சீமானின் 15 ஆண்டுகால அரசியல் பயணம்: உயர்வும் வீழ்ச்சியும் – ஓர் அரசியல் ஆய்வு
சீமானின் 15 ஆண்டுகால அரசியல் பயணம், ஈழத்தமிழர் ஆதரவு, தமிழ்த் தேசிய அரசியல், தேர்தல் நிலைப்பாடுகள், திமுக எதிர்ப்பு மற்றும் அண்மைக்கால அரசியல் சறுக்கல்கள் குறித்த விரிவான ஊடகவியல் அரசியல் அறிவியல் ஆய்வு.
15 ஆண்டு காலத்தில் சீமானின் அரசியல் உயர்வும் தாழ்வும் !
- ஓர் பத்திரிகை ஊடகவியல் அரசியல் அறிவியல் ஆய்வு !
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம்
ஈழத்தமிழர் இனவழிப்பு செய்யப்படுவதை எதிர்த்து மறைந்த இயக்குநர் பாரதிராஜா தலைமையில் தமிழ்த் திரைக்கலைஞர்கள் ஒன்றுகூடி ராமேஸ்வரத்தில் நடத்திய கண்டனக் கூட்டத்தில் சீமான் பேசிய உரைதான் அவரை உலகிற்கு வெளிப்படுத்திய முதல் பெரிய தருணம்.
ஈழத்தமிழரின் நிலை கண்டு வருந்திக் கையறு நிலையில் இருந்த தமிழ்நாட்டுத் தமிழர்களின் குரலாக யார் ஒலித்தாலும் அவர்களுக்கு ஆதரவு தருதல் அல்லது அவரைப் பின்பற்றி மன ஆறுதல் அடைய வேண்டிய நிலையில் அன்றுமுதல் இன்றுவரைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் இருந்து வருகிறார்கள்.
அது பழ. நெடுமாறனாக இருந்தாலும் சரி, மருத்துவர் இராமதாசாக இருந்தாலும் சரி, வைகோவாக இருந்தாலும் சரி, தொல்.திருமவளவனாக இருந்தாலும் சரி, வேல்முருகனாக இருந்தாலும் சரி, சீமானாக இருந்தாலும் சரி....
எங்களின் தமிழ் உறவுகளுக்காக குரல் கொடுக்கிறார்கள் என்பதாலேயே இவர்களைப் போன்ற தலைவர்களைத் தங்களின் மனதில் உயர்த்திப் பிடிப்பது தமிழர்களின் தவிர்க்க முடியாத நிலையாகிப்போனது.
ஆனால், இதில் பழ.நெடுமாறன் தவிர மீதமுள்ளவர்கள் அரசியல் இயக்கங்களை நடத்தி வருகிறவர்கள்.
அவர்களுக்கு என்று சில கட்டுப்படுத்தப்பட்ட அரசியல் நோக்க வரையறைகள் உள்ளன.
ஒன்று தமிழ்நாட்டு வாக்கரசியலில் நிலைபெற்று நின்றாகவேண்டிய நிலை, மறுபுறம் தமிழர்களின் குரலாக ஒலிக்கவேண்டிய நிலை.
உண்மையில் இந்தியாவைப் பொறுத்த வரையிலும் நடைமுறையில் இது ஒரு சிக்கலான அமைப்புதான்.
பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து நாடு விடுதலை ஆகி 78 ஆண்டுகாலம் கடந்தும்கூட சிங்கள பவுத்தப் பேரினவாதிகளிடமிருந்து ஈழத்தமிழர்களின் சம உரிமைக்கான போராட்டம் இன்றுவரை இலங்கையில் தொடர்கிறது.
ஆனால், இந்திய அரசு ஒட்டுமொத்த இலங்கை அரசின் பிரச்சனைகளில் ஒன்றாகவும், இந்தியாவின் பாதுகாப்பு எனும் பார்வையிலும்தான் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனையானத் தமிழர் பிரச்னையைப் பார்க்க முடியும் எனும் அரசியல் இரசாங்க நிலை.
01. இலங்கையில் வடக்கில் வாழும் தமிழர்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் இன உறவுகள்
02. அதே வேளை உலக அரங்கில் இலங்கை ஒரு தனித்த இறையாண்மை கொண்ட நாடு
இங்கே இந்திய அரசு எனும் பொறுப்பில் இலங்கை எனும் இறையாண்மை கொண்ட அரசிடம் கொண்டுள்ள உறவு பாதிக்காமல் தமிழர்களின் சம உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்கிற நிலை இந்தியாவுக்கு.
ஆனால், இலங்கை அரசா அல்லது தமிழர்களா என்று பார்க்கும்போது இலங்கை அரசுக்கே முதன்மை இடம் தந்துவருகிறது இந்தியா.
அது இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து இந்தியாவின் சொற்களுக்கு கட்டுப்படும் நிலையை உருவாக்குவதாக இருக்கட்டும் அல்லது வடக்கில் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு ஆயுத - இராணுவப் பயிற்சி கொடுத்த போதும் சரி...அந்தப் போராளிக் குழுக்களிடமிருந்து அதே ஆயுதங்களைப் பறித்துவிட்டு அவர்களின் போராட்டத்தை நசுக்குவதிலாகட்டும் சரி....இந்தியாவின் இலக்கு இலங்கை அரசுடனான உறவு குறித்தது மட்டுமே என்பதை நடைமுறை உண்மையாகப் புரிந்து கொள்ளவேண்டும்.
தமிழர்களின் உரிமைப்போராட்டத்தை வைத்து இலங்கை அரசாங்கத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வர இந்தியாவும், தமிழர்களை வைத்தே இந்தியாவைப் புவி அரசியல் ரீதியாகக் கட்டுப்படுத்த இலங்கையும் மாறி மாறி கடந்த 78 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.
இடையில் தமிழர்கள் தள்ளாடிக் கொண்டிருக்கிறார்கள், சொந்த நாட்டை, மண்ணை விட்டு விரட்டி அடிக்கப்பட்டார்கள்.
இப்படிப்பட்ட நிலையில், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கும் 'ஈழத்தமிழர்களின் சம உரிமைக்கான தொடர் போராட்டங்கள்' ஒரு 'எரிபொருள்' போலப் பயன்பட்டன.
யாராவது நமக்காகக் குரல் கொடுக்க மாட்டார்களா என்று இருந்த ஈழத் தமிழர்களுக்கும், அவர்களின் மீது கரிசனம் கொண்டுள்ள தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் யார் குரல் கொடுத்தாலும் உடனே அவர்கள் மீது மதிப்புக் கொள்ளத் தொடங்கினார்கள்.
ஆனால், தமிழ்நாட்டு அரசியல் தளத்தில் ஈழத் தமிழர் உரிமைப் போராட்டங்களுக்காக மட்டுமே வைகோவோ, திருமாவளவனோ, வேல்முருகனோ வாக்கரசியல் செய்ய முடியாத நிலை.
ஈழத்தமிழர் உரிமைக்காக பொதுமேடை, சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவற்றில் குரல் கொடுக்கலாம் ஆனால் அப்படி சட்டமன்றம், நாடாளுமன்றம் செல்ல தனித்த வாக்கு வங்கிகள் இவர்களிடம் இல்லை.
திமுக, அதிமுக ஆகிய கட்சிகளைச் சார்ந்தே போட்டியிட்டு வெற்றிபெறும் நிலை.
அதேபோல, திமுக அதிமுகவும் தனித்து நின்று ஆட்சியைப் பிடிக்க முடியாத நிலை.
ஈழத்தமிழர்களை 2009 வரையிலும் அழித்தொழிக்கத் தயங்காமல் இருந்த இலங்கையின் அரசு இப்போது வேறு வழியில்லாமல் ஈழத்தமிழர் என்று தனித்துப் பார்க்காமல் இலங்கையின் குடிமக்களாகத் தமிழர்களைப் பார்க்கும் நிலை உருவாகியிருக்கிறது.
சவூதி அரேபியாவில் முகநூல் ஒன்றின் பின்னூட்டம் இட்டதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு இலங்கை அரசின் பெருமுயற்சியால் விடுதலை ஆன அனோஜன் தொடர்பாக அதிபர் அனுரகுமார திசாநாயக்கே "இலங்கைக் குடிமக்கள் உலகில் எங்கு பாதிக்கப்பட்டாலும் எமது அரசு பாதுகாக்கும்" என்று அறிவித்தது சாதாரணமாக் கடந்து போகும் இலங்கை அதிபரின் சொற்கள் அல்ல.
மிகவும் பொருள் பொதிந்த சொற்கள் அவை.
இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மாற்றத்தில், இந்திய - இலங்கை ராசாங்க ரீதியிலான உறவுகள் ஒருபுறம் இருக்க, ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கொடுத்து வரும் தொடர் ஆதரவும், ஐநா உள்ளிட்ட உலக நியாயவான் அரங்குகளில் ஈழத்தமிழர் முன்வைத்த ஆதாரங்களும், சான்றுகளும் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன.
இலங்கையில் 2009 முள்ளிவாய்க்காலில் நடந்த அவலங்களின்போது திமுக தலைவர் கருணாநிதி நடந்துகொண்ட விதம் அவர்மீதிருந்த அத்தனை நம்பிக்கைகளையும் உடைத்து சுக்கு நூறாக்கிவிட்டது.
அதனைப் பெருந்துரோகம் என்று கடுமையாக விமர்சனம் செய்தவர்களில் வைகோ முதன்மையானவர்.
இந்த அடிப்படையில் வைகோ, திருமாவளவன், வேல்முருகன் அல்லாத தனித்த தமிழ்த் தேசியத்தின் குரலாக ஒலித்த சீமான் உற்றுக் கவனிக்கப்பட்டார். அவருக்கு வாக்குகள் 8 விழுக்காடு விழுந்தன, மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டார்.
'ஈழத்தமிழர் உரிமைப்போராட்டத்திற்கான ஆதரவு - அவர்களுக்குத் துரோகம் செய்த காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு அரசியல் எதிர்ப்பு -தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் பாதுகாக்க ஆதரவு - தமிழ்நாட்டைத் தமிழ் உணர்வாளர்கள் ஆளவேண்டும் என்கிற முழக்கம்' ஆகியவையே சீமானைப் பிற ஈழத்தமிழர் ஆதரவுத் தலைவர்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டியது.
ஆனால், 'மாண்பு' எனும் பெயரில் மு.க.முத்து இறப்புக்குத் துக்கம் விசாரிக்க அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினை அவர்கள் வீட்டிற்கே சென்று சந்தித்தது சீமானின் முதல் 'பெருஞ் சறுக்கல்'.
இதே, சீமான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் அவரது முதலமைச்சர் அளவுலகத்தில் சந்தித்து "ஈழத் தமிழர் நலன் காக்க அனைத்துக் கட்சி சட்டமன்றக் குழு' ஒன்றை அமைக்கக் கோரிக்கை விடுத்திருந்தால் நடக்கிறதோ இல்லையோ அது அவருக்கு பெரும் ஏற்றமாக இருந்திருக்கும்.
அதன்பிறகு திமுக எதிர்ப்பு எனும் சீமானின் கடந்த காலக் கடுமை முற்றாகக் குறைந்து அவரும், அவரது இரண்டாம் கட்டத் தலைவர்களும் தேர்தலுக்கு முன்னதாக ஆறு மாத காலத்திலிருந்து முழு வீச்சில் தங்களின் கடுமையான விமர்சனங்களை ஜோசப் விஜயை நோக்கித் திருப்பினார்கள்.
2009 ம் ஆண்டிலிருந்து திமுகவைவிட ஈழத்தமிழர்களுக்கும் பொதுவாகத் தமிழர்களுக்கும் ஜோசப் விஜய் அவ்வளவு பெரிய துரோகம் இழைத்துவிட்டாரா என்ன? அப்படிப்பட்ட அறிவிப்புகள் ஏதும் அவரது கட்சிக் கொள்கை, நிகழ்ச்சி நிரல்களில் வெளிப்படுத்தினரா என்ன? அதற்கு சான்றுகள் இருந்தால் அதனைக் காட்டி சீமான் தனது புதிய நிலைப்பாட்டை நியாயப்படுத்தலாமே !
காங்கிரசோடு ஜோசப் விஜய் கூட்டணி வைத்ததுகூடத் தேர்தல் வெற்றிக்குப் பிறகுதானே...தேர்தலுக்கு ஆறு மாதம் முன்னதாக இல்லையே.
எல்லவற்றையும் தாண்டி அம்பாசமுத்திரம் வழியாக சட்டமன்றத்துக்குள் எப்படியாவது நுழைந்துவிட திமுகவிடமே ஆதரவு கோரும் நிலைக்கு சீமான் சறுக்கியது அவரது அரசியல் வாழ்க்கையின் மீளமுடியாத சறுக்கல்.
மு.க.முத்து துக்கம், கவுதமன் இல்லத் திருவிழாவில் சீமானுடன் சந்திப்பு, திமுக நிர்வாகி வீட்டுத் திருமணத்தில் உதயநிதியுடன் சீமான் சந்திப்பு, அம்பாசமுத்திரத்தில் பிரியாணி கேட்டது....ஆகிய நான்கே நான்கு நிகழ்வுகளில் சீமானை வெளி உலகிற்குத் தோலுரித்துக் காட்டிவிட்டார் மு.க.ஸ்டாலின்.
அது மு.க.ஸ்டாலினின் அரசியல் இராச தந்திரம் என்பதை மறுக்கக் கூடாது. ஆனால் அந்தப் பொறியில் மாட்டிக்கொண்ட எலி யார் ?! சீமான்தானே !
சீமானின் இந்தக் 'கொண்டை ஊசித் திருப்பத்தை' நாம் தமிழர் கட்சியின் விவரம் அறிந்த தம்பி தங்கைகளே ரசிக்கவில்லை என்பதைத் தமிழ் ஊடகம் வெளிப்படுத்தியதே, ராவணா ஊடக ஆசிரியர் பா.ஏகலைவன் வெளிப்படுத்தினாரே, லைன்ஸ் மீடியா ஆசிரியர் பாலா வெளிப்படுத்தினாரே...இன்று ஜூனியர் விகடன் வெளிப்படுத்தியுள்ளதே...மூத்த பத்திரிகையாளர் மணி வெளிப்படுத்துகிறாரே....அவ்வளவு ஏன் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் வெளிப்படுத்தினாரே...
பத்திரிகை ஊடகங்களே வெட்டவெளிச்சமாக இப்படி சுட்டிக்காட்டியும்கூட இல்லை இல்லை இவர்கள் எல்லோரும் ஜோசப் விஜயின் ரூட் மாபியாக்களிடம் பணம் வாங்கிக்கொண்டு பேசுகிறார்கள் என்று ஒரு பொய்ப் பரப்புரை மேற்கொண்டு நாம் தமிழர் தலைமையும், இரண்டாம் கட்டத் தலைவர்களும் யாரை ஏமாற்றுகிறார்கள் ? நாம் தமிழர் தம்பி தங்கைகளை மட்டுமா ...இல்லை தமிழ்நாட்டு வாக்காளர்களையா...இல்லை உலகெங்கிலும் வாழும் தமிழர்களையா?!
வாக்கரசியல், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் ஆகியவை மட்டும்தான் தனது கனவு என்று சீமான் முன்கூட்டியே சொல்லியிருந்தால் திமுக - அதிமுக ஆகிய ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டு வைத்து அந்தக் கனவை நிறைவேற்றிக்கொண்டிருந்திருக்கலாமே...எதற்காக திமுக - அதிமுக, பாஜக - காங்கிரசோடு தேர்தலில் கூட்டு இல்லை என்று சொல்லிவிட்டு கடைசியில் இப்படி ஒரு சறுக்கல் - சுய பின்னடைவு ?!
மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை என்றால் எப்படி ராஜா...வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை !
எனவே, தவறுகளைச் சரி செய்துகொண்டு நாம் தமிழர் கட்சி மீண்டு மேலெழுந்து வந்து தமிழ்த் தேசியப் பாதையில் பயணித்தால் மகிழ்ச்சியே !
What's Your Reaction?
Like
2
Dislike
1
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)