பிராமணரல்லாத சாதி இந்துக்களின் நலன்களை முன்னேற்றுவது" என்பது.
தோழர் தொல் திருமாவளவனின் "திராவிட நீதிக்கட்சியின் நீட்சியான திக, திமுக ஆகியவை சாதி ஒழித்த திராவிடம்" என்கிற பார்வை மிகவும் பழுதானது, பிழையானது.
எனினும், வெறுப்பு அரசியல் இல்லாமல் திக, திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டு வைத்துக்கொண்டே, நட்பு பாராட்டிக்கொண்டே விமர்சன அரசியல் செய்துகொள்வது விசிகவின் அரசியல் முன்னெடுப்புக்கு அவசியம் என்று தோழர் தொல் திருமாவளவன் கருதுவதைத் தவறு என்று கூறமுடியாது, அது காலத்தின், சமூகச் சூழ்நிலையின் தேவை.
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சிகளோடு வெறுப்பு இல்லாமல் விமர்சன அரசியல் செய்துகொண்டே கூட்டுச் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்கிற அவரது அரசியல் அவரது மற்றும் அவரது கட்சி உறுப்பினர்களின் தேவை, விருப்பம். அதில் யாரும் தலையிட முடியாது.
ஆனால், திராவிட முகமூடி அரசியலை விமர்சனமே செய்தல் கூடாது என்கிற தோழர். திருமாவளவனின் கூற்றை ஏற்றுக்கொள்ள இயலாது.
மற்றபடி அவரது சாதி, மத ஏற்றத்தாழ்வு அற்ற தேசிய இனங்களின் முன்னேற்றம் என்கிற கொள்கை வரவேற்கத்தக்கது.
இவை ஒருபுறம் இருக்க, இதே கூட்டத்தில் தோழர் தொல் திருமாவளவன் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு ஒரு மிக முக்கியமான எச்சரிக்கை சமிக்கையைக் கொடுத்துள்ளார். "சீமான் நாகரிகமாகப் பேசுகிறார். ஆனால் அவருக்கு கீழே இருக்கும் எவருக்கும் அரசியல் ஞானம் இல்லை. ஒரு சாதிய மதவாதக் கும்பல் ஒன்று சீமானைச் சுற்றி இருந்துகொண்டு அவரது வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது" என்பதை சுட்டிக் காட்டியிருக்கிறார்.
தோழர் தொல் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி குறித்து அடிக்கடி விமர்சனங்கள் வைத்தாலும்கூட அவர் வைப்பது விமர்சனங்களே அன்றி அந்தக்கட்சி அழிக்கப்படவேண்டும் என்று எண்ணும் எதிரியின் குரலும் அல்ல, உடன் இருந்து அழிக்கும் துரோகியின் குரலும் அல்ல.
சாதி, சமய, மதங்களின் கடுமையான முட்பாதையில், அமில ஆற்றுக்குள் நடைபோடும் தோழர். தொல் திருமாவளவனுக்கு நாம் தமிழர் கட்சியினுள் உள்ளே விளைந்துள்ள "களைகள்" குறித்துப் பேச வேண்டிய தேவை ஒன்றும் இல்லை. ஆனால், அது தோழர் திருமாவளவனின், "நாம் தமிழரின் தமிழ்த் தேசிய அரசியல் வெறுப்பு உணர்ச்சி அற்ற நாகரிக விமர்சன அரசியலாகத் தொடர வேண்டும்" என்கிற உள்ளத்தின் அடி ஆழத்தின் குரல்.
ஆனாலும் பாருங்கள், சீமானைச் சுற்றியுள்ள அந்த "சாதிய மதவாதக் கும்பல்" தோழர் தொல் திருமாவளவனையும் சமூக ஊடகங்களில் ஆபாசமாக, அருவருப்பாக எழுதுவார்கள்.
What's Your Reaction?
Like
0
Dislike
1
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)