RTI-க்கு கதவை மூடியதா தவெக அரசு? சட்டம்–ஒழுங்குத் துறைக்கு விலக்கு ஏன்?
தமிழ்நாடு அரசு Public (Law and Order) Department-ஐ RTI சட்டத்தின் Section 24(4)-ன் கீழ் விலக்கியது ஏன்? இனி எந்த வகையான தகவல்களை RTI மூலம் பெறுவதில் தடைகள் ஏற்படலாம்? ஊழல், மனித உரிமை மீறல் தொடர்பான தகவல்களின் நிலை என்ன? விரிவான பார்வை.
RTI-க்கு கதவை மூடியதா தவெக அரசு? சட்டம்–ஒழுங்குத் துறைக்கு விலக்கு ஏன்? இனி என்னென்ன தகவல்களைப் பெறுவதில் சிக்கல்?
தமிழ் ஊடகம் சிறப்பாய்வுக் கட்டுரை
தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது அரசாங்கத்திடம் மக்கள் கேள்வி கேட்பதற்கான முக்கியமான சனநாயக ஆயுதம்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் Public (Law and Order) Department-ஐ RTI Act Section 24(4)-ன் கீழ் Intelligence and Security Organisation என அறிவித்து, சட்டம் ஒழுங்குக் காவல்துறையைத் தகவல் அறியும் - RTI சட்டத்தின் பொதுவான செயல்பாட்டிலிருந்து விலக்கும் நடவடிக்கை முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.
Section 24(4) இத்தகைய intelligence/security அமைப்புகளுக்கு விலக்கு அளிக்க மாநில அரசுக்கு அதிகாரம் தருகிறது. எனவே அரசுக்கு இத்தகைய அறிவிப்பை வெளியிடுவதற்கான சட்ட அதிகாரமே இல்லை என்று கூற முடியாது.
ஆனால்,
இந்த அதிகாரத்தை இப்போது பயன்படுத்த வேண்டிய அவசியம் தவெக அரசுக்கு ஏன் ஏற்பட்டது? என்பதுதான் பொதுமக்கள் முன் நிற்கும் முதல் கேள்வி.
பாதுகாப்பா? வெளிப்படைத்தன்மைக்குக் கட்டுப்பாடா?
சட்டம்–ஒழுங்குத் துறை கையாளும் சில தகவல்கள் மிகவும் இரகசியமானவை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
உளவுத்துறைத் தகவல்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், கலவரத்தைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கைத் தகவல்கள் போன்றவை பொதுவெளிக்கு வருவது பாதுகாப்பை பாதிக்கலாம்.
அவற்றைப் பாதுகாப்பதற்கான தேவை அரசுக்கு இருக்கிறது.
ஆனால் அதற்காக ஒரு முழுத் துறையையும் RTI-யின் வழக்கமான நடைமுறையிலிருந்து விலக்க வேண்டிய தேவை என்ன?
அதுதான் அரசு விரிவாக விளக்க வேண்டிய கேள்வி.
ஏனெனில் RTI சட்டம் ஏற்கெனவே பல வகையான சமூக உணர்வு பூர்வமான தகவல்கள் - sensitive information-களை வெளியிடாமல் இருப்பதற்கான விலக்குகளை வழங்குகிறது.
இனி என்ன மாதிரியான தகவல்களைப் பெறுவதில் தடைகள் ஏற்படலாம்?
இந்த அறிவிப்புக்குப் பிறகு Public (Law and Order) Department-ன் வசமுள்ள சாதாரண பதிவுகளை RTI மூலம் கேட்கும்போது, அந்தத் துறை Section 24(4) விலக்கை முன்வைக்கக்கூடிய நிலை உருவாகிறது.
உதாரணமாக, இதுபோன்ற கேள்விகள் முக்கியத்துவம் பெறுகின்றன:
+ ஒரு குறிப்பிட்ட சட்டம்–ஒழுங்கு சம்பவம் குறித்து அரசுக்கு அனுப்பப்பட்ட அறிக்கைகள் என்ன?
+ ஒரு போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டம் தொடர்பாக அரசுத் துறைகளுக்கு இடையே நடந்த கடிதப் பரிமாற்றங்கள் என்ன?
+ ஒரு குறிப்பிட்ட காவல்துறை நடவடிக்கை தொடர்பாக Public Department எடுத்த நிர்வாக முடிவு என்ன ?
+ Police firing அல்லது முக்கியமான சட்டம்–ஒழுங்குச் சம்பவம் தொடர்பான அரசின் கோப்புகள், குறிப்புகள், அறிக்கைகள் என்ன?**
+ ஒரு வழக்கு அல்லது சட்டம்–ஒழுங்கு விவகாரத்தில் அரசு எடுத்த முடிவுக்கான பதிவுகள் என்ன?
+ தடுப்புக் காவல் தொடர்பாக அரசுத் துறையில் பரிசீலிக்கப்பட்ட பதிவுகள் என்ன?
+ ஒரு அரசியல் போராட்டம் அல்லது முக்கியமான பொது நிகழ்வைச் சமாளிப்பது தொடர்பாக அரசுக்கும் காவல்துறைக்கும் இடையே நடந்த தகவல் பரிமாற்றங்கள் என்ன?
இத்தகைய தகவல்களை முன்புபோல் வழக்கமான RTI உரிமையின் அடிப்படையில் பெறுவதில் இந்த அறிவிப்பு குறிப்பிடத்தக்க தடையை உருவாக்கக்கூடும்.
ஆனால் இங்கே மிக முக்கியமான சட்டப் பாதுகாப்பு ஒன்று இருக்கிறது.
காவல் நிலைய மரணம் குறித்து இனி RTI கேட்கவே முடியாதா ?
அப்படி அல்ல.
Section 24(4) விலக்கு முழுமையானது கிடையாது.
ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்களை சட்டமே இந்த விலக்கிலிருந்து வெளியே வைத்திருக்கிறது. மனித உரிமை மீறல் குறித்த தகவல்களுக்கு மாநில தகவல் ஆணையத்தின் ஒப்புதல் நடைமுறையும், 45 நாள் காலவரம்பும் சட்டத்தில் உள்ளது.
தமிழ்நாடு மாநில தகவல் ஆணையமும் நுண்ணறிவு /பாதுகாப்பு (intelligence/security) அமைப்புகளுக்கான விலக்கு முழுமையனது அல்ல; ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்களை வழங்கும் கடமை தொடர்கிறது என்று விளக்குகிறது.
இதனால்,
காவல் நிலைய மரணம், காவல்துறை சித்திரவதை, சட்டவிரோத காவல் போன்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்த RTI கதவு முழுமையாக மூடப்பட்டுவிட்டது என்று கூற முடியாது.
இதற்கு முன்பே சென்னை உயர்நீதிமன்றமும் தமிழ்நாட்டில் Section 24(4)-ன் கீழ் விலக்கு பெற்ற அமைப்புகள் தொடர்பான வழக்கில், அந்த விலக்கு சட்டத்தின் provison-களுக்கு உட்பட்டதே என்பதைப் பதிவு செய்திருக்கிறது.
அப்படியானால் அரசு தெளிவுபடுத்த வேண்டியது என்ன?
அரசின் பாதுகாப்பு சார்ந்த ரகசியங்களைப் பாதுகாப்பது அவசியம்.
அதே அளவுக்கு அரசை மக்கள் கண்காணிக்கும் உரிமையைப் பாதுகாப்பதும் அவசியம்.
எனவே தவெக அரசு பொதுமக்களுக்கு சில நேரடியான விளக்கங்களை அளிப்பது இந்த விவாதத்தைத் தெளிவுபடுத்தும்:
+ இந்த விலக்கு இப்போது ஏன் தேவைப்பட்டது?
+ எந்த வகையான தகவல்கள் வெளியாவதால் அரசின் intelligence/security நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன?
+ முழுத் துறையையும் விலக்குவதற்குப் பதிலாக sensitive records-க்கு மட்டும் ஏற்கெனவே சட்டத்தில் உள்ள விலக்குகளைப் பயன்படுத்த முடியாதா?
+ காவல்துறை நடவடிக்கைகள் தொடர்பான பொதுநலத் தகவல்கள் தொடர்ந்து மக்களுக்குக் கிடைப்பதை அரசு எவ்வாறு உறுதி செய்யப்போகிறது?
இவை அரசியல் குற்றச்சாட்டுகள் அல்ல.
RTI சட்டத்தின் அடிப்படை நோக்கமான வெளிப்படைத்தன்மை (transparency) மற்றும் பொறுப்புக் கூறலில் (accountability) இருந்து எழுகின்ற இயல்பான சனநாயகக் கேள்விகள்.
பாதுகாப்புக்குத் தேவையான ரகசியத்தையும் அரசு காக்க வேண்டும்.
அதே நேரத்தில் “ரகசியம்” என்ற பெயரில் பொதுமக்களின் தகவல் அறியும் உரிமை தேவைக்கு அதிகமாகச் சுருங்கிவிடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதுதான் இந்த அரசாணைக்குப் பிறகு அரசு எதிர்கொள்ள வேண்டிய முக்கியமான சோதனை.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)