நெருப்பாற்றில் நீந்திய ரஜினி; விஜயகுமார், சிவக்குமார் ஏன் அப்படி செய்தனர்? | ரஜினிகாந்த் தொடர்–6

வில்லன், துணை நடிகராகப் போராடிய ரஜினிகாந்த்; விஜயகுமாருடன் நடித்த மாங்குடி மைனர் முதல் புவனா ஒரு கேள்விக்குறியில் சிவக்குமாருடன் ஏற்பட்ட அனுபவங்கள் வரை — பத்திரிகையாளர் நாச்சி. செல்வராஜ் எழுதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர் – 6.

Sep 21, 2026 - 17:09
Updated: 5 hours ago
0 21
நெருப்பாற்றில் நீந்திய ரஜினி; விஜயகுமார், சிவக்குமார் ஏன் அப்படி செய்தனர்? | ரஜினிகாந்த் தொடர்–6

நாச்சி. செல்வராஜ், பத்திரிகையாளர்

கடந்த 1970களின் இறுதிகளில் தமிழ்த்திரை உலகில் ரஜினிகாந்த் வில்லனாகவும் துணை நடிகராகவும் வலம் வந்தார்.

ஆறு புஷ்பங்கள், ஆயிரம் ஜென்மங்கள், சங்கர் சலீம் சைமன், மாங்குடி மைனர் , குப்பத்து ராஜா போன்ற படங்களில் விஜயகுமார் கதாநாயகனாக நடிக்க அதில் ரஜினிகாந்த் வில்லனாகவும் துணை நடிகராகவும் நடித்திருந்தார்.

விஜயகுமார் கொடிகட்டி பறந்த காலம் அது. குறிப்பாக எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கி ஆட்சியைப் பிடித்த காலமது.

எம்ஜிஆர் முதல்வராக இருந்ததால் அப்போது நடிகர்கள் எம்ஜிஆரின் கடைக்கண் பார்வை கிடைக்காதா என ஏங்கித் தவித்தனர்.

அதில் நடிகர் விஜயகுமாரும் ஒருவர். அப்போது மாங்குடி மைனர் என்ற திரைப்படத்தில் விஜயகுமார் கதாநாயகனா நடிக்க ரஜினி அப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். அந்தப் படத்தில் எம்ஜிஆர் ஆட்சியைப் பிடித்த விதம் குறித்தும் அவரது புகழைப் போற்றிப் புகழும் விதத்திலும் பாடல்களும் காட்சிகளும் எடுக்கப்பட்டிருந்தன.

"அண்ணா நீங்க நினைச்சபடி நடந்துருச்சு புரட்சி தலைவர் கையில் நாடு இருக்கு" என்ற பாடல் பெரிய அளவில் பேசப்பட்டது.

இப்படி விஜயகுமாரின் கை ஓங்கி இருந்தது.தொல்லைகள், அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட நிலையில் அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு தொடர்ந்து விஜயகுமாருடன் குப்பத்து ராஜா, சங்கர் சலீம் சைமன் போன்ற படங்களில் நடித்து மக்களின் ஆதரவை மெல்ல மெல்ல பெறத் தொடங்கினார் ரஜினிகாந்த்

அந்தக் காலத்தில் படப்பிடிப்புத் தளத்தில் ரஜினிகாந்த் ஒரு ஓரத்தில் அமைதியாகவும் யாருடன் பேசாமலும் பெரும்பாலும் அமர்ந்திருப்பார் எனத் தொழில்நுட்பப் பணியாளர்கள் சொல்வதுண்டு.

அதே விஜயகுமார் பிற்காலத்தில் ரஜினி கதாநாயகனாக நடித்த விடுதலை, நான் அடிமை இல்லை போன்ற படங்களில் வில்லனாகவும், பணக்காரன் உள்ளிட்ட படங்களில் தந்தையாகவும் நடித்தார் என்பது வரலாறு.

புவனா ஒரு கேள்விக்குறி என்ற படத்தில் சிவக்குமார் கதாநாயகனாக ஒப்பந்தமானார். ரஜினிக்கும் அந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இரண்டு கதாநாயகர்கள். ஒருவர் பெண்களை மதிக்க தெரிந்தவர், மற்றொருவர் "பிளேபாய்". இந்த இரு கேரக்டரில் ரஜினிக்கு ப்ளேபாய் ரோலும், சிவக்குமாருக்கு பெண்களை மதிக்கும் கதாபாத்திரமும் தயாரிப்பாளரும் மற்றும் இயக்குனருமான எஸ்.பி. முத்துராமன் அளித்தார்.

ரஜினி தனக்குக் கொடுக்கப்படும் ஒவ்வொரு பாத்திரத்திலும் தனது தனி முத்திரையை பதித்து வந்த நேரம் அது. சீனியர் நடிகர் ஆன சிவகுமார் எனக்கு பிளேபாய் ரோல்தான் வேண்டும் என அடம் பிடித்தார். சிவகுமார், சிவாஜி - எம்ஜிஆர் போன்ற பெரும் நடிகர்களுடன் நடித்தவர். மேலும் திரையுலகில் அப்போது பேசப்படும் முக்கியக் கதாநாயகனாகவும் திகழ்ந்தார்.

இதனால் ரஜினி எந்த எதிர்ப்பும் தெரிவிக்க முடியவில்லை. காரணம் எந்தப் பின்புலமும், ஆதரவும் இல்லாத நிலை. சொல்வதைக் கேட்டுத்தான் ஆக வேண்டும் என்ற நிலையும்.

படப்பிடிப்புத் தளத்தில் ரஜினிகாந்தை சிவகுமார் சீண்டிக் கொண்டே இருப்பாராம். இதை அவரே பல பேட்டிகளில் கூறியதுண்டு. "எவனோ கருப்பா ஒருத்தன் வந்து இருக்கிறான், அவனும் அவன் மூஞ்சியும்" என்று ரஜினியை இகழ்வாக சிவகுமார் பேசியதாக படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள் தகவல்களைப் பரப்பினர்.

புவனா ஒரு கேள்விக்குறி படம் வெளியானது. அதில் ரஜினி நடித்த பாத்திரம் பெருமளவில் பேசப்பட்டது. சிவகுமாரின் பாத்திரத்தை எவரும் கண்டு கொள்ளாமல் ரஜினியைத் தூக்கி கொண்டாடி மகிழ்ந்தனர் ரசிகர்கள்.

இப்படி ரஜினி நெருப்பாற்றில் நீந்தி கொண்டிருந்தபோது, அடுத்த சில ஜாம்பவான்களை எதிர்கொண்டு அவர்களையும் வெல்ல வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார் ரஜினி.

அவர்தான் 16 வயதினிலே இயக்குர் பாரதிராஜா, இன்னொருவர் துணை இயக்குர் பாக்யராஜ்.

இந்த இருவரையும் ரஜினி எப்படி எதிர்கொண்டார். என்ன மாதிரியான வில்லங்கங்களை சந்தித்தார். என்பது குறித்து அடுத்த பகுதியில் விரிவாகக் காண்போம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User