மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் பண்ட் மோசடி: ₹700 கோடி பணம் எங்கே? கண்ணீர் விட்டழும் முதலீட்டாளர்கள் ! வின் டிவி தேவநாதன் யாதவ் சிக்கியது எப்படி?

150 ஆண்டு பழமையான மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் பண்ட் எப்படி சரிந்தது? ₹619 கோடி வைப்புத்தொகை, ₹700 கோடி ‘போலித் தங்க நகைக் கடன்’ குற்றச்சாட்டு, ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களின் பணம் மற்றும் Win TV தேவநாதன் தொடர்பு குறித்து ஆவணங்களுடன் புலனாய்வு.

Sep 23, 2026 - 14:41
Updated: 14 hours ago
0 53
மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் பண்ட் மோசடி: ₹700 கோடி பணம் எங்கே? கண்ணீர் விட்டழும் முதலீட்டாளர்கள் ! வின் டிவி தேவநாதன் யாதவ் சிக்கியது எப்படி?

+ 150 ஆண்டு பழமையான மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் பண்ட் எப்படி சரிந்தது?

+ 619 கோடி ரூபாய் வைப்புத்தொகை விவகாரத்தின் பின்னால் 700 கோடி ரூபாய்

‘போலி தங்க நகைக் கடன்’ மர்மம்!

+ ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களின் பணம் எங்கே?

+ மேலாண்மை இயக்குனர் வின்டிவி தேவநாதன் மாட்டியது எப்படி ?!

- தமிழ் ஊடகம் புலனாய்வுச் செய்தியாளர் குழு

சென்னையின் மயிலாப்பூரில் சுமார் 150 ஆண்டுகளாக இயங்கி வந்த ஒரு நிதி நிறுவனம். 

தலைமுறை தலைமுறையாக அந்த நிறுவனத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையில் தங்கள் ஓய்வூதியப் பணம், குடும்பச் சேமிப்பு, குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்காகச் சேர்த்த பணம் என ஆயிரக்கணக்கானவர்கள் முதலீடு செய்திருந்தனர்.

அந்த நிறுவனம்தான் Mylapore Hindu Permanent Fund Nidhi Limited.

ஆனால் இன்று அந்தப் பழமையான நிறுவனத்தின் கதவுகளுக்கு முன்னாலும், தெருவிலும் இறங்கி நின்று போராட்டம் நடத்தி முதலீட்டாளர்கள் தங்கள் சொந்தப் பணத்தைக் கேட்டு நிற்க வேண்டிய நிலை எப்படி ஏற்பட்டது?

இந்தக் கேள்விக்கான விடையைத் தேடும்போதுதான் 586 கோடி ரூபாய், 619 கோடி ரூபாய் என்ற கணக்குகளுக்கு அப்பால், நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு வழக்கறிஞர் முன்வைத்த 700 கோடி ரூபாய் "போலித் தங்கக் கடன்" (fake gold loan) குற்றச்சாட்டு மிக முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. 

நம்பிக்கைதான் மிகப்பெரிய முதலீடு

இந்த நிறுவனம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவந்த பரஸ்பர சகாய நிதி (mutual-benefit/Nidhi) நிறுவனமாக நீதிமன்றப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் நீண்டகால வரலாறே முதலீட்டாளர்களின் முக்கிய நம்பிக்கையாக இருந்திருக்கிறது.

கடந்த 2017-ம் ஆண்டு வின் டிவியின் உரிமையாளர் தேவநாதன் யாதவ் என்பவர் இந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகப் (Managing Director) பொறுப்பேற்றார். 

முதலீட்டாளர்களுக்கு நிரந்தர வைப்பு, தொடர் வைப்பு (Fixed Deposit, Recurring Deposit) உள்ளிட்ட திட்டங்கள் வழங்கப்பட்டன. 8 முதல் 12 சதவீதம் வரையிலான வட்டி தரப்படும் என முதலீட்டாளர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது. 

ஆனால் 2024 பிப்ரவரி முதல் வட்டி மற்றும் முதிர்வடைந்த வைப்புத்தொகைகளைத் திருப்பிச் செலுத்துவதில் பிரச்சினை ஏற்பட்டது. அதற்காக வாடிக்கையாளர்களுக்கு நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்பட்ட முன்கூட்டிய காசோலைகள் பணமின்றித் திரும்ப வந்தன என்கிறார்கள் முதலீட்டார் சங்கத்தினர்.

இதுவே பெரும் பிரச்சினையின் தொடக்கம்.

சுமார் 24.5 கோடி ரூபாயில் தொடங்கிய புகார் 586 கோடி ரூபாயாக உயர்ந்தது.

வழக்கின் ஆரம்பத்தில் 144 முதலீட்டாளர்களின் புகார்களில் சுமார் 24.5 கோடி ரூபாய் தொடர்பான குற்றச்சாட்டுகள் பதிவாகியிருந்தன. பின்னர் புகார்கள் தொடர்ந்து குவிந்தன.

அடுத்து 2025 ஜனவரியில் பொருளாதாரக் குற்றப்பிரிவு தாக்கல் செய்த முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தபோது நிலை முற்றிலும் மாறியிருந்தது.

மொத்தம் 5,160 புகார்கள் — அதன் மதிப்பு 586 கோடி ரூபாய்.

இதுதான் அப்போது பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகள் வெளியிட்ட கணக்கு.

இந்த வழக்கில் தேவநாதன் யாதவ் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருந்ததாகவும், ஒருவரைத் தேடி வந்ததாகவும் அப்போது செய்திகள் வெளியாகின. சோதனைகளில் பணம், தங்கம், வெள்ளி, வாகனங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதுடன், சுமார் 280 கோடி ரூபாய் மதிப்பிலான அசையாச் சொத்து ஆவணங்களும் 173 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளும் அடையாளம் காணப்பட்டதாக விசாரணை முகமை EOW தெரிவித்தது.

இதுவரை பார்த்தால் இது பெரிய அளவிலான வைப்பு நிதி தவறிய deposit-default வழக்காகத் தெரியும்.

ஆனால் உயர்நீதிமன்றத்தில் வெளிவந்த மற்றொரு தகவல்தான் வழக்கின் இன்னொரு கதவைத் திறக்கிறது.

நீதிமன்றத்தில் வெளிவந்த 619 கோடி ரூபாய் கணக்கு

தேவநாதன் யாதவின் முன்பிணை மனு 2025-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் தாக்கல் செய்த கணக்குகளின்படி,

4,870 முதலீட்டாளர்களுக்கு 561.48 கோடி ரூபாய் செலுத்த வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதே வழக்கில் மொத்தமாக மோசடி செய்யப்பட தொகை (defrauded amount) 619 கோடி ரூபாய் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது .

வெவ்வேறு காலகட்டங்களில் பெறப்பட்ட புகார்கள், செலுத்த வேண்டிய பொறுப்பு மற்றும் மோசடி என குற்றம் சாட்டப்பட்ட தொகை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த எண்ணிக்கைகள் மாறுகின்றன.

ஆனால் இந்த மோசடிப் புகாரில் பேரதிர்ச்சி தரும் பகுதி வேறு.

700 கோடி ரூபாய் ‘போலித் தங்க நகைக் கடன்’!

அரசு தரப்பு, நீதிமன்றத்தில் முன்வைத்த தகவலின்படி, 'போலித் தங்க நகைக் கடன் " மூலம் 700 கோடி ரூபாய் வெளியிடப்பட்டது என்கிற குற்றச்சாட்டுதான் அதிர்ச்சிகரமானது.

இதுதான் இந்த வழக்கில் ஆழமாக விசாரிக்கப்படும் மிக முக்கியமான பணப் பாதை.

பொதுவாக தங்கக் கடன் - gold loan என்றால் நகையை அடமானமாகப் பெற்றுக்கொண்டு அதன் மதிப்புக்கு ஏற்ப கடன் வழங்கப்பட வேண்டும்.

அப்படியானால் 700 கோடி ரூபாய் தொடர்பாக இயல்பாகவே சில கேள்விகள் எழுகின்றன:

+ இந்தத் தங்க நகைக் கடன்கள் யார் யார் பெயர்களில் வழங்கப்பட்டன?

+ அந்தக் கடன் வாங்கியவர்கள் உண்மையானவர்களா?

+ ஒவ்வொரு கடனுக்கும் அடமானமாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் தங்கம் எங்கே?

+ அந்தத் தங்கத்தின் மதிப்பு ஆவணங்கள் (valuation records) இருக்கின்றனவா?

+ 700 கோடி ரூபாய் இறுதியில் எந்தெந்த வங்கிக் கணக்குகளுக்குச் சென்றது?

+ அந்தப் பணத்தின் கடைசிப் பயனாளிகள் - ultimate beneficiaries யார்?

இந்தக் கேள்விகள்தான் இந்த மோசடிக் குற்றச்சாட்டின் மிகமுக்கியமான கேள்விகள்.

இதில் Win TV எங்கே வருகிறது?

கைது செயப்பட்ட மயிலாப்பூர் Hindu Permanent Fund நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தேவநாதன் யாதவ் Win TV-யின் தலைவர் மாறும் மேலாண்மை இயங்குநரும் கூட

கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் (EOW) நடத்திய சோதனைகள் மயிலாப்பூர் Hindu Permanent Fund அலுவலகத்துடன் Win TV அலுவலகத்திலும் நடைபெற்றன. இரண்டும் ஒரே கட்டடத்தில் இயங்கிய நிலையில் Win TV அலுவலகமும் மூடப்பட்டு முத்திரையிடப்பட்டது.

மேலும் நிதி நிறுவனத்தின் இயக்குநர்களாக இருந்த R.குணசீலன் மற்றும் D.மகிமைநாதன் ஆகியோர் Win TV-யில் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளராகப் ணியாற்றியதாகவும் தெரியவந்தது.

இதனால் நிதி நிறுவனத்துக்கும் Win TV நிர்வாக வட்டத்துக்கும் பணியாளர் மற்றும் மேலாண்மைத் தொடர்பும் இருந்தது உறுதியாகிறது.

தேவநாதன் தரப்பு என்ன சொன்னது?

ஜாமீன் மனுவில் தேவநாதன் தரப்பு முன்வைத்த வாதத்தின்படி, கோவிட் காலத்துக்குப் பிறகு  முதிர்வடைந்த வைப்புத் தொகைகளைத் திருப்பிச் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது; அதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டு "முன்கூட்டிப் பணம் திரும்பப்பெறுதல்" (premature withdrawals) அதிகரித்ததாக கூறப்பட்டது.

மேலும் தேவநாதன் தரப்பில் உள்ள மொத்தம் 76 சொத்துகளின் சந்தை மதிப்பு 633.97 கோடி ரூபாய் என்றும் அவற்றை விற்பனை செய்து முதலீட்டாளர்களுக்குப் பணம் செலுத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்தது.

ஆனால், அரசு தரப்பில் அந்தச் சொத்துகளின் "வழிகாட்டு மதிப்பு" (guideline value) சுமார் 36.91 கோடி ரூபாய் மட்டுமே என்று வாதிடப்பட்டது.

அந்த நிலையில் உயர்நீதிமன்றமும் முதலீட்டளார்களுக்கு ஒரு சிறு பகுதி பணம்கூட கிடைக்கவில்லை என்பதைப் பதிவு செய்தது.

ஆனால் அந்த நிலையிலேயே தேவநாதன் முதலீட்டாளர்களுக்குத் திருப்பிச்செலுத்த வேண்டிய தொகை சுமார் 300 கோடி ரூபாய் என இருந்தது.

150 ஆண்டு நம்பிக்கை எப்படி இந்த நிலைக்கு வந்தது?

இந்த ஒற்றைக்கேள்விக்கான விடை, கோவிட் 19 காலகட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு வட்டி மற்றும் பணத்தைத் திரும்பிச் செலுத்த முடியாத சூழல் இருந்தது என்கிற ஒற்றைக் காரணத்தை மட்டும் கூறிப் பிரச்சனையை முடித்துவிட முடியாது.

சாலையில் இறங்கி தங்களின் பணம் 10 லட்சம், 20 லட்சம், 40 லட்சம் பறிபோய்விட்டதே என்று கதறி அழும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தைத் தாண்டுகிறது, கொடுக்க வேண்டிய பணம் எப்படி கூட்டிக் கழித்தாலும் சுமார் 700 கோடி ரூபாய். ஆனால் தேவநாதனிடம் அதற்கு ஈடாக இருக்கும் சொத்துக்களின் மதிப்பு வெறும் 37 கோடி ரூபாய் மட்டுமே. அதாவது 5 விழுக்காடு.

இந்த 95 விழுக்காடு அதாவது முதலீட்டாளர்களின் கிட்டத்தட்ட பல நூறு கோடி ரூபாய் பணம் எங்கே? எனும் கேள்விதான் முதலீட்டாளர்களின் கண்ணீராக வழிந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User