ஜெம் வீரமணி வழக்கை அலட்சியமாகக் கையாண்டதா அருண் IPS தலைமையிலான சென்னை காவல்துறை?
ஜெம் வீரமணி வழக்கை முடிக்க காவல்துறை முயன்றது ஏன்? அண்ணா பல்கலை FIR கசிவு முதல் POCSO வழக்கின் பழைய விசாரணை வரை, அருண் IPS தலைமையிலான சென்னை காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆவணங்களுடன் எழும் முக்கியக் கேள்விகள்.
ஜெம் வீரமணி வழக்கை அலட்சியமாகக் கையாண்டதா அருண் IPS தலைமையிலான சென்னைக் காவல்துறை?
அண்ணா பல்கலை FIR கசிவு முதல் வீரமணி வழக்கை முடிக்க முயன்றது வரை — பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு திமுக ஆளானது ஏன் ? எப்படி?!
"அன்று காணொலியில் தெளிவில்லை, கண்டுபிடிக்க முடியவில்லை என்று அருண் ஐபிஎஸ் தலைமையிலான காவல்துறை கைவிரித்த அதே காணொலியை வைத்து இன்றைய விசாரணைக் குழு உரிய பெண்ணையும், வீரமணியையும் கண்டுபிடித்துள்ளதே ? அது எப்படி அருண் தலைமையிலான காவல்துறையினரால் அன்று முடியவில்லை ஆனால் இன்றைய காவல்துறையினருக்கு அது சாத்தியமாயிற்று?!"
--தமிழ் ஊடகம் புலனாய்வுச் செய்தியாளர்கள் குழு
ஜெம் கிரானைட்ஸ் தொழிலதிபர் வீரமணி தொடர்பான சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் வழக்கு இன்று ஒரு தனிநபர் மீதான POCSO வழக்காக மட்டும் நிற்கவில்லை.
2025 அக்டோபரில் சென்னை காவல்துறைக்குக் கிடைத்ததாகக் கூறப்படும் அதிர்ச்சியூட்டும் காணொலி ஆதாரம் இருந்தபோதும், வழக்கு ஏன் உடனடியாக அதன் இயல்பான முடிவை நோக்கிச் செல்லவில்லை?
வழக்கை முடித்துவைக்க காவல்துறை ஏன் நீதிமன்றத்தை அணுகியது?
அதை POCSO நீதிமன்றம் ஏன் ஏற்கவில்லை?
இந்தக் கேள்விகளுடன் இன்னொரு முக்கியமான கேள்வியும் தற்போது இணைந்திருக்கிறது.
அப்போது சென்னை காவல் ஆணையராக இருந்த அருண் IPS தலைமையிலான காவல்துறை நிர்வாகத்தில் இந்த வழக்கு எப்படிக் கையாளப்பட்டது?
ஒரு Pen Drive-ல் தொடங்கிய வழக்கு
2025 அக்டோபர் 6 அன்று குழந்தைகள் நலச் செயல்பாட்டாளர் ஒருவர் சென்னை காவல்துறையின் விபச்சார தடுப்பு பிரிவு - Anti-Vice Squad-ஐ அணுகி ஒரு Pen Drive-ஐ வழங்கியதாக விசாரணை தொடர்பான செய்திகள் தெரிவிக்கின்றன.
அதில் சிறுமி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவது போன்ற காட்சிகள் இருந்ததாகவும், காணொலியில் இருப்பவர் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி என்று புகாரில் தெரிவிக்கப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆனால் அதன் பிறகுதான் தற்போதைய சர்ச்சையின் மையமே உருவானது.
வழக்கை முடிக்க முயன்ற காவல்துறை
சிறுமியை அடையாளம் காண முடியவில்லை, சம்பவ இடத்தை உறுதிப்படுத்த முடியவில்லை, கிடைத்த காணொலி தெளிவாக இல்லை உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் வழக்கில் மேற்கொண்டு நடவடிக்கை தேவையில்லை என்ற வகையில் காவல்துறை closure report தாக்கல் செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள ஆவணப்படுத்தப்பட்ட செய்திகள் கூறுகின்றன. இது நடந்தது முந்தைய திமுக ஆட்சியில்.
ஆனால் சிறப்பு POCSO நீதிமன்றம் அதை ஏற்கவில்லை.
மேலதிக விசாரணை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் நடத்தப்பட்ட மறு விசாரணையில்தான் வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் 2026 ஆகஸ்ட் 29 அன்று தவெக ஆட்சியில் கைது செய்யப்பட்டனர்.
இங்குதான் தவிர்க்க முடியாத கேள்வி எழுகிறது:
POCSO நீதிமன்றம் ஏற்க மறுத்த ஒரு வழக்கு முடித்து வைப்பு - closure முயற்சியின் காவல்துறையின் பின்னணி என்ன? ஏன், எதற்காக, எப்படி, அவ்வாறு ஒரு முடிவு காவல்துறையினரால் எடுக்கப்பட்டது?!
அந்தக் காணொலியில் இருந்த அப்போதைய சிறுமி - இப்போதைய பெண்ணைக் காவல்துறையின் இன்றைய விசாரணைக் குழு கண்டுபிடித்து இருக்கிறதே ?!
அவரை நீதிபதி முன்னால் நிறுத்திக் "காணொலியில் இருந்தது நான்தான், அதில் இருந்த ஆண் உருவம் வீரமணிதான்"என்று அந்தப் பெண்ணிடம் வாக்குமூலம் பெற்று இருக்கிறதே ?!
அது ஏன் அருண் ஐபிஎஸ் தலைமையிலான காவல்துறையினரால் முடியவில்லை?
இந்த வழக்கின் ஆரம்பகட்ட விசாரணை நடைபெற்ற காலத்திலும், வழக்கு முடித்து வைக்க அறிக்கை தாக்கல் செய்தபோதும் சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்தவர் A.அருண் IPS.
உலக அளவில் பிரபலமான ஒரு தொழிலதிபர் தொடர்பான காவல்துறையின் மிக முக்கியமான POCSO வழக்கு இவ்வாறு மிக மேலோட்டமாகக் கையாளப்பட்டதற்கான நிர்வாகப் பொறுப்பு எந்த மட்டம் வரை சென்றது?
ஆணையரகத்துக்கு என்ன தகவல் சென்றது?
"வழக்கு முடித்து வைப்பு அறிக்கை" - closure report முடிவு எந்த அதிகாரிகளால் எடுக்கப்பட்டது? என்பவை இந்த வழக்கில் தற்போது கேட்கப்படும் மிக முக்கியமான கேள்விகள்.
மேலும், இந்த வழக்கை முடித்து வைக்கப் பெருமளவில் பணம் கை மாறப்பட்டிருக்கலாம் என்கிற குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க தனிக் காவல் அலுவலர் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதையும் இங்கே நினைவு கொள்ள வேண்டும்.
இது அருண் IPS நிர்வாகத்தின் முதல் சர்ச்சையா?
அங்குதான் அவரது முந்தைய செயல்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
அண்ணா பல்கலை மாணவி வழக்கு — உயர்நீதிமன்றத்தின் கடுமையான கேள்விகள்
2024 டிசம்பரில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கை -- FIR இணையத்தில் கசிந்து, பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளம் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் வெளிப்பட்டன.
சென்னை உயர்நீதிமன்றம் இதைச் சாதாரணத் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை.
முதல் தகவல் அறிக்கை - FIR கசிவு என்பது விசாரணையின் “serious lapse” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு ₹25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்கவும், FIR கசிவுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டறியத் துறை ரீதியான விசாரணை -departmental inquiry நடத்தவும் உத்தரவிட்டது.
அதோடு முடிந்துவிடவில்லை.
அப்போதைய சென்னை காவல் ஆணையர் அருண் IPS செய்தியாளர் சந்திப்பில், விசாரணை ஆரம்ப நிலையிலேயே குற்றம்சாட்டப்பட்டவர் தனியாகவே செயல்பட்டதாகக் கூறியதை உயர்நீதிமன்றம் கேள்விக்குள்ளாக்கியது. விசாரணை நடைபெறும்போது ஆணையர் அருண் விசாரணை விவரங்களை வெளிப்படுத்தியதையும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
ஆனால் முக்கியமான அடுத்த நிகழ்வையும் மறைக்க முடியாது
அருண் IPS க்காக அப்போதைய திமுக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது.
2025 ஜனவரி 27 அன்று உச்சநீதிமன்றம், முதல் தகவல் அறிக்கை கசிவு தொடர்பான துறை ரீதியான விசாரணை உத்தரவுக்கும், தமிழக காவல்துறைக்கு எதிரான சில பாதகமான / எதிர்மறையான கருத்துக்களுக்கும் இடைக்காலத் தடை விதித்தது.
அதே நேரத்தில் முதல் தகவல் அறிக்கைக் கசிவு என்பது பாதிக்கப்பட்டவரின் உரிமைகளுக்கு ஏற்பட்ட கடுமையான பாதிப்பு என்பதையும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.
அதற்குப் பிறகும் வந்த நீதிமன்றக் கண்டனம்
2026 மே மாதத்தில் இன்னொரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் வார்த்தைகள் இன்னும் கடுமையாக இருந்தன.
ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குநர் சந்தோஷ் சர்மாவுக்கு எதிராக அருண் IPS சென்னை காவல் ஆணையராக இருந்தபோது பிறப்பித்த குண்டர் சட்டம் - Goondas Act தடுப்புக் காவல் உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது.
நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமிநாராயணன் அமர்வு, அருண் IPS விளக்கத்தை நிராகரித்ததுடன், தடுப்புக் காவல் அதிகாரத்தை பொறுப்பின்றி பயன்படுத்தக் கூடாது என்று கூறி அவருக்குக் கண்டனம் (censure) தெரிவித்தது.
மேலும் அந்தக் குண்டர் தடுப்புக் காவல் தொடர்பற்ற / தேவையற்ற / புறம்பான காரணங்களுக்காகப் பிறப்பிக்கப்பட்டதாகவும் நீதிமன்றம் பதிவு செய்தது.
அதே தீர்ப்பில், அருண் IPS தொடர்புடைய முந்தைய வழக்குகளையும் நீதிமன்றம் எடுத்துக்காட்டியது. குறிப்பாக வாராகி என்பவர் தொடர்பான வழக்கில், அவருக்கு எதிராக குறுகிய காலத்தில் பொய்யான வழக்கு பதியப்பட்டதாக மற்றொரு நீதிமன்ற உத்தரவின் குறிப்பையும் தீர்ப்பு மேற்கோள் காட்டியது.
ஆனால் அருண் IPS மீது விசாரணை கோரி சவுக்கு சங்கர் பின்னர் தொடர்ந்த பொது நலன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது; தனிப்பட்ட பகைமை உள்ள சூழலில் அந்த மனுவை ஒரு பொது நலன் மனுவாக PIL - ஆக ஏற்க முடியாது என்பதே நீதிமன்றம் தெரிவித்த காரணம்.
இப்போது மீண்டும் ஜெம் வீரமணி
இத்தகைய நீதிமன்றப் பின்னணியில்தான் ஜெம் வீரமணி வழக்கின் பழைய காவல்துறை நடவடிக்கை தற்போது மீண்டும் ஆய்வுக்குள்ளாகிறது.
வீரமணியை கைது செய்யாமல் இருக்க பணம் கைமாறியதா என்ற குற்றச்சாட்டை விசாரிக்க, கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் தனி விசாரணை அமைக்கப்பட்டுள்ளதாக செப்டம்பர் 21 அன்று செய்தி வெளியாகியுள்ளது.
ரூ.10 கோடி முதல் ரூ. 70 கோடி வரை சந்தேகத்துக்கு இடமான பணப் பரிமாற்றம் குறித்து விசாரிக்கப்படுவதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் வழக்கை மறைக்க முயற்சி நடந்ததா, நிதிப் பரிவர்த்தனைகள் மூலம் விசாரணையைப் பாதிக்க முயன்றார்களா என்ற கோணத்தில் விசாரணை விரிவுபடுத்தப் பட்டுள்ளது.
அப்படியானால் பதில் சொல்ல வேண்டியது யார்?
இதுதான் அரசியல் விவாதத்தின் மையமாகியுள்ளது.
தற்போதைய தமிழக அமைச்சர்கள், முந்தைய திமுக ஆட்சியின் கீழ் காவல்துறை இருந்தபோது இந்த வழக்கு ஏன் தீவிரமாக முன்னெடுக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர். குறிப்பாக சட்ட அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்டோர் முந்தைய அரசின் செயல்பாட்டை விமர்சித்துள்ளனர்.
அரசியல் விமர்சனங்களைத் தாண்டியும் சில கேள்விகள் ஆவணங்களிலிருந்தே இந்த வழக்கில் எழுகின்றன:
காணொலி ஆதாரத்துடன் வந்த POCSO வழக்கில் முடித்து வைப்பு அறிக்கை - closure report ஏன் தாக்கல் செய்யப்பட்டது?
அந்த முடிவை எடுத்த அதிகாரிகள் யார்?
அதுபற்றி அப்போதைய காவல் ஆணையருக்கு என்ன தகவல் இருந்தது?
POCSO நீதிமன்றம் மறுத்த பிறகுதான் விசாரணை ஏன் வேறு திசைக்குத் திரும்பியது?
இப்போது விசாரிக்கப்படும் பணப்பரிமாற்றக் குற்றச்சாட்டுக்கும் பழைய closure முயற்சிக்கும் தொடர்பு இருக்கிறதா?
இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் தற்போதைய விசாரணைகளின் முடிவில்தான் தெரியவரும்.
அதேவேளை, ஆளும் தவெக அரசு தங்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளை மறுக்கும் திமுக தரப்பு, வீரமணிக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும் வழக்கு விசாரணையை எங்கள் ஆட்சியில் முடக்க முயற்சிக்கவில்லை, அப்படி ஒரு எண்ணம் இருந்திருந்தால் எதற்காக FIR பதிவு செய்தோம் என்றும் கேள்வி எழுப்புகிறது.
இதற்கிடையில் வீரமணியின் தொழில் போட்டியாளர்களின் சதியே இந்த வழக்கின் பின்னணி என்று திமுக ஆதரவு நாளிதழ் தினகரன் புதிய கதை ஒன்றைச் சொல்லத் தொடங்கியிருக்கிறது.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
1
Comments (0)