பெண்களுக்கு வாக்குரிமை எப்போது கிடைத்தது? நீதிக்கட்சியும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும்!
1920-ல் பெண்களுக்கு வழங்கப்பட்ட வாக்குரிமை, 1926-ல் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் அரசியல் வருகை, அவ்வை இல்லம் உருவான வரலாறு, நீதிக்கட்சியின் தோற்றம் மற்றும் தமிழக அரசியலின் முக்கிய நிகழ்வுகள். அரசியல் பேசுகிறேன் – தொடர் 3
பெண்களுக்கு வாக்குரிமை எப்போது கிடைத்தது? நீதிக்கட்சியும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும்!
பத்திரிகையாளர் ஜோதி நரசிம்மன் எழுதும் அதனால்தான் அரசியல் பேசுகிறேன் தொடர்-3
1920 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில்தான் முதன்முதலில் பெண்களுக்கு ஓட்டுப் போடும் உரிமை வழங்கப்பட்டது. அப்போது சென்னை, பம்பாய் (தற்போது மும்பை). அவர்களுக்கும் முந்தைய தொடரில் பார்த்த அதே கட்டுப்பாடுகள்தான். சொத்து இருப்பவர்கள்தான் வாக்களிக்க முடியும் எனும் கட்டுப்பாடு.
சொத்து இருப்பதுடன் கல்வி அறிவு பெற்றவர்கள்தான் வாக்களிக்க முடியும். சொத்து என்பது பெண்களின் தந்தை சொத்து மதிப்பு, அல்லது திருமணமாகி இருந்தால் கணவரின் சொத்து மதிப்பு அடிப்படையிலே அவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
பிறகு, எப்போது பெண்கள் 'பிரதிநிதிகள்' ஆகத் தொடங்கினார்கள் என்றால், 1926 ஆம் ஆண்டுதான் ஆகத் தொடங்கினார்கள்.
சென்னை மாகாணத்தின் முதலாவது பெண் உறுப்பினராக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சட்ட மேலவைக்குக் கவர்னரால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த முத்துலட்சுமி ரெட்டி பழம்பெரும் தமிழ் நடிகர் ஜெமினி கணேசனுக்கு ஒரு வகையில் உறவினர்.
அது மட்டுமல்ல உலகிலேயே சட்டமன்றப் பேரவை துணைத் தலைவராக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அதே ஆண்டில்தான், அந்தப் பெருமையும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியையே சாரும்.
இப்போதும் சென்னை அடையாற்றில் இயங்கும் அவ்வை இல்லம் 1930ல் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியால் தொடங்கப்பட்டது.
மாண்டே அரசு
இப்படியாகத் தமிழக அரசியல் வரலாறு பல சோதனைகளைக் கடந்து உரிமைகளைப் போராடிப் பெற்று 21 வயது வந்தவர்களுக்கு வாக்குரிமை என்ற நிலைக்கு வந்தது. தற்போது 18 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்குரிமை என்கிற நிலையோடு தேர்தல்களை சந்தித்து வருகின்றது.
1914 ஆம் ஆண்டு ஏற்பட்ட முதல் உலகப்போரில் பிரிட்டிஷ்ப் படையில் பெருமளவு இந்தியர்கள் சேர்ந்து, பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக போரிட்டு, நேசக் கரம் நீட்டியதின் பிரதிபலனாக, பிரிட்டிஷ் அரசு இந்தியர்களுக்கு அதிகாரம் வழங்கத் திட்டமிட்டு 1919 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்திற்கு தேர்தல் மூலம் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து சில கட்டுப்பாடுகளுடன் ஆட்சி அமைக்க சட்டம் இயற்றியது.
அப்படித்தான் 1920 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்திற்கு முதல் தேர்தல் நடைபெற்றது.
நீதிக்கட்சி
நீதிக்கட்சி என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian liberal federation) 1916 ஆம் ஆண்டு நடேசன். டி.எம்.நாயர், பிட்டி தியாகராயர் ஆகியோரால் தொடங்கப்பட்டது.
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மொத்த மக்கள் தொகையில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த பிராமணர்கள், தங்களின் எண்ணிக்கையைவிட அதிக அளவிலான விழுக்காட்டில் அரசுப் பணிகளில் இடம்பெற்று இருந்தனர்.
இந்த நிலையை மாற்றி பிராமணர்கள் அல்லாதோரும் கல்வி, அரசுப்பணிகளில் இடம்பெற்று உரிமைகளை நிலைநாட்டவே நீதிக்கட்சி உருவாக்கப்பட்டது.
தொடர்ந்து அரசியல் பேசுவோம்...
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)