தேர்தல் ஆணையத்துக்குள்ளேயே என்ன நடந்தது? 2 ஆணையர்களின் 14 எழுத்துப்பூர்வ எதிர்ப்புகள் –இந்தியாவை உலுக்கிய Indian Express புலனாய்வு
SIR நடவடிக்கைகளில் இரண்டு தேர்தல் ஆணையர்கள் 10 மாதங்களில் 14 முறை எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்ததாக Indian Express புலனாய்வு கூறுகிறது. Form-6, ECINet, வாக்காளர் சேர்ப்பு–நீக்கம் தொடர்பாக என்ன நடந்தது?
– தமிழ் ஊடகம் சிறப்புக் கட்டுரை
இந்தியத் தேர்தல் ஆணையத்தைச் சுற்றி அரசியல் கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டுகளைத் தாண்டி, இப்போது முக்கியமான கேள்விகள் தேர்தல் ஆணையத்தின் உள்ளிருந்தே எழுப்பப்பட்டுள்ளன.
செப்டம்பர் 23 அன்று The Indian Express வெளியிட்ட புலனாய்வின்படி, வாக்காளர் மறுசீரமைப்பு (SIR) தொடர்பான செயல்பாடுகளில், மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருடன் பணியாற்றும் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகிய இருவரும் கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை எழுத்துப்பூர்வமாக எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளனர்.
புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், பெயர்களை நீக்குதல், வாக்காளர் பட்டியலுக்கான மென்பொருளின் கட்டுப்பாடு போன்ற அடிப்படையான செயல்பாடுகள் அவர்களின் எழுத்துப் பூர்வ எதிர்ப்பில் இடம்பெற்றுள்ளன.
புதிய வாக்காளர்களின் Form-6-ல் என்ன நடந்தது?
புதிய வாக்காளர்கள் பதிவு செய்யும் Form-6 விண்ணப்பத்தில் SIR தொடர்பான புதிய கேள்விகள் சேர்க்கப்பட்டன. முந்தைய SIR வாக்காளர் பட்டியலில் விண்ணப்பதாரர் அல்லது அவரது பெற்றோர்/தாத்தா-பாட்டியின் பெயர் இருந்ததா என்பதைக் குறிப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டதாக Express கண்டறிந்தது.
ஆனால் விவேக் ஜோஷி, விதிகளில் உரிய மாற்றமின்றி Form-6-ஐ இவ்வாறு மாற்ற முடியாது என்று மே மாதமே கோப்பில் குறிப்பிட்டதாகவும், சந்துவும் அதற்கு உடன்பட்டதாகவும் புலனாய்வு கூறுகிறது.
ஆகஸ்டில் சந்து இந்த மாற்றத்தை அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோதம் (unauthorised and illegal) என்று குறிப்பிட்டு உடனடியாக நீக்க வேண்டும் என்று எழுதியதாகவும் Express தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலை உண்மையில் கட்டுப்படுத்தியது யார்?
இதுதான் புலனாய்வின் மிக முக்கியமான பகுதி.
சட்டப்படி தொகுதி அளவிலான வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பணிகளில் Electoral Registration Officer — ERO தான் முக்கிய சட்டப்பூர்வ அதிகாரி.
இத்தகைய நிலையில், வாக்காளர் தரவுத் தளத்துக்கான கட்டுப்பாடு டெல்லியில் மையப்படுத்தப்பட்டதா என்ற கேள்வியை இரண்டு ஆணையர்களும் எழுப்பியதாக Express கூறுகிறது.
ECINet மென்பொருளின் கட்டுப்பாடு காரணமாக உள்ளூர் சட்டப்பூர்வ அதிகாரிகள் சுயமாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டதா என்பதுதான் இங்கு எழும் முக்கியக் கேள்வி.
அதற்கு Express இன்று வெளியிட்ட கோவா உதாரணம் முக்கியமானது. அங்கு 97 பேரை ERO-க்கள் விசாரித்து வாக்களிக்கத் தகுதியானவர்கள் என்று கண்டறிந்தபோதும், ECINet வழியாக அவர்களை மீண்டும் சேர்க்க முடியவில்லை என்பது அதிகாரப்பூர்வ மின்னஞ்சல்களை ஆய்வு செய்த Express புலனாய்வு செய்தி தெரிவிக்கிறது.
மேலும், இறுதிப் பட்டியல் வெளியான பிறகும்கூட அந்த 97 பெயர்களும் இடம்பெறவில்லை என்றும் செய்தி கூறுகிறது.
மேற்கு வங்கத்தில் 16.10 லட்சம் மேல்முறையீடுகள்
இன்னொரு கேள்வியும் மிக முக்கியமானது.
மேற்கு வங்க SIR தொடர்பாக தீர்ப்பாயங்களில் 38.31 லட்சம் மேல்முறையீடுகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 22.21 லட்சம், நீக்கப்பட்ட தங்களது பெயரை மீண்டும் சேர்க்கக் கோரி வாக்காளர்கள் செய்தவை. மேலும் 16.10 லட்சம் மேல்முறையீடுகள், சேர்க்கப்பட்ட வாக்காளர்களை நீக்கக் கோரியவை என்று Express தெரிவித்துள்ளது.
இவற்றை தேர்தல் ஆணையத்தின் சார்பில் தாக்கல் செய்ய யார் அனுமதி அளித்தது? யார் தாக்கல் செய்தார்கள்? என்று சந்து எழுத்துப்பூர்வமாகக் கேள்வி எழுப்பியதாக Express நாளிதழ் கூறுகிறது. தனக்கும் ஜோஷிக்கும் இதுகுறித்து தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் பதிவு செய்ததாக Express நாளிதழ் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையமும் தனது தரப்பைத் தெளிவுபடுத்தியுள்ளது.
உள்ளகக் குறிப்புகள், மாறுபட்ட கருத்துகள், தொழில்நுட்ப ஆலோசனைகள் ஆகியவை ஒரு நிறுவனத்தின் இயல்பான முடிவெடுக்கும் செயல்முறையின் பகுதிகள் என்றும், கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் முழு ஆணையத்தின் ஒருமித்த முடிவுகளின் விளைவுகள் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும் பத்து மாத காலத்தில் உள்ள சில குறிப்புகளை மட்டும் எடுத்துக்காட்டுவது முழுப் படத்தையும் காட்டாது என்பதும் ஆணையத்தின் நிலைப்பாடு.
அப்படியானால் Indian Express நிரூபித்தது என்ன?
இந்தப் புலனாய்வு “தேர்தல் முடிவுகள் மாற்றப்பட்டன” என்றோ, குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வாக்காளர் பட்டியல் திட்டமிட்டு மாற்றப்பட்டது என்றோ குற்றம் சாட்டவில்லை.
ஆனால் மிகவும் முக்கியமான ஒன்றை ஆவணங்களின் அடிப்படையில் வெளிக்கொண்டு வந்திருக்கிறது:
அது...
மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இரண்டு உறுப்பினர்கள், அதாவது பெரும்பான்மை உறுப்பினர்கள், "வாக்காளர்களைச் சேர்ப்பது, நீக்குவது, Form-6 மாற்றம், வாக்காளர் பட்டியலுக்கான மென்பொருள் மற்றும் அதன் கட்டுப்பாடு போன்ற அடிப்படையான விஷயங்களில் தொடர்ச்சியாக எதிர்ப்பை எழுத்துப் பூர்வமாகத் தெரிவித்து வந்துள்ளனர் என்பதே. இந்த எதிர்ப்புகளைத் தாண்டி அல்லது அலட்சியம் செய்து தலைமைத் தேர்தல் ஆணையர் முடிவுகளை எடுத்து பல லட்சம் வாக்காளர்களின் சேர்ப்பு / நீக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளாரா என்பதே !
ஒரு குடிமகனின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது அல்லது நீக்குவது யாருடைய அதிகாரம்? அந்த சட்டப்பூர்வ அதிகாரத்தை ஒரு மையப்படுத்தப்பட்ட மென்பொருள் அமைப்பை வைத்து நடைமுறையில் கட்டுப்படுத்த முடியுமா? இரண்டு தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்புகளுக்குப் பிறகும் பிரச்சனைக்குரிய நடவடிக்கைகள் எவ்வாறு தொடர்ந்தன?
இந்தக் கேள்விகளுக்கான முழுமையான பதில்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் தேவை !
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)