போத்தீஸ் விளம்பரத்தில் திரிஷா கூறும் சாலியர் தமிழர்களா? தெலுங்கர்களா? – வரலாற்று ஆய்வு

போத்தீஸ் விளம்பரத்தில் பேசப்படும் சாலியர் சமூகத்தின் பூர்வீகம் என்ன? காஞ்சிபுரம் கல்வெட்டுகள், சங்ககால நெசவுத் தொழில், தமிழர் மற்றும் தெலுங்கர் வரலாற்றுப் பின்னணிகளை ஆராயும் கட்டுரை.

Nov 18, 2026 - 09:46
Updated: 19 hours ago
0 253
போத்தீஸ் விளம்பரத்தில் திரிஷா கூறும் சாலியர் தமிழர்களா? தெலுங்கர்களா? – வரலாற்று ஆய்வு

போத்தீஸ் துணிக்கடை விளம்பரத்தில் திரிஷா கூறும் சாலியர் தமிழர்களா? தெலுங்கர்களா? – ஓர் வரலாற்று ஆய்வு!

--தமிழ் ஊடகம் தமிழியல் ஆய்வுக் குழுவினர்

நடிகை திரிஷா தோன்றும் போத்தீஸ் துணிக்கடை விளம்பரத்தில், ''400 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த மண்ணான காஞ்சிபுரத்திற்குத் திரும்பியிருக்கிறது போத்தீஸின் சாலியர் சமூகம்'' என்ற கருத்து இடம்பெறுகிறது.

இந்த விளம்பரத்தில் குறிப்பிடப்படும் சாலியர் சமூகம் யார்? அவர்கள் தமிழர்களா? தெலுங்கர்களா? 400 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்தைவிட்டு வெளியேறியவர்கள் மீண்டும் தங்கள் சொந்த மண்ணுக்குத் திரும்பியிருக்கிறார்களா? என்ற கேள்விகளுடன் அவர்களுடைய வரலாற்றை ஆராய்ந்தபோது பல சுவாரசியமான தகவல்கள் கிடைக்கின்றன.

சாலியர் என்ற பெயரில் ஒரே இனப் பின்னணியைக் கொண்டவர்கள் மட்டுமே இல்லை என்பதுதான் இந்த ஆய்வில் முதலில் தெரியவரும் உண்மை.

சாலியர் தமிழர்களா? தெலுங்கர்களா?

1909ஆம் ஆண்டு எட்கர் தர்ஸ்டன் எழுதிய Castes and Tribes of Southern India என்ற நூலில், தஞ்சாவூர் மாவட்டத்தின் கோரநாடு, அய்யம்பேட்டை பகுதிகளில் வாழ்ந்த சாலியர்கள் தமிழ்மொழி பேசும் நெசவாளர் சமூகத்தினர் என்றும், அவர்களைத் தெலுங்கு மொழி பேசும் சாலே சமூகத்தினருடன் குழப்பிக்கொள்ளக் கூடாது என்றும் குறிப்பிடுகிறார்.

அதேநேரத்தில் ஆந்திரப் பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்ட சாலே, பத்மசாலி, பட்டுசாலி போன்ற தெலுங்கு நெசவாளர் சமூகங்களும் தமிழகத்தில் குடியேறிய வரலாறு உள்ளது.

இதனால் சாலியர் என்ற பெயரைக் கொண்ட அனைவரும் ஒரே மொழி அல்லது இனப் பின்னணியைக் கொண்டவர்கள் என்று கூற முடியாது.

காஞ்சிபுரத்தில் சாலியர்களின் பழமையான வரலாறு

வரலாற்றுப் பேராசிரியர் விஜயா ராமசாமியின் தென்னிந்திய நெசவுத் தொழில் குறித்த ஆய்வுகளின்படி, உத்தம சோழன் காலமான கி.பி. 10ஆம் நூற்றாண்டிலேயே காஞ்சிபுரத்தில் சாலியர் நெசவாளர்கள் நான்கு குடியிருப்புப் பகுதிகளில் வாழ்ந்ததற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.

இதன் மூலம் சாலியர் என்ற பெயருடைய நெசவாளர் சமூகம் காஞ்சிபுரத்தில் குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது தெரியவருகிறது.

மறுபுறம், விஜயநகரப் பேரரசின் காலத்தில், குறிப்பாக 15, 16ஆம் நூற்றாண்டுகளில் ஆந்திரப் பகுதிகளிலிருந்து தெலுங்கு பேசும் நெசவாளர் குழுக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குக் குடிபெயர்ந்ததற்கான வரலாற்றுச் செய்திகள் உள்ளன. காஞ்சிபுரமும் அத்தகைய குடியேற்றங்களுடன் தொடர்புடைய நெசவு மையமாக விளங்கியது.

எனவே, காஞ்சிபுரத்தில் வாழ்ந்த பழமையான தமிழ்மொழி சாலியர் சமூகமும், பின்னர் குடியேறிய தெலுங்கு நெசவாளர் பிரிவுகளும் காலப்போக்கில் ஒரே தொழில் மற்றும் வணிகச் சூழலில் இணைந்து செயல்பட்டிருக்கக்கூடிய வாய்ப்பை மறுக்க முடியாது.

சங்ககாலத்திலேயே தமிழர்களின் நெசவுத் தொழில்!

சாலியர்களின் வரலாற்றை ஆராயும்போது, தமிழர்களின் நெசவுத் தொழில் வரலாறு அதைவிடப் பழமையானது என்பதை மறந்துவிடக்கூடாது.

சங்க இலக்கியங்களில் பருத்தி, நூல் நூற்றல், துணி நெய்தல், ஆடை வணிகம் ஆகியவை பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.

குறிப்பாகப் பொருநராற்றுப்படையில் மிக நுண்ணிய இழைகளைக் கொண்டு நெய்யப்பட்ட துணிகளின் சிறப்புகள் வர்ணிக்கப்படுகின்றன. அகநானூறு, நற்றிணை போன்ற இலக்கியங்களிலும் பருத்தியைப் பதப்படுத்தும் பஞ்சு அடிக்கும் கருவி பற்றிய குறிப்புகள் உள்ளன.

சென்னை அரசு அருங்காட்சியகம் வெளியிட்ட தமிழகத் தொழில்கள் மற்றும் கைவினைகள் குறித்த ஆய்விலும் சங்க இலக்கிய நெசவுக் குறிப்புகள், அரிக்கமேடு மற்றும் உறையூரில் கண்டறியப்பட்ட சாயமேற்றும் தொட்டிகள், சேலம் இருகூரில் கிடைத்த நூல் நூற்கும் கருவிகள் உள்ளிட்ட சான்றுகள் தொகுக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் தமிழர்களிடம் நெசவுத் தொழில் சங்ககாலத்திலேயே சிறந்து விளங்கியது உறுதியாகிறது.

ஆனால் சங்ககால நெசவாளர்கள் அனைவரையும் சாலியர் என்று அடையாளப்படுத்துவதற்கான நேரடியான சான்றுகள் இதுவரை நிறுவப்படவில்லை.

அதாவது, தமிழர்களின் நெசவுத் தொழில் மரபு தொன்மையானது என்பதும், சாலியர் என்ற சமூகப் பெயரின் வரலாறு தனியாக ஆராயப்பட வேண்டியது என்பதும் இரண்டு வெவ்வேறு வரலாற்றுச் செய்திகள்.

கல்வெட்டுகள் கூறும் சாலியர் வரலாறு

இடைக்காலக் கல்வெட்டுகள் சாலியர் சமூகத்தின் வரலாற்றை அறிந்துகொள்ள முக்கியமான ஆதாரங்களாக உள்ளன.

13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளில் நெசவாளர் தொழில், வரி வசூல் மற்றும் வணிக அமைப்புகள் தொடர்பான செய்திகள் காணப்படுகின்றன.

குறிப்பாகக் கி.பி. 1243ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகக் குறிப்பிடப்படும் திருவண்ணாமலைக் கல்வெட்டில் 'சாலிகர் அச்சதாரி' மற்றும் 'கொலியட்டாரி' தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. மேலும், நெசவுத் தறிகளுடன் தொடர்புடைய வரி வகைகளும் கல்வெட்டுகளில் பதிவாகியுள்ளன.

சாலியர் நெசவாளர்கள் உற்பத்தியாளர்களாக மட்டுமின்றி, பட்டுத் துணி வணிகத்திலும் பங்காற்றியிருக்கின்றனர். சாலிய நாகரத்தார் போன்ற அமைப்புகள் அவர்களுடைய பொருளாதாரச் செயல்பாடுகளை எடுத்துக்காட்டுகின்றன.

எனவே, சாலியர் வரலாறு என்பது ஒரு தொழில் சமூகத்தின் வரலாறு மட்டுமல்ல; தமிழகத்தின் நகர வளர்ச்சி, வணிகம், கோயில் பொருளாதாரம் ஆகியவற்றுடனும் தொடர்புடையது.

சாலியர், கைக்கோளர், தேவாங்கர், சௌராஷ்டிரர் – வேறுபாடுகள் என்ன?

தமிழகத்தின் நெசவுத் தொழில் வரலாற்றில் இந்த நான்கு சமூகங்களையும் ஒன்றாகக் கருதிவிடக் கூடாது.

1. சாலியர்:

தமிழ்மொழி மற்றும் தெலுங்கு மொழிப் பின்னணிகளைக் கொண்ட பல்வேறு நெசவாளர் பிரிவுகள் சாலியர், சாலே போன்ற பெயர்களில் அறியப்படுகின்றனர். பருத்தி, பட்டுத் துணி நெசவுத் தொழிலில் இவர்களுக்குத் தனித்த வரலாறு உள்ளது.

2. கைக்கோளர் / செங்குந்தர்:

தமிழகத்தில் நீண்டகாலமாகக் காணப்படும் நெசவாளர் சமூகத்தினர். சோழர் காலக் கல்வெட்டுகளில் கைக்கோளர்கள் நெசவுத் தொழிலுடன் மட்டுமின்றிப் படைத்தொழிலிலும் ஈடுபட்டிருந்ததற்கான செய்திகள் காணப்படுகின்றன. இவர்களுடைய வரலாறு சாலியர்களின் வரலாற்றிலிருந்து தனித்துப் பார்க்கப்பட வேண்டும்.

3. தேவாங்கர்:

கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிப் பின்னணிகளைக் கொண்ட நெசவாளர் சமூகம். கர்நாடகப் பகுதிகளிலிருந்து தமிழகத்திற்குக் குடிபெயர்ந்த தேவாங்க நெசவாளர்கள், குறிப்பாக விஜயநகர மற்றும் அதற்குப் பிந்தைய காலங்களில் தமிழகத்தின் நெசவுத் தொழில் வளர்ச்சியில் பங்காற்றியுள்ளனர்.

4. சௌராஷ்டிரர்:

வடமேற்கு இந்தியாவின் சௌராஷ்டிரப் பகுதியுடன் வரலாற்றுத் தொடர்புடைய சமூகத்தினர். பட்டு நெசவுத் தொழிலில் புகழ்பெற்ற இவர்கள், இடைக்காலத்தில் தென்னிந்தியாவிற்குக் குடிபெயர்ந்து மதுரை உள்ளிட்ட தமிழகப் பகுதிகளில் குடியேறினர். தங்களுக்கெனத் தனித்த மொழி மற்றும் பண்பாட்டு மரபையும் தொடர்ந்து பாதுகாத்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் நெசவுத் தொழிலுடன் தொடர்புடையவர்களாக இருந்தாலும், அவர்களுடைய பூர்வீகம், மொழி, குடிபெயர்வு மற்றும் சமூக வரலாறு வேறுபட்டவை.

சின்னமேளம் – பெரியமேளம் போல நெசவாளர் சமூகங்களிலும் கலப்பா?

தமிழகத்தின் இசை மற்றும் கலை வரலாற்றிலும் வெவ்வேறு மொழிப் பின்னணிகளைக் கொண்ட கலைஞர்கள் இணைந்து செயல்பட்டுள்ளனர்.

பெரியமேளம் எனப்படும் தமிழர்களின் நாதசுவரம், தவில் இசை மரபும், சின்னமேளம் எனப்படும் தெலுங்கர் இசை, நடன மரபுகளும் தமிழகத்தின் பண்பாட்டு வரலாற்றில் தனித் தனி இடம் பெற்றுள்ளன. இரண்டும் ஒரே பூர்விகம் அல்ல. தெலுங்கு மொழி மற்றும் கலைப் பின்னணிகளைக் கொண்ட கலைஞர்களும் தமிழகத்தின் இசை, நடனச் சூழலில் பங்கேற்றுள்ளனர்.

இவ்வாறு தொழில், கலை, வணிகம், அரசியல் ஆதரவு ஆகியவற்றின் வழியாக வெவ்வேறு மொழிப் பின்னணிகளைக் கொண்ட மக்கள் தமிழகச் சமூகத்துடன் இணைந்த வரலாற்றைப் போலவே, நெசவாளர் சமூகங்களிலும் இத்தகைய பண்பாட்டுக் கலப்பும் சமூக ஒருங்கிணைப்பும் நிகழ்ந்திருக்கலாம் என்று ஆய்வுக் கோணத்தில் பார்க்க வேண்டியிருக்கிறது.

400 ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சிபுரத்திற்குத் திரும்பியதா போத்தீஸ்?

இப்போது மீண்டும் போத்தீஸ் விளம்பரத்தின் வரலாற்றுக் கூற்றுக்கு வருவோம்.

காஞ்சிபுரத்தில் சாலியர் நெசவாளர்கள் 10ஆம் நூற்றாண்டிலேயே வாழ்ந்ததற்கான சான்றுகள் இருக்கும்போது, 400 ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்து வெளியேறியவர்கள் யார்? எனும் கேள்விக்கு,

'போத்தீஸ் உரிமையாளர்களின் முன்னோர் குடும்பத்தினர் அப்படி ஒரு இடப்பெயர் ஏற்பட்டுத் திரும்பியதையே விளம்பரத்தில் கூறுகிறார்கள் என்றும் அது ஒட்டுமொத்தத் தமிழ் சாலியர் சமூகத்தின் இடப்பெயர்வைக் குறிப்பதல்ல' என்றும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User