அமர்நாத் ராமகிருஷ்ணாவின் மலேசியப் பயணத்திற்கு அனுமதி மறுப்பு ஏன்? கீழடி ஆய்வறிக்கை சர்ச்சையின் பின்னணி!

கீழடி அகழாய்வு அறிக்கையில் அமர்நாத் ராமகிருஷ்ணா முன்வைத்த கி.மு. 800 காலக்கணிப்பு, ASI நிபுணர் குழுவின் ஆட்சேபனைகள், மலேசியப் பயண அனுமதி மறுப்பு மற்றும் சு.வெங்கடேசனின் அரசியல் தலையீடு குறித்த ஓர் ஆய்வு.

Nov 18, 2026 - 14:57
Updated: 14 hours ago
0 22
அமர்நாத் ராமகிருஷ்ணாவின் மலேசியப் பயணத்திற்கு அனுமதி மறுப்பு ஏன்? கீழடி ஆய்வறிக்கை சர்ச்சையின் பின்னணி!

இந்தியத் தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணாவின் மலேசியப் பயணத்திற்கு அனுமதி மறுப்பு: ASI அலுவலக விதிகளை ஏற்க மறுத்தாரா அமர்நாத்?!

தமிழர்களின் கீழடி ஆய்வில் 15 ஆண்டுகாலமாக அரசியல் விளம்பரம் தேடுகிறார்களா அமர்நாத் ராமகிருஷ்ணாவும், சு.வெங்கடேசனும் !

-- வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம்

தமிழகத்தின் கீழடி அகழாய்வு சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், அந்த அகழாய்வின் முதல் இரண்டு கட்டங்களை முன்னின்று நடத்திய இந்தியத் தொல்லியல் துறை அதிகாரி கி. அமர்நாத் ராமகிருஷ்ணாவின் மலேசியப் பயணத்திற்கு இந்தியத் தொல்லியல் துறை (ASI) அனுமதி மறுத்திருப்பது புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்குப் பிறகு 10 கட்ட அகழாய்வு அதே கீழடியில் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டுள்ள நிலையில் முதல் இரண்டு கட்ட ஆய்வுகள் மட்டும் தொடர்ந்து அரசியல் ஆக்கப்படுவதன் பின்னணி என்ன ?

2026 டிசம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவுள்ள தமிழ் வரலாற்று ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்க அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், ASI விதித்த அலுவல்பூர்வ விதிகளை ஏற்க மறுத்ததால் அவருக்கு வெளிநாட்டுப் பயணத்திற்கான தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.

இந்த அனுமதி மறுப்பின் பின்னணியில் கீழடி அகழாய்வு அறிக்கை தொடர்பான நீண்டகால முரண்பாடு இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அப்படியானால் கீழடி அறிக்கையில் என்ன பிரச்சினை? அமர்நாத் ராமகிருஷ்ணா முன்வைத்த காலக்கணிப்பு ஏன் கேள்விக்குள்ளானது? ASI எழுப்பிய ஆட்சேபனைகள் என்ன?

இவற்றை ஆவணங்களின் அடிப்படையில் பார்ப்போம்.

அமர்நாத் ராமகிருஷ்ணா ASI என்று அழைக்கப்படும் இந்தியத் தொல்லியல் துறையின் ஒப்பந்தப் பணியாளரோ அல்லது தன்னார்வப் பணியாளரோ அல்ல. அவர் முழுநேர அரசுப் பணியாளர்.

1. மலேசியப் பயணத்திற்கு ASI விதித்த நிபந்தனைகள் என்ன?

கோலாலம்பூரில் நடைபெறவுள்ள தமிழ் வரலாற்று ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்க அமர்நாத் ராமகிருஷ்ணா அனுமதி கோரியிருந்தார்.

வெளிநாட்டு விருந்தோம்பல் மற்றும் பயண அனுமதிக்கான FCRA நடைமுறையில் தடையில்லாச் சான்றிதழ் வழங்குவதற்கு முன்பாக ASI நிர்வாகம் சில நிபந்தனைகளை விதித்தது.

அதன்படி:

+ மாநாட்டில் நிகழ்த்தும் உரையின் எழுத்துப்பூர்வ நகலைச் சமர்ப்பிக்க வேண்டும்.

+ இந்தியா திரும்பிய பின்னர் உரையின் காணொலிப் பதிவையும் சமர்ப்பிக்க வேண்டும்.

+ இந்தியத் தொல்லியல் துறை அல்லது இந்திய அரசின் செயல்பாடுகள், கொள்கைகள், நற்பெயர் ஆகியவற்றை விமர்சிக்கும் கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது.

+ இந்திய அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டுக்கு முரணான கருத்துகள் மாநாட்டில் இடம்பெறக் கூடாது.

இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளித்தால் மட்டுமே தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்படும் என்று ASI தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த உறுதிமொழியை வழங்க அமர்நாத் ராமகிருஷ்ணா மறுத்துவிட்டார். இதனால் அவரது மலேசியப் பயணத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை.

கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற மாநாட்டிலும் பங்கேற்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.

2. கீழடி அகழாய்வில் அமர்நாத் ராமகிருஷ்ணாவின் பங்கு

2014–15 மற்றும் 2015–16 ஆகிய ஆண்டுகளில் கீழடியில் நடைபெற்ற முதல் இரண்டு கட்ட அகழாய்வுகளை அமர்நாத் ராமகிருஷ்ணா முன்னின்று நடத்தினார்.

இந்த அகழாய்வுகளில் செங்கல் கட்டுமானங்கள், வடிகால் அமைப்புகள், மட்பாண்டங்கள், எழுத்துப் பொறிப்புகள், தொழில்சார் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தொல்லியல் சான்றுகள் கிடைத்தன.

இந்த ஆய்வுகளின் அடிப்படையில் 982 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையைத் தயாரித்து 2023 ஜனவரியில் ASI-யிடம் சமர்ப்பித்தார் அமர்நாத் ராமகிருஷ்ணா.

அந்த அறிக்கையில் கீழடியின் பண்பாட்டுக் காலத்தை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தியிருந்தார்.

1. முதல் காலகட்டம் – கி.மு. 8ஆம் நூற்றாண்டு முதல் 5ஆம் நூற்றாண்டு வரை.

2. இரண்டாவது காலகட்டம் – கி.மு. 5ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 1ஆம் நூற்றாண்டு வரை.

3. மூன்றாவது காலகட்டம் – கி.மு. 1ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை.

குறிப்பாக முதல் காலகட்டத்தை கி.மு. 800 வரை பின்னோக்கிக் கொண்டு சென்றதுதான் முக்கியமான அறிவியல் விவாதமாக மாறியது.

3. கி.மு. 800 காலக்கணிப்பு – ASI எழுப்பிய ஆட்சேபனை என்ன?

இதுதான் இந்த விவகாரத்தின் மிக முக்கியமான பகுதி.

அமர்நாத் ராமகிருஷ்ணாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கி.மு. 8ஆம் நூற்றாண்டு முதல் 5ஆம் நூற்றாண்டு வரையிலான முதல் காலகட்டத்திற்குப் போதுமான அறிவியல் நியாயப்படுத்தல் இல்லை என்று ASI நிபுணர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.

2025 ஜூலை 21ஆம் தேதி மக்களவையில் மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அளித்த பதிலுடன் இணைக்கப்பட்ட நிபுணர் கருத்துகளில், முதல் காலகட்டத்திற்கான கி.மு. 8–5ஆம் நூற்றாண்டு காலக்கணிப்பு நியாயப்படுத்தப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தற்போதுள்ள அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் முதல் காலகட்டத்தின் தொடக்கத்தை அதிகபட்சமாக கி.மு. 300க்கு முந்தைய காலத்துடன் தொடர்புபடுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மற்ற இரண்டு காலகட்டங்களையும் அறிவியல் AMS காலக்கணிப்பு, கிடைத்த பொருட்கள் மற்றும் அவை கண்டெடுக்கப்பட்ட அடுக்கியல் விவரங்களின் அடிப்படையில் மறுநிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் நிபுணர்கள் பரிந்துரைத்தனர்.

இதன் அடிப்படையில் அமர்நாத் ராமகிருஷ்ணாவின் அறிக்கையில் காலக்கணிப்பு தொடர்பான விளக்கங்களும் திருத்தங்களும் கோரப்பட்டன.

4. ஆய்வக அறிக்கை என்ன சொல்கிறது? கி.மு. 300 – கி.மு. 800 முரண்பாடு!

இந்த விவகாரத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்படும் மற்றொரு குற்றச்சாட்டு, ஆய்வகக் காலக்கணிப்புக்கும் அமர்நாத் முன்வைத்த காலக்கணிப்புக்கும் இடையிலான வேறுபாடாகும்.

அவரது அறிக்கையில் AMS காலக்கணிப்புகளையொட்டி 23 பொருட்களின் காலக்கணிப்பு முடிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் கி.மு. 8ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையிலான விரிவான காலவரிசையை அமர்நாத் உருவாக்கியதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

இங்கு ஒரு முக்கியமான வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கார்பன் காலக்கணிப்பு அல்லது AMS பரிசோதனை என்பது ஒரு குறிப்பிட்ட கரிம மாதிரியின் காலத்தை நிர்ணயிக்கிறது. அந்த மாதிரி எந்த அகழாய்வு அடுக்கிலிருந்து எடுக்கப்பட்டது, அதனுடன் கிடைத்த பொருட்கள் என்ன, அடுக்குகளின் காலவரிசை என்ன என்பவற்றையும் இணைத்தே ஒரு தொல்லியல் தளத்தின் பண்பாட்டுக் காலம் நிர்ணயிக்கப்படுகிறது.

எனவே, ஒரு குறிப்பிட்ட ஆய்வக முடிவை மட்டும் வைத்து ஒட்டுமொத்த அகழாய்வுத் தளத்தின் காலத்தைத் தீர்மானிக்க முடியாது.

அதேபோல், கி.மு. 800 என்ற காலக்கணிப்பை முன்வைக்கும்போது அதற்கான மாதிரி எண்கள், ஆய்வக முடிவுகள், அடுக்கியல் தொடர்புகள் ஆகியவற்றைத் தெளிவாக விளக்க வேண்டிய பொறுப்பு ஆய்வாளருக்கு (அமர்நாத்துக்கு) உண்டு.

5. ASI நிபுணர் குழு கண்டறிந்த குறைபாடுகள் என்ன?

அமர்நாத் சமர்ப்பித்த 982 பக்க அறிக்கையை ஆய்வு செய்த ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ASI நிபுணர் குழு 114 பக்க மதிப்பீட்டு அறிக்கையைத் தயாரித்தது.

அதில் காலக்கணிப்பு மட்டுமல்லாமல் பல்வேறு ஆவண மற்றும் ஆய்வு முறைக் குறைபாடுகளும் சுட்டிக்காட்டப்பட்டன.

முக்கியமாக:

அ. காலக்கணிப்பு நியாயப்படுத்தல்: முதல் பண்பாட்டுக் காலகட்டத்திற்கான கி.மு. 8–5ஆம் நூற்றாண்டு காலவரம்புக்கு உறுதியான அறிவியல் விளக்கம் தேவை.

ஆ. காலகட்டங்களின் வகைப்பாடு: மூன்று காலகட்டங்களுக்கான பெயரிடல் மற்றும் பண்பாட்டு வகைப்பாட்டை மறுசீரமைக்க வேண்டும்.

இ. அடுக்கியல் விவரங்கள்: தொல்பொருட்கள் எந்த அடுக்கில் கிடைத்தன என்பதற்கான தெளிவான அடுக்கியல் விவரங்களையும், அவற்றின் காலக்கணிப்பையும் இணைக்க வேண்டும்.

ஈ. வரைபடங்கள் மற்றும் ஆவணங்கள்: கிராம வரைபடத்தின் தெளிவின்மை, சில படங்கள் விடுபட்டிருத்தல், அகழாய்வுக் குழிகளின் அமைவிட வரைபடங்கள், அடுக்கியல் வரைபடங்கள் மற்றும் சில வரைபட ஆவணங்களின் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன.

உ. ஆய்வு விளக்கம்: வரலாற்றுப் பின்னணி, இலக்கியக் குறிப்புகள், தொல்லியல் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைத் தெளிவாகப் பிரித்து விளக்க வேண்டும் என்றும், சில பண்பாட்டு அடையாளங்கள் போதுமான ஆதாரங்களுடன் நிறுவப்படவில்லை என்றும் குழு கருத்து தெரிவித்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தக் குறைபாடுகளைக் குறிப்பிட்டு அறிக்கையைத் திருத்துமாறு ASI கேட்டது.

ஆனால் அமர்நாத் ராமகிருஷ்ணா இந்த மதிப்பீட்டை ஏற்கவில்லை. தனது காலக்கணிப்பு அடுக்கியல் வரிசை, பண்பாட்டுப் படிவங்கள், பொருள் சான்றுகள் மற்றும் AMS முடிவுகளின் அடிப்படையில் அமைந்தது என்று விளக்கமளித்தார்.

மேலும், ஐந்து பேர் கொண்ட மதிப்பீட்டுக் குழு அகழாய்வுத் தளத்திற்கே நேரில் சென்று ஆய்வு செய்யவில்லை என்றும் விமர்சித்தார். ASI குழுவின் மதிப்பீடு அறிவியல் ரீதியாகப் போதுமானதாக இல்லை என்றும், அது செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் குற்றம்சாட்டினார் அமர்நாத் ராமகிருஷ்ணா.

குழு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளும் என்று ASI சார்பில் அறிவிக்கப்பட்டது.

6. தமிழக அரசின் கீழடி ஆய்வுகளும் வேறுபட்ட காலக்கணிப்பும்

இங்கு தமிழகத் தொல்லியல் துறையின் ஆய்வுகளையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

கீழடியில் தமிழகத் தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வுகளில் கிடைத்த சில கரிம மாதிரிகளின் அறிவியல் காலக்கணிப்பு முடிவுகள் கி.மு. 580 வரையிலான காலத்தைச் சுட்டிக்காட்டின.

இதனை மத்திய அரசும் 2026 நவம்பர் மாதம் வரையிலான விவாதங்களில் மறுக்கவில்லை. ஆனால் அந்த முடிவுகளை அமர்நாத் நடத்திய முதல் இரண்டு கட்ட அகழாய்வுகளின் காலக்கணிப்புடன் நேரடியாக ஒன்றாக்கிவிட முடியாது.

வெவ்வேறு அகழாய்வுக் கட்டங்கள், வெவ்வேறு அடுக்குகள், வெவ்வேறு மாதிரிகள் ஆகியவற்றின் முடிவுகளைத் தனித்தனியாக ஆய்வு செய்து பின்னர் ஒப்பிட வேண்டும்.

எனவே முதல் இரண்டு கட்ட ஆய்வுகளின் காலக்கணிப்பு குறித்த இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அமர்நாத் தரப்பும் ASI தரப்புமே.

7. மலேசியப் பயணத் தடையும் கீழடி அறிக்கை சர்ச்சையும் – தொடர்பு என்ன?

கீழடி இரண்டு கட்ட ஆய்வுகள் செய்த காலத்திலிலிருந்தே அமர்நாத் ராமகிருஷ்ணாவின் ஒவ்வொரு செயலும் அரசியலுடன் கலந்ததாகவே இருந்து வந்துள்ளது. இரண்டு கட்ட ஆய்வுகள் செய்து முடித்த நிலையில் அவர் உள்பட ASI பணியாளர்கள் பலர் வழக்கமான இடமாற்றம் செய்யப்படபோது அதற்கும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசன் எதிர்ப்புத் தெரிவித்து அதனை அரசியல் பிரச்சனையாக ஆக்கினார்.

அதன்பிறகு ஆறு ஆண்டுகள் கழித்தே தமது முதல் இரண்டு கட்ட அறிக்கையைத் தமது தலைமை அலுவலகம் ASI யிடம் சமர்ப்பித்தார் அமர்நாத்.

தொடக்கம் முதல் இன்றுவரை அமர்நாத் ராமகிருஷ்ணாவின் தொல்லியல் ஆய்வுப் பணியை முன்னின்று அரசியலாக்கி வருவது சு.வெங்கடேசன் எனும் அரசியல்வாதி.

அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்குப் பிறகு அதே கீழடியில் 11 கட்டங்கள் அகழாய்வு செய்யப்பட்டுள்ள நிலையில் முதல் ஒன்று இரண்டாம் கட்டங்களை இன்னமும் அரசியல் ஆக்கி விளம்பரம் தேடிக்கொண்டிருக்கிறார்கள் அமர்நாத் ராமகிருஷ்ணாவும், சு.வெங்கடேசனும் என்று கவலை தெரிவிக்கிறார்கள் தமிழர் வரலாற்று ஆர்வலர்களும், ஆய்வறிஞர்களும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User