பத்திரிகையாளர் அங்கீகார அட்டையில் பாரபட்சமா? அமைச்சர் ராஜ்மோகனுக்கு சங்கத்தினர் கேள்வி!

தமிழகத்தில் பத்திரிகையாளர் அங்கீகாரக் குழு அமைப்பதில் சங்கப் பிரதிநிதிகள் புறக்கணிக்கப் படுகிறார்களா? சிறு, குறு, நடுத்தரப் பத்திரிகையாளர்களுக்கு அங்கீகார அட்டை மறுக்கப்படுவதாகப் புகார். அமைச்சர் ராஜ்மோகனுக்கு பத்திரிகையாளர் சங்கத்தினர் கேள்வி.

Nov 12, 2026 - 19:57
Updated: 4 hours ago
0 94
பத்திரிகையாளர் அங்கீகார அட்டையில் பாரபட்சமா? அமைச்சர் ராஜ்மோகனுக்கு சங்கத்தினர் கேள்வி!

இதுவா மாற்றம் அமைச்சர் ராஜ்மோகன் அவர்களே?

பத்திரிகையாளர்கள் சங்கத்தினர் கேள்வி !

சென்னையில் பத்திரிகையாளர்கள் மிதிவண்டிகளில் சென்று செய்தி சேகரித்த நிலையைக் கண்ட அப்போதைய ஆட்சியாளர்கள் அவர்களுக்கு நகரப் பேருந்தில் கட்டணமில்லாப் பயணத்திற்கு அட்டைகள் வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தனர். மேலும் ரயில் பயணங்களுக்கு 50 விழுக்காடு சலுகைத் திட்டமும் கொண்டுவரப்பட்டன. இந்தத் திட்டத்தில் பங்கேற்க அந்தப் பத்திரிகையாளர் அரசு சார்பில் பத்திரிகையாளர் அங்கீகார அட்டை பெற்றவராக இருக்க வேண்டும்.

இத்தகைய அரசு அங்கீகார அட்டை பெற்ற பத்திரிகையாளர்கள் பணியின்போது இறந்தால் இழப்பீடு உள்ளிட்ட சில சலுகைகளும் பெறுவார்கள்.

இத்தகைய அங்கீகார அட்டை பெறத் தகுதிதியுடைய பத்திரிகையாளர்களைத் தேர்ந்தெடுக்க இந்திய அரசில் பதிவு பெற்ற பத்திரிகையாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் இடம்பெறும் ஒரு குழு அமைக்கப்படவேண்டும் என்பது விதி.

அதன்படி,

குழுவின் அமைப்பு (Constitution of the Committee)

சென்னை நகரில் செய்தி ஊடகப் பிரதிநிதிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக, அரசு பின்வரும் பதினான்கு உறுப்பினர்களைக் கொண்ட மாநிலச் செய்தி ஊடக அங்கீகாரக் குழுவை அமைக்கலாம்.

  • (அ) அகில இந்திய செய்தித்தாள் ஆசிரியர்கள் மாநாடு (AINEC), புதுதில்லி பரிந்துரைக்கும் நான்கு உறுப்பினர்கள்.
  • (ஆ) இந்திய உழைக்கும் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு (IFWJ), புதுதில்லி பரிந்துரைக்கும் நான்கு உறுப்பினர்கள்.
  • (இ) மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்டு (MRG) பரிந்துரைக்கும் ஓர் உறுப்பினர்.
  • (ஈ) தேசியப் பத்திரிகையாளர் சங்கம் (NUJ), புதுதில்லி பரிந்துரைக்கும் ஓர் உறுப்பினர்.
  • (உ) தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் (TUJ), சென்னை பரிந்துரைக்கும் ஓர் உறுப்பினர்.
  • (ஊ) தமிழ்நாடு அரசு பரிந்துரைக்கும் மூன்று உறுப்பினர்கள் (அரசு நியமன உறுப்பினர்கள்).

இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் செயல்படுவார்.

இந்திய உழைக்கும் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பும், தேசியப் பத்திரிகையாளர் சங்கமும் (இந்தியா) நிருபர்கள் அல்லது செய்தியாளர்களாகப் பணியாற்றுவோரையே உறுப்பினர்களாகப் பரிந்துரைக்க வேண்டும்.

இந்தக் குழுவின் பணிகளாக,

(அ) செய்தி ஊடகப் பிரதிநிதிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல் அல்லது வழங்கிய அங்கீகாரத்தைத் திரும்பப் பெறுதல்.

(ஆ) செய்தி ஊடகப் பிரதிநிதிகளின் அங்கீகாரத்தைப் புதுப்பித்தல்.

ஆகியவை வரையறுக்கப்பட்டன.

இந்த அரசு ஆணை, கடந்த 2021ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி வருவதற்கு முன்புவரை செயல்பாட்டில் இருந்தது.

ஆனால் கடந்த 2021-26 மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் தொடக்கத்திலேயே இந்த அரசாணை இரத்து செய்யப்பட்டு, திமுகவினருக்கு ஆதரவான பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரை விருப்பத்தின்பேரில் குழுவில் சேர்க்கும் முறையை அப்போதைய அரசு கொண்டுவந்தது.

இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில் முறையாக குழு அமைத்து அங்கீகார அட்டை தரவேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆனால், திருத்தம் செய்யப்பட்ட அரசாணையில் பத்திரிகையாளர் சங்கப் பிரதிநிதிகள் அல்லாத ஆளும் அரசின் விருப்பத்தின்பேரில் குழு அமைக்குமாறு செய்யப்பட்டது.

இதனால் அங்கீகாரக் குழுவில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர், அமைச்சர், அமைச்சரின் உதவியாளர் உள்ளிட்டோர் விரும்பும் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அங்கீகார அட்டை கிடைக்கும் நிலை ஏற்பட்டது.

இது குறித்து கடும் அதிருப்தி வெளியான நிலையில், திமுக ஆட்சி மாறி தவெக ஆட்சி வந்த பிறகாவது முந்தைய அரசாணையின்படி பத்திரிகையாளர் சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், திமுக ஆட்சிபோலவே தங்களுக்கு ஆதரவான பத்திரிகை ஊடகர்களை வைத்து இப்போதைய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், அங்கீகார அட்டை விண்ணப்பம் அனுப்ப நினைவூட்டும் மின்னஞ்சல்கள் பெரிய விளம்பரமான தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் இந்த முறையும் அனுப்பப்பட்டிருக்கிறது.

நடுத்தர மற்றும் சிறு அளவில் வெளியிடப்பட்டு விற்பனையாகும் பத்திரிகைகளின் செய்தியாளர்கள் முற்றும் முழுதுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அங்கீகார அட்டையின் முதன்மை நோக்கங்கள்...

எளிய நிலையில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு அங்கீகார அட்டை, பேருந்து கட்டணமில்லா அட்டை, பணியின்போது இறந்தால் இழப்பீடு தேவைப்படும் நிலையில் உள்ள பத்திரிகையாளர்களே....

ஆனால், திமுக ஆட்சியிலும் தவெக ஆட்சியிலும் வசதி படைத்த, பணக்கார, பெருநிறுவனங்களில் அதிலும் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு இந்த அங்கீகார அட்டை தரும் அவலம் அரங்கேறி வருகிறது.

நீதிமன்ற வழிகாட்டுதல்களைத் திரித்து, பத்திரிகையாளர் சங்கப் பிரதிநிதிகளைப் புறக்கணித்துவிட்டு முந்தைய திமுக ஆட்சியில் நடுத்தர மற்றும் சிறு அளவில் வெளியிடப்படும் பத்திரிகையாளர்களுக்கு இந்த அங்கீகார அட்டை திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டது.

அதையே பின்பற்றும் தவெக அரசை எப்படி திமுகவின் மாற்று என்றும்...நியாயமான அரசு என்றும் கருத முடியும்? என்று சிறு, குறு, நடுத்தர பத்திரிகைச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அமைச்சர் ராஜ்மோகனும் அவரது செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையினரும் செய்தியாளர்களிடையே பாரபட்சம் பார்க்கிறார்களா? ஏற்றத்தாழ்வு பார்க்கிறார்களா? எனும் கேள்வியையும் அவர்கள் எழுப்புகிறார்கள். அல்லது அமைச்சர் ராஜ்மோகனை துறை அதிகாரிகள் தவறாக வழி நடத்துகிறார்களா? என்றும் கேட்கிறார்கள்.

மாற்றம் என்பது விளம்பரச் சொல்லாக இருக்கக் கூடாது அது செயல்முறையில் இருக்கவேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

அமைச்சர் ராஜ்மோகன் அவர்களே, முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் ஆட்சியில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை நேர்மையாக செயல்படுவதை உறுதிப்படுத்துங்கள் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User