கமல்ஹாசன்: திரைத்திறமைக்குப் பின்னால் வன்மங்களும் முரண்பாடுகளும் மறைந்திருக்கின்றனவா?

கமல்ஹாசனின் 50 ஆண்டுகாலத் திரைப்பயணம், ரஜினிகாந்துடனான ஒப்பீடு, புன்னகை மன்னன், தெனாலி, விருமாண்டி திரைப்படச் சர்ச்சைகள், தமிழர் அடையாளம் மற்றும் சண்டியர் விவாதம் குறித்த பத்திரிகையாளர் நாச்சி செல்வராஜின் விமர்சன அலசல்.

Nov 11, 2026 - 18:32
Updated: 4 hours ago
0 38
கமல்ஹாசன்: திரைத்திறமைக்குப் பின்னால் வன்மங்களும் முரண்பாடுகளும் மறைந்திருக்கின்றனவா?

-நாச்சி செல்வராஜ், பத்திரிகையாளர்

1974ஆம் ஆண்டு முதல் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய கமல்ஹாசன், 1975ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாகத் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கிக் கொண்டார்.

தமிழ்த் திரையுலகில் கடந்த சுமார் 15 ஆண்டுகளில் கமல்ஹாசன் நடித்த பல திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும், வணிக ரீதியாகவும் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படமாக விக்ரம் (2022) படத்தைக் கூறமுடியும்.

கமல்ஹாசனின் போட்டி நடிகராகக் கடந்த 45 ஆண்டு காலமாகக் கருதப்பட்ட ரஜினிகாந்த் கடந்த பல தசாப்தங்களாக இந்தியத் திரையுலகில் வணிகச் செல்வாக்கையும் ரசிகர் ஆதரவையும் தொடர்ந்து தக்கவைத்திருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

அதே ரஜினிகாந்தை நாயகனாகக் கொண்டு, அவரது திரைப்படத்தைத் தயாரிக்கும் நிலைக்கு இன்று வந்திருக்கிறார் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் திரையுலகில் ரஜினி போல நிலைத்து நிற்க விரும்பவில்லையா அல்லது ஏற்ற இறக்கங்களுடன் அமைவதுதான் அவரது திரைப்பட வாழ்க்கையா என்று அலசுகிறது இந்தக் கட்டுரை.

"தான் ஒரு உயர்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும் சமூக முற்போக்குத் தனத்தை முன்நிறுத்தி பாரதியார், பெரியார் இராமசாமி, அம்பேத்கர் கொள்கைகளைப் பின்பற்றுவதாக" கமல்ஹாசன் அடிக்கடி கூறுவார். 

சாதி சமய ஏற்றத்தாழ்வைப் பாவிக்கக் கூடியவன் தான் அல்ல என்பதே 'அன்பே சிவம்' படத்தின் கதைக்கரு. ஆனால் கடந்த 50 ஆண்டுகால அவரது திரையுலக வாழ்க்கையைப் புரட்டிப் பார்த்தால், மொழி, மற்றும் சாதி ரீதியான நுட்பமான சீண்டல்கள் அவரது படங்களில் இருக்கவே செய்கின்றன.

இதற்குப் பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். இருந்தாலும் ஒரு சில சம்பவங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

1983 ஜூலை மாதம் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கருப்பு ஜூலை இனவன்முறையின் ஒரு பகுதியாக, கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையிலும் கொடூரமான படுகொலை அரங்கேறியது. 1983 ஜூலை 25 அன்று தமிழ் அரசியல் கைதியான குட்டிமணி உள்ளிட்டோர் கண்கள் பிடுங்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். ஜூலை 25 மற்றும் 27 ஆகிய இரு நாட்களில் மட்டும் 53 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

அதற்குப் பின்னர் 1986ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'புன்னகை மன்னன்' திரைப்படம் வெளியானது.

அதில் ரேவதி நடித்த மாலினி கதாபாத்திரம் சிங்களப் பெண்ணாகச் சித்தரிக்கப்பட்டிருந்தது. "சிங்களத்துச் சின்னக்குயிலே ஒரு மந்திரத்தைச் சொல்லும் மயிலே" என்ற பாடலும் இடம்பெற்றிருந்தது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனவன்முறைகள் நிகழ்ந்த சில ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியான இந்தத் திரைப்படத்தின் சித்தரிப்பு, தமிழர் அரசியல் உணர்வுகளின் பின்னணியில் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.

அடுத்து 2000ஆம் ஆண்டு இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுப் படைகளுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்திருந்தது. இலங்கை அரசுப் படைகளுக்கு வெளிநாடுகளிலிருந்து ஆயுத மற்றும் ராணுவ உதவிகள் கிடைத்துக் கொண்டிருந்த காலகட்டம் அது.

விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த ஆயிரக்கணக்கானவர்களை 'மாவீரர்கள்' என்று தமிழர்கள் இன்றும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட காலகட்டத்தில் கமல்ஹாசன் நடித்த 'தெனாலி' திரைப்படம் வெளியானது. அதில் அவர் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பல்வேறு உளவியல் அச்சங்கள் மற்றும் பயங்களால் பாதிக்கப்பட்டவராக, நகைச்சுவைத் தன்மையுடன் அந்தக் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் போர் தீவிரமடைந்திருந்த 2000ஆம் ஆண்டில், ஈழத் தமிழர் ஒருவரை இத்தகைய அச்சங்கள் நிறைந்த கதாபாத்திரமாகச் சித்தரித்திருப்பது நெருடலை ஏற்படுத்தியது. அந்தக் கதாபாத்திரத்தின் சமூகப் பொருத்தம் குறித்த கேள்விகள் அப்போதே எழுந்தன.

2000 நவம்பர் 6ஆம் தேதி வெளியான Rediff திரைப்பட விமர்சனத்தில்கூட, அந்தக் கதாபாத்திரம் ஏன் இலங்கைத் தமிழராக இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

உண்மையில் தமிழ் உணர்வு, தமிழர் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றைப் போற்றிப் புகழும் ஒருவர் இந்தக் காரியத்தைச் செய்வாரா? என அப்போது கமலுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.

கமல் ஒரு ஆரிய வைணவர் என்றும், அதனால் தமிழர்களையும், தமிழையும் இப்படி வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தமது திரைப்படங்களில் இழிவாகக் காட்டுவதாகவும் கமல்ஹாசன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

பொதுவாகவே கமல்ஹாசனின் பெரும்பாலான படங்கள் வைணவத்தை உயர்த்திப் பிடித்தும் சைவத்தை மட்டம் தட்டியும் இருந்து வந்துள்ளன என்பதை அவரது படங்களைக் கூர்ந்து கவனித்தாலே தெரியும்.

தனது திரைத்துறைத் திறமைகளில் இதுபோன்ற வன்மத்தை நுட்பமாக நுழைப்பதில் கமல்ஹாசன் வல்லவர்.

அதே பாணியில் தற்போது சண்டியர் என்ற பெயரை இரண்டாவது முறையாக முன்னெடுத்து வந்திருக்கிறார் கமல்ஹாசன்.

22 ஆண்டுகளுக்கு முன்பே சண்டியர் என்ற தலைப்பு சர்ச்சைக்குள்ளானது. அப்போதைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவைச் சந்தித்த பின்னர், அந்தத் தலைப்பைக் கைவிடுவதாக கமல்ஹாசன் அறிவித்தார். பின்னர் திரைப்படத்திற்கு 'விருமாண்டி' என்று பெயர் சூட்டப்பட்டது.

அன்றைய சர்ச்சைக்குப் பின்னணியாக இருந்த சமூக மற்றும் அரசியல் விவாதங்கள் இன்றும் தொடர்கின்றன. அப்போது தலைப்பைக் கைவிட்ட கமல்ஹாசன், மீண்டும் அதே பெயரைத் தனது புதிய திரைப்படத்திற்குப் பயன்படுத்துவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

தற்போது மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கும் கமல்ஹாசன், இந்தப் பெயர் தொடர்பான பழைய சர்ச்சையையும் அதன் சமூகப் பின்னணியையும் கருத்தில் கொண்டாரா என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டியுள்ளது.

அப்போதே அப்போதைய முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா வேண்டாம் என்று சொன்ன அதே பெயரை மீண்டும் இப்போது சூட்டும் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினரும்கூட.  இப்படிப்பட்ட நிலையில் இவ்வாறு மீண்டும் அதே பெயர் வைப்பது இறையாண்மைக்கு எதிரான செயல்பாடு என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி  உள்ளிட்ட பலர் கூறுகின்றனர்.

தமிழ்ச் சமூகத்தை வீரப் பரம்பரையாக சித்தரிக்காவிட்டாலும் பரவாயில்லை அவர்களை வன்முறையாளர்கள் போல சித்தரிப்பதும், ஒரு சமூகத்தின் சில காட்சிகளைப் படமாக்கி பிற சமூகங்களுக்கு இடையில் வெறுப்பை அல்லது அச்சத்தை உண்டாகும் வகையிலும் திரைப்படங்கள் எடுத்தே ஆகவேண்டும் என்று கமல்ஹாசனுக்கு என்ன அப்படிப்பட்ட தேவை? எனும் கேள்வி எழுகிறது.

ஒரு திரைப்படம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு உதவுவதாக இருத்தல் வேண்டும், மாறாக அந்த சமூகத்தைப் பின்னுக்குத் தள்ளுவதாகவும், அச்சத்தையும் முரண்பாடுகளையும்  ஏற்படுத்தும் வகையிலும் இருத்தல் கூடாது.

கமல்ஹாசனின் பல்துறைத் திறன்கள் வியக்க வைப்பவை. அதேவேளை கமல்ஹாசனின் சில நுட்பமான வன்மங்கள் மகாகவி பாரதியின் இந்த வரிகளை நினைவூட்டுகின்றன.

"படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான், போவான்; ஐயோ என்று போவான்!"

பொதுவாழ்விலும், திரை வாழ்விலும் முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருந்து வரும் கமல்ஹாசன் இனியாவது தன்னை மாற்றிக் கொள்வாரா என்பதே தமிழ் ரசிகர்களின் ஒட்டுமொத்த கேள்வி.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User