ஜெம் வீரமணி வழக்கில் அதிரடி: அருண் ஐபிஎஸ் முதல் ராஜலட்சுமி வரை!

ஜெம் வீரமணி பாலியல் குற்ற வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல், அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு, ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம், பிரகாஷ் கண்ணையா தொடர்பான விசாரணை என அடுத்தடுத்த திருப்பங்கள்.

Nov 14, 2026 - 08:55
Updated: 17 hours ago
0 139
ஜெம் வீரமணி வழக்கில் அதிரடி: அருண் ஐபிஎஸ் முதல் ராஜலட்சுமி வரை!

ஜெம் வீரமணி வழக்கில் காவல்துறைக்குள் அடுத்தடுத்த அதிரடிகள்!

அருண் IPS முதல் ராஜலட்சுமி வரை... விரியும் விசாரணை வளையம்!

--தமிழ் ஊடகம் புலனாய்வு செய்திப் பிரிவு

ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல் குற்றப்பத்திரிகை தாக்கல், முன்னாள் காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட ஏழு காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு எனத் தொடங்கிய அதிரடி, தற்போது காவல்துறையின் நிர்வாக நடவடிக்கைகளிலும் எதிரொலிக்கிறது.

அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு; காத்திருப்போர் பட்டியலில் அடுத்தடுத்த மாற்றங்கள்!

வீரமணி மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஏற்கெனவே கிடைத்த புகார்களை முறையாக விசாரிக்காமல் வழக்கை முடிவுக்குக் கொண்டுசெல்ல முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ், முன்னாள் உதவி ஆணையர் யாஸ்மின் உள்ளிட்ட ஏழு காவல்துறை அதிகாரிகள் மீது சிறப்புப் புலனாய்வுக் குழு வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில், நவம்பர் 13ஆம் தேதி வெளியிடப்பட்ட புதிய காவல்துறை ஆணை மேலும் கவனம் பெற்றுள்ளது. சென்னை பெருநகரக் காவல்துறையின் IUCAW-1 பிரிவில் உதவி ஆணையராகப் பணியாற்றிய வி. ராஜலட்சுமி உடனடியாகக் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் அன்றைய தினமே பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு டிஜிபி அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அருண், கண்ணன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்ட நிலையில், யாஸ்மின் உள்ளிட்ட அதிகாரிகள் மீதும் நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது ராஜலட்சுமியின் பெயரும் இந்த நடவடிக்கைப் பட்டியலில் இணைந்துள்ளது. விசாரணையின் அடுத்த கட்டம் காவல்துறைக்குள் மேலும் யாரை நோக்கி நகரப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரகாஷ் கண்ணையா யார்? பணப்பரிமாற்றத்தில் என்ன தொடர்பு?

இந்த வழக்கின் மற்றொரு முக்கியமான நபராகப் பேசப்படுபவர் SRMU தொழிற்சங்கத் தலைவர் என். கண்ணையாவின் மகன் பிரகாஷ் கண்ணையா.

ஜெம் வீரமணிக்கும் காவல்துறையின் சில உயரதிகாரிகளுக்கும் இடையே கோடிக்கணக்கான ரூபாய் பணம் கைமாறியதாக எழுந்த குற்றச்சாட்டுகளில் பிரகாஷ் ஒரு தரகராகச் செயல்பட்டதாகப் புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. வீரமணிக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கும் பிரகாஷுக்கும் இடையே சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றங்கள் நடைபெற்றதாகவும், வீரமணியுடன் தொடர்புடைய சொத்துப் பரிமாற்றங்களிலும் அவர் இடைத்தரகராகச் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

குறிப்பாக, வீரமணிக்கு எதிரான புகாரை மூடி மறைப்பதற்கான முயற்சிகளில் பணம் மற்றும் தங்கக் கட்டிகள் கைமாறியிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் வீரமணிக்கும் இடையிலானதாகக் கூறப்படும் பணத் தொடர்பில் பிரகாஷின் பங்கு என்ன என்பதைக் கண்டறிவது விசாரணையின் முக்கிய அம்சமாகியுள்ளது.

வழக்கை மேற்கொண்டு விசாரிக்காமல் மூடிவைக்க காவல்துறை அதிகாரிகள் தவிர அதுகுறித்த செய்திகள் வெளிவராமல் இருக்க பத்திரிகையாளர்களுக்கும் வீரமணியின் பணம் பாய்ந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அருண் ஐபிஎஸ்-சின் நெருங்கிய நண்பரும், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தற்போதைய தலைவரும், தினகரன் தலைமைச் செய்தியாளருமான சுரேஷ் வேதநாயகம், நக்கீரன் நிருபர் தாமோதரன் பிரகாஷ் உள்ளிட்டோர் மீது ஜெம் வீரமணி செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்களை மிரட்டிய புகாரில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்கள் உயர்நீதிமன்றத்திடம் முன்பிணை பெற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது.

SRMU கண்ணையா மகன் பிரகாஷ் வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவருக்கு எதிராக ஏற்கெனவே லுக் அவுட் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரது பாஸ்போர்ட்டை முடக்கவும், வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரவும் சென்னை காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நீதிமன்றத்தில் அரசு தரப்பு தெரிவித்த தகவலின்படி, அவருக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரைப் பிடித்து விசாரித்தால் மட்டுமே பணம் எங்கிருந்து வந்தது, யாருக்குச் சென்றது, எந்த வழிகளில் பரிமாறப்பட்டது என்பன உள்ளிட்ட விவரங்களை முழுமையாகக் கண்டறிய முடியும் எனப் புலனாய்வுக் குழு கருதுகிறது.

இனி வெளிவரப்போவது என்ன?

முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக நீதிமன்றத்தில் அரசு தரப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, காவல்துறை அதிகாரிகளின் பங்கு, சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றங்கள், பிரகாஷ் கண்ணையாவின் தொடர்புகள், பத்திரிகையாளர்களின் பங்குகள் என விசாரணையின் எல்லை விரிவடைந்துள்ளது.

பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி கிடைப்பது ஒருபுறம் இருக்க, புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிகாரிகள் யார், குற்றச்சாட்டுகளை மூடி மறைக்க முயன்றவர்கள் யார், செய்திகளை முடக்கியவர்கள் யார், பணப்பரிமாற்றத்தில் தொடர்புடையவர்கள் யார் என்பதற்கும் விடை கிடைக்க வேண்டியுள்ளது.

ஜெம் வீரமணி வழக்கு இனி ஒரு தனிநபரின் பாலியல் குற்ற வழக்கு மட்டுமல்ல; அதிகாரம், பணம், காவல்துறை நிர்வாகம், சில பத்திரிகை ஊடகத்துறையினரின் தொடர்புகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டிய முக்கியமான புலனாய்வாக மாறியுள்ளது.

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User