ஜோசப் விஜய் அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்? அரசுக்கு ஆபத்தா?

ஜோசப் விஜய் அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடியுமா? ஆறு மாத இடைவெளி, சட்டமன்ற விதிகள், 24 உறுப்பினர்கள் ஆதரவு, தவெக அரசின் பெரும்பான்மை பலம் குறித்து விரிவான அரசியல் சட்ட ஆய்வு.

Nov 10, 2026 - 22:00
Updated: 24 hours ago
0 60
ஜோசப் விஜய் அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்? அரசுக்கு ஆபத்தா?

ஜோசப் விஜய் அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்!? அரசுக்கு ஆபத்தா?!

சட்டமன்ற விதிகள் என்ன சொல்கின்றன? ஆளும்கட்சியின் வலிமை என்ன?!

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம்

அரசின் மீதான ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கும் மற்றொரு தீர்மானத்திற்கும் இடையில் ஆறு மாதங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற சட்ட விதி இந்திய அரசியலமைப்பிலோ, தமிழ்நாடு சட்டமன்ற நடைமுறை விதிகளிலோ இல்லை.

ஆனால் அதேவேளை, இந்திய அரசியல் சாசன சட்ட விதி 174(1) யின்படி ஒரு நம்பிக்கைத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடந்தவுடன் குறுகிய காலத்தில் அடுத்த தீர்மானம் கொண்டு வரமுடியாது. ஆனால் அதேவேளை ஆறு மாதத்திற்கு ஒருமுறை சட்டமன்றம் / நாடாளுமன்றம் கூட்டப்படவேண்டும் என்பது விதி. அந்த வகையில் ஆறுமாதம் கழித்து மீண்டும் சட்டமன்றம் கூடும்போது எதிர்க்கட்சிகள் நம்பிகையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவரலாம். இதைத்தான் ஒரு தீர்மானத்திற்கும் இன்னொரு தீர்மானத்திற்கு ஆறு மாத இடைவெளி என்று பொதுவாகக் கூறப்படுகிறது.



சட்டமன்ற விதி எண் 100 ன் படி ஒரு கூட்டத்தொடரில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதுபோலவே மற்றொரு தீர்மானம் அதே கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட முடியாது.

2026 மே மாதம் 13ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்றது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு கொண்டுவந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு (Confidence Motion) ஆகும்.

ஆனால், இனி எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்தால் அது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு (No-Confidence Motion) ஆகும். இவை இரண்டும் ஒன்றல்ல. முதலாவது அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பது; இரண்டாவது அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதா என்பதைச் சோதிப்பது.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது எப்படி?

தமிழ்நாடு சட்டமன்ற நடைமுறை விதி 72-ன்படி, அமைச்சரவையின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வ அறிவிப்பைச் சட்டமன்றச் செயலரிடம் அளிக்க வேண்டும். பின்னர் அவைத்தலைவரின் அனுமதி பெற வேண்டும்.

தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள ஆதரவு கோரும்போது, குறைந்தது 24 உறுப்பினர்கள் எழுந்து ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தின் பழைய நடைமுறை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அவைத்தலைவருக்கு தீர்மானத்தின் ஏற்புடைமையைப் பரிசீலிக்கும் அதிகாரம் உண்டு. நடைமுறை விதிகள் மீறப்பட்டிருந்தால் அனுமதி மறுக்கலாம். ஆனால் அரசியல் காரணங்களுக்காகவோ, ஆளுங்கட்சியைப் பாதுகாக்கும் நோக்கத்திலோ முறையான தீர்மானத்தைத் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது.

ஆளுங்கட்சியின் தற்போதைய உறுப்பினர் பலம் என்ன?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. தற்போதுள்ள கட்சிவாரி உறுப்பினர் எண்ணிக்கை 229 ஆகும்.

தவெக 109

திமுக 59

அதிமுக 41

காங்கிரஸ் 5

பாமக 4

விசிக 2

இந்திய கம்யூனிஸ்ட் 2

இயூ முஸ்லிம் லீக் 2

மார்க்சிஸ்ட் கம்யூ., 2

தேமுதிக 1

பாஜக 1

அமமுக 1

மொத்தம் 229

தவெகவுக்கு 109 உறுப்பினர்கள் உள்ளனர். 234 உறுப்பினர்களைக் கொண்ட முழுமையான சட்டமன்றத்தில் வழக்கமான பெரும்பான்மை அளவு 118 ஆகும். எனவே, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு விஜய் அரசுக்கு முக்கியமானது.

தவெக 109, காங்கிரஸ் 5, விசிக 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2 எனக் கணக்கிட்டால் 118 உறுப்பினர்கள் கிடைக்கின்றனர். இதனுடன் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் பிற ஆதரவு உறுப்பினர்களின் நிலைப்பாடும் அரசின் பெரும்பான்மைக் கணக்கில் முக்கியத்துவம் பெறுகிறது.

மே 13 வாக்கெடுப்பில் என்ன நடந்தது?

மே 13ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாகவும், 22 பேர் எதிராகவும் வாக்களித்தனர். 5 பேர் நடுநிலை வகித்தனர். திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதிமுகவின் ஒரு பகுதி உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாகவும், மற்றொரு பகுதியினர் எதிராகவும் வாக்களித்தனர். இதன் மூலம் அன்றைய தினம் விஜய் அரசு பெரும்பான்மையை நிரூபித்தது.

தீர்மானம் வெற்றி பெற எத்தனை வாக்குகள் தேவை?

இந்திய அரசியலமைப்பின் 189(1)ஆம் பிரிவின்படி, பொதுவாக அவையில் இருந்து வாக்களிக்கும் உறுப்பினர்களின் பெரும்பான்மையே முடிவைத் தீர்மானிக்கும்.

உதாரணமாக, 210 உறுப்பினர்கள் வாக்களித்தால், 110 பேர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாகவும் 100 பேர் எதிராகவும் வாக்களித்தால் தீர்மானம் வெற்றி பெறும்.

வெளிநடப்பு செய்பவர்கள் அல்லது வாக்களிக்காதவர்கள் ஆதரவு அல்லது எதிர்ப்பு வாக்குகளாகக் கணக்கிடப்படுவதில்லை. எனவே, 234 உறுப்பினர்களில் 118 பேர் கட்டாயம் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற பொதுவான நிபந்தனை இல்லை.

தீர்மானம் வெற்றி பெற்றால் அமைச்சரவை சட்டமன்றத்தின் நம்பிக்கையை இழக்கும். முதலமைச்சர் தனது அமைச்சரவையின் ராஜினாமாவைச் சமர்ப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும். மாற்று அரசு அமைக்க முடியுமா என்பது அடுத்தகட்ட அரசியலமைப்புச் சட்ட நடவடிக்கையாகும்.

விஜய் அரசுக்கு ஆபத்தா?

தற்போதைய எண்ணிக்கையில் தவெக தனித்து 109 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. எனவே, அரசின் பெரும்பான்மை என்பது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவையும் சார்ந்துள்ளது.

திமுகவும் அதிமுகவும் இணைந்து செயல்பட்டால் 100 உறுப்பினர்கள் கிடைக்கின்றனர். பாஜக, அமமுக உறுப்பினர்களையும் சேர்த்தால் 102 ஆகிறது. ஆனால் இந்த எண்ணிக்கை மட்டும் அரசைக் கவிழ்க்கப் போதுமானதல்ல. 

அதேநேரத்தில், எதிர்க்கட்சிகள் ஒரே அரசியல் முடிவை எடுத்து ஒருங்கிணைந்து செயல்படுமா என்பதும் கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகும்.

தவெகவின் 109 உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள், அமைச்சர் பதவி வாங்கியுள்ள விசிக உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிக்க வாய்ப்பு இல்லை. அரசுக்கு ஆதரவு கொடுத்துவரும் இடதுசாரிகளும் அரசுக்கு எதிராக வாய்ப்பளிக்க வாய்ப்பில்லை.

மேலும், எதிர்க்கட்சிகள் எண்ணுவதுபோல் ஒருவேளை அரசு கவிழ்ந்தால் ஆளுநர் ஆட்சி நடைமுறைக்கு வரும். ஆளுநர் ஆட்சி வந்தவுடனே மறு தேர்தல் நடத்துவார்கள் என்று கூற முடியாது. ஒரு ஆண்டுக்கு ஆளுநர் மூலமாக இந்திய பாஜக அரசு தமிழ்நாட்டை ஆட்சி செய்ய வாய்ப்பு உள்ளது.

அத்தகைய நிலையை திமுக - அதிமுக ஆகிய கட்சிகள் விரும்புமா என்பது மிக முக்கியமான கேள்வி. தமிழ்நாடு வாக்காளர்கள் விரும்புவார்களா என்பது அதைவிட முக்கியமான கேள்வி.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User