ஒரு லைஃப் ஜாக்கெட்... ஒரு தியாகம்... கேரளாவை கண்கலங்க வைத்த நீச்சல் வீரர் ராஜேஷ்
கேரள வெள்ளத்தில் முதியவரின் உயிரைக் காப்பாற்ற தனது லைஃப் ஜாக்கெட்டை கழற்றிக் கொடுத்த நீச்சல் வீரர் ராஜேஷ், நீரோட்டத்தில் சிக்கி உயிரிழந்தார். நாட்டையே நெகிழவைத்த மனிதநேயச் சம்பவம்.
திருவனந்தபுரம் | தமிழ் ஊடகம்
ஒரு லைஃப் ஜாக்கெட்...
ஒரு கண நேர முடிவு...
ஒரு மனிதநேயச் செயல்...
அதுவே இன்று இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களின் கண்களை கலங்க வைத்திருக்கிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் களியூரைச் சேர்ந்த ராஜேஷ், ஒரு தொழில்முறை நீச்சல் மற்றும் ரப்பெல்லிங் (Rappelling) சாகசப் பயிற்சியாளர். இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் ஒவ்வொரு முறையும், தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் மீட்புப் பணிகளில் தன்னார்வத் தொண்டராக களமிறங்கியவர்.
2018-ஆம் ஆண்டு கேரளப் பெருவெள்ளம், 2024-ஆம் ஆண்டு வயநாடு நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்களில் பல உயிர்களைக் காப்பாற்றிய தன்னலமற்ற மீட்புப் பணியாளராக அவர் அறியப்பட்டார்.
ஆனால், தனது வாழ்க்கையின் மிகப் பெரிய மீட்புப் பணியே அவரது இறுதி பயணமாக மாறும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை.
ஆகஸ்ட் 1-ஆம் தேதி, காசர்கோடு மாவட்டத்தில் உள்ள காரியங்கோட்டு ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பென்னி என்ற முதியவர் சிக்கிக் கொண்டார்.
அந்தச் செய்தி கிடைத்தவுடன், வழக்கம்போல தயக்கமின்றி வெள்ளநீருக்குள் குதித்தார் ராஜேஷ்.
கடும் நீரோட்டத்தை எதிர்த்து போராடி, முதியவரை பாதுகாப்பாகக் கரையை நோக்கி அழைத்து வந்தார்.
ஆனால், கரையை அடைவதற்கு முன்பே நீரின் வேகம் மேலும் அதிகரித்தது.
அந்த நொடியில், தன் உயிரைப் பற்றி யோசிக்காமல், தான் அணிந்திருந்த லைஃப் ஜாக்கெட்டையே கழற்றி முதியவர் பென்னிக்கு அணிவித்தார்.
அந்த ஒரு முடிவு முதியவரின் உயிரைக் காப்பாற்றியது. ஆனால், லைஃப் ஜாக்கெட் இல்லாமல் வெள்ளத்தின் கொந்தளிப்பை எதிர்கொண்ட ராஜேஷ், பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
அவரைத் தேடும் பணி பல மணி நேரங்கள் நீடித்தது. பின்னர், அவரது உடல் மீட்கப்பட்டது.
உயிருடன் திரும்பி வந்தது அவர் காப்பாற்றிய முதியவர்...உயிரற்ற உடலாக திரும்பி வந்தார் அவரைக் காப்பாற்றிய ராஜேஷ்.
ஒரு மீட்புப் பணியாளர் மட்டுமல்ல...
மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றுவதே தனது வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்ட மனிதநேய வீரராகவே ராஜேஷை கேரள மக்கள் நினைவுகூர்கிறார்கள்.
அவரது மறைவு, கேரளம் முழுவதும் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் வி.டி. சதீசன், கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன், உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ராஜேஷின் தியாகத்திற்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
"ஒரு உயிரைக் காப்பாற்ற தனது உயிரையே தந்த உண்மையான ஹீரோ" என்று சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கானோர் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பதக்கங்கள் வாங்கிய வீரர்கள் பலர் இருக்கலாம்...ஆனால், தான் அணிந்திருந்த லைஃப் ஜாக்கெட்டை இன்னொருவருக்கு அணிவித்து, தனது உயிரையே பரிசாக அளித்த ராஜேஷ் போன்ற மனிதநேய வீரர்கள் மிக அரிது.
அவரது தியாகம், ஒரு மனிதனின் உயிரின் மதிப்பு என்ன என்பதையும், மனிதநேயம் இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதையும் உலகிற்கு மீண்டும் நினைவூட்டியுள்ளது.
"இன்னொருவர் பிழைக்க... தனது உயிரையே தந்த மனிதநேய வீரன் ராஜேஷ்" — இந்தப் பெயர், கேரளத்தின் பேரிடர் மீட்புப் பணிகளின் வரலாற்றில் என்றும் அழியாமல் நிற்கும்.
What's Your Reaction?
Like
2
Dislike
0
Love
1
Funny
0
Wow
0
Sad
1
Angry
0
Comments (0)