குடவோலை முதல் தேர்தல் முறை வரை: அன்று யாருக்கு வாக்குரிமை? | தொடர்–2

சோழர் கால குடவோலை முறை முதல் சென்னை மாகாணத் தேர்தல் வரை, வாக்குரிமை, சொத்து மற்றும் வரி விதித்த கட்டுப்பாடுகளைப் பேசுகிறது இந்த அரசியல் தொடர்.

Nov 09, 2026 - 15:36
Updated: 10 hours ago
0 11
குடவோலை முதல் தேர்தல் முறை வரை: அன்று யாருக்கு வாக்குரிமை? | தொடர்–2

அதனால் அரசியல் பேசுகிறேன்!

பத்திரிகையாளர் ஜோதி நரசிம்மன் எழுதும் தொடர்- 2

சோழ மன்னராட்சி காலத்திலேயே மக்கள் பிரதிநிதிகளை மக்களே தேர்ந்தெடுக்கும் குடவோலை முறை இருந்து வந்துள்ளது. 

குடவோலை முறை என்பது இரண்டு மண் குடங்கள் வைக்கப்பட்டுப் போட்டியிடும் இரண்டு பிரதிநிதிகள் சார்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதிக வாக்குகள் பெறுகின்றவர் தேர்வானவர் என்று முடிவெடுக்கப்பட்டது. அதாவது இன்றைய வாக்குப் பெட்டிகள் போல அன்று மண் குடங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன, வாக்குசீட்டுகள் போல பனை ஓலைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

‎

‎கொஞ்சம் கொஞ்சமாக இந்த நடைமுறைகள் மாறி வாக்குப்பெட்டி முறைக்கு தேர்தல் முறை மாற்றமானது. பச்சை, மஞ்சள், சிவப்பு என மூன்று பெட்டிகள் அமைக்கப்பட்டு அதில் கட்சிகள், வேட்பாளர்கள் அடிப்படையில் நிறம் ஒதுக்கப்பட்டு வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். அப்படி வாக்களிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளை எண்ணி யார் அதிக வாக்குகள் பெற்றார்களோ அந்த அடிப்படையில் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இப்படித்தான் அந்தக் காலத்திலேயே ஜனநாயக முறை இருந்து வந்தது எனலாம். அதுவும் முழுமையான ஜனநாயகமா என்றால் இல்லை.

‎

‎இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆட்சியில் பங்கேற்பார்கள். சரி இந்த பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பவர்கள் யார்? என்றால் இப்போது இருப்பது போல 18 வயது நிரம்பிய யாரும் வாக்களிக்கலாம் என்றால் அதுதான் முடியாது.

‎

வாக்களிக்க 22 வயது நிரம்பி இருக்க வேண்டும். 22 வயது என்றால் ஆண்களுக்கு மட்டும்தான். ஆமாம், பெண்களுக்கு வாக்குரிமை இல்லை.

22 வயதான எல்லா ஆண்களுக்கும் வாக்குரிமை உண்டா என்றால் அதுவும் இல்லை. சொத்து வைத்து இருப்பவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை உண்டு. அது மட்டுமல்ல சொத்து வைத்துக் கொண்டிருந்தாலும், அரசுக்கு வரி செலுத்துகிற அடிப்படையிலேதான் வாக்களிக்க உரிமை உண்டு.

அது என்ன...அரசுக்கு வரி செலுத்துகிறவர்கள், அதிலும் சில கட்டுப்பாடுகள்? எனும் கேள்வி எழலாம்.

அதேபோல கிராமப்புறத்தில் உள்ளவர்கள் வாக்களிக்கலாமா என்றால், ஆம் அளிக்கலாம். ஆனால், அவர்கள் அரசுக்கு ஆண்டுக்கு பத்து ரூபாய் வரி கட்டுபவர்களாக இருக்க வேண்டும்.

நகர்ப்புறத்தில் இருக்கின்றவர்கள் நகராட்சிக்கு மூன்று ரூபாய் வரி செலுத்துபவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு. அந்தக் காலத்தில் வாக்களிக்க இவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தன.

சென்னை மாகாணத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து அப்போது 12 லட்சத்து 48 ஆயிரத்து 156 பேர் மட்டுமே வாக்களிக்கும் தகுதி பெற்று இருந்தார்கள்.

அப்போது சென்னை மாகாணத்தின் மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா 4 கோடி.

நாலு கோடி எங்கே? 12 லட்சம் எங்கே?

அடுத்த பகுதியில் பார்ப்போம் 

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User