தமிழ்நாட்டு வாக்காளர்கள் முட்டாள்களா என்ன? NTK முதலில் தன்னை ஆராய வேண்டுமா இல்லை வாக்காளர்களைக் குறை கூற வேண்டுமா?
2024-ல் 35 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற NTK, 2026-ல் சுமார் 4% வாக்குகளுக்கு ஏன் சரிந்தது? விஜயையும் வாக்காளர்களையும் குறை கூறுவதற்கு முன் நாம் தமிழர் கட்சி தன்னை மறுஆய்வு செய்ய வேண்டாமா?
"NTK-வின் 2026 வாக்குச் சரிவை விஜய் என்ற ஒரு மனிதராலும், “மக்களின் திரைக்கவர்ச்சி” என்ற ஒரு காரணத்தைக் கொண்டு மட்டும் பூசி மெழுகிவிட்டால், கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பல கேள்விகளுக்குப் பதிலில்லாமல் போய்விடும்."
– வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம்
ஒரு அரசியல் கட்சி தேர்தலில் தோல்வியடையும்போது மிக எளிதாகக் கிடைக்கும் பதில் — மக்கள் நம்மைப் புரிந்துகொள்ளவில்லை” என்பது.
இன்னொரு புதிய கட்சி வந்துவிட்டால், “திரைக்கவர்ச்சி மக்களைத் திசைதிருப்பிவிட்டது” என்றும் சொல்லிவிடலாம்.
ஆனால் தொடர்ந்து தேர்தல்களைச் சந்திக்கும் ஓர் அரசியல் இயக்கத்திற்கு அது மட்டும் போதுமான பதிலா?
நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை இந்தக் கேள்வி இப்போது தவிர்க்க முடியாததாகியுள்ளது.
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் 1.1% வாக்குகளில் தொடங்கிய NTK, 2019 மக்களவைத் தேர்தலில் 3.89%, 2021 சட்டமன்றத் தேர்தலில் 6%க்கும் மேல் என்று வளர்ந்தது. 2024 மக்களவைத் தேர்தலில் 35 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் 8.22% என்ற உச்சத்தை அடைந்தது.
ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் நிலை மாறியது. NTK-வின் வாக்கு சுமார் 19.72 லட்சமாகவும், வாக்கு சதவீதம் சுமார் 4% ஆகவும் குறைந்தது. தேர்தலுக்குப் பிறகு கட்சிக்குள்ளேயே இளம் வாக்காளர்களில் ஒரு பகுதி விஜயின் TVK கட்சியை நோக்கி நகர்ந்திருக்கலாம் என்ற மதிப்பீடும், தேர்தல் உத்தியில் குறைபாடுகள் இருந்ததாக ஒப்புக்கொள்ளும் கருத்துகளும் வெளிவந்தன.
இங்கேதான் நாம் தமிழர் கட்சிக்கான முக்கியமான கேள்வி தொடங்குகிறது.
35 லட்சம் பேர் வாக்களித்தபோது மக்கள் சரி; விலகியபோது மக்கள் தவறா?
2024-ல் 35 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் NTK-க்கு வாக்களித்தது கட்சியின் வளர்ச்சி என்றால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களில் கணிசமானோர் விலகிச் சென்றதையும் கட்சி தனது அரசியல் செயல்பாட்டின் "பின்னூட்டமாகப்" பார்க்க வேண்டாமா?
விஜயின் வருகை காரணமாக இருக்கலாம். அவரது திரைப்படப் புகழும் ஒரு காரணியாக இருக்கலாம். புதிய கட்சியின் பிரச்சாரம், இளைஞர் ஈர்ப்பு, ஆட்சி மாற்றத்தை விரும்பியவர்களின் தந்திரோபாயத் தேர்வு (tactical choice) எனப் பல காரணங்களும் இருக்கலாம்.
ஆனால் இவை அனைத்தும் வெளிப்புறக் காரணங்கள்.
ஒரு கட்சி முதலில் கேட்க வேண்டிய கேள்வி வேறு:
“மக்கள் ஏன் நம்மைத் தேர்ந்தெடுக்கவில்லை?” என்பதற்கு முன்னால், “மக்கள் நம்மைத் தேர்ந்தெடுக்காத அளவுக்கு நாம் என்ன தவறு செய்தோம்?”
இந்தக் கேள்வியை NTK தன்னைத்தானே எவ்வளவு ஆழமாகக் கேட்டிருக்கிறது?
விஜயை ஆராய்ந்த அளவுக்கு NTK தன்னை ஆராய்ந்ததா?
தேர்தல் அரசியலில் எதிராளியை விமர்சிப்பது இயல்பானது. ஆனால் எதிராளியின் பலத்தை விளக்குவது, தன்னுடைய பலவீனத்திற்கான விளக்கமாகிவிடாது.
விஜய்க்கு ஏன் வாக்கு கிடைத்தது என்பதைவிட,
NTK-க்கு ஏற்கெனவே கிடைத்திருந்த வாக்கு ஏன் தங்கவில்லை?
என்பதுதான் அந்தக் கட்சிக்கு முக்கியமான கேள்வியாக இருக்க வேண்டும்.
234 தொகுதிகளிலும் முறையான "தேர்தலுக்குப் பிந்தைய தணிக்கை" (post-election audit) நடத்தப்பட்டதா?
+ வேட்பாளர்கள் அழைக்கப்பட்டார்களா?
+ மாவட்ட, தொகுதி, ஒன்றிய நிர்வாகிகளிடம் தோல்விக்கான காரணங்கள் எழுத்துப்பூர்வமாகப் பெறப்பட்டதா?
+ 2024-ல் NTK-க்கு வாக்களித்து 2026-ல் விலகிய வாக்காளர்களிடம் அறிவியல் பூர்வ கருத்துக்கேட்பு (scientific survey) நடத்தப்பட்டதா?
+ தலைமையின் அரசியல் அணுகுமுறையும் அந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதா?
இவை நடந்திருந்தால், அவற்றின் கண்டுபிடிப்புகள் என்ன என்பதும் அரசியல் ரீதியாக முக்கியமானது.
சீமானும் சுயபரிசோதனைக்கு வெளியே இருக்க முடியாது
NTK மற்ற கட்சிகளைப்போல பல அதிகார மையங்களைக் கொண்ட கட்சியல்ல. சீமானின் பேச்சு, அரசியல் நிலைப்பாடு மற்றும் பிரச்சார அணுகுமுறை கட்சியின் பொதுமுகத்தை பெருமளவில் தீர்மானிக்கின்றன.
எனவே தேர்தல் மறுஆய்வு என்றால் வேட்பாளர்களையும் கீழ்மட்ட நிர்வாகிகளையும் மட்டும் ஆய்வு செய்வது போதாது.
சீமானின் அரசியல் உரைகளும் ஆய்வுக்குரியதே.
+ 2024-க்குப் பிறகு அவர் அதிகமாகப் பேசிய அரசியல் பிரச்சினைகள் எவை?
+ மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு அளிக்கப்பட்ட இடம் எவ்வளவு?
+ திராவிட அரசியல் எதிர்ப்புக்கு எவ்வளவு?
+ விஜய் மற்றும் TVK மீதான விமர்சனத்திற்கு எவ்வளவு?
+ அந்தப் பேச்சுகள் ஏற்கெனவே NTK-க்கு வாக்களித்தவர்களிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தின?
இவற்றை உணர்ச்சியால் அல்ல; தரவுகளால் ஆராய முடியும், அதற்குக் காணொலிச் சான்றுகள் இணையம் முழுதும் கொட்டிக் கிடக்கின்றன.
தோல்வி அவமானமல்ல; ஆராய மறுப்பதுதான் பிரச்சினை
ஒரு தேர்தல் தோல்வி எந்தக் கட்சிக்கும் முடிவல்ல.
உண்மையில் தோல்வி ஒரு மிகப்பெரிய அரசியல் தரவுத்தளம்.
எங்கு வாக்கு குறைந்தது? ஏன் குறைந்தது? எந்த வயதினர் விலகினர்? எந்தப் பகுதிகளில் விலகினர்? புதிய வாக்காளர்கள் ஏன் சேரவில்லை? உள்ளூர் நிர்வாகம் செயல்பட்டதா? வேட்பாளர் தேர்வு சரியாக இருந்ததா? கட்சியின் அரசியல் செய்தி வாக்காளர்களைச் சென்றடைந்ததா?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடினால்தான் தோல்வி அடுத்த வளர்ச்சிக்கான பாடமாக மாறும்.
NTK-வின் 2026 வாக்குச் சரிவை விஜய் என்ற ஒரு மனிதராலும், “மக்களின் திரைக்கவர்ச்சி” என்ற ஒரு காரணத்தைக் கொண்டு மட்டும் பூசி மெழுகிவிட்டால், கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பல கேள்விகளுக்குப் பதிலில்லாமல் போய்விடும்.
முதலில் யாரை விசாரிக்க வேண்டும்?
மக்களாட்சியில் வாக்காளர் எந்தக் கட்சிக்கும் நிரந்தரமாகக் கடன்பட்டவர் அல்ல.
2016-ல் ஒரு கட்சிக்கு வாக்களித்தவர் 2021-ல் வேறொரு கட்சிக்கும், 2024-ல் NTK-க்கும், 2026-ல் TVK-க்கும் வாக்களிக்கலாம்.
அதற்காக வாக்காளரை குற்றவாளியாக்க முடியாது.
அவரை மீண்டும் நம்ப வைப்பதுதான் அரசியல் கட்சியின் பணி.
அதனால்தான் NTK இன்று கேட்க வேண்டிய மிக முக்கியமான கேள்வி,
“மக்கள் எங்களை ஏன் புரிந்துகொள்ளவில்லை?” என்பது அல்ல.
மாறாக,
“மக்கள் நம்மைத் தேர்ந்தெடுக்காத அளவுக்கு நாம் என்ன தவறு செய்தோம்?”
என்பதுதான்.
அதற்கான பதில் விஜயிடம் இருக்காது.
DMK-விடமும் AIADMK-விடமும் இருக்காது.
அதற்கான பதிலை முதலில் நாம் தமிழர் கட்சி தனக்குள்ளேயே தேட வேண்டியிருக்கிறது.
நாம் தமிழர் கட்சி குறித்து உண்மையில் கவலைப்பட்ட அறிவார்ந்தவர்கள், கட்சிக்கு சிந்தனைத் தளமாக இருந்த பலபேர் கட்சியை விட்டும், சீமானை விட்டும் விலகியிருக்கிறார்கள், விலக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதன் விளைவுகள், தற்போதய நாம் தமிழர் நிர்வாகிகள் சிலரின் தரம் குறைந்த காணொலிக் கருத்துக்களிலும், சமூக ஊடக பின்னூட்டங்களிலும், தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரைக் கூட்டங்களுக்குக் கூடும் குறைவான, எழுச்சியில்லாத கட்சியினரின் சிறு கூட்டங்களுமே பிரதிபலிக்கின்றன.
ஒரு குறள் நினைவுக்கு வருகிறது :
ஏற்றவற்றுள் எல்லா முடையார் செயிர்செய்தால்
ஆற்றாமை என்னாம் துணை
- திருக்குறள்
பொருள் :
அனைத்து வகையான அரண்களும், பாதுகாப்பு வசதிகளும் ஒருவருக்கு இருந்தாலும், அவர் அறிவிலும் பண்பிலும் சிறந்த பெரியோர்களின் (நல்லோர்களின்) நட்பை இழந்து, அவர்களுக்குத் தீங்கு செய்தால், அந்தப் பாதுகாப்புகளால் எந்தப் பயனும் இல்லாமல் அழிந்து போவார்.
What's Your Reaction?
Like
2
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)