சீமானின் தமிழ்த் தேசிய அரசியல்: தடம் மாறியதா? | தமிழ் ஊடகம்

தமிழ்த் தேசியம், திராவிட எதிர்ப்பு, தேர்தல் அரசியல், இந்திய அரசியலமைப்பு மற்றும் ஆட்சிக்கான ROAD MAP குறித்து சீமானின் அரசியல் அணுகுமுறையை விமர்சன ரீதியாக அலசும் சிறப்புக் கட்டுரை.

Nov 08, 2026 - 12:18
Updated: 12 hours ago
0 23
சீமானின் தமிழ்த் தேசிய அரசியல்: தடம் மாறியதா? | தமிழ் ஊடகம்

"வேலுப்பிள்ளை மகனின் தம்பி என்றார்!

ஆனால் கெட்ட வார்த்தைகளில் வசைபாடும்

ஒரு கூட்டத்தை உருவாக்கிவிட்டிருக்கிறார்!

இரத்தமும் சதையுமாக வந்தேன் என்றார்!

ஈ*ழத் தமிழருக்கு நீதி பெற ஒரு செயலும் இல்லை!

தமிழ்நாட்டைத் தமிழர் ஆள வேண்டும் என்றார்!

தான் மட்டுமே தமிழர் என்கிறார்!

இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றார்!

இயற்கை வளங்களை சுரண்டி விற்றவர்கள் சுடச்சுடப் பிரியாணி கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல முடியுமா என்கிறார்?

திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்றார்!

திராவிடப் பிரியாணி மட்டும் ஓகே என்கிறார்!

அன்று எந்தத் திமுக தமிழ்த் தேசியத்தை அழிக்க எண்ணியதோ...

இன்று அதற்கு ஆதரவு கொடுத்தால் தப்பா என்கிறார்!

"ஓட்டுப் போட்டால் போடுங்கள்; இல்லாவிட்டால் போங்கள்" என்ற மனநிலையில் தேர்தலை அணுகுவது அரசியல் தலைமைக்கான அணுகுமுறையாக இருக்க முடியாது. வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெறுவதுதான் ஒரு தலைவரின் முதன்மையான கடமை".

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம்

தமிழ்த் தேசிய அரசியலைத் தனது அரசியல் மூலதனமாக்கிக் கொண்டு களமிறங்கியவர் சீமான். உணர்ச்சிகரமான பேச்சுகள், தமிழ் இன உணர்வு, ஈழத்தமிழர் விடுதலை, தமிழர் வரலாறு, மொழிப்பற்று எனப் பல்வேறு முழக்கங்களின் மூலம் தனக்கென ஓர் அரசியல் அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார்.

ஆனால் கடந்த 15 ஆண்டுகால அரசியல் பயணத்தின் விளைவு என்ன? தமிழ்த் தேசியத்திற்கான வலுவான அரசியல் இயக்கத்தை உருவாக்கியிருக்கிறாரா? அல்லது உணர்ச்சிகரமான முழக்கங்களை மட்டுமே முன்வைக்கும் தனிநபர் அரசியலை வளர்த்திருக்கிறாரா?

தமிழ்த் தேசியம் என்பது என்ன?

தமிழ்த் தேசியம் என்பது தமிழில் பேசுவதும், தமிழர் வரலாற்றைப் பேசுவதும், பிற மொழியினரை விமர்சிப்பதும் மட்டுமல்ல.

தமிழர்களின் அரசியல், பொருளாதார, சமூக உரிமைகளைப் பாதுகாப்பதும், கல்வி, வேலைவாய்ப்பு, நில உரிமை, நீர்வளம், இயற்கை வளப் பாதுகாப்பு ஆகியவற்றில் உறுதியான செயல்திட்டங்களை முன்வைப்பதும்தான் உண்மையான தமிழ்த் தேசிய அரசியல்.

தமிழர்களை உயர்த்துவதாக இருக்க வேண்டிய அரசியல், பிற மொழியினரைத் தாழ்த்துவதாக மாறிவிடக்கூடாது. ஒரு மொழியின் மீதான பற்றை மற்றொரு மொழியின் மீதான வெறுப்பாக மாற்றுவது தேசிய அரசியல் அல்ல.

உணர்ச்சிப் பேச்சு மட்டும் போதுமா?

பிரபாகரனின் தம்பி என்ற அடையாளம், தமிழ்நாட்டைத் தமிழர்களே ஆள வேண்டும் என்ற முழக்கம், திராவிட எதிர்ப்பு எனப் பல்வேறு அரசியல் முழக்கங்கள் சீமானின் அடையாளங்களாகின.

ஆனால் ஒரு தலைவரின் அரசியல் மதிப்பு அவர் பேசும் வசனங்களால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. அவர் முன்வைக்கும் கொள்கைகள், உருவாக்கும் அமைப்பு, தேர்தல் உத்தி, மக்கள் ஆதரவு ஆகியவற்றைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது.

மாடுகளைப் பாதுகாப்போம், மரங்களைப் பாதுகாப்போம், இயற்கை வளங்களைப் பாதுகாப்போம் என்பதெல்லாம் வரவேற்கத்தக்கவைதான். ஆனால் விவசாயிகளின் வருமானம், இளைஞர்களின் வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் முன்வைக்க வேண்டும்.

'ஓட்டுப் போட்டால் போடுங்கள்; இல்லாவிட்டால் போங்கள்' என்ற மனநிலையில் தேர்தலை அணுகுவது அரசியல் தலைமைக்கான அணுகுமுறையாக இருக்க முடியாது. வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெறுவதுதான் ஒரு தலைவரின் முதன்மையான கடமை.

திராவிட எதிர்ப்பு மட்டுமே அரசியலா?

திராவிட அரசியலை விமர்சிப்பதற்கு எவருக்கும் உரிமை உண்டு. ஆனால் திராவிடக் கட்சிகள் செய்யாததை நாம் எப்படிச் செய்யப்போகிறோம்? தமிழ்நாட்டின் பொருளாதாரத்தையும் நிர்வாகத்தையும் எவ்வாறு மேம்படுத்தப்போகிறோம்? அதற்கான மாற்றுத் திட்டம் என்ன?

எதிர்ப்பரசியல் ஓர் இயக்கத்திற்கு அடையாளத்தைத் தரலாம். ஆனால் மாற்று அரசியல்தான் ஆட்சியை நோக்கி அழைத்துச் செல்லும்.

அரசியலமைப்புக்கு உட்பட்ட அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான திட்டம் எங்கே?

மிக முக்கியமாக, இந்திய ஒன்றியத்தின் ஓர் அங்கமாக இருக்கும் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமானால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டே அதனைச் செய்ய முடியும். தேர்தல் ஜனநாயகம், சட்டமன்ற நடைமுறைகள், அரசியலமைப்பு அதிகாரப் பகிர்வு, மாநில உரிமைகள் ஆகியவற்றைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப அரசியல் செயல்திட்டத்தை வகுக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் அதிகாரத்தை எவ்வாறு கைப்பற்றுவது? மத்திய அரசின் அதிகார வரம்புகளையும் மாநில அரசின் அதிகாரங்களையும் எவ்வாறு கையாள்வது? மாநில உரிமைகளை எவ்வாறு மீட்டெடுப்பது? ஆட்சிக்கு வந்தால் எந்தெந்த மாற்றங்களைச் சட்டரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் செயல்படுத்துவது?

இவற்றுக்கான தெளிவான ROAD MAP எங்கே? நடைமுறைச் சாத்தியமுள்ள ஆட்சித் திட்டங்கள் எங்கே?

தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று முழங்குவதும், தேர்தலில் போட்டியிடுவதும் மட்டுமே ஆட்சிக்கான அரசியல் தயாரிப்பாகிவிடாது. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளையும், ஆட்சியை நடத்துவதற்கான நிர்வாகத் திட்டங்களையும் மக்களிடம் முன்வைக்க வேண்டிய பொறுப்பு ஒரு தலைவருக்கு இருக்கிறது. 

சீமானின் அரசியலில் இத்தகைய தெளிவான அதிகாரக் கைப்பற்றல் திட்டமும், நடைமுறை ஆட்சிக்கான ROAD MAP-உம் எங்கே இருக்கின்றன என்பதுதான் இன்றைய முக்கியமான கேள்வி!

கட்சியா? இயக்கமா?

சீமான் நடத்துவது தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்ற விரும்பும் அரசியல் கட்சியா? அல்லது கொள்கைகளை முன்னிறுத்தும் சமூக இயக்கமா?

ஒரு தேர்தல் கட்சி வாக்குகளைப் பெற வேண்டும். தொகுதிவாரியான வலிமையை உருவாக்க வேண்டும். உள்ளாட்சியிலிருந்து சட்டமன்றம் வரை அமைப்பைக் கட்டமைக்க வேண்டும். தேர்தல் வெற்றிக்கான நடைமுறை உத்திகளைக் கையாள வேண்டும்.

அதேநேரத்தில், சமூக இயக்கம் தேர்தல் வெற்றியை முதன்மை இலக்காகக் கொள்ளாமல் கொள்கை வளர்ச்சிக்காகப் பணியாற்றலாம்.

ஆனால் இந்த இரண்டிற்கும் இடையில் தெளிவில்லாமல், தேர்தல் வெற்றிக்கான அரசியல் நடைமுறைகளையும் புறக்கணித்தால் அந்த அமைப்பின் இலக்கே கேள்விக்குறியாகிவிடும்.

பிரியாணி அரசியலும் கொள்கை முரண்பாடுகளும்!

திராவிடக் கட்சிகளைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்த ஒருவர், இன்று அதே அரசியல் தரப்பிடம் பிரியாணி கேட்டு நிற்பதாக விமர்சிக்கப்படும் சூழல் அரசியல் விவாதத்திற்குரியது.

அரசியலில் எதிரிகளுடன் பேசுவதோ, அரசியல் உறவுகளை மாற்றிக்கொள்வதோ தவறல்ல. ஆனால் நேற்றுவரை ஒழிக்கப்பட வேண்டிய சக்தி என்று விமர்சித்த அரசியல் தரப்பிடம் இன்று வேறொரு அணுகுமுறையை மேற்கொள்ளும்போது அதற்கான கொள்கை விளக்கத்தை மக்களிடம் முன்வைக்க வேண்டும்.

இது அரசியல் முதிர்ச்சியா? தேர்தல் உத்தியா? அல்லது கொள்கைத் தடுமாற்றமா?

தமிழ்த் தேசியத்திற்கு உண்மையான தலைமை தேவை!

ஒரு கொள்கையை முன்வைக்கும் தலைவர், அந்தக் கொள்கையைத் தன்னைக் கடந்தும் வளர்க்க வேண்டும். அடுத்த தலைமுறைத் தலைவர்களை உருவாக்க வேண்டும். கட்சிக்குள் ஜனநாயகத்தையும் விமர்சனங்களுக்கான இடத்தையும் உறுதிப்படுத்த வேண்டும்.

அனைத்தும் ஒரே நபரைச் சுற்றியே இயங்கினால், அந்த நபரின் அரசியல் செல்வாக்கு சரியும்போது அமைப்பும் சரிந்துவிடும்.

தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய அரசியலுக்கான தேவை இருக்கிறது. ஆனால் அது ஒரு தலைவரின் தனிப்பட்ட அரசியல் மூலதனமாக மாறிவிடக்கூடாது. தமிழர்களின் அரசியல், பொருளாதார, சமூக முன்னேற்றத்திற்கான செயல்திட்டமாக வளர வேண்டும்.

தமிழர்களை உயர்த்துவதே தமிழ்த் தேசியத்தின் இலக்கு; பிறரைத் தாழ்த்துவதல்ல!

ஆட்சியைப் பிடிப்பதே தேர்தல் அரசியலின் இலக்கு; வெறும் முழக்கங்களைப் பெருக்குவதல்ல!

மக்களின் நம்பிக்கையைப் பெறுவதே தலைமைக்கான அடையாளம்; தனக்கான விசுவாசத்தை மட்டும் எதிர்பார்ப்பதல்ல!

தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி அரசியலுக்கு வந்த சீமான், இன்று தனது அரசியல் பயணத்தைத் திரும்பிப் பார்த்து சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டிய கட்டத்தில் இருக்கிறாரா?

தமிழ்த் தேசியத்தை வளர்க்க வந்த தலைவரா? அல்லது தமிழ்த் தேசிய உணர்வைத் தனது அரசியல் மூலதனமாக்கிக் கொண்ட தலைவரா?

இந்தக் கேள்விக்கான பதிலைத் தீர்மானிப்பது அவரது பேச்சுகள் அல்ல; அவரது அரசியல் செயல்பாடுகளும் எதிர்கால அணுகுமுறையும்தான்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User